<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.34 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.34

# Maṇimēkalai's Renunciation 31.34

Maṇimēkalai urai 31.34

- **Language:** Tamil

### [31.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.34)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
175  
  
குற்றமும் வினையும் பயனுந் துன்பம்  
பெற்ற தோற்றப் பெற்றிக ணிலையா  
எப்பொரு ளுக்கு மான்மா விலையென  
இப்படி யுணரு மிவைவீட் டியல்பாம்  
  
175  
  
உரை  
  
178  
  
குற்றமும் வினையும் பயனும் துன்பம்-குற்றமும் வினையும் பயனுமாகிய யாவும் துன்பம் பயப்பனவாகும்; பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா - குற்ற முதலியவற்றாற் பெற்ற பிறப்புக்குரிய வுடம்புகள் நிலையில்லாதனவாகும்; எப்பொருளுக்கும் ஆன்மா இலை - உயர்திணையும் அஃறிணையுமாகிய எப்பொருட்கும் ஆன்மா என்பதொன்று கிடையாது; என இப்படி உணரும் இவை-என்று இவ்வாறு உணரப்படும் இவைகள்; வீட்டியல்பாம் - வீடு பேற்றிற்கு உறுதியாம் எ - று.  
  
குற்ற முதலிய மூன்றும் துன்பம் பயப்பனவாதலின், "துன்பம்" என்றும், இத் துன்பத்தை நுகர்தற்கு இடனும் கருவியுமாகிய உடம்புகளை, "பெற்ற தோற்றப் பெற்றிகள்" என்றும் அவை வளர்தலும் மூத்தலும் பிணிப்பட் டிறத்தலும் செய்தல் கண்கூடாகலின், "நிலையா" என்றும், எப் பொருளை யாராய்ந்து நோக்கினும் அவை குற்ற முதலிய மூன்றன் துன்பச் சூழலிற்பட்டு ஐவகைக் கந்தக் கூட்டமாய உடம்பொடு கூடி நின்று நிலைபேறின்றி மாயக் காண்பதன்றி, அவற்றின் வேறாகிய ஆன்மாவென வொன்று நிலையுடைத்தாகக் காணப்படாமையின், "ஆன்மா விலை" யென்றும், இவற்றை இவ்வகையாற் பகுத்துணர்ந்த வழி இவற்றின் நீக்கம் தானே யுண்டாதலின், "இவை வீட்டியல்பாம்" என்றும் கூறினார். இப் பகுத்துணர்வே வீடுபேற்றிற் குறுதியா மென்பதை, முன்பும், "நிலையில வறிய துன்பமென நோக்க, உலையா வீட்டிற் குறுதி யாகி" என்றது காண்க.  
  
இதனால் வீடுபேற்றிற்கு உறுதி கூறிய அறவணவடிகள், நிறுத்த முறையானே நால்வகை வாய்மைகளையும் நிரலேநிறுத்திக் கூறுகின்றார்.

- [Previous: 31.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.33)
- [Next: 31.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.35)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.176) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.34) · Pramāṇa
