<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 6.1

# Maṇimēkalai's Renunciation 6.1

Maṇimēkalai urai 6.1

- **Language:** Tamil

### [6.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
5  
இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி  
விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப்  
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்  
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்  
விரைமல ரைங்கணை மீன விலோதனத்து  
உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப  
  
1  
  
உரை  
  
6  
  
இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங்குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை, விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் - திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன் தன் உருவத்தை வெளிப்படுத்த ;  
  
பொற்பூங்கொடி - காமவல்லியுமாம் ; இது பொன்னுலகத்துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை ; பொருமுக வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று ; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை யாய் அமைவது ; எழினி மூன்றனையும் ¹"ஒருமுக வெழினியும் பொரு முக வெழினியும் ; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக. திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; திருமகள்- இன் : சாரியை. ஆடிய பாவையின் - ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப்போல ; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக் கூத்தும் பாவை யெனப்படும் ; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து விழும்படி திருமகளாடியது ; பதினோராடலுளொன்று ; ²"செருவெங் கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்' என்பது காண்க. "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை உண்டாயிற் றென்பதாம்.  
  
1 சிலப். 3 : 109-10. ² சிலப். 6 : 60-1.

- [Previous: 5.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.18)
- [Next: 6.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.2)
- [Up: 6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1) · Pramāṇa
