<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 7

# Maṇimēkalai's Renunciation 7

Maṇimēkalai urai 7

- **Language:** Tamil

### [7.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.1)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
5  
  
அந்தி மாலை நீங்கிய பின்னர்  
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்  
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்  
தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல  
மாசறு விசும்பின் மறுநிறங் கிளர  
ஆசற விளங்கிய வந்தீந் தண்கதிர்  
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்  
கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய  
  
1  
  
உரை  
  
8  
  
அந்திமாலை நீங்கிய பின்னர் - அந்திப்பொழுதாகிய மாலைக் காலம் கழிந்த பின்னர், வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்- வந்து உதித்த பரந்த கிரணங்களையுடைய திங்கள் மண்டிலம், சான்றோர் தங்கண் எய்திய குற்றம் - உயர்குடித் தோன்றிய மேன்மக்கள்பாலடைந்த குற்றமானது, தோன்றுவழி விளங்கும் தோற்றம்போல - தோன்றுமிடத்து விளங்குமியல்பினைப்போல, மாசு அறு விசும்பில் மறுநிறம் கிளர - விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க, ஆசு அற விளங்கிய அம்தீம் தண் கதிர்-குற்றமற்று விளங்குகின்ற அழகிய தீவிய குளிர்ந்த கதிரினை, வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவதுபோல் - வெள்ளிக் குடத்தினின்று பாலைச் செரிவதுபோல, கள்அவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய - தேன் அவிழுகின்ற மலர்ச்சோலையில் இடையிடையே பொழிய;  
  
அந்திமாலை-அந்தியாகிய மாலை. தோன்றுவழி விளங்கும் என்றதுசான்றோர்பால் குற்றம் உண்டாய அப்பொழுதே அது யாவரும் அறிய வெளிப்படும் என்றவாறாம்; அவர் வளிப்படுமிடத்து அதுவும் வெளிப்படும் என்றுமாம: திங்கள் தூய்மை உடையதாகலானும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலானும் அது விளங்கித் தோன்றிற்று. ¹"குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து" என்பதனாற் சான்றோரிடைக் குற்றம் யாவருமறிய நிற்றல் காண்க. ஈண்டுப் பொருள் உவமமாக்கப்பட்டது; என்னை? ²பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும்" என்பவாகலான். சான்றோர் குற்றம் விளங்குந் தோற்றம்போலக் கதிர் மண்டிலம் மறுநிறங் கிளரத் தண் கதிரைப் பால் சொரிவதுபோல் இடையிடைச் சொரிய வென்க. திங்களுக்கு வெள்ளிக்குடமும் தண்கதிர்க்குப் பாலும் உவமை.  
  
¹ குறள். 957. ² தொல். பொருளதி. 284.

### [7.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.2)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
10 15  
  
உருவு கொண்ட மின்னே போலத்  
திருவி லிட்டுத் திகழ்தரு மேனியள்  
ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன்  
பாத பீடிகை பணிந்தன ளேத்திப்  
பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகிச்  
சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி  
ஈங்கு நின்றீர் என்னுற் றீரென  
  
9  
  
உரை  
  
15  
  
உருவு கொண்ட மின்னே போல-பெண்ணுருவங்கொண்ட மின்னலைப் போலவும், திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - இந்திர வில்லைப்போலவும ஒளிவிட்டு விளங்குகின்ற திருமேனியை யுடைய அத்தெய்வம், ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி - அறவாழியினை உருட்டுகின்ற ஆதி முதல்வனது பாதபீடிகையை வணங்கித் துதித்து, பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பதியிலுறைகின்ற ஒரு பெண் வடிவுகொண்டு, சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி - சுதமிதியின் முகத்தை நோக்கி, ஈங்கு நின்றீர்என் உற்றீர் என-ஈண்டு நிற்கின்றவர்களே நீவிர் அடைந்த துன்பம் யாது என வினவ;  
  
உருவு கொண்ட மின்:இல்பொருளுவமை. மின்போலவும் திருவில்போலவும் என்க. திருவில் - வானவில். ¹"திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என வருதல் காண்க. கடவுளர் இன்ன காலத்து இவ்வாறு தோன்றுவர் என்பது புலப்படாமையான், அங்ஙனம் தோன்றும் வானவில் அவர்க்கு உவமையாயிற்று. திருவில் - அழகிய ஒளியென்றுமாம். ஆதி முதல்வன் - புத்தன். அறவாழி - அறமாகிய திகிரி. பாதபீடிகை- புத்ததேவன் திருவடி யமைந்த பீடம்; உவவனத்திற் பளிக்கறையில் உள்ளது. பணிந்தனள் : முற்றெச்சம். முன்னரும் ²"பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி" என வந்தமை காண்க. நின்றீர் : வினைப்பெயர் ; அது மணிமேகலையையும் உளப்படுத்திற்று.  
  
¹ சிலப். 15:156. ² மணி. 5: 96 .

### [7.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.3)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
ஆங்கவ ளாங்கவன் கூறிய துரைத்தலும  
  
16  
  
உரை  
  
16  
  
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அக்காலைச் சுதமதி அவ் வுதயகுமரன் மொழிந்ததனைக் கூறிய வளவில்;  
  
அவன் கூறியது - சித்திராபதியாற் சேர்தலுமுண்டு என்பது.

### [7.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.4)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
20 25  
  
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல்  
தணியா நோக்கந் தவிர்ந்தில னாகி  
அறத்தோர் வனமென் றகன்றன னாயினும்  
புறத்தோர் வீதியிற் பொருந்துத லொழியான்  
பெருந்தெரு வொழித்திப் பெருவனஞ் சூழ்ந்த  
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி  
மிக்க மாதவர் விரும்பின ருறையும்  
சக்கர வாளக் கோட்டம் புக்கால்  
கங்குல் கழியினுங் கடுநவை யெய்தாது  
அங்குநீர் போமென் றருந்தெய்வ முரைப்ப  
  
17  
  
உரை  
  
26  
  
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியாவுள்ளம் தவிர்ந்திலன் ஆகி - மன்னவன் புதல்வன் மணிமேகலை யிடத்துக் கொண்ட ஆசை நீங்காத உள்ளத்தினைத் தவிர்ந்திலனாய், அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-தவத்தோர்களுடைய பொழில் என்று இங்கு நின்றும் நீங்கினனாயினும், புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் - புறத்திலுள்ளவர்களது தெரு வின்கண்ணே சேர்தலை நீங்கான், பெருந்தெரு ஒழித்து இப்பெருவனஞ் சூழ்ந்த - ஆதலால் பெருந் தெருவுகளை விட்டு இந்தப் பெரிய சோலையைச் சூழ்ந்துள்ள, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருத்தமுற்ற மதிலின் மேற்றிசையினிடத்தேயுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதவர் விரும்பினர் உறையும்-தவத்தான் மிக்க முனிவர்கள் விரும்பி யுறையும், சக்கரவாளக்கோட்டம் புக்கால் - சக்கரவாளக்கோட்டத்தை யடைந்தால், கங்குல் கழியினும் கடுநவை எய்தாது - அங்கே இரவினைக் கழிப்பினும் கொடிய துன்ப முண்டாகாது, அங்குநீர் போம் என்று அருந்தெய்வம் உரைப்ப - ஆகலின் நீவிர் அங்கே செல்வீராக என்று அரிய தெய்வம் கூறியருள;  
  
அறத்றோர் துறவிகளானமையின், புறத்தோர் என்பதற்கு அவர்க்குப்புறமாகவுள்ள இல்லற நெறியினர் என வுரைத்தலும் அமையும்; புறத்து ஓர் வீதியில் என்றலுமாம். புழை-நுழை வாயில். கழியினும் - கழிப்பினும். இனி, ஆண்டே இராக்காலம் கழிவதாயினும் எனலுமாம் கடுநவை - உதயகுமரனாற் பற்றப்படுதல்.

### [7.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.5)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
30  
  
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்  
அஞ்செஞ் சாயல் நீயு மல்லது  
நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாஞ்  
சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்  
சக்கர வாளக் கோட்ட மஃதென  
மிக்கோய் கூறிய உரைப்பொரு ளறியேன்  
ஈங்கிதன் காரண மென்னை யோவென  
  
27  
  
உரை  
  
33  
  
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அமசெஞ்சாயல் நீயும் அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத் தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய நகரின்கண் உள்ளோரனைவரும், சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார், சக்கரவாளக்கோட்டம் அஃது என - அதனைச் சக்கர வாளக்கோட்டம் என்று, மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய மொழியின் பொருளை அறியேன், ஈங்கு இதன் காரணம் என்னையோ என - இங்ஙனம் கூறுவதன் காரணம் யாதோ என்று சுதமதி கேட்ப;  
  
வஞ்ச விஞ்சையன் என்றாள், தன்னைக் ¹ கவர்ந்து சென்று பின்னர்த்தன்னைவிட்டுப் பிரிந்தமையான். நெடுநகர்-காவிரிப்பூம்பட்டினம்.  
  
¹ மணி. 3: 28 - 41.

### [7.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.6)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
35  
  
ஆங்கதன் காரணம் அறியக் கூறுவன்  
மாதவி மகளொடு வல்லிருள் வரினும்  
நீகேள் என்றே நேர்இழை கூறும்;இந்  
  
34  
  
உரை  
  
36  
  
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவல் - அஃது அப்பெயர் பெற்றதன் காரணத்தைத் தெளிய உரைப்பேன், மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகேள் என்றே நேரிழை கூறும் - மிகுந்த இருளையுடைய யாமம் வரினும் நீ மாதவி மகளுடன் அதனைக் கேட்பாயாக என்று மணிமேகலா தெய்வம் கூறுகின்றது;

### [7.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.7)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
நீகே ளென்றே நேரிழை கூறுமிந்  
நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய  
ஈமப் புறங்கா டீங்கித னயலது  
  
36  
  
உரை  
  
38  
  
இந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய - பகைவர்க்கு அச்சத்தை விளைக்கும் இப் பெரிய நகரத்தோடே உண்டாய, ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது - பிணஞ்சுடும் விறகடுக்கினையுடைய சுடுகாடு இவ் வுவவனத்தின் பக்கத்தது; நாமம் - புகழுமாம். இதன் - இவ் வுவவனத்தின்.

### [7.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.8)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
40 45  
  
ஊரா நற்றேர் ஓவியப் படுத்துத்  
தேவர் புகுதரூஉஞ் செழுங்கொடி வாயிலும்  
நெல்லுங் கரும்பு நீருஞ் சோலையும்  
நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும்  
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்  
துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும்  
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின்  
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து  
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்  
நாற்பெரு வாயிலும் பாற்பட் டோங்கிய  
காப்புடை யிஞ்சிக் கடிவழங் காரிடை  
  
39  
  
உரை  
  
49  
  
ஊரா நல்தேர் ஓவியப்படுத்து - ஓவியம்போல விமானம் விசும்பின்கண்ணே நிற்குமாறு செய்து, தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் - விண்ணவர் நுழைந்து செல்லுஞ் செழுங் கொடியினையுடைய வாயிலும், நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் - நெற்பயிரும் கரும்பும் பொய்கையும் பொழிலும் நன்கனமெழுதிய நலஞ்சிறந்த வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்துள் - மிக்க வெண்மை யுடைய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில், உரு எழுதா வெள்ளிடை வாயிலும் - வடிவங்கள் எழுதப்பெறாத வெளியான இடத்தினையுடைய வாயிலும், மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கில் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து - மடிக்கப்பட்ட சிவந்த வாயையும் சினந்த நோக்கையும் பிறரைத்தொடுத்த பாசத்தையும் கையிற் பிடித்த சூலப்படையையுமுடைய, நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் - நீண்ட தோற்றத்தையுடைய பூதவடிவம் நிற்கின்ற வாயிலும் ஆகிய, நாற்பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய - நான்கு பெரிய வாயில்களும் பகுதிப்பட்டு உயர்ந்த, காப்புடை இஞ்சிக் கடி வழங்கு ஆரிடை - காவலுடைய மதில் சூழ்ந்த பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தில்;  
  
ஊராத் தேர்-பாகராற் செலுத்தப்படாது தானே செல்லுந் தேர், விமானம். விமானத்துடன் தேவர் புகுவதாக ஓவியப்படுத்த வாயில் என்றலுமாம். நீர் - பொய்கை முதலியன. மண்ணீடு - சுதையாற் செய்யப்பட்ட பாவை; "மண்ணீட்டிற் பண்புற வகுத்து," "ஈங்கிம் மண்ணீட்டு" (6: 200; 18 - 156.) என மேல் இந்நூலுள் வருதல் காண்க. கடி - பேய்.

### [7.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.9)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
50  
  
உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர்  
தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றிப்  
பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில்  
காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்  
  
50  
  
உரை  
  
53  
  
உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்-தளராத உள்ளத்தோடு உயிராகிய கடனைக் கொடுத்தோர்களின், தலை தூங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றி - தலைகள் தொங்குகின்ற நீண்ட மரங்கள் தாழ்ந்து புறத்தே சூழப்பெற்று, பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்- பெரிய பலிபீடம் ஓங்கிய முன்றிலையுடைய காடுகிழாளின் மிகப் பெரிய கோயிலும் ;  
  
உயிர்க்கடன் இறுத்தலைச் சிலப்பதிகாரத்து ¹ இந்திர விழவூரெடுத்த காதையானும் அறிக. இஃது அவிப்பலி எனப்படும். பலி கொடுப்போர் சிகையை மரத்தில் முடிந்துவிட்டுத் தலையை அரிவராகலின் "தலைதூங்கு நெடுமரம்" என்றார் ; ² "வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று, தூங்குதலை, சிரிப்பன கண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்" என்பது காண்க. காடமர் செல்வி - காடுகிழாள் ; துர்க்கை.  
  
¹ சிலப். 5 : 88-4. ² கலிங்க. கோயில் 21.

### [7.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.10)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
55  
  
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்  
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்  
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி  
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த  
குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன  
சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்  
  
54  
  
உரை  
  
59  
  
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும், ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்-அரிய தவத்தானுயர்ந்தோர்க்கும் அரசர்க்கும் கணவனுடன் ஒருங்கே உயிர்நீத்த கற்புடை மகளிர்க்கும், நால்வேறு வருணப் பால்வேறு காட்டி - நால்வகை மரபின் பகுதி வேறுபாட்டினைக் காட்டி, இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்தோர்களின் உடலைப் புதைத்தவிடத்தே அவர்கட்குச் சிறந்தோர் அமைத்த, குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்-குறியனவும் நெடியனவும் ஆகிய குன்றுகளைக் கண்டாற்போன்றனவாய்ச் செங்கற்களாற் செய்யப்பட்டு உயர்ந்த கோட்டங்களும் ;  
  
ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச்சொல்; ¹ "பொதியி லாயினும் இமய மாயினும்......புகாரேயாயினும்" என்புழிப்போல. சிறந்தோர் - உரிமையுடையோர். சுடுமண்-செங்கல். கோட்டம்-அறை ; கோயிலுமாம்.  
  
¹ சிலப். 1:14-6

### [7.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.11)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
60 65  
  
அருந்திறற் கட்வுட் டிருந்துபலிக் கந்தமும்  
நிறைக்கற் றெற்றியும் மிறைக்களச் சந்தியும்  
தண்டு மண்டையும் பிடித்துக் காவலர்  
உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும்  
தூமக் கொடியுஞ் சுடர்த்தோ ரணங்களும்  
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து  
  
60  
  
உரை  
  
65  
  
அருந்திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் - அரிய திறலையுடைய கடவுளுடைய திருந்திய பலியிடுதற்குரிய தூண்களும், நிறைகல் தெற்றியும் - நிறுத்தப்பட்ட கல்லாலாகிய திண்ணையும், மிறைக்களச் சந்தியும்-வளைந்த இடத்தினையுடைய பல வழிகளுஞ் சேர்ந்த சந்துகளும், தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண்படுக்கும் உறையுட் குடிகையும் - கையிற் பிடிக்கும் கோலும் உண்ணும் கலமும் பிடித்து ஈமங் காப்போர் உண்டு துயிலும் உறைவிடமாகிய குடில்களும், தூமக்கொடியும் சுடர்த் தோரணங்களும்-புகையொழுங்காகிய கொடியும் சுடராகிய தோரணங்களும், ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும் பரக்கப்பெற்று ; கந்தின்கண் தெய்வமுறைதலை ¹ "கலிகெழு கடவுள் கந்தங்  
  
கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; ² "மிறைக்கொளி திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம் ; இரக்குங் கலமுமாம் ; ³ "ஏலாது கவிழ்ந்த என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம்.  
  
¹ புறம். 52. ² சீவக-284. ³ புறம். 189.

### [7.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.12)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்  
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்  
இரவும் பகலும் இளிவுடன் றரியாது  
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்  
  
66  
  
உரை  
  
69  
  
சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் - பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும் தோண்டப்பட்ட குழியி லிடுவோரும், தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் - தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போரும், இரவும் பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன் தங்காமல், வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - வருவோரும் போவோரு மாகியவர்களின் நீங்காத ஒலியும் ;  
  
தாழ்வயின் - பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற நானூற்றின் 227, 237, 255, 363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முழுமக்கட் டாழி எனப்படும். சுடுவோர் முதலியோராய் வருவோர் பெயர்வோர் என்க.

### [7.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.13)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
70 75  
  
எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி  
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும்  
துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும்  
பிறவோ ரிறந்த அழுவிளிப் பூசலும்  
நீண்முக நரியின் தீவிளிக் கூவும்  
சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும்  
புலவூண் பொருந்திய குராலின் குரலும்  
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்  
நன்னீர்ப் புணரி நளிகட லோதையின்  
இன்னா இசையொலி என்றுநின் றறாது  
  
70  
  
உரை  
  
79  
  
எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம் ஈமம் உண்டென்பதைக் கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற்பறையின் ஒலியும், துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும், பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர் இறந்ததனாலாகிய அழுகை யொலியும், நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய நரியின் தீய ஒலியினையுடைய கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை யழைக்கும் பேராந்தையின் குரலும், புலவூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய உணவைப் பொருந்திய கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத் தலை முளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல் ஒதையின் இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல் ;  
  
நெய்தல் - சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை ¹"மணங்கொண்டீண், டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை" என்பதனாலுமறிக. முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று. தொழுவிளியாகிய பூசல், அழுவிளியாகிய பூசல் என்க ; விளி - ஓசை. பயிர்தல் - அழைத்தல், ²"போழ்வாய்க்கூகை, சுட்டுக்குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" என்பதனால் பேராந்தை இறந்தோரை அழைக்குமென்பதும் போதரும். ஆண்டலை - ஆண்மகனது தலை போன்ற வடிவமுள்ள ஒருவகைப் பறவை; இதனை, ³"நீண்ட பலி பீடத்தி லரிந்துவைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி, ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ" என்பதனானறிக. நெய்தலோசை முதலிய இன்னா இசையொலி கடலோதையின் என்றும் நின்றறாதென்க.  
  
¹ நாலடி. 25. ² புறம். 240. ³ கலிங்க. கோயில். 16.

### [7.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.14)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
80  
  
85  
  
90  
  
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலு மோங்கிக்  
கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து  
காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டும்  
மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும்  
வெண்ணிணந் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து  
புள்ளிறை கூறும் வெள்ளின் மன்றமும்  
சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு  
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்  
விரத யாக்கைய ருடைதலை தொகுத்தாங்  
கிருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்  
பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்  
விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றமும்  
  
80  
  
உரை  
  
91  
  
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி - தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் உயர்ந்து, கான்றையும் சூரையுங் கள்ளியும் அடர்ந்து - கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் செறிந்து, காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் - காய்கின்ற பசியையுடைய கொடிய பேய்கள் கூட்டமாகத் திரண்டிருக்கும், மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் - முகில் தங்குகின்ற பெருங் கிளை களையுடைய வாகை மரம் நிற்கும் மன்றமும், வெள் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து - வெள்ளிய நிணத்தினைத் தசையுடன் உண்டு மகிழ்ச்சி மிகுந்து, புள் இறை கூரும் வெள்ளில் மன்றமும்- பறவைகள் தங்குகின்ற விளாமரம் நிற்கும் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீயுறுக்கும் வன்னிமன்றமும் - காபாலிகர் தளராத உள்ளத்துடன் சோறடுகின்ற தீயையுடைய வன்னிமரம் நிற்கும் மன்றமும். விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப்படுக்கும் இரத்தி மன்றமும் - விரதங் காக்கும் உடம்பினை யுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலைகளாகச் செய்யும் இலந்தைமரம் நிற்கும் மன்றமும், பிணம் தின் மாக்கள் - பிணத்தினைத் தின்னும் மாக்களாயினார், நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் - நிணம் பொருந்திய பானையில் விருந்து செய்கின்ற, வெள்ளிடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் ஆகிய இவ்விடங்களில்;  
  
ஒடுவை-ஒடுமரம். உழிஞ்சில் - வாகை ; உன்னமுமாம். தான்றி முதலிய மூன்றும் மரமும், கான்றை முதலிய மூன்றும் செடியுமாம். மால்-மேகம். இறைகூர்தல்-தங்குதல். சுடலை நோன்பிகள்-மயானத்திலிருந்து நோன்பியற்றுவோர் ; காபாலிக சமயத்தோர். விரத யாக்கையர் -மாவிரத சமயத்தோர். பலர் கூடுமிடம் மன்ற மெனப்படும் ; பண்டை நாளில் மன்றங்கள் பெரும்பாலும் மரத்தடியில் இருந்தன ; பேய்கள் கூடுதலின் வாகையடி மன்றமாயிற்று ; இங்ஙனமே ஏனையவும் கொள்க.

### [7.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.15)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
95  
  
அழற்பெய் குழிசியும் புழற்பெய் மண்டையும்  
வெள்ளிற் பாடையும் உள்ளீட் டறுவையும்  
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்  
நெல்லும் பொரியுஞ் சில்பலி யரிசியும்  
யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை  
  
92  
  
உரை  
  
96  
  
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் - தீப்பெய்த பானையும், புழல் என்னும் பண்ணியம் இட்ட கலனும், வெள்ளில் பாடையும் உள்ளீட்டறுவையும்-வெள்ளிலாகிய பாடையும் உள்ளே பண்டங்கள் இடப்பட்ட உறியும், பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் - பாடையிற்கட்டி அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும், நெல்லும் பொரியும் சில்பலி அரிசியும்-நெல்லும் பொரியும் சிறுபலியாகிய அரிசியும், யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை - எவ்விடத்தும் பரந்து கிடக்கும் மிகப்பெரிய பாழிடத்தில்;  
  
புழல்-ஒருவகைச் சிற்றுண்டி. வெள்ளிற்பாடை: இருபெயரொட்டு. உள்ளீட்டறுவை-உள்ளீட்டையுடைய கிழியுமாம். சில்பலி - சிறுபலி ; 1"தூவெள் ளரிசி, சில்பலிச் செய்து" என்பது காண்க. வாகைமன்றம் முதலிய மன்றங்கள் யாங்கணும் குழிசி முதலியன பரந்த பறந்தலை யென்க.  
  
¹ முருகு. 233-4.

### [7.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.16)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
100  
  
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்  
ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர்  
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்  
கொடுந்தோழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்  
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்  
கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து  
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்  
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ  
  
97  
  
உரை  
  
104  
  
தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்-தவநெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ் செல்வமுடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையையுடைய இளமகளிர் ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப - கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும் - அழல் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து - மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ;  
  
என்னான் என்பதனைத் தவத்துறைமாக்கள் முதலியவற்றோடும் ஒட்டுக. கொன்றனன்; முற்றெச்சம். அழலாகிய வாய் என உருவகம். இகரச்சுட்டு அதன் கொடுமையை உணர்த்திற்று. ஆரிடையில் பறந்தலையில் சுடலை (49, 66, 101) என்க. பறந்தலையாகிய சுடலை யென்னலுமாம். அறிவை மயக்குதலின் செல்வத்தைக் கள் என்றார். 'தவத் துறைமாக்கள்......மடவோருண்டோ' என்பது தெய்வங் கூறியது ; கவி கூறியதுமாம்.

### [7.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.17)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
105  
  
ஆங்கது தன்னையோ ரருங்கடி நகரெனச்  
சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன்  
  
105  
  
உரை  
  
106  
  
ஆங்கது தன்னை ஓர் அருங்கடி நகர் என - அங்ஙனமாகிய புறங்காட்டை ஓர் அரிய காப்பமைந்த நகரமென்றெண்ணி, சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றான் - தனிவழியே சென்ற சார்ங்கலன் என்னும் சிறுவன் ;

### [7.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.18)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
என்புந் தடியு முதிரமு மியாக்கையென்  
றன்புறு மாக்கட் கறியச் சாற்றி  
வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து  
  
107  
  
உரை  
  
109  
  
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று - என்புந் தசையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று, அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி - அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக்கூறி, வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து - வழுவுடன் கிடந்த புழுக்கள் மலிந்த ஊன் பிண்டமாகிய உடலில் ;  
  
அன்புறு மாக்கள்-உடம்பினிடத்து அன்புமிக்க மாக்கள் ; மாக்கள் என்றார் ஐம்புல வுணர்ச்சியன்றி மனவுணர்ச்சி யில்லாதவர் எனற்கு, வழு - வழும்பு. யாக்கை என்பது என்பு முதலியனவே யென மாக்கட்குச் சாற்றிக்கிடந்த பிண்டம் என்க ; ¹"குடருங் கொழுவுங் குருதியு மென்பும் தொடரு நரம்பொடு தோலும்--இடையிடையே வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்." என்பது ஒத்து நோக்கற்பாலது.  
  
¹ நாலடி. 46.

### [7.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.19)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
110 115  
  
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்  
டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும்  
கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு  
நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும்  
கடகஞ் செறிந்த கையைத் தீநாய்  
உடையக் கவ்வி யொடுங்கா வோதையும்  
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை  
காய்ந்தபசி யெருவை கவர்ந்தூ ணோதையும்  
பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து  
மண்கணை முழவ மாக ஆங்கோர  
  
110  
  
உரை  
  
119  
  
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு - செம் பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு, உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும் - கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், கலைப்புற அல்குல் கழுகு குடைந்துண்டு நிலத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும் - கலையை யொழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்-கடகமணிந்த கையைத் தீய நாய் உடையுமாறு கவ்விக்கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை - சந்தனம் பூசப்பெற்ற நிமிர்ந்த இளங் கொங்கையை, காய்ந்த பசி எருவை கவர்ந்தூண் ஓதையும்-மிக்க பசியையுடைய பருந்து கவர்ந்துண்ணுகின்ற ஓசையும், பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து- இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற் குவையாகிய அரங்கில், மண்கணை முழவம் ஆக - மார்ச்சனை செறிந்த தண்ணுமை முழக்கமாக ;  
  
கலை - உடை ; மேகலையுமாம். நிலைத்தலை என்பது பாடமாயின் தன்னிடத்து நிலைபெற்ற என்க. தீ நாய் - புறங்காட்டிற் றிரியும் ஒரு வகை நாயுமாம். பண்பு - இனிமை ; அழகுமாம். ஓதை பலவும் முழவமாக வென்க.

### [7.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.20)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
120  
  
கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள  
  
120  
  
உரை  
  
121  
  
ஆங்கு ஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி - அங்குள்ள ஓர் பெண்பிணத்தின் கரிய தலையைப் பறித்துக் கையிலே ஏந்தி, இரும்பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்மகள்-ஓர் பெண் பேய் மிக்க பெரிய மகிழ்ச்சியுடன் எழுந்து ;

### [7.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.21)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
125  
  
புயலோ குழலோ கயலோ கண்ணோ  
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ  
பல்லோ முத்தோ வென்னா திரங்காது  
கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்  
தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக்  
  
122  
  
உரை  
  
126  
  
புயலோ குழலோ-முகிலோ அன்றிக் கூந்தலோ, கயலோ கண்ணோ - கயல் மீனோ அன்றிக் கண்ணோ, குமிழோ மூக்கோ - குமிழம்பூவோ அன்றி மூக்கோ, இதழோ கவிரோ - உதடோ அன்றி முருங்கை மலரோ, பல்லோ முத்தோ - பற்களோ அன்றி முத்துக்களோ, என்னாது இரங்காது-என்று கருதாமலும் இரங்காமலும், கண்தொட்டு உண்டு - கண்களைத் தோண்டி உண்டு, கவை அடி பெயர்த்து - கவைத்த அடிகளைப் பெயர்த்து, தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து - தணியாத களிப்புடன் ஆடுகின்ற கூத்தினை ;  
  
என்னாது - என்று கருதி அதிசயிக்காது ; இஃது ஐயவதிசயத்தின் பாற்படும்: ¹"கவையடிப் பேய்மகள்" என்றார் பிறரும்.  
  
¹ சிறுபாண். 197.

### [7.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.22)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
130  
  
கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி  
விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங்  
கெம்மனை காணாய் ஈமச் சுடலையின்  
வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத்  
தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும்  
  
127  
  
உரை  
  
131  
  
கண்டனன் வெரீஇ - கண்டு அஞ்சி, கடு நவை எய்தி - அப் பேயாற் பிடிக்கப்பட்டு, விண்டு - அவ்விடத்தின் நீங்கி, ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து - ஓர் திசையிற் கூப்பிட்டுக் கொண்டு சென்று, ஈங்கு எம்மனை காணாய் - எம் அன்னையே இங்கே காண்பாயாக, ஈமச்சுடலையின் - ஈமமாகிய மயானத்தின் கண் உள்ள, வெம்முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என - கொடிய முது பேய்க்கு என் உயிரைக் கொடுத்துவிட்டேன் என்று கூறி, தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் - தன் தாயின் முன்னே வீழ்ந்து உயிர் துறக்கவும் ;  
  
சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் கண்டனன் வெரீஇ என்க. கடு நவை-மிக்க துன்பம் ; ஆவது-பேய்க் கோட்படுதல். ¹"கழல்கட் கூளிக் கடுநவைக் பட்டோர்" என்பதுகாண்க. ஈமச் சுடலை:இருபெயரொட்டு; ஈமத்தையுடைய சுடலையென்றுமாம். ஈமம்- பிணஞ் சுடும் விறகடுக்கு. மெய் வைத்தல் - உடம்பைப் போகடுதல் ; இறத்தல்.  
  
¹ சிலப். 5-225.

### [7.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.23)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
135 140  
  
பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித்  
தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை  
யாருமில் தமியே னென்பது நோக்காது  
ஆருயி ருண்ட தணங்கோ பேயோ  
துறையு மன்றமுந் தொல்வலி மானும்  
உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய்  
தகவிலை கொல்லோ சம்பா பதியென  
மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ  
ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில்  
கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக  
  
132  
  
உரை  
  
141  
  
பார்ப்பான் தன்னொடு கண் இழந்திருந்த - கணவனோடு கண் இழந்திருந்த, இத் தீத் தொழிலாட்டி என் சிறுவன் தன்னை- இக் கொடுவினையேனுடைய புதல்வனை, யாரும் இல் தமியேன் என்பது நோக்காது - யான் யாருமற்ற ஏழை யென்பதனைக் கருதாமல், ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ - அணங்கோ அன்றிப் பேயோ அரிய உயிரை யுண்டது, துறையும் மன்றமும் தொல் வலி மரனும் - நீர்த்துறைகளும் மன்றங்களும் பழைய வலி யுடைய மரங்களும், உறையுளும் கோட்டமும் காப்பாய் - தங்கு மிடங்களும் கோயில்களு மாதியவற்றின்கணிருந்து காத்து வருவோய், காவாய் தகவிலை கொல்லோ சம்பாபதி என-சம்பாபதியே நீ என் மகனுயிரைக் காவாமலிருந்தாய் தகவின்மையை யுடையையோ என அழைத்து, மகன் மெய் யாக்கையை மார்புறத் தழீஇ - மகனது உடலாகிய உயிரற்ற யாக்கையை மார்புடன் தழுவிக்கொண்டு; ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் - இடு காட்டின் மதிற்புறத்துள்ள வாயிலில் நின்று, கோதமை என்பாள் கொடுந்துயர் சாற்ற - கோதமை என்னும் பார்ப்பனி கொடிய துன்பத்தினைக் கூற ;  
  
பார்ப்பன் - சார்ங்கலனுடைய தந்தை ; அவன் கண்ணிழந்திருந்தமை "கண்ணில் கணவனை" (6 : 155.) எனப் பின் வருதலானும் துணியப்படும். தீத்தொழிலாட்டி-பார்ப்பனி யென்றுமாம்; ¹ தீத்திறம் புரிந்தோன்" எனப் பார்ப்பனன் கூறப்படுதல் காண்க ; அங்கி காரியம் செய்பவன் என்றபடி. கணவனும் கண்ணிழந்தானாகலின் சிறுவனை யன்றித் தனக்குக் களைகண் இல்லை யென்பாள் 'யாருமில் தமியேன்' என்றாள். நோக்காது - கருதாது ; நோக்கனோக்கம். மன்றம் - பலர்கூடும் வெளியிடம். தகவு இலை கொல்லோ-நின்னிடம் தகவு இல்லையோ என்றுமாம் ; தகவு - நடுவு நிலை ; எவ்விடத்தும் யாரையுங் காக்குந் தெய்வம் ஈண்டு இவனைக் காவாமையின் 'தகவிலை கொல்லோ' என்றாள். கோதமை தகவிலை கொல்லோ என மார்புறத் தழீஇ வாயிலிற் சாற்றவென்க.  
  
¹ சிலப். 11 : 57.

### [7.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.24)

Try error :java.lang.NullPointerException

### [7.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.25)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
ஆருமி லாட்டியென் அறியாப் பாலகன்  
ஈமப் புறங்காட் டெய்தினோன் றன்னை  
அணங்கோ பேயோ ஆருயி ருண்டது  
உறங்குவான் போலக் கிடந்தனன் காணென  
  
146  
  
உரை  
  
149  
  
ஆருமிலாட்டி என் அறியாப் பாலகன் - ஆருமற்றவளாகிய என்னுடைய அறியாச் சிறுவன். ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை - ஈமத்தினையுடைய புறங்காட்டின் வழியே வந்தோனை, அணங்கோ பேயோ ஆருயிர் உண்டது-அணங்கோ பேயோ அரிய உயிரை உண்டது, உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என- இதோ உறங்குபவன் போலக் கிடக்கின்றனன் காண்பாயாக என்று பார்ப்பனி உரைத்து வருந்த ;

### [7.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.26)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
150  
  
அணங்கும் பேயும் ஆருயி ருண்ணா  
பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக  
ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது  
மாபெருந் துன்பநீ ஒழிவா யென்றலும்  
  
150  
  
உரை  
  
153  
  
அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணாது - அணங்கும் பேயும் அரிய வுயிரை உண்ணமாட்டா, பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக-நெருங்கிய முப்புரி நூலை யணிந்த மார்பினையுடைய சார்ங்கலனது அறியாமையே பற்றுக்கோடாக, ஊழ்வினை வந்து இவன் உயிருண்டு கழிந்தது - ஊழ்வினையானது வந்து இவனது உயிரை உண்டு நீங்கியது, மாபெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்-நினது மிகப்பெரிய துயரத்தை நீங்குவாயாக என்று தெய்வமுரைத்தலும்;

### [7.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.27)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
155  
  
என்னுயிர் கொண்டிவன் உயிர்தந் தருளிலென்  
கண்ணில் கணவனை இவன்காத் தோம்பிடும்  
இவனுயிர் தந்தென் உயிர்வாங் கென்றலும்  
  
154  
  
உரை  
  
156  
  
என் உயிர்கொண்டு இவன் உயிர் தந்தருளில்-என்னுடைய உயிரைப் பெற்று என் மகனது உயிரைத் தந்தருள்வாயானால், என் கண்ணில் கணவனை இவன் காத்து ஓம்பிடும்-கண்ணிழந்த என் கணவனை இவன் பாதுகாப்பான் ஆகலின், இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்-இவன் உயிரை அளித்து எனது உயிரை வாங்குவாயாக என்று கோதமை கூறியவளவில் : காத்து ஓம்பிடும்: ஒருபொருட் பன்மொழி.

### [7.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.28)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
160 165  
  
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள்  
ஐய முண்டோ ஆருயிர் போனால்  
செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்  
ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல்  
ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல்  
கொலையற மாமெனுங் கொடுத்தொழின் மாக்கள்  
அவலப் படிற்றுரை யாங்கது மடவாய்  
உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர்  
இலரோ இந்த ஈமப் புறங்காட்  
டரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம்  
நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும்  
  
157  
  
உரை  
  
167  
  
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் - சம்பாபதி இரக்கமுற்றுக் கூறுகின்றவள், ஐயம் உண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கில சென்று பிறப்பு எய்துதல்-அரிய உயிரானது உடம்பை விட்டு நீங்கினால் தான் செய்த வினையின்வழியேசென்று வேறு பிறப்படைதலில் ஐயம் உண்டோ, ஆங்கது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்-சென்ற அவனுயிரைக் கொண்டுவந்து நின்னுடைய அரிய துன்பத்தை நீக்குதல், ஈங்கு எனக்கு ஆவ தொன்று அன்று - எனக்கு இயல்வதொரு காரியமன்று, நீ இரங்கல்-நீ வருந்தற்க, கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப்படிற்று உரை ஆங்கது மடவாய் - மடந்தையே நீ கூறிய அது கொலை புரிவதை அறம் என்று கூறும் கொடுந் தொழிலையுடைய மாக்களின் துன்பத்தைத் தரும் பொய்யுரை யாகும், உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ - உலகத்தையாள்கின்ற அரசர்கட்கு உயிர்க்கு உயிர் கொடுப்போர் ஒருவருமிலரோ, இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் - இந்தச் சுடுகாட்டின்கண் அரசர்களுக்கு அமைந்த கோட்டங்கள் அளவற்றன ஆகலின், நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-நிரயத்திற்கேதுவாகிய கொடிய மொழிகளை நீ விடுவாயாக என்று தெய்வம் கூறுதலும் ; முது மூதாட்டி-மிக்க முதுமையை உடையாள். மருங்கு - வழி; ¹"செய்வினை வழித்தா யுயிர்செலு மென்பது, பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பது ஈண்டறியற்பாலது. மன்னவர்க்கு உயிர்க்குயி ரீவோர் - அரசர் உயிருக்கு மாறாகத் தம்முயிரைக் கொடுப்போர். ஆயிரம்-அளவில்லன என்னும்பொருட்டு. கோட்டம்-அறை.  
  
¹ சிலப். 28 : 167-8.

### [7.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.29)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
170  
  
தேவர் தருவர் வரமென் றொருமுறை  
நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும்  
மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின்  
யானோ காவேன் என்னுயி ரீங்கென  
  
168  
  
உரை  
  
171  
  
தேவர் தருவர் வரம் என்று ஒருமுறை நான்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும் - தேவர்கள் வரந்தருவர் என்று அந்தணர்களது நல்ல நூலாகிய நான்மறை ஒருபெற்றியே கூறா நிற்கும்; அங்ஙனமாகவும், மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்- மிகப்பெருந் தெய்வமாகிய நீ அருள்புரியாவிட்டால், யானோ காவேன் என் உயிர் ஈங்கென - யான் என் உயிரை ஈண்டுக்காப்பாற்றாமல் விடுவேன் என்று கோதமை கூற;

### [7.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.30)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
175  
  
ஊழி முதல்வன் உயிர்தரி னல்லது  
ஆழித் தாழி யகவரைத் திரிவோர்  
தாந்தரின் யானுந் தருகுவன் மடவாய்  
ஈங்கெ னாற்றலுங் காண்பா யென்றே  
  
172  
  
உரை  
  
175  
  
ஊழிமுதல்வன் உயிர்தரின் அல்லது-ஊழிமுதல்வனாகிய இறைவன் உயிரை அளித்தாலல்லது, ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின்-சக்கரவாளமாகிய தாழியின்கண் திரியுந் தேவர்கள் தர வல்லவராயின், யானும் தருகுவன் மடவாய்- மடவாய் யானும் நின் மகனுயிரைத் தருவேன், ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று - என்னுடைய ஆற்றலையும் நீ இப்பொழுது காண்பாயாக என்று கூறி ;  
  
ஊழிமுதல்வன் - உலக முதல்வன்; இவனை மகாப்பிரமா என்பர். தாழிபோற் கவிந்துள தென்பார் தாழி யென்றார். முதல்வன் தரின் அல்லது திரிவோர் தாரார். அவர் தரின் யானுந் தருகுவன் என  
விரித்துரைக்க.

### [7.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.31)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
180 185  
  
நால்வகை மரபி னரூபப் பிரமரும்  
நானால் வகையி னுரூபப் பிரமரும்  
இருவகைச் சுடரும் இருமூ வகையிற்  
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்  
பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம்  
எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும்  
பன்மீ னீட்டமும் நாளுங் கோளும்  
தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து  
வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி  
அரந்தை கெடுமிவ ளருந்துய ரிதுவெனச்  
  
176  
  
உரை  
  
185  
  
நால்வகை மரபின் அரூபப் பிரமரும் - நான்கு வகைப்பட்ட முறைமையினையுடைய அரூபப் பிரமர்களையும், நானால் வகையின் உரூபப் பிரமரும்-பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமர்களையும், இருவகைச் சுடரும்-ஞாயிறு திங்கள்களையும், இரு மூவகையில் பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும் - ஆறு வகையினையுடைய மிக்க அழகு விளங்குகின்ற தெய்வ கணங்களையும், பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்- பல திறப்பட்ட அசுரர்களையும் மிக்க துன்பத்தை அனுபவிக்கின்ற எண்வகைப்பட்ட நரகர்களையும், இரு விசும்பு இயங்கும் பன்மீன் ஈட்டமும் நாளும்கோளும்-அகன்ற வானின்கண் திரியும் பல மீன்களின் தொகுதிகளையும் நாட்களையும் கோட்களையும், தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து - தன் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் சக்கரவாளத்தில், வரந் தரற்குரியோர்தமை முன் நிறுத்தி - வரந்தருவதற் குரியவர்களாகிய தேவர்களைக் கோதமைக்கு முன்னே நிறுத்தி, அரந்தை கெடும் இவள் அருந்துயர் இதுவென - இவளுற்ற அரிய துயர் இது இத்துயரினைப் போக்குவீராக என்று சம்பாபதி கூற  
  
உலகம் முப்பத்தொன்று என்றும், அவற்றுள் முதலாவதாகிய நரக லோகத்தின் பகுதிகளாகிய மகாநிரயம், இரௌரவம், காலசூத்திரம், சஞ்சீவனம், மகாவீசி, தபனம், சம்பிரதாபனம், சங்கதம் என்னும் எட்டு நரகங்களிலும் நரகர்கள் வசிப்பரென்றும், ஆறாவது முதலிய அறுவகை உலகங்களிலும் அறுவகைத் தெய்வகணங்கள் வசிப்பரென்றும், பன்னிரண்டாவது முதலிய பதினாறு உலகங்களில் பதினறுவகை உருவப்பிரமர்களும், இருபத்தெட்டாவது முதலிய நான்கு உலகங்களில் நால்வகை அருவப்பிரமர்களும் வசிப்பரென்றும் கூறுவர். ஒன்று முதல் மேன்மேலுலகங்களில் வசிப்போர் படிப்படியே உயர்ந்தோராவ ரென்பது அறிக. கெடும் : செய்யுமென்னுஞ் சொல் ; ஏவலில் வந்தது.

### [7.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.32)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே  
எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே  
கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி  
ஈமச் சுடலையின் மகனையிட் டிறந்தபின்  
  
186  
  
உரை  
  
189  
  
சம்பாபதி தான் உரைத்த அம்முறையே - காவற்றெய்வ மாகிய சம்பாபதி கூறிய முறைப்படியே, எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே - உலகெங்கணுமுள்ள தேவர்களும் கூறக் கேட்டு, கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி - கோதமை தான் அடைந்த கொடிய துன்பத்தினின்றும் நீங்கி, ஈமச்சுடலையில் மகனை இட்டு இறந்தபின் - இடுகாட்டில் அடுக்கப்பட்ட விறகினை யுடைய அழலின்கண் மகனை இட்டுத் தானும் இறந்த பின்னர் ;  
  
சம்பாபதி கூறியதாவது ஊழி முதல்வன் உயிர்தரினல்லது ஏனோர் தாரார் என்றது. தேவர் என்றது அருவப்பிரமர் இறுதியாகவுள்ள மேலுலகத்தவர் அனைவர்க்கும் பொதுப்பெயர்.

### [7.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.33)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
190  
  
195  
  
200  
  
சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற  
எங்குவாழ் தேவருங் கூடிய இடந்தனில்  
சூழ்கடல் வளைஇய ஆழியங் குன்றத்து  
நடுவு நின்ற மேருக் குன்றமும்  
புடையி னின்ற எழுவகைக் குன்றமும்  
நால்வகை மரபின் மாபெருந் தீவும்  
ஓரீ ராயிரஞ் சிற்றுடைத் தீவும்  
பிறவும் ஆங்கதன் இடவகை யுரியன  
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி  
ஆங்குவா ழுயிர்களும் அவ்வுயி ரிடங்களும்  
பாங்குற மண்ணீட்டிற் பண்புற வகுத்து  
மிக்க மயனால் இழைக்கப் பட்ட  
சக்கர வாளக் கோட்டமீங் கிதுகாண்  
  
190  
  
உரை  
  
202  
  
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற - சம்பாபதியினுடைய பேராற்றல் வெளிப்படுமாறு, எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்-எங்குமுறைகின்ற தேவர்களெல்லோரும் கூடிய அந்த இடத்தில், சூழ்கடல் வளைஇய ஆழியங்குன்றத்து - பெரும்புறக் கடலாற் சூழப்பட்ட சக்கரவாள மலையின் உட்பட்ட இடத்தில், நடுவு நின்ற மேருக்குன்றமும் - நடுவிடத்தே நின்றதாகிய மேருமலையும், புடையின்நின்ற எழுவகைக் குன்றமும்-அதன் பக்கத்தே சூழ்ந்து நின்ற எழுவகைக் குலமலைகளும், நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மரபினையிடைய மிகப்பெரிய தீவுகளும், ஓரீ ராயிரம் சிற்றிடைத்தீவும் - அவற்றைச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறு தீவுகளும், பிறவும் ஆங்கதன் இடவகை உரியன-பிறவுமாகிய அதன் உரிய இடவகைகளை, பெறு முறை மரபின் அறிவுரக் காட்டி-அவை அமைந்த முறைப்படி காண்போர்க்கு அறிவுரை அமைத்துக் காட்டி, ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே வாழும் உயிர்களையும் அவை வசிக்கும் இடங்களையும், பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து-அழகு பொருந்த மண்ணீடுகளாக இலக்கணப்படி வகுத்து, மிக்க மயனால் இழைக்கப்பட்ட - அறிவின் மேம்பட்ட தெய்வத் தச்சனால் இயற்றப்பட்ட, சக்கரவாளக்கோட்டம் ஈங்கிதுகாண்-சக்கர வாளக்கோட்டம் என்பது இதுவாகும்:  
  
தோன்றக்கூடிய இடம் என்க; தோன்ற இழைக்கப்பட்ட என் றியைத்தலும் பொருந்தும். மேருமலை எண்பத்தீராயிரம் யோசனை உயரமும், அதற்குத் தக்க பருமையும் உள்ளதென்றும், அதனைச் சூழக் குலகிரிகள் ஏழும், அவற்றுள் ஒவ்வொன்றனையும் சூழ்ந்து அவ்வக்கிரி யின் உயரவளவுள்ள ஆழமும் அகலமுமுடைய ஏழு கடல்களும் உள்ளனவென்றும், இவையெல்லாவற்றையும் புறஞ் சூழ்ந்துகிடக்கும் பெரும்புறக்கடலில் சம்புத்தீவு முதலிய நான்கு மாபெருந்தீவுகளும், அவைஒவ்வொன்றையும் ஐந்நூறு ஐந்நூறு ஆகச்சூழ்ந்த இரண்டாயிரம் சிறு தீவுகளும் உள்ளன என்றும், சம்பத்தீவு தெற்கிலுள்ளது என்றும்  
  
கூறுவர்; இப்பகுதிக்கு டாக்டர் உ.. வே. சாமிநாதையர் எழுதிய அரும்பதவுரை காண்க.  
  
சிறு தீவுகள் அந்தரத்தீவுகள் என்றும் கூறப்படும்; "அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும்" (25 : 224)என்று பின்வருதல் காண்க. உயிர்கள் என்றது அவற்றுக்கு நிலைக்களமாகிய உடம்புகளை. இடம் என்றது நீர், நிலம் முதலியவற்றை. மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை முதலியன. மயன் - அசுரத்தச்சன் என்பாருமுளர்.

### [7.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.34)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
205  
  
இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின்  
சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்  
இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைக்க  
  
203  
  
உரை  
  
205  
  
இடுபிணக்கோட்டத்து எயிற்புறம் ஆகலின் - பிணங்களை யிடுகின்ற புறங்காட்டின் மதிற்புறத்திலுள்ளது ஆதலால் இதனை, சுடுகாட்டுக்கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்ட மென்றே கூறுவர், இதன்வரவு இது என்று இருந்தெய்வம் உரைக்க - இதனுடைய வரலாறு இஃது என்று மணிமேகலா தெய்வம் மொழிந்தருள ;  
  
இடுதல், சுடுதல் இரண்டினையும் ஒன்றாக அடக்கிப் பெயர் கூறினார்.

### [7.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.35)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
210  
  
மதனின் நெஞ்சமொடு வான்றுய ரெய்திப்  
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோ ளுரைப்ப  
இறந்திருள் கூர்ந்த இடையிருள் யாமத்துத்  
தூங்குதுயி லெய்திய சுதமதி யொழியப்  
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ  
அந்தரம் ஆறா ஆறைந் தியோசனைத்  
தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த  
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்  
அணியிழை தன்னைவைத் தகன்றது தானென்.  
  
206  
  
உரை  
  
214  
  
மதன்இல் நெஞ்சமோடு வான்துயர் எய்தி - வலியற்ற மனத்துடனே மிக்க துன்பத்தையடைந்து, பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப-பூமியிற் பிறந்தோர்களது வாழ்க்கையை மணிமேகலை கூற, இறந்திருள் கூர்ந்த இடையிருள், யாமத்து - மிகவுஞ்செறிந்த இருள் மிகுந்த இடையாமத்தில், தூங்குதுயில் எய்திய சுதமதி ஒழிய - மிக்க உறக்கத்தினையடைந்த சுதமதி அவ்விடத்தில் நீங்க, பூங்கொடிதன்னைப் பொருந்தித் தழீஇ - மணிமேகலையைச் சேரத் தழுவிக்கொண்டு, அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத் தென்றிசை மருங்கில் சென்று-விசும்பின் வழியாக முப்பது யோசனை தூரம் தென்றிசைக்கட் சென்று, திரையுடுத்த மணிபல்லவத்திடை - கடலாற் சூழப்பட்ட மணிபல்லவமென்னும் தீவின்கண், மணிமேகலா தெய்வம் அணியிழைதன்னை வைத்து அகன்றதுதான் - மணிமேகலையை வைத்துவிட்டு மணிமேகலா தெய்வம்தான் நீங்கியது என்க.மதன்-செருக்குமாம். கோட்டத்தினியல்பு கேட்டமையின் நெஞ்சம் மதனழிந்ததென்க. வாழ்க்கை யென்றது அதன் நிலையாமையை. மண்டிலம் சொரிய, மேனியள் ஏதீதி நோக்கி என்னுற்றீரென, அவள் அவன் கூறிய துரைத்தலும்; அருந் தெய்வமுரைப்ப, சுதமதி என்னை யோவென, நேரிழை கூறும் ; அங்ஙனம் கூறுகின்ற தெய்வம் இதன் வரவு இதுவென்றுரைக்க, சிறந்தோளுரைப்ப, தெய்வம் இடையிருள் யாமத்துச் சுதமதியொழியப் பூங்கொடிதன்னைத் தழீஇச் சென்று மணிபல்லவத்தில் வைத்து அகன்றது என முடிக்க.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7) · Pramāṇa
