<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.51 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.51

# Maṇimēkalai's Renunciation 31.51

Maṇimēkalai urai 31.51

- **Language:** Tamil

### [31.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.51)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
250  
  
கட்டும் வீடு மதன்கா ரணத்தது  
ஒட்டித் தருதற் குரியோ ரில்லை  
யாமே லூரைத்த பொருள்கட் கெல்லாங்  
காமம் வெகுளி மயக்கங் காரணம்  
  
250  
  
உரை  
  
253  
  
கட்டும் வீடும் - கட்டும் வீடுமாகிய இரண்டினையும் ; அதன் காரணத்ததும் - ஒவ்வொன்றன் காரணத்தினையும் ; ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை-கூடியிருந்து பெறுவித்தற் குரியவர் பிறர் யாருமில்லை ; யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் - யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்க ளெல்லாவற்றிற்கும் ; காமம் வெகுளி மயக்கம் காரணம் - காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம் எ - று.  
  
கட்டு என்பது துக்கமும் அதற் கேதுவு மென்ற இவற்றோடு பிணிப் புண்டிருத்தல். வீடு, இன்பமும், அதற்குரிய ஏதுவுமாம். அதன் காரணத்தது என்பதை இரண்டோடும் இயைக்க. கட்டும் வீடும் எய்துதற்குப் பிறர் காரணரல்லர்; அவரவரே காரணரென்பது கருத்து. கட்டும் அதனைப் பயக்கும் ஏதுவுமாகிய இரண்டிற்கும் அடிப்படையான காரணம் காமம் வெகுளி மயக்கங்களாதலின், "மேலுரைத்த பொருள் கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கங் காரணம்" என்றார் திருவள்ளுவரும், "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன், நாமங் கெடக்கெடும் நோய்" (குறள். 360) என்றல் காண்க. வீடுபேற்றினைப் புதல்வராற் பெறலாமென்பாரை மறுத்தற்கு, "ஒட்டித் தருதற் குரியோ ரில்லை" யென்றார்; முன்னரும், "புத்தே ளுலகம் புதல்வருந் தாரார், மிக்க வறமே விழுத்துணை யாவது" (22. 137-8) என்றார்.

- [Previous: 31.50](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.50)
- [Next: 31.52](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.52)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.251) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.51) · Pramāṇa
