Maṇimēkalai's Renunciation 1.10
Maṇimēkalai urai 1.10
- Language
- Tamil
1.10
பதிகம்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
80
சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும
நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு
ஆய்வளை ஆபுத் திரனா டடைந்ததும்
ஆங்கவன் றன்னோ டணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்
85 உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப்
பொற்கொடி வஞ்சியிற் பொருந்திய வண்ணமும்
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்
ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
90 பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
79
உரை
90
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய்கென்றதும் - ஒலிக்கின்ற வீரக்கழலினை யணிந்த மன்னவன் மணிமேகலையைச் சிறைப்படுத்தியதும், சிறைவீடு செய்ததும் - பின் சிறையினின்று விடுவித்ததும், நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்து ஆங்கு - இராசமாதேவிக்குப் புத்த தருமங்களை ஆண்டு எடுத்துரைத்து, ஆய்வளை ஆபுத்திரன் நாடு டைந்ததும்-மணிமேகலை ஆபுத்திரனுடைய நாட்டினை அடைந்ததும், ஆங்கவன் தன்னோடு அணியிழை போகி-சிறுமுதுக்குறைவி ஆபுத்திரனோடு சென்று, ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்-பெருமையுடைய மணி பல்லவத்தின்கண் சேர்ந்ததும், உற்றவள் ஆங்கோர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்-மணிபல்லவமடைந்த மணிமேகலை ஆங்கு ஒரு பெரிய தவத்தினன் வடிவத்தோடு அழகிய கொடிகளையுடைய வஞ்சி நகரத்திற் சேர்ந்தவாறும், நவை அறு நன்பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தந்திறம் கேட்டதும்-குற்றமற்ற நல்ல தத்துவங்களைக் கூறுவீர் என வினாவிச் சமய வாதியர் கூறிய திறங்களைக் கேட்டதும், ஆங்குஅத் தாயரோடு அறவணர்த்தேர்த்து பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் - அங்கே மணிமேகலை தன் தாயருடன் அறவணவடிகளைத் தேடிக் காஞ்சிமாநகரத்தை அடைந்ததும்;
வேந்தன் - மாவண்கிள்ளி : உதயகுமரன் தந்தை. செய்கென்றது :
அகரந் தொக்கது. அரசன் ஏவும் வினைமுதலாகலின் சிறை செய்ததனைச் சிறை செய்கென்றான் என்றார். வீடு-விடுதல் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆங்கவன் : ஒரு சொல். வஞ்சி - சேர மன்னர்களின் தலைநகர். நன்பொருள் - தத்துவம் : நன்மையென்பதன் ஈறுகெட்டது- உரைமினோ, ஓ; இசைநிறை. சமயக் கணக்கர்-சமய வாதியர்; ¹"சமயக் கணக்கர் மதிவழி கூறாது", "சமயக்கணக்கர் தந்திறங்கடந்து" என்பர் பிற சான்றோரும். திறம்-இயல்பு, கொள்கை. ஆங்கு-வஞ்சிப்பதியில்; வஞ்சியில் தேர்ந்துபின் கச்சி புக்கதுமென்க; தாயரையும் அறவணரையும் தேர்ந்தென்க. ²"இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்" என்னும் விதியால் அறவணர்த் தேர்ந்து என வலி மிக்கது.
¹ கல். 17: 65. ² தொல், தொகை: 15.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil