<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.35 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 7.35

# Maṇimēkalai's Renunciation 7.35

Maṇimēkalai urai 7.35

- **Language:** Tamil

### [7.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.35)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
210  
  
மதனின் நெஞ்சமொடு வான்றுய ரெய்திப்  
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோ ளுரைப்ப  
இறந்திருள் கூர்ந்த இடையிருள் யாமத்துத்  
தூங்குதுயி லெய்திய சுதமதி யொழியப்  
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ  
அந்தரம் ஆறா ஆறைந் தியோசனைத்  
தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த  
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்  
அணியிழை தன்னைவைத் தகன்றது தானென்.  
  
206  
  
உரை  
  
214  
  
மதன்இல் நெஞ்சமோடு வான்துயர் எய்தி - வலியற்ற மனத்துடனே மிக்க துன்பத்தையடைந்து, பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப-பூமியிற் பிறந்தோர்களது வாழ்க்கையை மணிமேகலை கூற, இறந்திருள் கூர்ந்த இடையிருள், யாமத்து - மிகவுஞ்செறிந்த இருள் மிகுந்த இடையாமத்தில், தூங்குதுயில் எய்திய சுதமதி ஒழிய - மிக்க உறக்கத்தினையடைந்த சுதமதி அவ்விடத்தில் நீங்க, பூங்கொடிதன்னைப் பொருந்தித் தழீஇ - மணிமேகலையைச் சேரத் தழுவிக்கொண்டு, அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத் தென்றிசை மருங்கில் சென்று-விசும்பின் வழியாக முப்பது யோசனை தூரம் தென்றிசைக்கட் சென்று, திரையுடுத்த மணிபல்லவத்திடை - கடலாற் சூழப்பட்ட மணிபல்லவமென்னும் தீவின்கண், மணிமேகலா தெய்வம் அணியிழைதன்னை வைத்து அகன்றதுதான் - மணிமேகலையை வைத்துவிட்டு மணிமேகலா தெய்வம்தான் நீங்கியது என்க.மதன்-செருக்குமாம். கோட்டத்தினியல்பு கேட்டமையின் நெஞ்சம் மதனழிந்ததென்க. வாழ்க்கை யென்றது அதன் நிலையாமையை. மண்டிலம் சொரிய, மேனியள் ஏதீதி நோக்கி என்னுற்றீரென, அவள் அவன் கூறிய துரைத்தலும்; அருந் தெய்வமுரைப்ப, சுதமதி என்னை யோவென, நேரிழை கூறும் ; அங்ஙனம் கூறுகின்ற தெய்வம் இதன் வரவு இதுவென்றுரைக்க, சிறந்தோளுரைப்ப, தெய்வம் இடையிருள் யாமத்துச் சுதமதியொழியப் பூங்கொடிதன்னைத் தழீஇச் சென்று மணிபல்லவத்தில் வைத்து அகன்றது என முடிக்க.

- [Previous: 7.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.34)
- [Next: 8.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.8.1)
- [Up: 7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.206-211) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.35) · Pramāṇa
