<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.53 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.53

# Maṇimēkalai's Renunciation 31.53

Maṇimēkalai urai 31.53

- **Language:** Tamil

### [31.53](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.53)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து  
திருந்துநல் லுணர்வாற் செற்றமற் றிடுக  
  
256  
  
உரை  
  
257  
  
மைத்திரி கருணை முதிதை என்று அறிந்து - மைத்திரி பாவனை கருணைப் பாவனை முதிதைப் பாவனை யென்று சொல்லப் படுகின்ற பாவனைகளை யறிந்து; திருந்தும் நல்லுணர்வால் - அவற்றால் திருந்தப் பெறும் நல்லுணர்வு கொண்டு; செற்றம் அற்றிடுக- வெகுளியைப் போக்குவாயாக எ -று.  
  
மைத்திரி பாவனையாவது எல்லா வுயிர்களையும் நட்புறவோடு நினைந்து அவையெல்லாம் துன்பம் நோய் முதலியனவின்றி இன்ப முடையவாகுக என நினைத்தல் என்று சதசஹஸ்ரிக பிரத்ஞபாரமிதை¹ யென்ற நூல் கூறுகிறது. இப் பாவனையால் எவ்வுயிர்க்கும் நலஞ் செய்தற்கும், அவற்றிற்கு வேண்டுவனவற்றை யுதவுதற்கு முரிய திருந்திய வுணர்வு பிறக்கிறது. கருணைப் பாவனையாவது பிறவுயிர்கட் குண்டாகுந் துன்பங் கண்டு உள்ளமுருகி அதனை நீக்கற்கு விரையும் விரைவுணர்வு எய்துகிறது. இதனைச் செய்வோர், உயிர்கள் வறுமையின்றியின்பச் செல்வ முடையவாகுக எனப் பாவிப்பர். முதிதைப் பாவனை யாவது பிறவுயிர்கள் பெற்றிருக்கும் ஆக்கமும் இன்பமும் கண்டு மன மகிழ்வும் நிறைவும் அமைதியுங்கொண்டு, அவை அவற்றின் நீங்கா திருப்பனவாகுக என நினைப்பது. இதனால் எப்போதும் செவ்விய உணர்வுடையதாயிருக்கும் செம்மை நிலையுண்டாகிறது என்பர். இப்பாவனைகளால் உணர்வின் செம்மை குன்றாது விளங்குதலால், "மைத்திரி கருணா முதிதை யென்றறிந்து திருந்தும் நல்லுணர்வால்" என்றும்' இதனால் வெகுளியாகிய குற்றம் எளிதின் நீங்குதலின், 'நல்லுணர்வாற் செற்ற மற்றிடுக" என்றும் கூறினார்.  
  
¹ 141-1. (I-XII)

- [Previous: 31.52](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.52)
- [Next: 31.54](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.54)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.256) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.53](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.53) · Pramāṇa
