<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 5

# Maṇimēkalai's Renunciation 5

Maṇimēkalai urai 5

- **Language:** Tamil

### [5.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.1)

பளிக்கறை புக்க காதை  
  
5  
  
பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு  
இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்  
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட  
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய  
வெயில் நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர்  
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண  
  
1  
  
உரை  
  
6  
  
பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு - ஆதித்தனது விரந்த கதிர்களாகிய சேனைக்கு, இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-இருள் முற்றப்பட்டா லொத்த மருட்கையுண்டாகும் அழகிய பொழிலின்கண், குழல்இசை தும்பி கொளுத்திக் காட்ட- தும்பிகள் வேய்ங்குழலி னிசையைப் பொருத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய-இளைய வண்டினங்கள் நல்ல யாழினிசையை முரல, வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் கதிர் தோன்றுங்கால் தொட்டு மறையும் வரை சிறிதும் செல்லுதல் அறியாத குயிலும் நுழைந்து செல்லுமாறு அடர்ந்த இளமரக்காவாகிய, மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பனகாண் - அரங்கில் மயில்கள் ஆடுவதைக் காண்பனவாகிய மந்திகளைக் காண்பாயாக ;  
  
பரிதியாகிய செல்வன் என்க. தானைக்கு-தானையால்,  
  
ஞாயிற்றின் கதிரால் துரத்தப்பட்ட உலகினிருளெல்லாம் புகுந்திருந்தாற் போலும் இருட்சியையுடைய பொழில் என்க. மருள்-மருட்கை; வியப்பு. தும்பி - வண்டின் ஓர் கிளை. ¹"கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப், பொங்கர் வண்டின நல்லியாழ் செய்ய" எனப் பின்னரும் வருதல் காண்க. இலைகளின் செறிவாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்காவென்க ; ²"வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்" என்பது பெரும்பாண். காண்பன : காண்டல் எனத் தொழிற் பெயருமாம்.  
  
¹ மணி - 19 ; 57 - 8. ² பெரும்பாண். 374.

### [5.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.2)

பளிக்கறை புக்க காதை  
  
10  
  
மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப்  
பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்  
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை  
அரச வன்னம் ஆங்கினி திருப்பக்  
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்  
கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்  
கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்  
  
7  
  
உரை  
  
13  
  
மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி-மறுவற்றுத் தெளிந்த பளிங்குபோலும் நீரினுடைய பொய்கையில், பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று-பசிய இலைகளின் பரப்பின்கணுள்ள பல மலர்களினிடையே நின்றும், ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை - தனியே உயர்ந்து விளங்கிய மணம் மிக்க ஒரு தாமரை மலரில், அரச அன்னம் ஆங்கினிது இருப்ப - அன்னப் புள் இனிதாக அரசு வீற்றிருப்ப, கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு - அவ்விலஞ்சியின் கரையில் நின்று அரசன் முன் ஆடும் மெல்லியல் போல ஆடுகின்ற ஒப்பற்ற அழகினையுடைய மயிலுக்கு, கம்புட் சேவல் கனைகுரல் முழவா - சம்பங் கோழிச் சேவலினது மிக்க குரல் முழவொலியாக, கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் - கிளையின்கண் உள்ள கரிய குயில் பாடுவதைக் காண்பாயாக ;  
  
மணி - நீலமணியுமாம். ஒரு தனி - ஒப்பற்ற தனி ; தன்னந்  
  
தனி ; "ஒரு தனி நின்றாய்," "ஒரு தனி யிருந்த, "ஒரு தனி யேறி" (4 : 96 : 16 : 33 ; 17:86.) என இந்நூலுள்ளே ஒரு தனியென்பது பயின்று வருகின்றது. மயில் தனக்கு-மயிலினது ஆட்டத்திற் கியைய. விளித்தல்-பாடுதல்; ¹"விளியாதான் கூத்தாட்டு" ²"விளித்தலின்னமிர் துறழ் கீதம்" என்புழி விளித்தல் இப்பொருள்படுதல் காண்க.  
  
¹ திரிகடுகம். 11. ² சீவக. 1941.

### [5.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.3)

பளிக்கறை புக்க காதை  
  
15  
  
இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து  
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்  
விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய  
கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த  
வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண்  
  
14  
  
உரை  
  
18  
  
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து - தேர்கள் சஞ்சரிக்கின்ற வீதியினின்றும் எழுந்த துகள் சேர்ந்து, வயங்கு ஒளிமழுங்கிய மாதர் நின்முகம்போல் -விளங்குகின்ற ஒளி மழுங்கப்பெற்ற நினது அழகிய முகத்தைப்போல, விரை மலர்த்தாமரை கரை நின்று ஓங்கிய கோடு உடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண் - கரையில் நின்று வளர்ந்த கிளைகளையுடைய தாழையினது கொழுவிய மடலினின்றும் அவிழ்ந்த வெள்ளிய மகரந்தப் பொடி அளைந்த மணம் பொருந்திய இத் தாமரை மலரைக் காண்பாயாக ;  
  
மாதர் - அழகு. ¹"கோடுடை தாழை" என்னும் பாடத்திற்குச்  
  
சங்கு உடைந்தாற் போலும் தாழையின் மடல் என்க ; வால் வெண் : ஒரு பொருளிருசொல் ; தூய வெள்ளிய என்றுமாம் ; ²"ஊர்தி வால் வெள் ளேறே" என்பது காண்க. இது மலர் எனக் கூட்டி இம் மலர் என உரைக்க.  
  
¹ சூளா- நாடு : 14. ² புறம், கடவுள் வாழ்த்து.

### [5.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.4)

பளிக்கறை புக்க காதை  
  
20 25  
  
மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து  
தாதுண் வண்டின மீதுகடி செங்கையின்  
அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச்  
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு  
எறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி  
மறிந்து நீங்கு மணிச்சிரல் காணெனப்  
பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட  
மணிமே கலையம் மலர்வனங் காண்புழி  
  
19  
  
உரை  
  
26  
  
மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடி செங்கையின் - நின்னுடைய அழகிய கண்களை நீலமலரென நினைந்து தாதுண்ணுமாறு அடைந்த வண்டினங்களை அகற்றுகின்ற நின் சிவந்த கையைப்போல, அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு எறிந்து - மலர்ந்த தாமரை மலரிலே பாய்ந்து பிறழ்வனவாகிய செங்கயல்களைக் கண்டு அழகிய சிறகு விரியுமாறு அப்பொழுதே பாய்ந்து, அது பெறாஅது இரை இழந்து வருந்தி - அம் மீன்களைப் பெறாமல் இரையை இழந்து வருந்தி, மறிந்து நீங்கு மணிச்சிரல் காண் - மீண்டும் நீங்குகின்ற நீலமணிபோலும் சிச்சிலியைகை காண்பாயாக ; என - என்று சொல்லி, பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட - சுதமதி பொழிலையும் பொய்கையையும் காட்டாநிற்க, மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி - மணிமேகலை அப் பூம்பொழிலின் வளத்திளைக் காணும்பொழுது;  
  
அஞ்சிறை விரிய எறிந்து எனவியையும். அது, சாதியொருமை ;  
  
பிறழ்வனவென மேல் வந்தமையின். இரை இழந்து - பெறாமையால் அவ்விரையை யிழந்தென்க. மணி - நீலமணி ; ¹"புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்" என்பது காண்க. சிரல் - சிச்சிலிப்புள் ; இது மீன் கொத்தி யென்றும் கூறப்படும். முகம் தாமரைக்கும், கண் செங்கயலுக்கும், கை சிரலுக்கும் உவமம் ; ²"பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃதுவம மாகும்" என்பதனால் பொருள்கள் உவமமாகக் கூறப்பட்டன. பொய்கை வனத்தின் உறுப்பாகலின், வனங்காண்புழி யென அதிலடக்கிக் கூறினர்.  
  
¹ சிறுபாண். 181. ² தொல். உவம. 9.

### [5.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.5)

பளிக்கறை புக்க காதை  
  
மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதய குமரன் உருகெழு மீதூர  
  
27  
  
உரை  
  
28  
  
மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன் -  
திங்களை யொத்த வெண்குடையையுடைய அரசன் புதல்வனாகிய  
உதயகுமரன் ;  
  
அஞ்சிறை விரிய எறிந்து எனவியையும். அது,  
  
சாதியொருமை ; மருள் : உவமவுருபு ; ¹"மதிமருள் வெண்குடை" என்பது புறம். மன்னவன் - சோழன்.  
  
¹ புறம், 174.

### [5.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.6)

பளிக்கறை புக்க காதை  
  
30  
  
மீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய  
கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து  
கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு  
இதைசிதைந் தார்ப்பத் திரைபொரு முந்நீர்  
இயங்குதிசை யறியா தியாங்கணு மோடி  
மயங்குகால் எடுத்த வங்கம் போலக  
  
29  
  
உரை  
  
34  
  
உருகெழுமீது ஊர் மீயான் நடுங்க - அச்சம் பொருந்திய மேலிடத்தின் ஊர்ந்திருக்கின்ற மாலுமி நடுங்க, நடுவுநின்று ஓங்கிய கூம்பு முதல் முறிய - நடுவில் நின்று ஓங்கிய பாய்மரம் அடியிலே முறிய, வீங்குபிணி அவிழ்ந்து கயிறு கால் பரிய - இறுகின பிணிப்பு அவிழ்ந்து பாய் கட்டின கயிறு அறுபட, வயிறு பாழ்பட்டாங்கு இதை சிதைந்து ஆர்ப்ப - அப்பொழுது நடுவிடம் பாழாகிப் பாய் பீறுண்டு ஒலிப்ப, திரைபொரு முந்நீர் இயங்கு திசை அறியாது - அலைகள் பொருகின்ற கடலின்கண் செல்லுந்திசை அறியாமல், யாங்கணும் ஓடி மயங்கு கால் எடுத்த வங்கம் போல - எவ்விடத்தும் ஓடி மயங்குகின்ற கடுங்காற்றினாலலைக்கப்பட்ட மரக்கலம் போல ;  
  
மூதூர் என்னும் பாடத்திற்குப் புகாரின்கண்  
  
என்றுரைக்க, மீயான் - மாலுமி ; நீயான் என்பதும் பாடம். நடுங்க முறியப் பரிய ஆர்ப்ப ஓடியென்க : ஓடி மயங்கு வங்கம் என்றியைக்க ; மயங்குகால் - சுழல் காற்று எனலுமாம் ; இதற்கு, சுழல் காற்றினால் எடுக்கப்பட்டு ஓடிய வங்கம்போல எனப்பிரித்துக் கூட்டுக.

### [5.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.7)

பளிக்கறை புக்க காதை  
  
35 40  
  
காழோர் கையற மோலோ ரின்றிப்  
பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக்  
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்  
பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்கு  
இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்  
ஒருபாற் படாஅ தொருவழித் தங்காது  
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்  
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப  
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்  
கால வேகங் களிமயக் குற்றென  
  
35  
  
உரை  
  
44  
  
காழோர் கையற - குத்துக்கோற்காரர் செயலற, மேலோர் இன்றி - பாகரும் இன்றி, பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்து - பாகனாற் குத்தப்பட்ட பிளவையினையுடைய பரிய முகத்தைக் கையாற்றுடைத்து, கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து - அரசர் பெருந்தெருவையும் கொடி யணிந்த தேரோடும் வீதியையும் கடை வீதியையும் பெரிய கலக்க முண்டாக்கி, இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருபாற் படாது ஒருவழித் தங்காது-இருவகைப் பெயரினையுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதூரின்கண் ஒரு நெறிப்படாமல் ஓரிடத்திற் றங்காமல், பாகும் பறையும் பருந்தின் பந்தரும் - பாகனும் பறையடிப்போரும் பருந்தின் தொகுதியும், ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப - மிக்க வறுமை யுடையோரும் சுழன்று கூப்பிட, நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக் காலவேகம் களிமயக்கு உற்றென - பெரிய நீல மலை நிலத்தின் கண் திரிவதுபோலக் காலவேகம் என்னும் பட்டத்தியானை மத மயக்குற்றுத் திரிந்ததாக ;  
  
மேலோர் இன்றி-பாகரைவீசி யென்றபடி. பிளவை -  
  
அங்குசத் தாற் பிளக்கப்பட்ட புண். பாகின் பிளவை-பாகனுடைய உடற் பிளவு என்றுமாம். இருவகைப் பெயரினை, ¹"இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்" என்பதன் உரையா லறிக. பாகு - பாகன் பறை - பறையடிப்போர் ; யானைக்கு முன்பு பறையடிக்கப்படுதல் மரபென்பதனை, ²"நிறையழிகொல்யானை நீர்க்குவிட் டாங்குப். பறையறைந் தல்லது செல்லற்க வென்னா, இறையே தவறுடை யான்" என்பதனாலறிக. ஆதுலமாக்கள் தெருவிலே திரிவராகலின் அவரையுங் கூறினார். பருந்தின் பந்தர் - உணவின்பொருட்டுப் பந்தரிட்டாற்போல் மேலே செல்லும் பருந்தினம், வரை நிலனொடு படரந்தென என்பது இல் பொருளுவமம். நிலனொடு - நிலமிசை. களி - மதம்.  
  
வங்கம்போலக் காழோர் கையறப் பாகன் முதலியோர்  
  
அலவுற்று விளிப்ப மூதூரின்கண் மேலோரின்றித் துடைத்துப் பெருங் கலக்குறுத்துப் படாது தங்காது படர்ந்தெனக் காலவேகம் களிமயக்குற்ற என முடிக்க; வங்கம்போலக் காலவேகம் களிமயக்குற்றென என வியையும். இவ்வாறே மதுரைக்காஞ்சியில், ³"வீங்குபிணி நோன் கயிறரீஇயிதை புடையூக், கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன், கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ, நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல, இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து, கோலோர்க்கொன்று மேலோர் வீசி, மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்" என வந்திருந்தல் காண்க.  
  
¹ மணி. பதிகம். 32 ² கலி. 56. ³ மதுரைக். 376-83.

### [5.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.8)

பளிக்கறை புக்க காதை  
  
45 50  
  
விடுபரிக் குதிரையின் விரைந்துசென் றெய்திக்  
கடுங்கண் யானையின் கடாத்திற மடக்கி  
அணித்தேர்த் தானையொ டரசிளங் குமரன்  
மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றிக்  
காரலர் கடம்பன் அல்ல னென்பது  
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்  
  
45  
  
உரை  
  
50  
  
விடுபரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-செலுத்துகின்ற விரைந்த செலவினையுடைய குதிரையின்மீது கடிதிற்சென்று சேர்ந்து, கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி - தறுகண்மையுடைய யானையது மதத்தின் கூறுபாட்டினை அடக்கி, அணித்தேர்த் தானையொடு - அழகிய தேர் முதலிய படையுடன், அரசிளங் குமரன்-, மணித்தேர்க்கொடிஞ்சி கையால்பற்றி - தான் ஏறியுள்ள தேரின்கண் உள்ள அழகிய கொடிஞ்சியைக் கையாற் பிடித்துக்கொண்டு, கார்அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன் வருவோன் - தான் கார்காலத்து மலர்கின்ற கடப்பமாலையையுடைய முருகவேள் அல்லன் என்பதனைத்தான் அணிந்த ஆத்தி மாலையினால் அறிவித்து வருபவன்;  
  
பரி - செலவு, உதயகுமரனாகிய அரசிளங்குமரன் எனக்  
  
கூட்டுக. 'கொடிஞ்சி-தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது,' என்பர் நச்சினார்க்கினியர். ¹"கொடிஞ்சி நெடுந்தேர்," என்பதன் உரை காண்க. இது தாமரை மொட்டு வடிவமுள்ளதென்று கூறுவாருமுளர். இச் சொல்லினுருவம் கொடுஞ்சி யெனவும் காணப்படும். அழகு, இளமை, ஆண்மைகளால் இவனை முருகக்கடவுளென்றெண்ணி, கடப்ப மாலையின்மையானும் ஆத்திமாலை யுண்மையானும் இவன் முருகனல்லன், சோழன்மகன் என்று கண்டோர் துணிவரென உதயகுமரனின் அழகு முதலியன சிறப்பிக்கப்பட்டன வென்க. ஆர் - ஆத்தி.  
  
¹ மதுரைக். 752.

### [5.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.9)

பளிக்கறை புக்க காதை  
  
55  
  
நாடக மந்தையர் நலங்கெழு வீதி  
ஆடகச் செய்வினை மாடத் தாங்கண்  
சாளரம் பொளித்த கால்போகு பெருவழி  
வீதிமருங் கியன்ற பூவணைப் பள்ளித்  
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி  
மகர யாழின் வான்கோடு தழீஇ  
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்  
எட்டி குமரன் இருந்தோன் றன்னை  
  
51  
  
உரை  
  
58  
  
நாடக மடந்தையர் நலங்கெழு வீதி-நாடகக் கணிகையரது அழகு பொருந்திய வீதியில், ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் - ஆடகப்பொன்னாற் செய்தொழிலமைந்த மாளிகையின்கண், சாளரம் பொளித்த கால்போகு பெருவழி-காற்று செல்லுகின்ற பெரிய வழியாகிய துளைசெய்யப்பட்ட சாளரத்தினிடமாக, வீதி மருங்கு இயன்ற பூவணைப்பள்ளி - வீதியின் பக்கலில் இயற்றிய மலரணைச் சேக்கையில், தகரக்குழலாள் தன்னோடு மயங்கி - மயிர்ச்சாந்தினை யணிந்த குழலினையுடைய கணிகையொருத்தியுடன் மயக்கமுற்று, மகரயாழின் வான்கோடு தழீஇ - மகர யாழினது சிறந்த கோட்டைத் தழுவி, வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை - எழுது கோலினால் எழுதப்பட்ட ஓவியப் பாவை போல அசைவற்று இருந்த எட்டிகுமரனை,  
  
ஆடகம்-நால்வகைப் பொன்னுள் ஒன்று.பொளித்த -  
  
துளைசெய்த. 'கால்போகு பெருவழியாகிய பொளித்த சாளரம் என்க. மகரயாழ் - நால்வகை யாழினுளொன்று; பதினேழு நரம்புடையது என்பர். கோடு - யாழ்த்தண்டு. வட்டிகை - எழுதுகோல். எட்டி - வணிகர் பெறும் பட்டப் பெயர்; "எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண். டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்." (22; 113-4) என்பர் பின்னும்; ¹"எட்டி காவிதிப் பட்டந் தாங்கி," என்பதுங் காண்க; ², 'எட்டி காவிதியென்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்" என்பர் நச்சினார்க்கினியர்.  
  
¹பெருங். 2. 3: 144. ² தொல். தொகை. 12.

### [5.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.10)

பளிக்கறை புக்க காதை  
  
60  
  
மாதர் தன்னொடு மயங்கினை யிருந்தோய்  
யாதுநீ யுற்ற இடுக்கண் என்றலும்  
ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு  
பாங்கிற் சென்று தன்றொழு தேத்தி  
மட்டவி ழலங்கன் மன்ன குமரற்கு  
எட்டி குமரன் எய்திய துரைப்போன  
  
59  
  
உரை  
  
64  
  
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் - மாதினோடும் மயக்கமுற் றிருப்போய் நீ அடைந்த துன்பம் யாது என வினவுதலும், ஆங்கதுகேட்டு வீங்கிள முலையொடு பாங்கிற்சென்று தான் தொழுது ஏத்தி-அதனைக் கேட்டு அக் காரிகையுடன் அவன் பக்கலிற் சென்று வணங்கித் துதித்து, மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் அவிழும் மலர்மாலையினை யுடைய அரச குமரனுக்கு, எட்டி குமரன் எய்தியது உரைப்போன் - தான் உற்ற துன்பத்தின் காரணத்தைக் கூறுகின்ற எட்டி குமரன்;  
  
மயங்கினை: எச்சமுற்று. மயங்கி மாதர் தன்னொடும்  
  
இருந்தோய்என்க. பாங்கில் - முறைமையால் என்றுமாம்.

### [5.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.11)

பளிக்கறை புக்க காதை  
  
65 70  
  
வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்  
தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம்  
மாதவி பயந்த மணிமே கலையோடு  
கோவல னுற்ற கொடுந்துயர் தோன்ற  
நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி  
வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது  
இதுயா னுற்றி இடும்பை யென்றலும்  
  
65  
  
உரை  
  
71  
  
வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் - திறப்பட அமைந்த செப்பின் உள்ளே வைக்கப்பட்ட நறுமலரைப்போல, தகை நலம் வாடி - மிக்க அழகு வாட்டமுற்று, மலர்வனம் புகூஉம் - பூம்பொழிலுக்குச் செல்லும், மாதவி பயந்த மணி மேகலையொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற - மாதவி பெற்ற மணிமேகலையைக் கண்டதும் கோவலன் அடைந்த கொடிய துன்பம் நினைவில் வர அஃது, நெஞ்சு இறைகொண்ட நீர்மையை நீக்கி - மனம் தங்குதல் கொண்ட தன்மையை நீக்கி, வெம்பகை நரம்பின் என் கைச் செலுத்தியது - கொடிய பகை நரம்பின்கண் என் கையைச் செலுத்தியது - இது யான் உற்ற இடும்பை என்றலும் இதுவே யான் அடைந்த துன்பம் என்னலும் ;  
  
செப்பினுள் வைகிய மலர் புழுக்கத்தால் வாடும்;  
  
¹"மடைமாண்செப்பிற்றமிய வைகிய, பெய்யாப் பூவின் மெய் சாயினளே,"²"வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்," ³"வேயாது செப்பினடைத்துத் தமிவைகும் வீயினன்ன, தீயோடி சிற்றம் பலமனையாள்," என்பன காண்க. மணிமேகலையைக் கண்டவுடன் கோவலனுற்ற துன்பம் நினைவிற்கு வந்தமையின், 'மணிமேகலையொடு...துயர்தோன்ற,' என்றான் இறைகொண்ட-யாழிலே தங்கிய. பகை நரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவது நரம்பு;ஆறாவதும் மூன்றாவதுமாகிய நரம்புகள் என்று முரைப்பர் ; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்று பெற நிற்பது கூடமாகும்," என்பது காண்க. கோவலன் தன் குலத்தோன்றலாகலின் அவனுற்ற துயரை நினைந்து மயங்கினேனென்றானென்க.  
  
¹ குறுந். 1. ² கலி. 68: 15. ³ திருச். 376.

### [5.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.12)

பளிக்கறை புக்க காதை  
  
75  
  
மதுமலர்த் தாரோன் மனமகிழ் வெய்தி  
ஆங்கவள் தன்னையென் அணித்தே ரேற்றி  
ஈங்கியான் வருவேன் என்றவற் குரைத்தாங்கு  
ஓடுமழை கிழியும் மதியம் போல  
மாட வீதியின் மணித்தேர் கடைஇக்  
காரணி பூம்பொழிற் கடைமுகங் குறுகவத  
  
72  
  
உரை  
  
77  
  
மதுமலர்த் தாரோன் மனமகிழ்வு எய்தி-தேன் பொருந்திய மலர் மாலையினையுடைய உதயகுமரன் உளமகிழ்ச்சி யடைந்து, ஆங்கவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி - அம் மணிமேகலையை என் அழகிய தேரின்மீதேற்றி, ஈண்டு யான் வருவேன் என்று அவற்கு உரைத்தாங்கு-ஈண்டு யான் வருவேன என்று எட்டி குமரற்குக்கூறி, ஓடு மழை கிழியும் மதியம்போல - ஓடுகின்ற முகில் கிழிதற்குக் காரணமாகிய மதியம்போல, மாடவீதியில் மணித்தேர் கடைஇ - மாடங்ளையுடைய வீதியின்கண் அழகிய தேரைச் செலுத்தி, கார் அணி பூம்பொழிற் கடைமுகம் குறுக - வானளாவிய பூஞ்சோலையின் வாயிலினிடம் அடைய;  
  
முனிவர் உறைவிடத்தினீங்கி மலர்வனமடைந்த மணிமேகலையை இனி எளிதினெய்தலாமென மனமகிழ்தானென்க. மாடங்கட்கு மழையும் தேருக்கு மதியமும் உவமை; மதியினை உதயகுமரனுக்கு உவமையாக்கலுமாம் . கலை நிரம்பினமையின்; இதற்கு மதியம்போலக் குறுக வென்றியைக்க. கார் அணி - மேகத்தை மீது அணிந்த.

### [5.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.13)

பளிக்கறை புக்க காதை  
  
80  
  
தேரொலி மாதர் செவிமுதல் இசைத்தலும்  
சித்திர பதியோ டுதய குமரனுற்  
றென்மேல் வைத்த உள்ளத் தானென  
வயந்த மாலை மாதவிக் கொருநாள்  
கிளந்த மாற்றம் கேட்டே னாதலின்  
ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை  
ஈங்கென் செவிமுதல் இசைத்ததென் செய்கென  
  
78  
  
உரை  
  
84  
  
அத் தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும் - அந்தத் தேர் ஒலியானது மணிமேகலையின் செவியிடம் சென்று இசைத்தலும் சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்என-உதயகுமரன் என்பால் வைத்த மனமுடையான் என்று சித்திராபதியினிடமாக அறிந்து, வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் - வயந்தமாலை மாதவிபால் ஒருநாள் கூறிய மொழியைக் கேட்டிருக்கின்றேனாகலின், ஆங்கவன் தேர்ஒலி போலும் ஆயிழை ஈங்கு என் செவிமுதல் இசைத்தது-சுதமதி அவ் வுதயகுமரனது தேரோசையே போலும் இப்பொழுது என் செவியிடம் ஒலித்தது, என் செய்கு என அமுதுறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் - இதற்கு என் செய்வேன் என அமுதினுமினிய மொழியினையுடைய மணிமேகலை கூறுதலும்;  
  
சித்திராபதியோடு உற்று எனக் கூட்டிச் சித்திராபதியால்  
  
அறிந்து என்றுரைக்க; வயந்தமாலை சித்திராபதியுடன் அடைந்து என்றலுமாம். ஆயிழை: விளி.

### [5.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.14)

பளிக்கறை புக்க காதை  
  
85 90  
  
அமுதுறு தீஞ்சொல் ஆயிழை யுரைத்தலும்  
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்  
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென்  
றொளித்தறை தாழ்கோத் துள்ளகத் திரீஇ  
ஆங்கது தனக்கோர் ஐவிலின் கிடக்கை  
நீங்காது நின்ற நேரிழை தன்னைக்  
  
85  
  
உரை  
  
90  
  
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் - சுதமதி அது கேட்டுத் தளர்ச்சியுற்ற மயிலைப்போல, பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று ஒளித்து அறை தாழ்கோத்து உள்ள கத்து இரீஇ-மணிமேகலையைப் பளிக்கறை மண்டபத்தின் உள்ளிடத்தே புகுக என்று கூறி ஒளித்து இருத்தி அறையின்தாழைக் கோத்து, ஆங்கது தனக்கு ஓர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேரிழைதன்னை - அப்பளிக்கு மண்டபத்திற்கு ஐந்து விற்கிடை தூரத்தில் நீங்காமல் நின்ற சுதமதியை;  
  
ஒளித்து அறை-ஒளியையுடையதாகிய அறையென்றுமாம்.  
  
பணியாளர்ஐந்துவிற்கிடை தூரத்தே நிற்றல் மரபு; ¹"ஐவிலினகல நின்றாங் கடிதொழு சிறைஞ்சினாற்கு," என்பது காண்க. நீங்காது நின்றனள்; அங்ஙனம் நின்ற நேரிழையை என அறுத்துரைத்து, நேரிழையைக் கண்டு என ஒரு சொல் விரித்துரைக்க.  
  
¹ சீவக. 1704.

### [5.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.15)

பளிக்கறை புக்க காதை  
  
95  
  
கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்திப்  
பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல்  
பூமரச் சோலையும் புடையும் பொங்கரும்  
தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்  
அரசிளங் குமரன் ஆருமில் ஒருசிறை  
ஒருதனி நின்றாய் உன்றிற மறிந்தேன்  
  
91  
  
உரை  
  
96  
  
கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி - ஒலியினையுடைய சேனையொடு விரைந்த செலவினையுடைய தேரையும் நிறுத்தி, பன் மலர்ப் பூம்பொயில் பகல் முளைத்ததுபோல்-பல மலர்களையுடைய பூஞ்சோலையில் ஞாயிறு தோன்றியதுபோல, பூமரச்சோலையும் புடையும் பொங்கரும் - பூம்பொழிலிலும் பக்கலிலும் கட்டுமலைகளிலும், தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங்குமரன் - தாமரை மலர் போன்ற சிவந்த கண்களால் நோக்கிவருகின்ற மன்னிளம் புதல்வன், ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் - யாருமில்லாத ஒரு பக்கத்தில் நீ ஒருத்தியாய் நிற்கின்றாய் நின் இயல்பினை அறிந்தேன் ;  
  
பொங்கர் - ஈண்டுச் செய்குன்று. அரசிளங்குமரன்  
  
சுதமதியைக் கண்டு உன் திறம் அறிந்தேன் என்று கூறியென்க.

### [5.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.16)

பளிக்கறை புக்க காதை  
  
100  
  
வளரிள வனமுலை மடந்தை மெல்லியல்  
தளரிடை யறியுந் தன்மையள் கொல்லோ  
விளையா மழலை விளைந்து மெல்லியல்  
முளையெயி றரும்பி முத்துநிரைத் தனகொல்  
செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி  
வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல்  
மாதவ ருறையிடம் ஒரீஇமணி மேகலை  
தானே தமியளிங் கெய்திய துரையெனப்  
  
97  
  
உரை  
  
104  
  
வளர்இள வனமுளை மடந்தை மெல்லியல் - வளர்கின்ற வனப்புடைய இளங் கொங்கைகளையும் மென்மைத் தன்மையையும் உடைய மணிமேகலை, தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ - ஆடவர் தளர்ந்த சமயத்தை யறியும் தன்மையை யுடையவளோ, விளையா மழலை விளைந்து மெல்லியல் முளையெயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்-முதிராத மழலைமொழி முதிர்ந்து மெல்லியலுக்கு முளை எயிறுகள் அரும்பி முத்துக்களை நிரைத்தன போன்றனவோ, செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும்கொல்-சிவந்த கயல் மீன் போன்ற நீண்ட கண்கள் செவியின் பக்கத்தே ஓடிக் கொடிய கணைகளையுடைய காமனின் வியப்பினை உரைக்கின்றனவோ, மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை தானே தமியள் இங்கு எய்தியது உரை என-மணிமேகலை சங்கத்தார் உறைகின்ற விடத்தினின்றும் நீங்கித் தானே தனியளாய் இவண் எய்திய காரணத்தை உரைப்பாயாக என;  
  
இடை- செல்வி; ¹"உடையார் போல இடையின்று குறுகி"  
  
என்பது காண்க. முளை எயிறு - முளைபோலும் எயிறு ; முளைத்த எயிறுமாம். வெங்கணை-விருப்பத்தைச் செய்யுங் கணையுமாம். வியப்பு- வியக்குஞ் செய்தி. செவிமருங்கோடுதல் - உரைப்பதுபோலு மென்றானென்க. சங்கத்தை நீங்கினளாதலைத் தமியள் என்றான்.  
  
¹ புறம். 54.

### [5.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.17)

பளிக்கறை புக்க காதை  
  
105 110  
  
பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி  
மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும்  
இளமை நாணி முதுமை யெய்தி  
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு  
அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும்  
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ  
  
105  
  
உரை  
  
110  
  
பொதியறைப் பட்டோர்போன்று உளம் வருந்தி மது மலர்க் கூந்தற் சுதமதி உரைக்கும் - தேன் பொருந்திய மலர்களையணிந்த குழலினையுடைய சுதமதி சாளரமில்லாத நிலவறையிற் பட்டோர் போல மனம் வருந்திக் கூறுகின்றாள், இளமை நாணி முதுமை எய்து உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு இளமைப் பருவத்தை நாணி முதுமைப்பருவத்தை அடைந்து தம்முள் மாறுகொண்டு வந்தார் இருவருடைய சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய பேரறிவுடையோனாகிய கரிகாற் பெருவளத்தானது வழித்தோன்றலாகிய நினக்கு, அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-நல்லறிவினையும் அமைதியையும் அரசியல் நீதியையும் செறிந்த வளையையுடைய மகளிர் கூறுமாறும் உண்டோ;  
  
கறிகாற் பெருவளத்தான் உரை முடிவு காட்டிய இவ்வரலாறு  
  
¹ உரை முடிவுகாணா னிளமையோ னென்ற, நரைமுது மக்களுவப்ப - நரை முடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை, கல்லாமற் பாகம் படும்" என்னும் பழமொழி வெண்பாவாலும், "தம் முள் மறுதலையாயினா ரிருவர் தமக்கு முறை செய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்களுவக்கும்வகை நரை முடித்துவந்து, முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறைசெய்தான் கரிகாற் பெருவளத்தா னென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம் என்றவாறு" என்னும் அதன் உரையாலும் அறியப்படும்: பொருநராற்றுப்படையிலும் ²"முதியோ, ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்" என இது கூறப்பட்டுளது. மருகற்கு முன்னிலையிற் படர்க்கை.  
  
¹ பழமொழி. 21. ² பொருந. 187-8.

### [5.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18)

பளிக்கறை புக்க காதை  
  
105  
  
115  
  
120  
  
125  
  
அனைய தாயினும் யாதொன்று கிளப்பல்  
வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி  
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது  
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது  
மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை  
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்  
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை  
அவலக் கவலை கையா றழுங்கல்  
தவலா உள்ளந் தன்பா லுடையது  
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து  
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்  
என்றவ ளுரைத்த இசைபடு தீஞ்சொல்  
சென்றவ னுள்ளஞ் சேரா முன்னர்ப்  
பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின்  
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென்.  
  
105  
  
உரை  
  
125  
  
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி - அங்ஙனமாயினும் போரின்கண் விளங்குகின்ற தடந்தோள் வலியுடையாய் யான் ஒன்று கூறுவேன் அதனைக் கேட்பாயாக, வினையின் வந்தது வினைக்கு விளைவாயது - கன்மத்தால் உண்டானது கன்மத்திற்கு விளைநிலமாகவுள்ளது. புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது - புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீங்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது, மூத்து விளிவுடையது - முதுமையடைந்து சாதலையுடையது, தீப்பிணி இருக்கை-கொடிய நோய்கட்கு இருப்பிடமாகவுள்ளது, பற்றின் பற்றிடம் - பற்றுக்களுக்குப் பற்றும் இடமாயது, குற்றக்கொள்கலம் - குற்றங்கட்குக் கொள்கலமாயுள்ளது, புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை - பாம்பு அடங்கியுள்ள புற்றைப்போலச் செற்றத்திற்குத் தங்குமிடமாயது, அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலம் முதலிய நான்கும் நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத்துடையது, மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் - மேலோனே மக்கள் உடம்பு இத்தகையதென்பதனை அறிந்து இதனைப் புறமறியாகப் பார்ப்பாயாக, என்று அவள் உரைத்த-என்று அவள் கூறி, இசைப்படு தீஞ்சொல்-புகழினையுண்டாக்குகின்ற இனிய மொழிகள், சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் - உதயகுமரன் உள்ளத்திற் சென்று அடைவதற்கு முன்னரே, பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவையின் - பளிங்கறையின் புறத்தே விளங்குகின்ற பவளப் பாவையைப்போல, இளங்கொடிதோன்றுமால் இளங்கோ முன் என் - இளமை பொருந்திய கொடியனைய மணிமேகலையின் உருவம் இளங்கோவின் முன்னர் தோன்றிய தென்க.  
  
யாக்கை வினையின் காரியமாயும், வினைக்குக் காரணமாயும்  
  
உள்ள தென்றபடி; "பிறவிப் பெருங்கடல்" "என்பதனுரையில், காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்" எனப் பரிமேலழகர் கூறியது ஈண்டு அறியற்பாலது. புனைவன - சந்தனம், மலர் முதலியன. மூப்பு என்பதும் பாடம். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-பகைமை நெடுங்காலம் நிகழ்வதாகிய சினம், அவலம் - வருத்தந்தோன்றி நிற்றல் ; கவலை - யாதுசெய்வலென்றல் ; கையாறு - மூர்ச்சித்தல் ; அழுங்கல் - வாய்விட்டழுதல் ; இது அரற்று எனவும் படும். புறமறிப் பாராய் - புறமறியாகப் பார்ப்பாயாக ; என்றது, பையை உள்புறமாக மறித்துப் பார்த்தல் போல் உடம்பையும் பார்க்கவென்றபடி; பார்ப்பின் இதன் தூய்து அன்மை விளங்கும் என்றவாறு; ¹"மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப்படும்" ² "பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து" என்பன காண்க. என்றாள் ; என்று அவளுரைத்த சொல் என வேற றுத்துரைக்க. "பளிங்கு......பாவை" என்னுங் கருத்து ; ³"பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயல்" எனச் சீவக சிந்தாமணியில் வந்துள்ளமை காண்க.  
  
சுதமதி காட்ட மணிமேகலை மலர்வனம் காண்புழி, யானையின்  
  
கடாத்திறம் அடக்கிவருவோனாகிய உதயகுமரன் எட்டிக்குமரனை நோக்கியாது நீ யுற்ற இடுக்கண் என்றலும், அவன் இது யானுற்ற இடும்பை யென்றலும், தாரோன் மகிழ்வெய்திப் பூம்பொழிற் கடைமுகம் குறுக, தேரொலி இசைத்தலும், என்செய்கு என ஆயிழையுரைத்தலும், பாவையை இரீஇ நின்ற, சுதமதியைக் கண்டு அரசிளங்குமரன் மணிமேகலை எய்தியது உரையென, அவள் வருந்தி மக்கள் யாக்கை இது வென உணர்ந்து புறமறிப்பாராய் என்றுரைத்த சொல் அவனுள்ளஞ் சேராமுன்னர் இளங்கொடி இளங்கோமுன் தோன்றும் என முடிக்க பளிக்கறை புக்க காதை முற்றிற்று.  
  
¹ நாலடி. 42. ² இறை சூ. 1. உரை. ³ சீவக. 192,

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5) · Pramāṇa
