<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31

# Maṇimēkalai's Renunciation 31

Maṇimēkalai urai 31

- **Language:** Tamil

### [31.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.1)

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை  
  
5 தானந் தாங்கிச் சீலந் தலைநின்று  
போன பிறப்பிற் புகுந்ததை யணர்ந்தோள்  
புத்த தன்ம சங்க மென்னும்  
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்  
சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின்  
  
1  
  
உரை  
  
5  
  
போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் - தனது முன்னைப் பிறப்பு வரலாற்றை யறிந்தவளான மணிமேகலை; தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு; சீலம் தலைநின்று - சீலங்களின் வழி நின்று; புத்த தன்ம சங்கமென்னும் முத்திறமணியை-புத்தன் தருமம் சங்கமென்னும் கொள்கைகளான முக்கூற்று மணிகளையும்; மும்மையின் வணங்கி - மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் வணங்கி; சரணாகதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புக லில்லாதவளாய், சரண் சென்று அடைந்த பின்-புத்த சங்கத்தே அடைக்கலமாகப் புகுந்த பின்னர் எ - று.  
  
சீலந் தாங்கித் தானம் மேற்கொண்டது ஏதுவாகப் போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் என்றுமாம். பின்பும், "சீலந்தாங்கித் தானம் தலைநின்று" (30: 78) என்பர். எனவே தானமும் சீலமும் ஒப்ப வேண்டுவன வென்பது துணிபாம். பாரமிதை பத்தனுள் முதலாவதாகிய இது தானபாரமிதை யெனவும் வழங்கும்; சீலம் சீல பாரமிதை யெனப்படும். பண்டைநாளிற் பாரமிதை ஆறாகவும் பிற்காலத்தே பத்தாகவும் வகுக்கப்பட்டன. பழைய பாரமிதை ஆறாவன; தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், பிரஞ்ஞை என்னவாம்; பின் சேர்க்கப் பட்டவை உபாயம், துணிவு, வலி, ஞானம் என்ற நான்குமாம். இவற்றுள் முதலிற் கூறிய தானமும் சீலமும் உலகியல் வாழ்விலிருப்போர் தொடக்கத்தே மேற்கொள்ளற்பாலன வென்றும், இவற்றினால் விளைவும் பயன், மறுமையில் இன்பப் பிறப்பெய்துவதென்றும் திக்க நிகாயம் (1: 110-2) கூறுகிறது. இத் தானத்தைப் போதி சத்துவபூமி யென்னும் நூலாசிரியர் ஒன்பது வகையாகக் கூறுவர்; அவை சுபாவதானம், சருவ தானம், துட்கர தானம், சருவதோமுக தானம், சற்புருட தானம், சருவகார தானம், விகதார்த்திக தானம், இகமுத்திர சுக தானம், விசுத்த தானமென்பனவாம். மன மொழி மெய்களை யடக்கி யறநெறிக்கட் செலுமத்துவதே சீலமென்றும், அது சம்வரசீலம், குசலதரும சங்கிராஹக சீலம், சத்துவகிரியா சீலம் என மூவகைப்படுமென்றும் தருமசங்கிரக மென்னும் பௌத்த நூல் கூறுகிறது. இனி, இச் சீலத்தைச் சப்த சீல மென்று ஒரு சாராரும், பஞ்சசீல மென்றொரு சாராரும் பகுத்து முடிவில் தசசீலமாகக் கொண்டனரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தொடகக்முதல் தசசீலமென்ற பாகுபாடு தோன்றியதுவரை இச்சீலம். மூன்றும், ஐந்தும், ஏழுமாகப் பெருகிவந்து முடிவிற்றான்பத்தாயிற்று என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. பஞ்சசீலமென்பன உபாசகருக் குரிய வென்று விநயபிடகம்¹ கூறுகிறது. கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன்சொலியம்பாமை, பயனில மொழியாமை, வெஃகாமை, வெகுளாமை. நற்காட்சியென்ற பத்தும் தசசீலமாம். நற்காட்சியை "மித்யாத்ருஷ்டி வ்ரத்தி" என்றுகூறுப. புத்தனாந் தன்மையும் புத்த தருமமும் புத்த சங்கமும் மூன்று மணிகளாக உருவகஞ் செய்து ²இரத்தினத்திரயமென்ப வாதலின், இவரும் 'முத்திற மணி" யென்றார். புத்தம் சரணங் கச்சாமி, தருமம்சரணங் கச்சாமி, சங்கம் சரணங் கச்சாமி என்று மூன்றையும் மும்முறைசொல்லி வழிபடுவது பற்றி, "மும்மையின் வணங்கி" யென்றாரென்றுமாம்.  
புத்த தருமத்தை மேற்கொள்வோர் தொடக்கத்தே இம்மூன்றையும் சரண்புகுதல் வேண்டுமென அவதான சதகம் கூறுகிறது; அவ்வாறே மணிமேகலையும்.  
சரண்புகுதலின், "சரணாகதியாய்ச் சரண் சென்றடைந்தபின்" என்றார். புத்த சங்கத்துச் சத்துவராதற்கு இது முதற்படி யெனப்படும்.  
  
¹ 83. ² அவதான சதகம் (1: 301-4).

### [31.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.2)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
10  
  
15 முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்  
அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து  
முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத்  
துடித லோக மொழியத் தோன்றிப்  
போதி மூலம் பொருந்தி யிருந்து  
மாரனை வென்று வீர னாகிக்  
குற்ற மூன்று முற்ற வறுக்கும்  
வாமன் வாய்மை யேமக் கட்டுரை  
இறந்த காலத் தெண்ணில்புத் தர்களுஞ்  
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது்  
  
6  
  
உரை  
  
15  
  
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்-முன்பின் மாறு பாடில்லாத அறங்களின் வடிவாகிய புத்ததேவன் வரலாற்றினைச் சுருங்கக் கூறலுற்ற அறவணன்; உயிர்-உயிர்கள்; அறிவு வறிதாய் நிறை காலத்து - நல்லறிவின்றி நிரம்பியிருந்த காலத்தில்; முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப-முடியணிந்து விளங்குந்தேவர்கள் தன்னை முறைப்படி வணங்கி நிலவுலகிற் றோன்றி அறங்கூற வேண்டுமெனக் குறையிரந்து நின்றதனால்; துடிதலோகம் ஒழியத் தோன்றி - துடித லோகத்தை விட்டு மண்ணுலகிற் றோன்றி; போதி மூலம் பொருந்தி யிருந்து-புத்த கயை யென்னுமிடத்தே அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து; மாரனை வென்று வீரனாகி - மாரனென்னும் தேவனை வென்றதனால் வீரனாக விளங்கி; குற்ற மூன்றும் முற்றவறுக்கும்-மூவகைக் குற்றங்களையும் அறவே கெடுத்து இலவாக்கும்; வாமன் வாய்மை எமக் கட்டுரை - புத்த தேவனது மெய்ம்மை நிறைந்ததும் உயிர்கட்குப் பாதுகாப்புமாக எடுத்தோதியதும்; இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும் - அவர்க்குப் பின் தோன்றிய அளவிறந்த புத்த சங்கத்தோர் பலராலும்; சிறந் தருள்கூர்ந்து-உயிர்க்ள்பால் மிக்க அருள்கொண்டு; திருவாய் மொழிந்தது - மறவாது நிலைபெற வற்புறுத்தப்பட்டது. மாகிய அறம் ஈண்டு யான் கூறலுறுவது எ - று.  
  
துடிதலோகத்து அமரர் இரப்ப, தோன்றி, இருந்து, வீரனாகி, அறுக்கும் வாமன் கட்டுரையும் புத்தர்களும் மொழிந்ததுமாகிய அறம் என இயைத்து, ஈண்டு யான் கூறலுறுவதென்பதை இசை யெச்சத்தாற் பெய்துரைத்து முடிக்க. புத்தன், தருமம், சங்கம், என்ற மூன்றனுள், புத்தனையும் சங்கத்தையும் இதனாற் கூறி, தருமத்தை யுரைத்தற்கு முகஞ் செய்கின்றார்; இவ்வாறே சாந்தி தேவரும் தாமெழுதிய போதி சரியாவதார பஞ்சிகை (ii 8) யிலும் கூறுதல் காண்க. இவ்வாறு புத்தனையும் சங்கத்தையும் கூறியபின் தருமங் கூறுபவாயினும் வழிபடுமிடத்து புத்தன், தருமம், சங்கம் என்ற மூன்றையும் இம் முறையே வழிபடுவரென வறிக.  
  
புத்தனது உடமபைத் தன்ம காயமென்றும், அவனை அறத்தின் வடிவமென்றும் திவ்வியாவதானம் முதலிய நூல்கள் கூறுதலால், இவரும் திருவறமூர்த்தி" யென்றார். அறிவு, தானந்தாங்கிச் சீலம் தலை நிற்றற்கேதுவாகிய நல்லறிவு. மக்களென்னாது "உயிர்" என்றார். நல்லறிவு வயிதாயினமையின் ; "அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்" (குறள்: 848) என்றாற்போல. புத்தன் பிறத்தல் வேண்டித் துடித லோகத்தே தேவர்குறையிரந்து நின்றசெய்தியை, "தேவரெல்லாம்,. தொக்கொருங்கீண்டித் துடிதலோகத்து, மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப"  
  
(12:72-4) என்று முன்னரும் கூறுப. வடநூல்கள், புத்தர் தாமே நிலவுலகிற் றோன்றுதற் கெண்ணி, இடமும் காலமும் குறித்துக்கொண்டு தோன்றுவரென்று கூறுகின்றன. போதி - அரசமரம். புத்தர் பலரும் போதி மரத்தையே இருக்கையாய்க் கொள்ளவில்லை; விபாசி யென்னும் புத்தர் பாதிரி மரத்தையும், சிகி யென்பார் பூவரசினையும் கொண்டன ரெனப் பாலிமொழியிலுள்ள நூல்கள் கூறுகின்றன வென்பர். தீ நெறியிற் செலுத்தும் தேவனை மாரனென்றும், அவனுக்கு முப்பத்தாறு கோடி தானை வீரரும், இரதி அரதி திருஷணை என மூன்று பெண்மக்களும். விப்பிரமன், ஹர்ஷன், தருப்பன் என மூன்று ஆண்மக்களு முண்டென்பர். அவன் வரலாற்றை அசுவகோசர், க்ஷேமேந்திரர் முதலியோர் எழுதிய வடநூங்களுட் காண்க. வென்று: காரணப் பொருட்டு. ஆதி புத்தனுக்குப் பின்னர் பல புத்தர்கள் உளராயின ரென்றும். அவர் தொகுதியைப் புத்தசங்கமென்றும் அவர் ஆதிபுத்தன் கூறிய அறங்களை வழிவழியாய்த் தோன்றி யறிவுறுத்துவ ரென்றும் கூறுபவாதலின், "எண்ணில் புத்தர்களும் திருவாய் மலர்ந்தருளியது" என்றார். குற்ற மூன்றாவன மன மொழி மெய் மூன்றானும் உண்டாகும் பத்து வகைக் குற்றம். காம முதலிய மூன்றெனினுமாம்.

### [31.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.3)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
ஈரறு பொருளி னீந்தநெறி யுடைத்தாய்ச்  
சார்பிற் றோன்றித் தத்தமின் மீட்டும்  
இலக்கணத் தொடர்தலின்  
மண்டில வகையா யறியக் காட்டி  
  
16  
  
உரை  
  
19  
  
ஈரறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் - இப் புத்தன் மொழிந்த கட்டுரைப்பொருள் பன்னிரண்டுபொருள்களாகக் கூறப்படும் நெறியை யுடையதாய்; சார்பின் தோன்றி - ஒன்றினொன்று காரண காரியமாய்ச் சார்ந்து தோன்றி ; தத்தமில் மீட்டும்-தம்மில் மீளத் தோன்றுமாற்றால்; இலக்கு அணத் தொடர்தலின் - காரண காரியமா யியையத் தொடர்ந்து தோன்றுதலால்; மண்டில வகையாய் அறியக் காட்டி - மண்டலிக்கும் முறையில் வைத்து விளங்கக் காட்டி எ - று.  
  
ஈரறு பொருளாவன: பேதைமை, செய்கை, உணர்வு. அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் எனப் பன்னிரு நிதானங்களாகும். அவை சார்பில் தோன்றலாவது பேதைமையிலிருந்து செய்கையும், அச் செய்கையிலிருந்து உணர்வும், உணர்விலிருந்து அருவுருவும், அதிலிருந்து வாயிலும், அதிலிருந்து ஊறும், அதிலிருந்து நுகர்வும், அதிலிருந்து வேட்கையும் அதிலிருந்து பற்றும், அதிலிருந்து பவமும், அதிலிருந்து தோற்றமும், அத் தோற்றத்திலிருந்து வினைப்பயனும் தோன்றுதல், செய்கைக்குப் பேதைமை இலக்கும், உணர்வுக்குச் செய்கையிலக்கும், இவ்வாறே ஒவ்வொன்றும் இலக்காய் நிற்குமென வறிக. அவ்வாறாகுமிடத்து, வினைப் பயனிலிருந்து மீளப் பேதைமையும், அதிலிருந்து செய்கையும் பிறவும் தோன்றுதலின், "இலக்கணத் தொடர்தலின்" என்றார். இவ்வண்ணம் பேதைமை முதலிய பன்னிரண்டும் ஒன்றற்கொன்று காரண காரியமாய் இடையறவின்றிக் கறங்கோலை போலச் சுழன்று தோன்றுமாறு விளக்க, "மண்டில வகையா யறியக் காட்டி" யென்றார். இதனை "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும" (24-5) என்று மேலும் கூறுப.

### [31.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.4)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
20  
  
25 எதிர்மறை யோப்ப மீட்சியு மாகி  
ஈங்கி தில்லா வழியில் லாகி  
ஈங்கி துள்ள வழியுண் டாகலில்  
தக்க தக்க சார்பிற் றோற்றமெனச்  
சொற்றகப் பட்டு மிலக்கணத் தொடர்பாற்  
கருதப் பட்டுங் கண்டநான் குடைத்தாய்  
  
20  
  
உரை  
  
25  
  
எதிர்மறை ஒப்ப-இவ்வாறு எதிர்தோன்றுதற் கேதுவாகிய காரணத்தை நீக்கிய வழி; மீட்சியுமாகி-பேதைமை முதலியவற்றினின்று மீட்சி யுண்டாம்; ஈங்கு இது இல்லா - இவ்வாறு காரணமில்லை யாகவே; வழி இல்லாகி - காரியமாகிய வழிமுறைத் தோற்றம் இல்லையாதலாலும்; ஈங்கு இது உள்ள - இவ்வாறே காரணத்தை விரும்பிய வழி; வழியுண்டாதலின்-காரியமாகிய தோற்ற முண்டாதலாலும்; தக்க தக்க சார்பில் தோற்றம் என - காரணங்களை யுள்ளுதலும் தள்ளுதலுமாகிய தகுதிக் கேற்பச் சார்பில் தோன்றும் காரியத் தோற்றம் உண்டாதலும் இல்லையாதலுமென்று; சொற்றகப்பட்டும் - சொல்லப்பட்டும்; இலக்கணத் தொடர்பால் கருதப்பட்டும் - காரண காரியங்களின் உண்மையின்மைகள் இவ்வியைபால் உணரப்பட்டும் வரும் எ - று.  
  
பேதைமூயினின்று செய்கையும் செய்கையினின்றுணர்வும் இவ்வாறு பிறவும் தோன்றும் வழிமுறைத் தோற்றத்துக்கு மாறாக, பேதைமை முதலியவற்றை நீக்கியவழித் தோற்றமின்றாதலின் "எதிர் முறையோப்ப" என்றார். ஒப்புதல்-நீக்குதல், இதனையே சிறிது விளக்கலுற்று பேதைமை யில்வழிச் செய்கையின்மையும், செய்கை யில்வழி உணர்வின்மையும், இவ்வாறு பிறவற்றின் இன்மையும் பெறப்படுவது பற்றி "ஈங்கிது வில்லா வழியில் லாகி" யென்றும், பேதைமை முதலிய வற்றைக் கொண்ட வழி. செய்கை முதலியன வுளவாதலும் பெறப்படுதலின், "ஈங்கிதுவுள்ள வழியுண்டாதலின்" என்றும் கூறினார். மீட்சிவகையை மேலே "பேதைமை மீளச் செய்கை மீளும்" என்பது முதலியவற்றாலும், வழிமுறைத் தோற்றமுண்டாதலை, "பேதைமை சார் வாச் செய்கை யாகும்" என்பது முதலியவற்றுறாலும் கூறுப. காண்டல் கருதல் என அளவை யிரண்டாதலின். அவற்றிற் கேற்கபக் காட்சியாற் காணப்படுவதை. "சார்பிற்றோற்றமெனச் சொற்றகப்பட்டும்" என்றும், கருதலாற் கொள்ளப்படுவதை, "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும்" என்றும் கூறினார்.

### [31.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.5)

பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை  
  
25 கருதப் பட்டுங் கண்டநான குடைத்தாய  
மருவிய சந்தி வகைமூன்று உடைத்தாய்த்  
  
25  
  
உரை  
  
26  
  
கண்டம் நான்கு உடைத்தாய்-நான்கு வகையான கண்டங்களை யுடையதாய்; மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்-அக் கண்டங்கள் தம்மிற்புணருங் புணர்ச்சியை மூன்று வகையாக வுடையதாய் இந்நிதானம் இயலும் எ - று.  
  
பேதைமை முதலிய பன்னிரண்டனையும் நான்காகப் பகுத்து ஒவ்வொன்றையும் கண்டமெனக் கூறுப; அவற்றுள் பேதைமையும், செய்கையும் முதற் கண்டமெனவும், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு. நுகர்வு என்ற ஐந்தும் இரண்டாங்கண்டமெனவும். வேட்கை, பற்று, பவம் என்ற மூன்றும் மூன்றாங் கண்டமெனவும், தோற்றமும், வினைப்பயனும் நான்காங் கண்டமெனவும் கூறுப. இவற்றின் இயல்பை, "ஆதிக் கண்டமாகுமென்ப" என்பது முதலியவற்றால் விரியக் கூறுப. முதற் கண்டத்தின் ஈறாகிய செய்கைநும் இரண்டாங் கண்டத்தின் முதனின்ற உணர்வும் கூடும் கூட்டத்தை முதற் சந்தியென்றும், இரண்டாங்கண்டத் தீற்று நுகர்வும் மூன்றாங் கண்டத்து முதனின்ற வேட்கையும் கூடும் கூட்டம் இரண்டாஞ் சந்நியென்றும், மூன்றங் கண்டத்தீற்றுப் பவமும் நான்காங் கண்டத்து முதனின்ற தோற்றமும் கூடும் கூட்டம் மூன்றாஞ் சந்தியெனவும் கூறப்படும்; இவற்றின் இயல்பை. "பிறப்பின் முதலுணர்வாதிச் சந்தி" என்பது முதலியவற்றால் விளங்கக் கூறுப. இந்நிதானம் இயலும் என்பது வருவிக்கப்பட்டது.

### [31.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.6)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த்  
தோற்றற் கேற்ற காலமூன் றுடைத்தாய்க்  
  
27  
  
உரை  
  
28  
  
பார்க்கின் - ஆராயுமிடத்து; தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்; தோற்றற்கேற்ற காலம் மூன்றுடைத்தாய் - அம்மூவகைப் பிறப்பும் தோன்றுதற்கேற்ற காலம் மூன்றுடையதாயும் நிலவும் எ - று.  
  
பிறப்பு மூன்றாவன; அவரும், உருவம், காமம் என்பன. காலம் மூன்று; இறப்பு. நிகழ்வு, எதிர்வு என்பன, இவற்றை, "மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை" (30,158) என்பது முதலியவற்றாலும் "கால மூன்றுங் கருதுங் காலை" (30-159) என்பது முதலியவற்றாலும் விளக்கிக் கூறுப.

### [31.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.7)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
30 குற்றமும் வினையும் பயனும் விளைந்து  
நிலையில வறிய துன்பமென நோக்க  
உலையா வீட்டிற் குறுதி யாகி  
  
29  
  
உரை  
  
31  
  
குற்றமும்-வேட்கையும் பற்றும் பேதைமையுமாகிய குற்றங்களும்; வினையும்-பவமும் செய்கையுமாகிய வினைகளும்; பயனும்- இவை யொழிந்த ஏழுமாகிய பயனுமாக; விளைந்து-இப்பன்னிரண்டும் நிலவுதலால்; நிலையில நிலையில்லாதனவென்றும்; வறிய - பயனில்லாதனவென்றும்; துன்பம் என - துன்பமென்றும்; நோக்க- இவற்றைக் கண்டு கழிக்கவே; உலையா வீட்டிற்குறுதியாகி-கெடாத வீடுபேற்றிற்கு உறுதியாகிய நன்ஞானமுண்டாம் எ-று.  
  
பேதைமை முதலிய பன்னிரண்டனுள், வேட்கையும், பற்றும், பேதைமையும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினையென்றும், உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, பிறப்பு, வினைப்பயனாகிய ஏழும் பயனென்றும் வகுத்தோதி, இவற்றை "நிலையில் வறிய" என நோக்கி யொழிதலால் வீடுபேற்றிற் குறுதியுண்டா மென்பார், "உலையா வீட்டிற் குறுதியாகி" யொன்றர். பிறாண்டும், "துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா, எப்பொருளுக்கு மான்மா விலையென இப்படி யுணரும் இவை வீட்டியல்பாம்" என்று கூறுதல் காண்க.

### [31.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.8)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
நால்வகை வாய்மைக்குச் சார்பிட னாகி  
ஐந்துவகைக் கந்தத் தமைதி யாகி  
மெய்வகை யாறு வழக்குமுக மெய்தி  
  
32  
  
உரை  
  
34  
  
நால்வகை வாய்மைக்குச் சார்பிடனாகி-நான்கு வகையகிய வாய்மைகட்கும் சார்பிடனாகியும்; ஐந்து வகைக் கந்தத்து அமைதியாகி - ஐவகைக் கந்தங்களுக்கும் அமைவுடையதாயும்; மெய்வகை ஆறு வழக்கு முகம் எய்தி - மெய்ம்மை யுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளையுடையதாகியும் இந்நிதானம் நிலவும் எ-று.  
  
வாய்மை நான்காவன: துக்கம், துக்க நீக்கம் துக்கத் தோற்றம், துக்க நீக்க நெறியென்பன. ஐவகைக் கந்தமாவன; உருவம், வேதனை, குறிப்பு, பாவனை விஞ்ஞான மென்பன. வழக்கு ஆறாவன: உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த வுண்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த வுண்மை வழக்கு, இல்லது சார்ந்த இன்மை வழக்கு என்பன. இவற்றைப் பிறாண்டும் கூறுப.

### [31.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.9)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
35 நயங்க ணான்காற் பயன்க ளெய்தி  
இயன்றநால் வகையால் வினாவிடை யுடைத்தாய்  
  
35  
  
உரை  
  
36  
  
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி - நால்வகை நயங்களாலும் நால்வகைப் பான்களை உற்று; இயன்ற-இவற்றோடு ஒப்பிவியலும்; நால்வகை வினாவிடை யுடைத்தாய்-நான்கு வகையான வினாவடையுமுடாயதாய் இந்நிதானம் இயலும் எ-று.  
  
நயங்கள் நான்காவன; ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்பன. பயன் நான்கினையும் "தொக்க பொருளல தொன்றில்லை யென்றும், அப்பொருளிடைப் பற்றாகாதென்றும், செய்வானோடு கோட்பாடில்லை யென்றும். எய்து காரணத்தாங் காரியம் என்று மதுவு மன்று அலாதது மன்றென்றும், விதிமுறை தொகையினால் விரிந்த" (30-229-34) என்று கூறுதலாலறிக. வினாவிடை நான்காவன; "வினாவிடை நான்குள, துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விருத்தல், வாய்வாளாமையென" (30. 285--37) என வருதல் காண்க.

### [31.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.10)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
40 நின்மிதி யின்றி யூழ்பா டின்றிப்  
பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப்  
பண்ணுந ரின்றிப் பண்ணப் படாதாய்  
யானு மின்றி யென்னது மின்றிப்  
போனது மின்றி வந்தது மின்றி  
முடித்தலு மின்றி முடிவு மின்றி  
வினையும் பயனும் பிறப்பும் வீடும்  
இனையன வெல்லாந் தானே யாகிய  
  
37  
  
உரை  
  
44  
  
நின்மிதி இன்றி - நிருமிக்க்படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி; பின் போக்கல்லது - ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றக் கெடுவதில்லையாய்; பண்ணுநர் இன்றிப் பண்ணப்படாதாய் - செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய்; யானும் இன்றி என்னதும் இன்றி - யானெனதொன்னும் பற்றுக்கோடாவதின்றி; போனதும் இன்றி வந்ததும் இன்றி - போக்கு வரவு இல்லாததாய் முடித்தலுமின்றி முடிவுமின்றி - பிறர் முடிக்க முடிவதும் தானே முடிதலும் இல்லாததாய்; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனை யனவெல்லாம் தானேயாகிய - வினையாயும் வினையாற்றோன்றும் பயனாயும் பிறப்புக்கும் வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம் தானே முதலாகியுமுள்ளன இந்நிதானங்கள் எ-று.  
  
நிருமிக்கப்படுவதாகிய நிருமிதி நின்மிதி யெனவந்தது ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல். பேதைமை முதலிய பன்னிரண்டும் நின்மிதி முதலாகக் கூறிய அனைத்தும் உடையவல்ல என்பார், "நின்மதியின்றி" யென்பது முதலாக விரியக்கூறி. முடிவில், இவற்றின் இயல்பு தானும் இது வென்றற்கு, "வினையும் பயனும்  
  
பிறப்பும் வீடும் இனையன வெல்லாம் தானே யாகிய" என்றார் ஒன்றின்வழி யொன்று தொடர்ந் தொடுங்குதலும் மீளத் தோன்றுதலு முண்டேயன்றி யறக் கெடுவதில்லை யென்றற்கு, "ஊழ்பாடின்றி" என்றதனோ டொழியாது "பின் போக்கல்லது பொன்றக் கெடதாய்" என்றார். இவை எப்போதும் செய்வோனை யவாவி நிற்குமென்பது தோன்ற, "பண்ணுநரின்றிப் பண்ணப்படாதாய்" என்றும், செய்வோர்செய்திப் பயன் கண்டு "யான் செய்தேன்" என்றும், "இஃது எனது" என்றும், எண்ணுதற் கேதுவாவதல்லது, அவை தாமே யல்ல என்றற்கு, "யானுமின்றி என்னதுமின்றி" யென்றும், இவ்வாறே பிறவும் கூறினார். இங்ஙனம் எதிர்மறை முகத்தாற் கூறியவர், உடன்பாட்டு வாய்பாட்டால் வற்புறுத்தற்கு இவை "வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய" என்றார், இவ்வளவும் நிதானத்தின் பொதுவியல்பே கூறிற்றென வறிக. திருவாய் மொழிந்தது; நெறியுடைத்தாய். கண்ட நான்குடைத்தாய், மூன்றுடைத்தாய், மூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, அமைதியாகி, முகமெய்தி, பயன்களெய்தி, உடைத்தாய் கெடாதாய் பண்ணப்படாதாய், இன்றி , இன்றி இன்றி, தானேயாகிய 'பேதைமை, முதலியனவெனக் கூட்டி முடிவு செய்க. இக்கூறிய கருத்தையே மூலமாத்தியமிக காரிகையில் நாகார்ச் சுனர்¹ எட்டு வகையாக்க் கூறுகின்றார்.  
  
¹"No destruction. no production; no discontinuity, no per manence; no unity; no diversity: coming (appearance), no going (disappearance)" -- (11--13.)

### [31.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.11)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
45  
  
50  
பேதைமை செய்கை யுணர்வே யருவுரு  
வாயி லூறே நுகர்வே வேட்கை  
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்  
இற்றென வகுத்த வியல்பீ ராறும்  
பிறந்தோ ரறியிற் பெருமபே றறிகுவர்  
அறியா ராயி னாழ்நர கறிகுவர்  
  
45  
  
உரை  
  
50  
  
பேதைமை...ஈராறும் - பேதையையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனுமென இத்தன்மையாக வகுக்கப் பட்ட நிதானங்களின் இயல்பு பன்னிரண்டினையும்; பிறந்தோர் அறியின் - மண்ணில் மக்களாகப் பிறந்தவர்கள் ஆராய்ந்தறிந்து கொள்வார்களாயின்; பெரும்பேறு அறிகுவர் - பெரிய பேறாகிய வீடுபேற்றினை எய்துவர்; அறியாராயின் - அறியர் தொழிவாராயின்; ஆழ்நகரகறிகுவர் - கரையேறமுடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து ஆண்டுள்ள துன்பத்தைத் தான் அறிவர் எ-று.  
  
பேதைமை முதலாகக் கூறிய இப்பன்னிரண்டினையும் ஏனைப் புத்த நூல்கள் முறையே, அவிச்சை சம்ஸ்காரம், விஞ்ஞானம், நாமரூபம், சடாயதானம், பரிசம், வேதனை திருஷ்ணை, உபாதானம், பவம் சாதி என்று கூறிகின்றன. இவ்வாசிரியர் வாயில் என்றதனை ஏனையோர் சடாயதனம் என்றற்குச் காரணம், பொறியைந்தனோடு மனத்தையும் கூட்டிக் கோடலேயாகும். இவர் சடாயதன மென்பதை விலக்கிப் பஞ்சேந்திரியங்களையே கோடலின், இவ்வாறு கூறும் தசபூமிக சூத்திர முடையாரோடு இவர் ஒத்த கருத்துடையரென்று காணலாம்; ஆயினும்  
  
அவர் வேட்கையை அபிநந்தனை யென்றும், தோற்றத்தைப் பஞ்சஸ்கந்த மென்றும் கூறுதலின், அவரோடு அவர் முழுவதும் ஒவ்வாமை யறிந்துகொள்க. சில நூல்கள் அவிச்சையிற் றொடங்காது, வினைப்பயன் முதலாகத் தொடங்கிய பேதைமை யீறாகக் கூறுகின்றன. இப் பன்னிரண்டனையும் பகுத்தாராய்ந்தறிதலால் விளையும் பயன் இது வென்பார், "பிறந்தோ ரறியின் பெரும்பே றறிகுவ, ரறியா ராயி னாழ் நர கறிகுவர்" என்றார். பெரும்பேறு - வீடுபேறு; அதனிற் பெரியது வேறில்லை யாதலின். தசபூமிக சூத்திர முடையா (சூ; 48) ரும் இவ்வாறே கூறுகின்றார்.

### [31.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.12)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
பேதைமை யென்ப தியாதென வினவின்  
ஓதிய விவற்றை யுணராது மயங்கி  
இயற்படு பொருளாற் கண்டது மறந்து  
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்  
  
51  
  
உரை  
  
54  
  
பேதைமை யென்பது யாதென வினவின் - பேதைமையொனச் சொல்லப்படுவது யாதென்று கேட்டால்; ஒதிய இவற்றை உணராது-நால்வகையாகக் கூறிய வாய்மைகளையும் நிதானங்களையும் உணர்ந்து கொள்ளாமல்; மயங்கி - மயக்கமுற்று; இயற்படு பொருளால் கண்டது மறந்து-காட்சியாலும் கருத்தளவையாலும் அறிந்தவற்றை மறந்து; முயற்கோடு உண்டெனக் கேட்டு அது தெளிதல் - முயற்குக் கொம்பு உண்டோ இல்லையோ என்பதைப் பிறரைக் கேட்டு உண்டெனின் உண்டெனத் தெளிவதாம் எ-று.  
  
வாய்மைகளையும் அவற்றை விளக்கும் இயல்புடைய நிதானங்களையும் "இவற்றை" யெனக் குறித்தார். காட்சி கருத்து என்ற இரு வகையளவையாலும் அறிவும் பொருள்களை "இயற்படுபொருள்" என்றார் பௌத்தர் காட்சியுங் கருத்துமல்லாத பிறவளவைகள் தூய்மை யுடையவல்ல வென்ப வாகலின், கேள்விக்குரிய "கேட்டது தெளிதல்" பேதைமை எனப்படுவதாயிற்று. இனி, தம்மசங்கணி யென்னும் நூல் பேதைமையாவது நால்வகை வாய்மைகளையு மறியாமை (1100, 1102), என்று கூறுகிறது. இவ்வாறே, "பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வனோ டுனாய்க், காமுற்றா மதன் பயத்தினிற் காமனைக் கடந்து, நாம ரூஉம்புகழ் கொடுப்பதோர் நன்னெறி நண்ணும். வாமன் வாய்மையை மறந்திட்டு மறைந்தொழி கின்றாம்" (வீர. யாப். 5 மேற்) என்று பிறரும் கூறுதல் காண்க. திக்க நிகாயத்தின் பகுதியாகிய மகா நியாய சுத்தித்திற் காணப்படும் நிதானங்களுள் இப்பேதைமை காணப்படாமையின், ஒருகால் இது வைதிக சமய நூல்களிலிருந்து மேற்கொண்ட தாகலா மென்றும், திபேத்திலுள்ள கோயில்களில் இப்பேதைமையாகிய நிதானம், குருடனாக வுருவு கொடுத்தோவிய மெழுதப்பட்டுள தென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப.

### [31.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.13)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
55  
  
60  
  
உலக மூன்றினு முயிரா முலகம்  
அலகில பல்லுயி ரறுவகைத் தாகும்  
மக்களுந் தேவரும் பிரமரு நரகருந்  
தொக்க விலங்கும் பேயு மென்றே  
நல்வினை தீவினை யென்றிரு வகையாற்  
சொல்லப் பட்ட கருவிற் சார்தலுங்  
கருவிற் பட்ட பொழுதினுட் டோற்றி  
வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு  
மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டுந்  
  
55  
  
உரை  
  
63  
  
உலகம் மூன்றினும் - மூவகையுலகங்களிலும்; உயிராம். உலகம் அலகில - உயிர்களின் கூட்டம் அளவில்லாதனவாம்; பல் உயிர் - பலவாகிய உயிர்கள்; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் - மக்கள் தேவர் பிரமர் நரகர் என்றும்; தொக்க விலங்கும்பேயும் என்று-புட்களோடு தொக்கிருக்கம் விலங்கும் பேயும் என்றும்; அறுவகைத்தாம்-அறுவகைப்படும்; நல்வினை தீவினை என்று இருவகையால் - நற்செய்கையும் தீச்செய்கையுமாகிய இருவகைச் செய்கைகளால்; சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்-மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை யடைவதும் ; கருவிற்பட்ட பொழுதினுள் தோற்றி - அப் பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோற்றி; வினைப்பயன் விளையுங்காலை-செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில் ; மனப் பேரின்பமும் - மனத்தின்கண் பெரிய இன்பத்தையும் ; கவலையும் - துன்பத்தையும் : காட்டும் - காட்டுவதும் செய்யும் எ - று.  
  
உலகம் பாவம் புண்ணியம் என இருவகைப்படுமென்றும், புண்ணிய வுலகம் தேவவுலகம் உருவப்பிரமவுலகம் அருவப்பிரமவுலகமென மூவகையாக நிலவுமென்றும், இவை பொதுவில் முப்பத்தொன்றா மென்றும் கூறுப வாயினும், வினை செய்தற் குரியது நடுவுலக மெனவும், நல்வினைப் பயன் நுகர்தற் குரியது மேலுலக மெனவும், தீவினைப் பயனை நுகர்தற்குரியது கீழுலக மெனவுர் முக்கூறுபடுவதுபற்றி, "உலக மூன்றினும்" என்றார். இது தமிழகத்து வழக்குப்போலும். பண்டைத் தமிழ்ப் புத்தநூல்கள் உலக மூன்றென்றே கொண்டுள்ளன வென்பதை, "இவ் வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருணீங்க, எவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்த செழுஞ்சுடர்" (வீர. யாப். 11. மேற்.) என வரும் பழம் பாட்டாலு மறியலாம். நரகர், பேய், விலங்கு முதலியவற்றிற்குரிய வுலகினும் கீழுலகத்தவ ராயினும், அசுரருமகப்பட உயர் திணையாற் கூறப்படும் இயைபு பற்றி, மக்கள் முதலாயினரொடு கூட்டி "மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்" என்றார். புள் முதலிய பிற வுயிர்களிமடங்க, "தொக்க விலங்கு" என்றார். பெரும்பான்மையான நூல்கள் பிரமரைத் தேவருள் அடக்கி, மக்களும் தேவரும் நரகரும் விலங்கும் பேயுமென உயிர்வகை யைந்தென்றே கூறுகின்றன. வேறு சில நூல்கள் இவ்வைந்தனோடு அசுரரை கூட்டி உயிர்வகை யாறென்றும் கூறும் இவ்வாசிரியர் அவ்வசுரரை நரகரோடு அடக்கிக் கொள்கின்றாரென வறிக. ஒரு பிறப்பிற் செய்தவினை மறுபிறப்பிற் கருவிலேயே தோன்றித் தன்பயனை நுகர்விக்குங் காலமெய்துங்காறும் அமைந்திருந்து, வந்ததும் தவறாது நுகர்விப்பதுபற்றி, "கருவிற்பட்ட பொழுதினுட்டோற்றி" என்றும், "வினைப்பயன் விளையுங் காலை உயிர் கட்கு, மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும்" என்றும் கூறினார். நல்வினைப்பயன் இன்பமும் தீவினைப்பயன் கவலையு மாதலின், இரண்டும் கூறப்பட்டன. சா,தலும் என்றதற்கேற்பக் காட்டும் என்பது காட்டுதல் செய்யும் எனப் பொருளுரைக்கப்பட்டது. இது சொற் பொருள் விரித்தல்.

### [31.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.14)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
65  
  
70  
  
75 தீவினை யென்ப தியாதென வினவின்  
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்  
கொலையே களவே காமத் தீவிழை  
வுலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்  
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்  
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்  
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்  
றுள்ளந் தன்னி னுருப்பன மூனறுமெனப்  
பத்து வகையாற் பயன்றெரி புலவர்  
இத்திறம் படரார் படர்குவ ராயின்  
விலங்கும் பேயு நரகரு மாகிக்  
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்  
  
64  
  
உரை  
  
75  
  
ஆய்தொடி நங்காய் - அழகிய வளையணிந்த நங்கையே; தீவினை யென்பது யாதென வினவின்-தீவினையென்று சொல்லப் படுவது யாதென்று கேட்பாயாயின்; அதுகேளாய்-யான் சொல்லு மதனைக் கேட்பாயாக ; கொலையே களவே காமத் தீ விழைவு - கொலையும் களவும் காமமாகிய தீய வேட்கையுமாகிய ; உலையா வுடம்பில் தோன்றுவ மூன்றும் - கெடாத வுடம்பால் உண்டாகும் தீவினைகள் மூன்றும் ; பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என-பொய்யுரையும் புறங்கூறலும் கடுஞ்சொற் சொல்லுதலும் பயனில்சொல் சொல்தலும் என்று ; சொல்லில் தோன்றுவ நான்கும் - வாக்கனிடத்தே யுண்டாகும் தீவினைகள் நான்கும் ; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி யென்று - பிறர் பொருளை வௌவக் \*கருதலும் வெகுளுதலும் குற்றம்படவுணர்தலு மென்று ; உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என - மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றுமென ; பத்துவகையால் - பத்துவகைப்படுதால்; பயன்தெரி புலவர்-வினைவகையும் அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார்-இப் பத்தினையும் ஒருநாளும் நெஞ்சாலும் நினையார்; படர்கு வராயின் - நினைவராயின் ; விலங்கும் பேயும் நரகருமாகி - விலங்கும் பேயும் நரகருமாகிய கதிகளுட் பிறந்து ; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப வுடம்புற்று வருந்துவர் எ - று.  
  
எனவே, தீவினை, மெய் வாய் மனம் என்ற மூன்றாலும் செய்யப்படு மென்றும், அவ்வகையால் மெய்யில் மூன்றும் வாயில் நான்கும் மனத்தில் மூன்றுமாக வினை பத்தாமென்றும், இவற்றைச் செய்தோர் விலங்கும் பேயும் நரகருமாய்ப் பிறந்து துன்புறுவரென்றும் கூறியவாறாம். பிறரும், "மருடறா மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத் தாமே" (நீலகே. மேற்.) என்பர். ஆங்க என்பது அசை நிலை. பொதுவாகத் துறவிகாளற் பெரிதும் விலக்கப்பட்டது காமமெனினும், புத்த துறவிகள் ஏனை யெல்லாரினும் விஞ்சினவாராவர் ; லளிதா விஸ்தரம் என்ற நூல் (பக்: 206) இக் காமத்தின் தீமையை முப்பத்து மூன்று உவமைகளால் விரித்துக் கூறுவதை நோக்கின், "காமத் தீவிழை" வென இவர் கூறுவது பொருத்தமாகவே யுளது. தான் உள்ளளவும் கொலை முதலிய குற்றங்கட் கேதுவாதல் பற்றி, "உலையாவுடம்பு" என்றார். உலைதல் - ஈண்டுக் குற்றத்தின் தொடர்பு கெடுதல். குறளை - கோட் சொல்லதலுமாம். கடுஞ்சொல் - இன்னாச்சொல். "சொல்லுக சொல்லிற் பயனுடைய" (குறள். 200) என்றமையின், பயனில்சொல்சொல்லுதல் தீவினையாயிற்று. நற்காட்சியின் மறுதலை யாதலின் "பொல்லாக் காட்சி" யென்றார். மனம் சிறிது மறப்பினும், அதற்கிடனாகும் உடம்பின் துன்பநிலை மறவாது கலங்கி யலையச் செய்யுமாறு தோன்ற, "கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்" என்றார். எனவே, கலக்கமும் கவலையுமே உள்ளத்திருப்பனவாம் என்றவாறயிற்று. வினையைச் சமஸ் காரம் என்று வழங்கும் க்ஷேமேந்திர்ரும், இது மன மொழி மெய்களால்  
  
தோன்றுவதென்றே தமது போதிசத்துவ அவதானகற்பம் என்ற நூலிற் கூறியுள்ளார். வினையுண்மை கொள்ளும் ஏனைச் சமயத்தவரும் இதனை யுடன்பட்டுரைப்பர். சிலர் இம் மூன்றுடன் அறிவென ஒன்றைக் கூட்டி, நான்காக வுரைத்தலு முண்டு.

### [31.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.15)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
80  
நல்வினை யென்ப தியாதென வினவிற்  
சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச்  
சீலந் தாங்கித் தானந் தலைநின்று  
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத்  
தேவரும் மக்களும் பிரமரு மாகி  
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்  
  
76  
  
உரை  
  
81  
  
நல்வினை யென்பது யாதென வினவின்-நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி - முன்பு சொல்லப்பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி; சீலம் தாங்கி - சீலத்தை மேற்கொண்டு; தானம் தலைநின்று - தானங்கள் பலவற்றையும் செய்து; மேலென வகுத்த ஒரு மூன்று திறத்து - மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப்பட்ட மூன்றாகிய; மக்களும் தேவரும் பிரமருமாகி-மக்களென்றும் தேவரென்றும் பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து; மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் - தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர் எ - று.  
  
சொல்லிய பத்துமாவன : "உடம்பிற் றோன்றுவ மூன்றும்," "சொல்லிற் றோன்றுவ நான்கும்,; "உள்ளந்தன்னில் உருப்பன மூன்றுமெனப் பத்து வகை" என அறிக. இப்பத்தினின்றும் நீங்கும் நீக்கத்தைச் சாதித்துக் கொடுக்கும் பாரமிதை பத்தினுள் முதற்கண் வேண்டுவன தானமும் சீலமு மாதலின், இவற்றைச் "சீலந் தாங்கித் தானம் தலைநின்று" எனச் செயன்மேல் வைத்துக் கூறினார். எல்லா வுயிர்க்கும் பொதுவாகக் கூறிதலின், மக்கட் கதியினையும் "மேலென வகுத்த" கதி யென்றார். நல்வினையின் பயன் மகிழ்ச்சி யாதலின், "மகிழ்ச்சி" யெனப்பட்டது.

### [31.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.16)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
உணர்வெனப் படுவ துறங்குவோ ருணர்விற்  
புரிவின் றாகிப் புலன்கொளா ததுவே  
  
82  
  
உரை  
  
83  
  
உணர்வெனப்படுவது - உணர்வு என்று சொல்லப்படும் நிதானமாவது; உறங்குவோர் உணர்வின் - கண்ணுறங்கு மொரு வர்பாலுள்ள வுணர்வுபோல ; புரிவு இன்றாகி - விளக்கமின்றி ; புலன் கொளாத்து - செய்கையின்றி யுண்மை மாத்திரையாய் இருப்பது  
எ - று.  
  
உறங்குவோர்பாலுள்ள வுணர்வு, செய்கைக்கு வினைமுதலாதலும் செய்வினைப் பயனை நுகர்வதாதலும் பிறவுமின்றி உண்மைமாத்திரை யாய் இருப்பது கண்கூடாதலின், அதனை யெடுத்துக் காட்டி விளக்கினார். புலன் கொளல் - இந்திரியங்களாலும் மனத்தாலும்பொருண்மை கண்டு பயன் நுகர்தல். க்ஷேமேந்திரரும் (ii. 599) இவ்வாறே கூறுவர். இவ்வுணர்வை விஞ்ஞானமென்பதே பெரு வழக்கு. இதற்கு மாறாய்ப் புரிவுடைத்தாய்ப் புலன் கொள நிற்கும் உணர்வுநிலை சடாயதன மென்றும், வாயிலென்றும் வழங்கப்படுவது பற்றி, சில பௌத்த நூல்கள் உணர்வையும் வாயிலையும் ஒரு சேரத் தொகுத்துக் கூறுதலும் ஆராய்தலும் செய்கின்றன. இனி, அஜந்தாக்குகை யோவியத்தில், ஒரு  
  
வாலில்லாக் குரங்கு மரமேறுவது போலக் காணப்படுவது இந்த நிதானத்தைக் குறிப்பதா மெனக் கூறுப.

### [31.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.17)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
85  
அருவுரு வென்பதவ் வுணர்வு சார்ந்த  
உயிரு முடம்பு மாகு மென்ப  
  
84  
  
உரை  
  
85  
  
அருவுரு என்பது - அருவுரு வெனப்படும் நிதானமாவது; அவ்வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப - அவ்வுணர் வொடு கூடிய உயிரும் உடம்புமாகும் என்று புலவர் சொல்லுவர் எ - று.  
  
உயிர் அருவமாயும் உடம்பு உருவமாயு மிருத்தலின் இரண்டையும் சேர வைத்து அருவுரு வென்றனர். வட நூல்கள் இதனை நாம ரூப மென்றும், நாமத்தின்கண் காட்சி கருத்து, உணர்வு, செய்கை முதலியன அடங்குமென்றும், ரூபத்தின்கண் நில முதலிய நான்கு பூதங்களின் கூட்டமாகிய உடம்படங்கு மென்றும் கூறுப. திபேத்திற் காணப்படும் ஓவியங்களும், இஃது ஒராற்றைக் கடக்கும் படகு போல வரையப்பட்டுள தென்பர். சாந்தோக்கியம், பிரகதாரணிய முதலிய வுபநிடதங்களிலிருந்தே இந்நிதானம் பௌத்தல்களால் மேற்கொள்ளப் பட்டதாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சொல்லுதற்கேற்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.

### [31.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.18)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
வாயி லாறு மாயுங் காலை  
உள்ள முறுவிக்க வுறுமிட னாகும்  
  
86  
  
உரை  
  
87  
  
ஆயுங்காலை - ஆராயுமிடத்து; வாயில் ஆறும்-இந்திரியமைந்தும் மனமும் ஆகிய வாயில்களாறும்; உள்ளம் உறுவிக்க-உள்ளத் தின்கண் பொருளுணர்ச்சி எய்திப் பொருந்துதற்கு; உறும் இட னாகு மென்ப-உரிய இடமாகுமென்று புலவர் கூறுவர்  
எ - று.  
  
வியில்களாறாவன : மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம் என் பனவாம். இவ்வாறினாலும் உணரப்படும் பொருள்களும் அறுவகையாதலின், மெய் முதலியவற்றை அகவாயிலென்றும், மெய்யாலறியப்படும் பொருள் வாயா லறியப்படும் பொருள் முதலியவற்றைப் புறவாயி லென்றும் பகுத்தோதுதலு முண்மையின், "ஆயுங்காலை" யென்றார். வாயிலை வடநூலார் ஆயதனம் என்பவாகலின், இது சடாயதனமென வட நூல்களுட் கூறப்படுகிறது. வாயில், "பொறிவாயி லைந்தவித் தான்" குறள் - 6.) என்புழிப்போல நின்றது. இது மனிதொனருவன் தலைபோலவும், ஆறு சாளரமுள்ள வீடுபோலவும் ஓவிய மெழுதப்பட்டுளது. "மனதில் இல்லை, மனதில் உளது" என்ற வழக்குரையே பொருளுணர்வுக்கு மனம் இடமாதலை வற்புறுத்துதலின், அதனை விதந் தோதாரயினர் என வறிக.

### [31.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.19)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
வாயி லாறு மாயுங் காலை  
உள்ள முறுவிக்க வுறுமிட னாகும்  
  
88  
  
உரை  
  
89  
  
ஊறென வுரைப்பது - ஊறு எனக் கூறப்படும் நிதானமாவது; உள்ளமும் வாயிலும் - மனமும் இந்திரியங்களும்: வேறு புலன்களை மேவுதல் என்ப - தம்மின் புறமாகிய பொருள்களைப் பொருந்துவதென்று புலவர் கூறுவர் எ - று.  
  
இதனை வடநூலார் பரிசம் என்பர். இச் சொல்லிரண்டும் மெய்யாகிய இந்திரியமே யன்றிக் கண் முதலியனவும் மனமும் பொருளை யுணர்  
  
தற்குளதாகும் இயைபினை யுணர்த்தும் பொதுச்சொற்களாமெனக் கொள்க. கண்ணுக்கும் காணப்படும் பொருளுக்குமுள தாகும் இயைபும் ஊறெனப்படு மென்பதாம். பொறிகளில், "கோளில் பொறி"யு (குறள் 8.) முளவாதலின், கோடற்குரிய புலன்களை, "வேறு புலன்கள்" என்றும், மெய் முதலிய வாயில்களாற் கொண்டவற்றைத் தன் கண் மேவக் கொள்ளுதலும் தள்ளுதலும் செய்யும் செய்கை வேறுபாடு பற்றி, உள்ளத்தைப் பிரித்து, "உள்ளமும் வாயிலும்" என்றும் கூறினார். புலன் என்றது, புறவாயில்களாகிய பொருள்களை யென்க. மெய் முதலியவற்றால் உணரப்படும் புறப்பொருள்கள் புலன்களில் அடங்கிப் பொறி வயிலாக உள்ளத்துச் சென்று பொருந்துமாறுபற்றிப் "புலன்கள்" விதந்தோதப்பட்டனவென வறிக. இவ்வூற்றினை நையாயிகர் சந்நிகர்ஷம் என்பர்; வைசேடிகர் சம்பந்தமென்று கொண்டு, சையோகம், சையுக்த சமவாயம், சையுக்த சமவேத சமவாயம், சமவாயம், சமவேத சமவாயம், விசேடண விசேடியமென ஆறாகப் பகுத்துக் கூறுப. மற்று, பௌத்தர் நிதானவகையுள் வைத்து நையாயிகர் முதலியோர் கூறியவற்றுள் சிலவற்றை விலக்கியும் சிலவற்றை மேற்கொண்டும் கூறுப. நையாயிகர் கூறும் இந்திரியம், பொருள், சந்நிகர்ஷம், ஞானம் என்ற நான்கனுள், இந்திரியமும் பொருளும் வாயிலின் கண்ணும், சந்நிகர்ஷம் ஊற்றின் கண்ணும், ஞானம் பிறவற்றின்கண்ணும் அடங்குமா றறிக. இந் நிதானம் கண்ணில் அம்பு தைப்புண்டிருக்கும் ஒருவன்போல ஓவியஞ் செய்யப்படுகிறதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

### [31.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.20)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
90  
  
நுகர்வே யுணர்வு புலன்களை நுகர்தல்  
வேட்கை விரும்பி நுகர்ச்சியா ராமை  
பற்றெனப் படுவது பசைஇய வறிவே  
  
90  
  
உரை  
  
92  
  
நூகர்வே - நுகர்ச்சி யெனப்படும் நிதானமாவது ; புலன்களை யுணர்வு நுகர்தல்-புலன்களாகிய பொருளை யுணர்ந்து அவற்றின் பயனை யடைதல் ; வேட்கை - வேட்கையென்னும் நிதானமாவது; விரும்பி நுகர்ச்சி யாராமை - அப் பயனை விரும்பி நுகர்ந்தவழி அதன்மேற் செல்லும் ஆசையடங்காமையாம்; பற்று எனப்படுவது- பற்றெனப்படும் நிதானமாவது ; பசைஇய அறிவு - அடங்கா தெழுந்த ஆசையால் அதனையேபற்றி நிற்பதாம் எ - று.  
  
நுகர்வினை வேதனை யென்றும், வேட்கையைத் திருஷ்ணையென்றும், பற்றினை உபாதானமென்றும் வடநூல்கள் கூறுகின்றன. போதி மூலத்து நாதனாவோர்க்கு இன்றியமையாத நால்வகைச் சுமிருதி யுபத் தானங்கட்கும் இந்நுகர்வு அடிப்படை யென்பர். அந்நான்கும் காயம் வேதனை சித்தம் தன்மம் என வரும். இது காதலிருவர் தம்மிற் றழீஇ யிருப்பது போல ஓவியஞ் செய்யப்படுகிறது. வேட்கை, ஐம்புல நுகர்ச்சி வேட்கை, பிறப்பு வேட்கை, பிறவாமை வேட்கை யென முக் கூறுபடும். நிலையாதவற்றை நிலையுடையவாகக் கருதி விருப்பஞ் செய்தற்கு இதுவே முதல். வேட்கையைத் தாயாகவும், பேதைமைய்த் தந்தையாகவும் உலகியற் றுன்பவாழ்க்கையை அவ்விரண்டின் கான் முளையாகவும் இலங்காவதார சூத்திரமென்னும் நூல் உருவகஞ் செய் துரைக்கின்றது. மாரனென்னும் தேவனுக்கு இவ்வேட்கையை மக  
  
னென்பர். இதனைக் கள்ளருந்துமொருவனாக உருவகஞ் செய்து ஓவிய மெழுதியுள்ளனர். பிறப் பிறப்புக்கட்கு முதற் காரணமென்பது பற்றி, பற்றினை உபாதானமென்று கூறுகின்றர். இது, விடயம், புகழ், சம்பிரதாயம், ஆன்மா என நான்கு வகையாய் இயலும் என்பர். விடயமாவது, இந்திரியங்களால் உண்டாகும் இன்பத்திற் பற்றுச் செய்வது ; புகழாவது, பிறர் புகழ்வதை விரும்பியும் இகழ்வதை யஞ்சியும் பற்றுச் செய்வது ; சம்பிரதாயமாவது, வேள்விசெய்தல் முதலிய சடங்குகளிலும் விரத நோன்புகளிலும் பற்றுச் செய்தல் ; ஆன்மா, ஆன்மா வுண்டென நினைந்து அதன்மேற் பற்றுச் செய்வது. ஒருவன் பல்வகைப் பூக்களைப் பறித்துத் தொகுப்பதுபோல இதனை யுருவகப படுத்தி ஓவியந் தீட்டியுள்ளனர்.

### [31.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.21)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
பவமெனப் படுவது கரும வீட்டந்  
தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல்  
  
93  
  
உரை  
  
94  
  
பவம் எனப்படுவது - பவமென்று சொல்லப்படும் நிதானமாவது ; கரும ஈட்டம் - கருமங்களின் தொகுதி ; தரும் முறை இது என - தன் பயனை விளைத்துக் கொடுக்கும் முறைமை யிதுவாகு மென்று கருதி ; தாம்தாம் சார்தலை - கருமத்தைச் செய்தோர் அப் பயனையுடன்பட்டு என்று கொண்டமைவதாம் எ - று. உடன்பட்டு என்று கொண்டமைவதாவது,¹ 'நன்றாங்கால் நல்ல வாக் காண்பவன் அன்றாங்கால் அல்லற்' படாது அதன் விளைவாய துன்பத்தையும் நுகர்தற்குச் சமைந்தவுள்ள முடையனாதல். இதற்குப் பலரும் பலவாறாகக் கூறுகின்றனர். க்ஷேமேந்திரர் பவமாவது உருவு கோடலென்று கொண்டு, அது காமம், ரூபம், அரூபமென மூவகைப் படுமென்பர். ஒல்டன்பர்க் கென்பார், பிறப் பிறப்புக்களின் இடைய றாமை யென்பர். வடநாட்டுப் பௌத்தர்கள், பவத்தைத் திருமணம் போலவும் தோற்றத்தை மகப்பேறு போலவும் கொள்கின்றனர். இவர் கருத்தை யுணராது பலரும் பலவாறு கூறி இடர்ப்படும் திறத்தை ஹார் தயாள் என்பார்² தாமெழுதிய ஆராய்ச்சி நூலில் விரியக் கூறுமாற்றா லறிக. முன்னைப் பிறப்புக்களிற் செய்த பற்றுக் காரணமாக வரும் பிறப்புக்கிடையே, பற்றுக் காரணமாக விளைந்த கருமத்தொகுதியில் வரக் கடவ நன்மை தீமைகட்கு இப்பவ மென்னும் நிதானம், இடமும் காலமுமா யமைவதென்பது பௌத்தநூல்கிளன் துணிபென வறிக. திபேத்தியர் இதனை ஒரு மணமகளாக வுருவங் கற்பிக்கின்றனர்.  
  
¹ பக் . 323. ² Bodhi Sathva Docrine P. 242.

### [31.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.22)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
95  
  
பிறப்பெனப் படுவதக் கருமப் பெற்றியின்  
உறப்புண ருள்ளஞ் சார்பொடு கதிகளிற்  
காரண காரிய வுருக்களிற் றோன்றல்  
  
95  
  
உரை  
  
97  
  
பிறப்பெனப்படுவது-பிறப்பென்னும் நிதானமவது; கரும்ப் பெற்றியின் - செய்த வினைகளின் தன்மைக் கேற்ப; உறப்புணர் உள்ளம் - ஏனையவற்றோடு மிகவும் சேர்ந்திருக்கும் விஞ்ஞான மானது ; சார்பொடு - முன்னும் பின்னுமாய்ச் சாரும் நிதானங்களுடன்; கதிகளில் - பலவகைப் பிறப்புகளிலும்; காரண காரியவுருக்களில் தோன்றல் - காரண காரியமாய் இயையும் உடம்புகளில் தோன்றுவதாம் எ - று.  
  
செய்யப்படும் வினைக்கேற்பப் பிறப்பெய்துதலால் "கருமப் பெற்றியின்: என்றும், உருவம், வேதனை, சஞ்ஞை, சமஸ்காரம் என்ற நான்கு கந்தங்களுடன் பிரிப்பறச் சேர்ந்திருக்கும் இயல்புபற்றி, விஞ்ஞான கந்தத்தை, "உறப்புணர் உள்ளம்" என்றும், நிதானங்கள் தாமும் ஒன்றை யொன்று சார்வாகக்கொண்டு தோன்றுதலின், "சார் பொடு" என்றும், உருவுடைய உடம்பும், முன்னைய வுடம்புகளின் காரியமாயும், வரும் உடம்புகட்குக் காரணமாயும் இயைதலின், "காரண காரிய வுருக்க"ளென்றும் கூறினார். காரண காரியமாய் இயையும் உடம்பெல்லாம் ஐவகைக் கந்தங்களின் கூட்டமென்பது பௌத்த நூற் றுணிபாதலின் உறப்புணர் உள்ளம் சார்வோடு கதிகளில் உருக்களில் தோன்றல் என்றாற் போலவே, ஐங்கந்தங்களின் தோற்றமே பிறப்பெனப்படும் நிதானமாம் என்று தசபூமிக சூத்திலமுடையார் கூறுகின்றார். கரும்ப் பெற்றியின் சார்பொடு கதிகளில் தோன்றல் என்ற கருத்தையே வேறு வாய்பாட்டால், பல்வகைப் பிறப்பின் சுழற்சித் தோற்றம் பிறப்பென்பதென்று க்ஷேமேந்திரர் கூறுகின்றார். இப் பிற்பினை வடநூல்கள் சாதியென்று வழங்குகின்றன. திபேத்திலுள்ள ஓவியங்கள் இதனை மணஞ் செய்துகொண்டதன் விளைவாக மகற்பெற்ற மனிதனொருவன்போல் உருவந்தீட்டிக் காட்டுகின்றன.

### [31.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.23)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
100  
  
பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய்  
இயற்கையிற் றிரிந்துடம் பிடும்பை புரிதல்  
மூப்பென மொழிவ தந்தத் தளவுந்  
தாக்குநிலை யாமையிற் றாந்தளர்ந் திடுதல்  
சாக்கா டென்ப தருவுருத் தன்மை  
யாக்கை வீழ்கதி ரெனமறைந் திடுதல்  
  
98  
  
உரை  
  
103  
  
பிணியெனப்படுவது - நோய் என்று சொல்லப்படுவது ; பிறிது சார்பாய் - பேதைமை முதலாகக் கூறியவற்றின் வேறாய சார்பாய், உடம்பு இயற்கையின் திரிந்து-உடம்பின் தன்மையின் வேறுபட்டு; இடும்பை புரிதல் - அதற்குத் துன்பத்தை யுண்டு பண்ணுவதாம்; மூப்பென மொழிவது-மூப்பென்று சொல்லப்படுவது; அந்தத்து அளவும் - சாகும் வரையில்; தாக்கும் நிலையாமையின் -வந்து மோதுகின்ற நிலையாமையால்; தளர்ந்திடுதல்-உடம்பு தளர்ச்சி யெய்துவதாம்; சாக்காடென்பது-இறத்தலென்று சொல்லப்படுவது; அருவுருத்தன்மை யாக்கை-அருவாதலும் உருவாதலு மாகிய தன்மையினையுடைய வுடம்பானது; வீழ்கதிரென மறைந் திடுதல்-மேலைக் கடலில் விழும் ஞாயிறுபோல மறைவதாம் எ - று.  
  
பிணியும் மூப்பும் சாக்கடுமென இவர் கூறினாராக வடநூலார் பலரும் திரையும் மரணமுமென்ற இரண்டையே கூறுவர் ; சிலர் பிணியைக் கூட்டித் திரையும் பிணியும் மரணமும் என்பர். சிலர் இவற்றோடு அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் பிறவும் கூட்டிக் கூறுவர். இப் பிணி முதலியன தோற்றம் சார்வாகத் தோன்றுவனவாயினும் தம்முள் ஒன்றற்கொன்று சார்வாகாமையின், "சார்பிறிதாய்" என்றார் ; இதனைப் பிறிது சார்பாய் என மாறிக்கொள்க. உடம்பின் இயல்பான தன்மையில் உளதாகும் திரிபே நோய் என்பார். "இயற்கையின் திரிந்து" என்றும், இதனால் விளையும் பயன் இதுவென்பார், "இடும்பை பிரிதல்" என்றும் கூறினார். அந்தம் - சாக்காடு. கணந்தோறும் நிலையாமை  
  
யெய்துதலின், "தாக்கும் நிலையாமை"யென்றும், அதன் தாக்கு தற்காற்றாது உடம்பு தளர்ச்சியடைகிறதென்பார், "தாக்கும் நிலையாமை யிற்றாந் தளர்ந்திடுதல்" என்றும் குறிப்பித்தார். உருவ வகையால் காயமென்றும், அருவவகையில் தன்மம், சித்தம், வேதனை என்றும் உடம்பானது போதி சத்துவரால் உணரப்படுவது பற்றி "அருவுருத் தன்மை யாக்கை" என்றார். உடம்பு, புறவுடம்பு, அகவுடம்பு, அகப்புற வுடம்பு எனக் காணப்படும் வழக்கும் புத்தர்களிடையே யுண்டு, "இளங் கதிர் ஞாயி றெள்ளுந் தோற்ற" த்தோடு விளங்கும் உடம்பு, இறக்குங் கால் அதன் வீழ்ச்சி போறலின், "வீழ் கதிரென மறைந்திடுதல்" என்றார். திபேத்தியர்களால் இங்கே கூறிய பிணி மூப்பு முதலியன சுடலைக்குக் கொண்டுபோகப்படும் பிணம்போல உருவமெழுதப்பட்டுள்ளன.

### [31.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.24)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
105  
  
110  
  
115  
  
பேதைமை சார்வாச் செய்கை யாகுஞ்  
செய்கை சார்வா வுணர்ச்சி யாகும்  
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்  
அருவுருச் சார்வா வாயி லாகும்  
வாயில் சார்வா வூறா கும்மே  
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்  
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்  
வேட்கை சார்ந்து பற்றா கும்மே  
பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி  
கருமத் தொகுதி காரண மாக  
வருமே யேனை வழிமுறைத் தோற்றந்  
தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா  
டவல மரற்றுக் கவலைகை யாறெனத்  
தவலில் துன்பந் தலைவரு மென்ப  
  
104  
  
உரை  
  
117  
  
பேதைமை சார்வாச் செய்கை யாகும் - பேதைமையாகிய நிதானத்தைச் சார்பாகக் கொண்டு செய்கையாகிய நிதானம் தோன்றும்; செயற்கை சார்வா உணர்ச்சியாகும்-அச் செய்கையைச் சார்பாகக் கொண்டு உணர்ச்சி யென்னும் நிதானம் தோன்றும் ; உணர்ச்சி சார்வா அருவுருவாகும் - அவ்வுணர்ச்சியைச் சார்பாகக் கொண்டு அருவுருவாகிய நிதானம் தோன்றும்; அருவுரு சார்வா வாயிலாகும் - அவ்வருவுருவைச் சார்பாகக்கொண்டு வாயிலாகிய நிதானம் தோன்றும்; வாயில் சார்வா ஊறாகும்மே-அவ்வாயிலைச் சார்பாகக் கொண்டு ஊறாகிய நிதானம் தோன்றும்; ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் - அவ்வூற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சி யாகிய நிதானம் தோன்றும் ; நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் - அந்நுகர்ச்சியைச் சார்பாகக் கொண்டு பற்றாகிய நிதானம் தோன்றும் ; பற்றின் கருமத் தொகுதி தோன்றும் - அப்பற்றினைச் சார்பாகக் கொண்டு வினைப்பயன் தோன்றும் ; கருமத் தொகுதி காரணமாக - வினைப்பயனைக் காரணமாகக் கொண்டு ; ஏனை வழி முறைத் தோற்றம் வரும்-ஏனைப் பவமும் தோற்றமுமாகிய நிதானங்கள் தோன்றும்; தோற்றம் சார்பின்-அத்தோற்றத்தைச் சார்பாகக் கொண்டு ; பிணி மூப்பு சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவலில் துன்பம் தலை வரும்-நோயும் முதுமையும் இறப்பும் அவலமும் அழுகையும் கவலையும் செயலறுதியுமென்ற கெடாத துன்பமாகிய நிதானம் தோன்றும்; என்ப-என்று நிதான வியல்பறிந்த புலவர் கூறுவர் எ - று.  
  
நிதானமென்னும் சொற்குத் தொடர்ச்சியுறக் கட்டுதலென்பது பொருளாதலின், அவ்வியைபுதோன்றச் "சார்வா" என்றும், "சார்ந்து" என்றும் கூறினார். பௌத்தர்களின் வட நூல்களிலும் இந்நிதானம் பன்னிரண்டின் தோற்றமுறை ஈண்டுக் கூறப்பட்டது போலவே, "அவிச்சையைக் காரணமாகக் கொண்டு சம்ஸ்காரமும், சம்ஸ்காரத்தைக் காரணமாகக் கொண்டு விஞ்ஞானமும், விஞ்ஞானத்தைக் காரணமாகக்  
  
கொண்டு நாமருபமும், நாமரூபத்தைக் காரணமாகக் கொண்டு சடாயதனமும், சடாயதனத்தைக் காரணமாகக் கொண்டு பரிசமும், பரிசத்தைக் காரணமாகக் கொண்டு வேதனையும், வேதனையைக் காரணமாகக் கொண்டு திருஷ்ணையும், திருஷ்ணையைக் காரணமாகக் கொண்டு உபாதானமும், உபாதானத்தைக் காரணமாகக் கொண்டு பவமும், பவத்தைக் காரணமாகக் கொண்டு ஜாதியும், ஜாதியைக் காரணமாகக் கொண்டு பிணி மூப்பு முதலிய துன்பங்களும் தோன்றும்" என்று கூறப்படுமாறு காண்க. பிணி மூப்பு முதலியன இன்பமல்ல வாதலின், "தவலில் துன்பம்" எனப்பட்டன.

### [31.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.26)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
135  
ஆதிக் கண்ட மாகு மென்ப  
பேதைமை செய்கை யென் றிவை யிரண்டுங்  
காரண வகைய வாத லானே  
  
134  
  
உரை  
  
136  
  
பேதமை செய்கை என்றிவை இரண்டும் - நிதானம் பன்னிரண்டனுள் பேதமையும் செய்கையுமாகிய இரண்டும்; காரண வகைய வாதலால் - ஏனையவற்றிற்குக் காரணமாகும் கூறுபாடுடைய வாகையால்; ஆதிக்கண்டமாகும் என்ப - முதற் கண்ட மெனப்படும் என்று சான்றோர் கூறுப எ - று.  
  
கண்டம் நான்காகப் பகுத்துக் கூறும் முறை வடநுல்களுள் எதன் கண் உளது என்பது தெரியவில்லை. "என்ப" எனப் பிற ஆசிரியர்மேல் வைத்தோதுதலால், இப்பாகுபாட்டினை யுணர்த்தும் நூல்கள் இருந்திருக்க வேண்டுமென்ப தொருதலை. ஏனையவாவன, இரண்டாங் கண்டத்துட் கூறப்படும் உணர்ச்சி முதலிய வைந்துமென வறிக

### [31.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.27)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
140  
இரண்டாங் கண்ட மாகு மென்ப  
உணர்ச்சி யருவுரு வாயி லூறே  
நுகர்ச்சி யென்று நோக்கப் படுவன  
முன்னவற் றியல்பாற் றுன்னிய வாதலின்  
  
137  
  
உரை  
  
140  
  
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சியென்று நோக் கப்படுவன-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியு மென்று காணப்படும் நிதானங்கள் ஐந்தும்; முன்னவற்று இயல் பால்-முன்னே முதற் கண்டத்துக் கூறப்பட்ட இரண்டாங் இயல்பி னாலே; துன்னியவாதலின்-வந்தன வாதலால்; இரண்டாங் கண்டம் ஆகும் என்ப-இரண்டாங்கண்ட மெனப்படும் எனபர் எ - று.  
  
பேதைமையும் செய்கையும் ஏனை யுணர்ச்சி முதலிய வைந்துந் தோன்றித் துன்பஞ் செய்தற்கு அடிப்படையிலேயே கோட்டம் விளைப் பதுபற்றி, "முன்னவற் றியல்பால் துன்னிய"வென்றார். இயல்பு - துக் கத்துக் கேதுவாய கோட்டமுடைமை. உணர்ச்சி முதலிய வைந்தும் அறிவால் பகுத்துணரப்படுவதுபற்றி, "நோக்கப் படுவன" என்றார்.

### [31.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.28)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக்  
கரும வீட்ட மெனக்கட் டுரைப்பவை  
மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுட்  
குற்றமும் வினையு மாக லானே  
  
141  
  
உரை  
  
144  
  
வேட்கை பற்று கரும வீட்டம் எனக் கட்டுரைப்பவை - வேட்கையும் பற்றும் கருமத் தொகுதியு மெனப் பகுத்தோதப்படும் நிதான மூன்றும்; அப்பெற்றி-அம்முறையே; நுகர்ச்சி யொழுக்கினுள் குற்றமும் வினையு மாகலான்-உணர்ச்சி முதல் நுகர்ச்சியீறாக ஐந்தனாலும் நிகழும் நிகழ்ச்சிக்கண் விளையும் குற்றமும் அதற்குரிய வினையுமாதலால்; மூன்றாங் கண்டம்-மூன்றாங் கண்டமெனப்படும் எ - று.  
  
செய்கை வினையும்; அதன் பயனாகிய செயப்படுபொருள் கருமமுமாதலால்; அச் செயப்படுபொருட் டொகுதியைக் 'கரும வீட்டம்', என்றார். பிற விடங்களிற் கருமத் தொகுதி யென்றதும் இக்கருத்தே பற்றியென வறிக. கருமத் தொகுதியின் உடன் விளைவு பவ மாதலின், வேட்கை முதல் மூன்றுடன் பவத்தையும் கூட்டி, மூன்றாங் கண்டத்துள் அடக்கிக் கொள்க., இதனாலே நான்காம் கண்டத்தில் பவம் கூறப்படாமை யறிக. வேட்கை முதல் பவம் ஈறாக நின்ற நான்கனுள், வேட்கையும் பற்றும் குற்ற மென்றும், கரும வீட்டமும் பவமும் வினையென்றும் கொள்க.

### [31.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.29)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
145  
  
நான்காங் கண்டம் பிறப்பே பிணியே  
மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம்  
எனவிவை பிறப்பி லுழக்குபய னாதலிற்  
  
145  
  
உரை  
  
147  
  
பிறப்பு பிணி மூப்பு சாவு என மொழிந்திடுந் துன்பமென இவை-பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடாகக் கூறப்படும் துன்பமும் என்ற இவை; பிறப்பில் உழக்கு பயனாதலின்-பிறந்தவுடம்பின்கண் எய்தி வருந்தும் வினைப்பயனாதலால்; நான்காம் கண்டம் - நான்காம் கண்டமெனப்படும் எ - று.  
  
பிணி மூப்பு முதலியனவும் அவற்றிற்குச் சார்பாய பிறப்பும் உடம்பொடு தோன்றிய வழியே வந்து வருத்துவனவாதலால், "பிறப்பில் உழக்கு பயனாதலின்" என்றார். பயன் எனவே, வினைப்பயனாதல் பெற்றாம். மூன்றாங் கண்டத் திறுதியில் வினையைக் கூறலின் இதனை கண் அதன் பயனைக் கூறியவாறு காண்க.  
  
இனி, மூவகைச் சந்திகளைக் கூறுகின்றார்.

### [31.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.30)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
150  
  
பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி  
நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்  
புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி  
கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை  
முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி  
  
148  
  
உரை  
  
152  
  
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி-பிறப்புக்கு காரணமாகிய செய்கையும் உணர்ச்சியும் பொருந்துவது முதற் சந்தியாம்; நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்-நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடும் சந்தி; புகர்ச்சி யின்றி அறிவது இரண்டாம் சந்தி - குற்றமின்றி யறியப்படுவதாகிய இரண்டாஞ் சந்தி யாகும்; கன்மக் கூட்டத்தொடு வருபிறப்பிடை முன்னிச்செல்வது மூன்றாம் சந்தி-கன்மத் தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்வதாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும் எ - று.  
  
நால்வகைக் கண்டங்களும் சொற்புணர்ச்சிபோலத் தம்மிற்புணரு மியல்பினவாதலின், சந்திகள் மூன்றாயினவென வறிக. முதற்கண்டத்திறுதிக் கண்ணதாகிய செய்கையும் இரண்டாங் கண்டத்து முதற் கண்ணதாகிய உணர்ச்சியும் பொருந்தும் சந்தி முதற்சந்தி யாதலின், "பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி" என்றார். ஆதிச்சந்தி யென்பது தமிழ்முடிபு பெற்றது. பிறப்புக் கேதுவாகிய கரும வீட்டத்துக்கு முதலாதலின் செய்கையை, "பிறப்பின் முதல்" என்றார். இவ்வாறே இரண்டாங் கண்டத் தீற்றினின்ற நுகர்ச்சியும் மூன்றாங் கண்டத்து  
  
முதலில் வரும் வேட்கையும் பொருந்துஞ் சந்தியை இரண்டாஞ் சந்தி யென்றும், மூன்றாங் கண்டத்தீற்றுக் கருமவீட்டமும் நான்காங் கண்டத்து முதலில் நிற்கும் பிறப்பும் புணரும் புணர்ச்சியை மூன்றாஞ் சந்தி யென்றும் கூறினாரென வறிக. நான்காங் கண்டத்து வரும் பிறப்பு உருவுடைத்தாகலின், அதனை நாடிக்கொள்ளும் இயைபு தோன்ற, "முன்னிச் செல்வது" என்றார். புகர்ச்சி - குற்றம். கன்மத் தொகுதி: ஈண்டுப் பவத்தைக் குறித்து நின்றது.

### [31.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.31)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
155  
  
மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை  
ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே  
தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும்  
உணர்வுள் ளடங்க வுருவாய்த் தோன்றியும்  
உணர்வு முருவு முடங்கத் தோன்றிப்  
புணர்தரு மக்க டெய்வம்விலங் காகையுங்  
  
153  
  
உரை  
  
158  
  
மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை-மூன்றுவகையான பிறப்புக்களையும் கூறுமிடத்து; ஆன்ற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் - தூய்மை யமைந்த விசுத்தி மார்க்கத்து முடிவாகிய சமாதி ஞானமே வீடுபேறெனத் துணிந்து அதுவேயாய்த் தோன்றி நிற்பதும்; உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும் - உணர்வாகவே யாகாது அவ் வுணர்வு உள்ளே யடங்க உருக்கொண்டு நிற்பதும்; உணர்வும் உருவும்உடங்கத் தோன்றி - உணர்வும் உருவும் உடனிகழத் தோன்றி; புணர் தரு மக்கள் தெய்வம் விலங்காகையும் - கூட்டமாய் உறையும் மக்களும் தெய்வமும் விலங்குமாகத் தோன்றி நிற்பதுமாம் எ - று.  
  
சமாதி ஞானமே வீடெனத் துணிந்து நிற்கும் பிறப்பு அருவப் பிறப்பென்றும், உணர்வுள் அடங்க வுருவாய்த் தோன்றுவது உருவப் பிறப்பென்றும், உணர்வும் உருவும் உடங்கு தோன்றும் பிறப்பு தெய்வப் பிறப்பும் மக்கட் பிறப்பும் விலங்குப் பிறப்புமா மென்றும் கூறும் முறைமைபற்றி இவ்வாறு கூறினார். இவற்றை முறையே அரூபதாது, ரூபதாது, காமதாது என்றும் கூறுப.¹ உடங்கு: உடங்கவென வினையெச்சமாயிற்று. புணர்தல்-கூடியுறைதல். இதனைத் தேவர்க்கும் விலங்குக்கும் கூட்டுக. இனி, மேலே கூறிய இருவகைப் பிறப்பும் எய்துதற்குரிமை தோன்ற, "புணர்தரு மக்கள்" என்றாரென்றுமாம். தோன்றியும் என்புழி விலங்காகையும் என்றதற் கேற்ப நிற்பதும் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது.  
  
¹ Compendium of philosophy by Rys Davids. p. 262

### [31.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.32)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
160  
  
165 கால மூன்றுங் கருதுங் காலை  
இறந்த கால மென்னல் வேண்டும்  
மறந்த பேதைமை செய்கையா னவற்றை  
நிகழ்ந்த காலமென நேரப் படுமே  
உணர்வே யருவுரு வாயி லூறே  
நுகர்வே வேட்கை பற்றே பவமே  
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை  
எதிர்கா லம்மென விசைக்கப் படுமே  
பிறப்பே பிணியே மூப்பே சாவே  
அவல மரற்றுக் கவலைகை யாறுகள்  
  
159  
  
உரை  
  
168  
  
காலம் மூன்றும்-காலவகை மூன்றனையும்; கருதுங்காலை - ஆராயுமிடத்து; மறந்த பேதைமை செய்கையானவற்றை - மறத்தலைச் செய்யும் பேதைமையும் செய்கையும் என்ற இரண்டு நிதானங்களையும்; இறந்தகாலம் என்னல் வேண்டும் - இறந்த காலமென அறியவேண்டும்; உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் என்றிவை-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் என்ற இந் நிதானங்களை; சொல்லுங்காலை - கால வகையிற் கூறுபடுத் துரைக்குமிடத்து; நிகழ்ந்த காலமென நேரப்படும் - இவை நிகழ்காலமெனக் கொள்ளப்படும்; பிறப்பு பிணி மூப்பு சாவு  
  
அவலம் அரற்று கவலை கையாறுகள் - பிறப்பும் பிணியும் முதுமையும் சாக்காடும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறு மென்ற இவைகள்; எதிர்காலம் என இசைக்கப்படும்-எதிர்காலத்தனவாம் என்று சொல்லப்படும் எ - று.  
  
காலம் மூன்றென்று கொண்டு, அவற்றுள் இந்நிதானங்கள் பன்னிரண்டினையும் ஈண்டுக் கூறிய வகையே பகுத்தடக்குந் திறம் பெரும்பான்மை வழக்காகும் என்று¹ ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மறத்தலைச் செய்யும் பேதைமையை ஒற்றுமை நயத்தால் "மறந்தபேதைமை" யென்றார். இப் பாகுபாடு தேரவாதத்தை மேற்கொண்டு கூறும் முறை யென்று ஓல்டன்பர்க்கென்பார் கூறுதலால் அறிகின்றோம். மகாயான புத்தர்கள் இக் காலப் பாகுபாட்டை விழைகின்றிலர். இது குறித்து ஆராய்ச்சி நிகழ்த்திய புலவர்கள் பலரும் மாறுபட்ட கருத்துக்களை வழங்கி முரணுவதுபற்றி இம் மணிமேகலை கூறும் முறையே ஓரளவிற் கொள்ளற்பாற்றென வமைவர்.  
  
¹ தரும சங்கிரகம். Sec. 127, 128, 129.

### [31.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.33)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
170  
  
குலவிய குற்றமெனக் கூறப் படுமே  
அவாவே பற்றே பேதைமை யென்றிவை  
புனையுமடை பவமும் வினைசெய லாகும்  
உணர்ச்சி யருவுரு வாயி லூறே  
நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவிவை  
நிகழ்ச்சிப்பய னாங்கே நேருங் காலைக்  
  
169  
  
உரை  
  
174  
  
அவா பற்று பேதைமை என்றிவை-வேட்கையும் பற்றும் பேதைமையுமென்ற இம் மூன்றும்; குலவிய குற்றமெனக் கூறப்படும் -வினைக்கும் அதன் பயனாய துன்பத்துக்கும் ஏற்கப் பொருந்திய குற்றமென அறிஞர்களாற் கூறப்படும்; புனையும் பவமும் அடைவினையும் செயலாகும்-உருப்படுத்தும் பவமும் அதனையடுத்து வரும் வினையும் செய்கையாகும்; ஆங்கே நேருங்காலை-அப்பொழுது குற்றம் வினையென்ற இரண்டாலும் விளையும் பயனைக் கருதுமிடத்து; உணர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை நிகழ்ச்சிப் பயன் - உணர்ச்சியும் பிறப்பும் முதுமையும் நோயும் சாக்காடும் என்ற இவை குற்றவினை நிகழ்ச்சியின் பயனாகும் எ -று.  
  
இப் பகுதி பேதைமை முதல் பன்னிரண்டாகக் கூறிய நிதானங்களைக் குற்றமும் வினையும் பயனுமென மூவகைப்படுத்து, பேதைமை பற்று வேட்கை யென்ற மூன்றும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினையென்றும், உணர்ச்சி முத லேனை யேழும் பயனென்றும் கூறியவாறாயிற்று. அவாவும் வேட்கையும் ஓரினமாதலின், வேட்கையை அவாவென்றார். வேட்கை மிகுதியாற் பற்றும், பற்றுமிகுதியாற் பேதைமையும் தோன்றி மன முதலிய கருவிகளைக் குற்றப்படுத்தலின், அவ்வியைபு பற்றி, "அவாவே பற்றே பேதைமை யென்றிவை" யென முறை செய்தார். தோற்றத்துக்கு வேண்டுங் காரணங்களைத் தொகுத்தல் பற்றி, பவத்தைப் "புனையும் பவம்" என்றும், தோற்றிய வுருவின்பாலுளவாகும் அசைவும் அசைவின்மையும் வினையாகலின், "அடைவினை" யென்றும் கூறினார். குற்றமும் வினை நேர்பட்ட வழிப் பயனுமுண்டாதல் ஒருதலையாதலின், "ஆங்கே நேருங்காலை" யென்றார். செய்கையின் பயன் "நிகழ்ச்சிப் பயன்" எனப்பட்டது.

### [31.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.34)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
175  
  
குற்றமும் வினையும் பயனுந் துன்பம்  
பெற்ற தோற்றப் பெற்றிக ணிலையா  
எப்பொரு ளுக்கு மான்மா விலையென  
இப்படி யுணரு மிவைவீட் டியல்பாம்  
  
175  
  
உரை  
  
178  
  
குற்றமும் வினையும் பயனும் துன்பம்-குற்றமும் வினையும் பயனுமாகிய யாவும் துன்பம் பயப்பனவாகும்; பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா - குற்ற முதலியவற்றாற் பெற்ற பிறப்புக்குரிய வுடம்புகள் நிலையில்லாதனவாகும்; எப்பொருளுக்கும் ஆன்மா இலை - உயர்திணையும் அஃறிணையுமாகிய எப்பொருட்கும் ஆன்மா என்பதொன்று கிடையாது; என இப்படி உணரும் இவை-என்று இவ்வாறு உணரப்படும் இவைகள்; வீட்டியல்பாம் - வீடு பேற்றிற்கு உறுதியாம் எ - று.  
  
குற்ற முதலிய மூன்றும் துன்பம் பயப்பனவாதலின், "துன்பம்" என்றும், இத் துன்பத்தை நுகர்தற்கு இடனும் கருவியுமாகிய உடம்புகளை, "பெற்ற தோற்றப் பெற்றிகள்" என்றும் அவை வளர்தலும் மூத்தலும் பிணிப்பட் டிறத்தலும் செய்தல் கண்கூடாகலின், "நிலையா" என்றும், எப் பொருளை யாராய்ந்து நோக்கினும் அவை குற்ற முதலிய மூன்றன் துன்பச் சூழலிற்பட்டு ஐவகைக் கந்தக் கூட்டமாய உடம்பொடு கூடி நின்று நிலைபேறின்றி மாயக் காண்பதன்றி, அவற்றின் வேறாகிய ஆன்மாவென வொன்று நிலையுடைத்தாகக் காணப்படாமையின், "ஆன்மா விலை" யென்றும், இவற்றை இவ்வகையாற் பகுத்துணர்ந்த வழி இவற்றின் நீக்கம் தானே யுண்டாதலின், "இவை வீட்டியல்பாம்" என்றும் கூறினார். இப் பகுத்துணர்வே வீடுபேற்றிற் குறுதியா மென்பதை, முன்பும், "நிலையில வறிய துன்பமென நோக்க, உலையா வீட்டிற் குறுதி யாகி" என்றது காண்க.  
  
இதனால் வீடுபேற்றிற்கு உறுதி கூறிய அறவணவடிகள், நிறுத்த முறையானே நால்வகை வாய்மைகளையும் நிரலேநிறுத்திக் கூறுகின்றார்.

_First 33 of 55 passages. [Read on](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)_

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31) · Pramāṇa
