<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.40 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.40

# Maṇimēkalai's Renunciation 31.40

Maṇimēkalai urai 31.40

- **Language:** Tamil

### [31.40](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.40)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
200  
சொல்லிய தொகைத்திற முடம்புநீர் நாடு  
தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந்  
நிகழ்ச்சியி லவற்றை நெல்லென வழங்குதல்  
  
199  
  
உரை  
  
201  
  
சொல்லிய தொகைத்திறம்-மேலே தொகை முதலாகச் சொல்லப்பட்டவற்றுள் தொகை யென்னும் கூறாவது; உடம்பு நீர் நாடு - உடம்பும் நீரும் நாடுமாகும்; தொடர்ச்சி - தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் - நெல்வித்தின் முளையும் முளையில் தாளும் அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும் இந்நிகழ்ச்சியால்; அவற்றை நெல்லென வழங்குதல் - அக்காரண காரியங்களை நெல்லென்று வழங்குவதாம் எ - று.  
  
பல்வகைத் தாதுக்களின் கூட்டத்தை உடம்பென்றும், பல சிறு துளிகளின் கூட்டத்தை நீரென்றும், பல சிறியவும் பெரியவு மாகிய ஊர்களின் கூட்டத்தை நாடென்றும் வழங்குவது தொகைத்திறம் என்பார், "தொகைத்திறம் உடம்பு நீர் நா"டென்றார். நெல்வித்தினின்று முளையும் அதனினின்று தாளும் அதனினின்று நெல்லும் ஒன்றினொன்று காரண காரியமாய்த் தோன்றித் தொடர்ந்து நின்று நெல்லென வழங்குமாறு போலக் காரண காரியத் தொடர்ச்சியாய் வருவது தொடர்ச்சி யென்பார், "வித்து முளைதாளென்றிந் நிகழ்ச்சியில் அவற்றை நெல்வென வழங்குதல்" என்றார். இனி, இந்நூற்களை யாராய்ந்து கண்ட அருணந்தி சிவனார், தொகையுந் தொடர்ச்சியும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைந்து தொகை யுண்மை வழக்கென்றும், தொகையின்மை வழக்கென்றும், தொடர்ச்சி யுண்மை வழக்கென்றும் தொடர்ச்சியின்மை வழக்கென்றும் வருமென்று கூறித் தொகையுண்மை வழக்காவது, "ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி யைந்துங்கூடி, வருபவனென்று ரைத்தல் தொகை யுண்மை வழக்க தாகும்" என்றும், தொகையின்மை வழக்காவது, "உருவமங் காதி யாய வைந்தையு மொருவனின்று, தருவது தொகையின் இன்மை வழக்கதாம் சாற்றுங் காலே" என்றும், தொடர்ச்சி யுண்மை வழக்காவது, "காரண காரியத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின், சோர்வறத் தோன்றுங் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை" யென்றும் தொடர்ச்சியின்மை வழக்காவது "ஒருவனே எக்காலத்து முள்ளா னென்று தேர்வது தொடர்ச்சி யின்மை வழக்கதாம்" (சிவ. சித்தி. பரபக். 70-71) என்று கூறுகின்றார்.

- [Previous: 31.39](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.39)
- [Next: 31.41](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.41)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.201) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.40](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.40) · Pramāṇa
