<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.31 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.31

# Maṇimēkalai's Renunciation 31.31

Maṇimēkalai urai 31.31

- **Language:** Tamil

### [31.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.31)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
155  
  
மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை  
ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே  
தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும்  
உணர்வுள் ளடங்க வுருவாய்த் தோன்றியும்  
உணர்வு முருவு முடங்கத் தோன்றிப்  
புணர்தரு மக்க டெய்வம்விலங் காகையுங்  
  
153  
  
உரை  
  
158  
  
மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை-மூன்றுவகையான பிறப்புக்களையும் கூறுமிடத்து; ஆன்ற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் - தூய்மை யமைந்த விசுத்தி மார்க்கத்து முடிவாகிய சமாதி ஞானமே வீடுபேறெனத் துணிந்து அதுவேயாய்த் தோன்றி நிற்பதும்; உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும் - உணர்வாகவே யாகாது அவ் வுணர்வு உள்ளே யடங்க உருக்கொண்டு நிற்பதும்; உணர்வும் உருவும்உடங்கத் தோன்றி - உணர்வும் உருவும் உடனிகழத் தோன்றி; புணர் தரு மக்கள் தெய்வம் விலங்காகையும் - கூட்டமாய் உறையும் மக்களும் தெய்வமும் விலங்குமாகத் தோன்றி நிற்பதுமாம் எ - று.  
  
சமாதி ஞானமே வீடெனத் துணிந்து நிற்கும் பிறப்பு அருவப் பிறப்பென்றும், உணர்வுள் அடங்க வுருவாய்த் தோன்றுவது உருவப் பிறப்பென்றும், உணர்வும் உருவும் உடங்கு தோன்றும் பிறப்பு தெய்வப் பிறப்பும் மக்கட் பிறப்பும் விலங்குப் பிறப்புமா மென்றும் கூறும் முறைமைபற்றி இவ்வாறு கூறினார். இவற்றை முறையே அரூபதாது, ரூபதாது, காமதாது என்றும் கூறுப.¹ உடங்கு: உடங்கவென வினையெச்சமாயிற்று. புணர்தல்-கூடியுறைதல். இதனைத் தேவர்க்கும் விலங்குக்கும் கூட்டுக. இனி, மேலே கூறிய இருவகைப் பிறப்பும் எய்துதற்குரிமை தோன்ற, "புணர்தரு மக்கள்" என்றாரென்றுமாம். தோன்றியும் என்புழி விலங்காகையும் என்றதற் கேற்ப நிற்பதும் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது.  
  
¹ Compendium of philosophy by Rys Davids. p. 262

- [Previous: 31.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.30)
- [Next: 31.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.32)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.151-156) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.31) · Pramāṇa
