<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.28 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 7.28

# Maṇimēkalai's Renunciation 7.28

Maṇimēkalai urai 7.28

- **Language:** Tamil

### [7.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.28)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
160 165  
  
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள்  
ஐய முண்டோ ஆருயிர் போனால்  
செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்  
ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல்  
ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல்  
கொலையற மாமெனுங் கொடுத்தொழின் மாக்கள்  
அவலப் படிற்றுரை யாங்கது மடவாய்  
உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர்  
இலரோ இந்த ஈமப் புறங்காட்  
டரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம்  
நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும்  
  
157  
  
உரை  
  
167  
  
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் - சம்பாபதி இரக்கமுற்றுக் கூறுகின்றவள், ஐயம் உண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கில சென்று பிறப்பு எய்துதல்-அரிய உயிரானது உடம்பை விட்டு நீங்கினால் தான் செய்த வினையின்வழியேசென்று வேறு பிறப்படைதலில் ஐயம் உண்டோ, ஆங்கது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்-சென்ற அவனுயிரைக் கொண்டுவந்து நின்னுடைய அரிய துன்பத்தை நீக்குதல், ஈங்கு எனக்கு ஆவ தொன்று அன்று - எனக்கு இயல்வதொரு காரியமன்று, நீ இரங்கல்-நீ வருந்தற்க, கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப்படிற்று உரை ஆங்கது மடவாய் - மடந்தையே நீ கூறிய அது கொலை புரிவதை அறம் என்று கூறும் கொடுந் தொழிலையுடைய மாக்களின் துன்பத்தைத் தரும் பொய்யுரை யாகும், உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ - உலகத்தையாள்கின்ற அரசர்கட்கு உயிர்க்கு உயிர் கொடுப்போர் ஒருவருமிலரோ, இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் - இந்தச் சுடுகாட்டின்கண் அரசர்களுக்கு அமைந்த கோட்டங்கள் அளவற்றன ஆகலின், நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-நிரயத்திற்கேதுவாகிய கொடிய மொழிகளை நீ விடுவாயாக என்று தெய்வம் கூறுதலும் ; முது மூதாட்டி-மிக்க முதுமையை உடையாள். மருங்கு - வழி; ¹"செய்வினை வழித்தா யுயிர்செலு மென்பது, பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பது ஈண்டறியற்பாலது. மன்னவர்க்கு உயிர்க்குயி ரீவோர் - அரசர் உயிருக்கு மாறாகத் தம்முயிரைக் கொடுப்போர். ஆயிரம்-அளவில்லன என்னும்பொருட்டு. கோட்டம்-அறை.  
  
¹ சிலப். 28 : 167-8.

- [Previous: 7.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.27)
- [Next: 7.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.29)
- [Up: 7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.161-166) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.28) · Pramāṇa
