<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 5.18

# Maṇimēkalai's Renunciation 5.18

Maṇimēkalai urai 5.18

- **Language:** Tamil

### [5.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18)

பளிக்கறை புக்க காதை  
  
105  
  
115  
  
120  
  
125  
  
அனைய தாயினும் யாதொன்று கிளப்பல்  
வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி  
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது  
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது  
மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை  
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்  
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை  
அவலக் கவலை கையா றழுங்கல்  
தவலா உள்ளந் தன்பா லுடையது  
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து  
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்  
என்றவ ளுரைத்த இசைபடு தீஞ்சொல்  
சென்றவ னுள்ளஞ் சேரா முன்னர்ப்  
பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின்  
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென்.  
  
105  
  
உரை  
  
125  
  
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி - அங்ஙனமாயினும் போரின்கண் விளங்குகின்ற தடந்தோள் வலியுடையாய் யான் ஒன்று கூறுவேன் அதனைக் கேட்பாயாக, வினையின் வந்தது வினைக்கு விளைவாயது - கன்மத்தால் உண்டானது கன்மத்திற்கு விளைநிலமாகவுள்ளது. புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது - புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீங்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது, மூத்து விளிவுடையது - முதுமையடைந்து சாதலையுடையது, தீப்பிணி இருக்கை-கொடிய நோய்கட்கு இருப்பிடமாகவுள்ளது, பற்றின் பற்றிடம் - பற்றுக்களுக்குப் பற்றும் இடமாயது, குற்றக்கொள்கலம் - குற்றங்கட்குக் கொள்கலமாயுள்ளது, புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை - பாம்பு அடங்கியுள்ள புற்றைப்போலச் செற்றத்திற்குத் தங்குமிடமாயது, அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலம் முதலிய நான்கும் நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத்துடையது, மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் - மேலோனே மக்கள் உடம்பு இத்தகையதென்பதனை அறிந்து இதனைப் புறமறியாகப் பார்ப்பாயாக, என்று அவள் உரைத்த-என்று அவள் கூறி, இசைப்படு தீஞ்சொல்-புகழினையுண்டாக்குகின்ற இனிய மொழிகள், சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் - உதயகுமரன் உள்ளத்திற் சென்று அடைவதற்கு முன்னரே, பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவையின் - பளிங்கறையின் புறத்தே விளங்குகின்ற பவளப் பாவையைப்போல, இளங்கொடிதோன்றுமால் இளங்கோ முன் என் - இளமை பொருந்திய கொடியனைய மணிமேகலையின் உருவம் இளங்கோவின் முன்னர் தோன்றிய தென்க.  
  
யாக்கை வினையின் காரியமாயும், வினைக்குக் காரணமாயும்  
  
உள்ள தென்றபடி; "பிறவிப் பெருங்கடல்" "என்பதனுரையில், காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்" எனப் பரிமேலழகர் கூறியது ஈண்டு அறியற்பாலது. புனைவன - சந்தனம், மலர் முதலியன. மூப்பு என்பதும் பாடம். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-பகைமை நெடுங்காலம் நிகழ்வதாகிய சினம், அவலம் - வருத்தந்தோன்றி நிற்றல் ; கவலை - யாதுசெய்வலென்றல் ; கையாறு - மூர்ச்சித்தல் ; அழுங்கல் - வாய்விட்டழுதல் ; இது அரற்று எனவும் படும். புறமறிப் பாராய் - புறமறியாகப் பார்ப்பாயாக ; என்றது, பையை உள்புறமாக மறித்துப் பார்த்தல் போல் உடம்பையும் பார்க்கவென்றபடி; பார்ப்பின் இதன் தூய்து அன்மை விளங்கும் என்றவாறு; ¹"மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப்படும்" ² "பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து" என்பன காண்க. என்றாள் ; என்று அவளுரைத்த சொல் என வேற றுத்துரைக்க. "பளிங்கு......பாவை" என்னுங் கருத்து ; ³"பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயல்" எனச் சீவக சிந்தாமணியில் வந்துள்ளமை காண்க.  
  
சுதமதி காட்ட மணிமேகலை மலர்வனம் காண்புழி, யானையின்  
  
கடாத்திறம் அடக்கிவருவோனாகிய உதயகுமரன் எட்டிக்குமரனை நோக்கியாது நீ யுற்ற இடுக்கண் என்றலும், அவன் இது யானுற்ற இடும்பை யென்றலும், தாரோன் மகிழ்வெய்திப் பூம்பொழிற் கடைமுகம் குறுக, தேரொலி இசைத்தலும், என்செய்கு என ஆயிழையுரைத்தலும், பாவையை இரீஇ நின்ற, சுதமதியைக் கண்டு அரசிளங்குமரன் மணிமேகலை எய்தியது உரையென, அவள் வருந்தி மக்கள் யாக்கை இது வென உணர்ந்து புறமறிப்பாராய் என்றுரைத்த சொல் அவனுள்ளஞ் சேராமுன்னர் இளங்கொடி இளங்கோமுன் தோன்றும் என முடிக்க பளிக்கறை புக்க காதை முற்றிற்று.  
  
¹ நாலடி. 42. ² இறை சூ. 1. உரை. ³ சீவக. 192,

- [Previous: 5.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.17)
- [Next: 6.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1)
- [Up: 5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.121) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18) · Pramāṇa
