<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.17 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 5.17

# Maṇimēkalai's Renunciation 5.17

Maṇimēkalai urai 5.17

- **Language:** Tamil

### [5.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.17)

பளிக்கறை புக்க காதை  
  
105 110  
  
பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி  
மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும்  
இளமை நாணி முதுமை யெய்தி  
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு  
அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும்  
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ  
  
105  
  
உரை  
  
110  
  
பொதியறைப் பட்டோர்போன்று உளம் வருந்தி மது மலர்க் கூந்தற் சுதமதி உரைக்கும் - தேன் பொருந்திய மலர்களையணிந்த குழலினையுடைய சுதமதி சாளரமில்லாத நிலவறையிற் பட்டோர் போல மனம் வருந்திக் கூறுகின்றாள், இளமை நாணி முதுமை எய்து உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு இளமைப் பருவத்தை நாணி முதுமைப்பருவத்தை அடைந்து தம்முள் மாறுகொண்டு வந்தார் இருவருடைய சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய பேரறிவுடையோனாகிய கரிகாற் பெருவளத்தானது வழித்தோன்றலாகிய நினக்கு, அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-நல்லறிவினையும் அமைதியையும் அரசியல் நீதியையும் செறிந்த வளையையுடைய மகளிர் கூறுமாறும் உண்டோ;  
  
கறிகாற் பெருவளத்தான் உரை முடிவு காட்டிய இவ்வரலாறு  
  
¹ உரை முடிவுகாணா னிளமையோ னென்ற, நரைமுது மக்களுவப்ப - நரை முடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை, கல்லாமற் பாகம் படும்" என்னும் பழமொழி வெண்பாவாலும், "தம் முள் மறுதலையாயினா ரிருவர் தமக்கு முறை செய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்களுவக்கும்வகை நரை முடித்துவந்து, முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறைசெய்தான் கரிகாற் பெருவளத்தா னென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம் என்றவாறு" என்னும் அதன் உரையாலும் அறியப்படும்: பொருநராற்றுப்படையிலும் ²"முதியோ, ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்" என இது கூறப்பட்டுளது. மருகற்கு முன்னிலையிற் படர்க்கை.  
  
¹ பழமொழி. 21. ² பொருந. 187-8.

- [Previous: 5.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.16)
- [Next: 5.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18)
- [Up: 5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.106) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.17) · Pramāṇa
