<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9.6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 9.6

# Maṇimēkalai's Renunciation 9.6

Maṇimēkalai urai 9.6

- **Language:** Tamil

### [9.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9.6)

மணிபல்லவத்துத் துயருற்ற காதை  
  
55  
  
60 கீழ்நில மருங்கின் நாகநா டாளும்  
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி  
எமதீ தென்றே எடுக்க லாற்றார்  
தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார்  
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்  
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்  
இருஞ்செரு ஒழிமின் எமதீதென்றே  
பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும்  
பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும்  
தரும பீடிகை தோன்றிய தாங்கென்  
  
54  
  
உரை  
  
63  
  
கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் - கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும். இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி-மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம் பெரும் பற்று நீங்கலு நீங்கார் - இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம நீங்குதலையும் செய்யாதவர்களாய், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து-சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம் பெரும் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், இருஞ்செரு ஒழிமின் எமது ஈது என்றே ; நீவிர் நுமது பெரிய போரை நீங்குமின் இஃது எம்முடையது என்று கூறி, பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் - பெரிய தவமுனிவனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, பொருவறு சிறப்பில் புரையோர் ஏத்தும்-ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை தோன்றியது ஆங்கென் - தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க.  
  
நாக இலச்சினை யுடைமையால் நாகரெனப் பெயர்பெற்ற ஒரு வகை மக்கள் வாழும் நாடு நாகநாடு என்பர். இந்நாட்டின் பெயர் பின்னரும் இந்நூலிற் பலவிடத்து வந்துளது. தம, அ-ஆறனுருபு. நீங்கலும் நீங்கார் என்னும் அடுக்கினுள் பின்னது பொதுவினையாகும் ; முன்பு, "சுழலலுஞ் சுழலும், ஓடலு மோடும் ஒரு சிறை யொதுங்கி, நீடலும் நீடும்," (3 : 111-3) என வந்தமையுங் காண்க.  
  
மாமணிப் பீடிகை, அறத்தகையாசனம், தரும பீடிகை என்பன ஒரு பொருள்மேல் வந்தன. அழுவோள் முன்னர் பீடிகை தோன்றிய தென்க.  
  
இவள் இன்னணமாக, மணிபல்லவத்திடைத் துயிலெழும் அஞ்சி லோதி, போன்று காணாளாய்க் கண்டு திருவே வாவென்று அழுவோள் முன்னர்த் தரும பீடிகை ஆங்குத் தோன்றியதென்க.

- [Previous: 9.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9.5)
- [Next: 10.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.10.1)
- [Up: 9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.8.56-61) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9.6) · Pramāṇa
