<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.44 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.44

# Maṇimēkalai's Renunciation 31.44

Maṇimēkalai urai 31.44

- **Language:** Tamil

### [31.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.44)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
220  
  
225  
  
நான்கு நயமெனத் தோன்றப் படுவன  
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை யியல்பென்க  
காரண காரிய மாகிய பொருள்களை.  
ஒன்றா வுணர்த லொற்றுமை நயமாம்  
வீற்றுவீற் றாக வேதனை கொள்வது  
வேற்றுமை நயமென வேண்டால் வேண்டும்  
பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு  
ஒன்றிய காரண முதவுகர ரியத்தைத்  
தருதற் குள்ளந் தானிலை யென்றல்  
புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும்  
நெல்வித் தகத்து ணென்முளை தோற்றுமெனல்  
நல்ல வியல்புநய மிவற்றினாங் கொள்பயன்  
  
217  
  
உரை  
  
228  
  
நான்கு நயமெனத் தோன்றப்படுவன-நால்வகை நயங்களெனத் தெளிய வுணரப்படுபவை; ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க - ஒற்றுமையும் வேற்றுமையும் புரிவின்மையும் இயல்பும் என்பனவாம் என அறிக; ஒற்றுமை நயம்-அவற்றுள் ஒற்றுமை நயமாவது; காரண காரிய மாகிய பொருள்களை ஒன்றாவுணர்தல் - காரணமும் காரியமுமாய் நிற்கும் பொருள்களை வேற்றுமை கருதாது காரணமா யாதல் காரியமா யாதல் உணர்ந்து கோடலாம்; வீற்று வீற்றாக வேதனை கொள்வது - காரண காரியங்களை ஒன்றாகவுணராது தனித்தனி வேறுபடுத் துணர்ந்து கோடல்; வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும்-வேற்றுமை நயமென்று கொள்கவென ஆசிரியர் விரும்புவர்; பொன்றக் கெடாப் பொருள் வழிப்பொருள்களுக்கு-முற்றக் கெடுதலில்லாத முதற் பொருள் காரியப் பொருள் என்பவற்றிற்கு; ஒன்றிய காரணம் - பொருந்தியுள்ள காரணம்; உதவுகாரியத்தைத் தருதற்கு உள்ளம் இல்லை என்றல்-விளைத்தற்குரிய காரியத்தைப் பயத்தலை யறிதற்கேற்ற உணர்வுநிலை யில்லை யென்பது; புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும் - புரிவின்மை நயமெனக் கூறலை ஆசிரியன் விரும்பும்; நெல்வித் தகத்துள் நெல் முளை தோன்றுமெனல்-நெல் விதையினின்று நெல் முளையே தோன்றுமெனக் கோடல்; நல்ல இயல்பு நயம் - குற்றமற்ற இயல்பு நயமெனப்படும் எ - று.  
  
காரியத்தை விரும்புமொருவன் அதற்குரிய காரணம் தோன்றிய வழி, அக்காரணத்தையே காரியமாகக் கூறல் ஒற்றுமை நயம். சோறு வேண்டுங் குறையுடையானொருவன் அரிசி பெற்ற வழிச் சோறு பெற்றேன் என்பது ஒற்றுமை நயம். இவ்வாறே காரியத்துக்கும் கூறிக் கொள்க. இது புகை இது நெருப்பு எனக் காரண காரியங்களை வேறுபடுத்துணர்வது வேற்றுமை நயமென்பார், "வீற்று வீற்றாக வேதனை கொள்வ"தென்றார். வேதனை - உணர்வு. வேதனை கொள்வதென்பது ஒரு சொல்லால் உணர்தலென்னும் பொருளதாயிற்று. பொன்றக் கெடாப் பொருள் - நித்தப் பொருள்; முதற் பொருள் என்றலுமாம் நித்தப் பொருளின் நித்தத்துவத்துக்குரிய காரணங் காண்டலும், அதனால் அத்தன்மை யெய்துதலும் உணர்தலாகாமையானும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புமாகிய காரண மூன்றுங் கூடிச் செம்மை நிறமாகிய காரியத்தைப் பயத்தல் எவ்வாறென வறிதல் கூடாமை யானும், "ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்குள்ளம் தான் இலையென்றல்" என்றார். புரிவின்மை - உணரவாராமை; புரிதல் - விளங்குதல். உள்ளத்தின் செயல் உணர்தலால் ஒற்றுமை நயத்தால் "உள்ளம்" என்றார், மடவோரும் ஏளிதினுணர்வதாகலின், இயல்பு நலத்தை, "நல்ல இயல்பு நயம்" என்றார்.

- [Previous: 31.43](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.43)
- [Next: 31.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.45)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.221-226) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.44) · Pramāṇa
