Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 1.1

Maṇimēkalai urai 1.1

Language
Tamil

1.1

பதிகம்

இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்

5 சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு வென்பாள் சம்பா பதியினள்

1

உரை

8

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து-கதிர்களையுடைய இளஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடைய, விளங்கு ஒளி மேனிவிரிசடையாட்டி-விளங்குகின்ற ஒளிபொருந்திய திருமேனியும் விரிந்த சடையுமுடையாளும், பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி-விளங்குகின்ற பெரிய பொன்மலையாகிய மேருவின் உச்சியில் தோன்றி, தென்திசைப்பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்- தென்றிசைக்கண் போந்த நாவலந்தீவின் காவற்றெய்வமும், சாகைச் சம்புதன் கீழ்நின்று-கிளைகளையுடைய நாவன்மரத்தின் கீழிருந்து, மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு-பெருமை பொருந்திய நிலமகட்கு நேரும் துன்பத்தினைக் கேட்டு, வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற-கொடிய வலியினையுடைய அரக்கர்கட்கு வெவ்விய பகையாக நோற்றவளுமாய, சம்பு என்பாள் சம்பாபதியினள்-சம்பு என்பவள் சம்பாபதியினிடத்தே இருந்தனள் ;

எள்ளும்: உவமவுருமாம். பகை நோற்ற-பகையாக நோற்ற. சம்பு வென்பாள்: வட சொல்லாகலின் உடம்படுமெய் பெற்றது. சம்பாபதி-காவிரிப்பூம்பட்டினத்தின் வேறு பெயர். சம்பாபதியினள் : முற்று ; ஆக என்பது விரித்து எச்சப்படுத்தலுமாம்.

Linked texts (1)