Maṇimēkalai's Renunciation 10
Maṇimēkalai urai 10
- Language
- Tamil
10.1
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
ஆங்கது கண்ட ஆயிழை அறியாள்
காந்தளஞ் செங்கை தலைமேற் குவிந்தன
தலைமேற் குவிந்த கையள் செங்கண்
முலைமேற் கலுழ்ந்துமுத் தத்திர ளுகுத்ததின்
5 இடமுறை மும்முறை வலமுறை வாராக்
கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன
இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு
எழுவோள் பிறப்பு வழுவின் றுணர்ந்து
1
உரை
8
ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் - பீடிகையைக் கண்ட மணிமேகலை தன்னை அறியாளாயினாள், காந்தள் அமசெங்கை தலை மேற் குவிந்தன - காந்தள் மலர்போலும் சிவந்த கைகள் தலைமீது குவிந்தன, தலைமேற் குவிந்த கையள் - தலைமீது குவிந்த கையை யுடையவள், செங்கண் முலைமேற் கலுழ்ந்து முத்தத் திரள்உகுத்து-சிவந்த கண்கள் கலக்கிக் கொங்கைகளின் மேலே நீர்த்துளிகளைச் சொரிந்து, அதின் இடமுறை மும்முறை வலமுறை வாரா - அப்பீடிகையின் இடமாக விருந்து மும்முறை வலமாக வந்து, கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன-மின்னுக்கொடி முகிலுடன் நிலத்தையடைந்தாற்போல, இறு நுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்தாங்கு - இறும்படியான நுண்ணிய இடை வருந்துமாறு வெறு நிலத்திற் சேர்ந்து வணங்கி, எழுவோள் - எழுகின்றவள், பிறப்பு வழுவின்று உணர்ந்து-தன் முற்பிறவியைத் தவறின்றி அறிந்து ;
அறியாள் - தன்னை மறந்தாள் ; இது புதுமைபற்றி வந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு. முத்தம் என்றது நீர்த்துளியை. செங்கண் கலுழ்ந்து முலைமேல் உகுத்தென மாறுக. கொடிமின்-மின்னுக்கொடி. மின் உருவத்திற்கும், முகில் கூந்தலுக்கும் உவமை. நிலஞ்சேர்ந்து - வணங்கி யென்றபடி.
10.2
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
தொழுதகை மாதவ துணிபொரு ளுணர்ந்தோய்
10 காயங் கரையினீ யுரைத்ததை யெல்லாம்
வாயே யாகுதன் மயக்கற உணர்ந்தேன்
காந்தார மென்னுங் கழிபெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறைகெட வாழும்
அத்தி பதியெனும் அரசாள் வேந்தன்
15 மைத்துன னாகிய பிரம தருமன்
9
உரை
15
தொழுதகை மாதவ - வணங்குவதற்குத் தக்க பெருந்தவமுடையோய், துணிபொருள் உணர்ந்தோய்-மெய்ந்நூல்களால் துணியப்பட்ட மெய்ப்பொருளை உணர்ந்தோய், காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் - காயங்கரை என்னும் யாற்றங்கரையில் நீ மொழிந்தவை அனைத்தும், வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன்- மெய்ம்மை யாகுதலைத் தெளிவுற அறிந்தேன், காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவதேயம்-காந்தாரம் என்னும் மிகப் பெரிய நாட்டில் உள்ள பூருவதேயமானது, பொறைகெட வாழும்-பாவங்களினின்றும் நீங்குமாறு வாழ்ந்த, அத்திபதி என்னும் அரசாள் வேந்தன்-அரசு புரிந்த அத்திபதி எனும் மன்னனுக்கு, மைத்துனன்
ஆகிய பிரம தருமன் - மைத்துனனாகிய பிரம தருமனே ;
"தொழுதகை மாதவ" என்பது முதல் "என்றெடுத் தோதினை" என்பது காறும் உள்ளவை பழம் பிறப்பில் பிரமதருமன் என்னும் முனிவன் மனக்குக் கூறிய வற்றைப் புத்த பீடிகை காட்சியாலறிந்து, மணிமேகலை அவனை எதிர்பெய்து கூறியவை. துணிபொருள் - தெளியப்பட்ட பொருள். உரைத்ததை ; ஐ : சாரியை, வாய் - உண்மை. பொறை ஈண்டு பாவச்சுமை. வாழும் வேந்தன் என்க ; வாழும் பிரமதருமன் எனினுமாம். பிரமதருமன் : விளி.
10.3
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
ஆங்கவன் றன்பால் அணைந்தற னுரைப்போய்
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை
இன்றேழ் நாளில் இருநில மாக்கள்
நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே
20 பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர்
நாகநன் னாட்டு நானூறி யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்
இதன்பா லொழிகென இருநில வேந்தனும்
16
உரை
23
ஆங்கவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் - அம்மன்னவனிடம் வந்து அறங்கூறும் நீ, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவிடை - இனிய கனிகளையுடைய நாவல் ஓங்கிய இத்தீவின்கண், இன்றேழ் நாளில்-இன்றைக்கு ஏழாவது நாளில், இருநில மாக்கள் நின்று நடுக்கெய்த நீள்நில வேந்தே பூமி நடுங்குறூஉம் போழ் தத்து - பெரிய நிலத்தையாளும் அரசனே பெரிய பூமியிலுள்ள மக்கள் நின்று நடுக்க மெய்துமாறு பூமி நடுங்குதலுறும் பொழுது; இந்நகர் நாக நன்னாட்டு நானூறு யோசனை - இந்த நகரும் நன்றாகிய நாக நாட்டின்கண் நானூறு யோசனைப் பரப்பும், வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்-அகன்ற பாதலத்தின்கண் விழுந்து அழிவுறும் ஆகலின், இதன்பால் ஒழிகென - இந்நகரத்தைவிட்டு நீங்குக என்று கூற ;
நாவலோங்குந் தீவு - நாவலந் தீவு ; சம்புத் தீவு. உரைக்கும் நீ 'வேந்தே! கேடெய்தும் ஆகலால் இதன்பால் ஒழிக'வென என்க.
10.4
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம்
25 ஆவும் மாவுங் கொண்டுகழி கென்றே
பறையிற் சாற்றி நிறையருந் தானையோ
டிடவய மென்னும் இரும்பதி நீங்கி
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்
காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச்
30 சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப
23
உரை
30
இருநில வேந்தனும் - அதனைக் கேட்ட பெரிய பூமியை ஆளும் அரசனும், மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம் - மிகப் பெரிய நகரத்தின்கணுள்ள மக்களுக்கெல்லாம், ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையிற் சாற்றி - பசுக்களையும் ஏனைய விலங்குகளையும் கொண்டு நகரத்தைவிட்டு நீங்குக என்று பறையறைந்து தெரிவித்து, நிறை அரும் தானையொடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி-பகைமேற் செல்லும்போது நிறுத்தலரிய சேனைகளுடன் இடவயம் என்னும் பெரிய நகரத்தினின்றும் நீங்கி, வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் - வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரத்திற்குச் செல்லுகின்றவன்; காயங்கரை எனும் பேரியாற்று அடைகரைச் சேய்உயர் பூம்பொழில் பாடி செய்திருப்ப - காயங்கரை என்னும் பெரிய யாற்றினது அடைகரைக்கண் மிக உயர்ந்த பூஞ்சோலையிற் பாடி செய்து அமர்ந்திருக்க ;
இடவயம் - அத்திபதியின் நகரம். பாடி -படைவீடு. வேந்தனும் சாற்றிச் செல்வோன் இருப்ப வென்க.
10.5
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
எங்கோன் நீயாங் குரைத்தவந் நாளிடைத்
தங்கா தந்நகர் வீழ்ந்துகே டெய்தலும்
மருளறு புலவநின் மலரடி யதனை
அரசொடு மக்க ளெல்லாம் ஈண்டிச்
35 சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய
அருளறம் பூண்ட ஒருபே ரின்பத்து
உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள்
31
உரை
37
எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை - எம்பெருமானாகிய நீ அப்போது கூறிய அந் நாளிலேயே, தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலுன்-தாழாமல் அந் நகரம் வீழ்ந்து அழிந்தொழிதலும், மருள் அறு புலவ நின் மலரடி அதனை - மயக்கமற்ற மெய்யறிவினையுடையோய் நின மலர் போலும் திருவடிகளை, அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி-அரசனுடம் மக்களனைவரும் கூடி, சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய - சுற்றியவர்களாய் வணங்கிப் பணிந்து பலவாறாகத் துதிக்க, அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள் - அருளாகிய அறத்தினைக்கொண்ட ஒப்பற்ற பேரின்பத்தை உலக மக்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு அருளிச் செய்த அந் நாளில்;
நகர் கேடெய்தினமை கூறவே நாகநாட்டு நானூறு யோசனைப் பரப்புக் கேடெய்திய தென்பதும் பெற்றாம். ஏத்திய - ஏத்த ; ஏத்திய அந்நாள் அருளிய அந்நாள் எனத் தனித்தனி முடித்தலுமாம். இன்பத்து இன்பத்தை: சாரியை நிற்க உருபு தொக்கது.
10.6
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
அரவக் கடலொலி அசோதரம் ஆளும்
இரவி வன்மன் ஒருபெருந் தேவி
40 அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று
இலக்குமி யென்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன்
அத்தி பதியெனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளுஞ் சீதரன் திருமகள்
நீல பதியெனும் நேரிழை வயிற்றில்
45 காலை ஞாயிற்றுக் கதிர்போற் றோன்றிய
இராகுலன் றனக்குப் புக்கேன் அவனொடு
பராவரு மரபினின் பாதன் பணிதலும்
38
உரை
47
அரவக்கடல் ஒலி அசோதரம் ஆளும்-கடல் ஒலிபோன்ற முழக்கத்தையுடைய அசோதர நகரத்தையாளும், இரவிவன்மன் ஒரு பெருந்தேவி - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெருந்தேவியாகிய, அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று-செம்பஞ்சிக் குழம்பு தோய்ந்த சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவள் வயிற்றில் இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்-பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன், அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி -அத்திபதி என்னும் அரசனுடைய பெருந்தேவியும், சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்-சித்திபுரத்தை ஆண்ட சீதரன் என்பவனுடைய அழகிய மகளும் ஆகிய, நீலபதி எனும் நேரிழை வயிற்றில் - நீலபதி என்கின்ற மெல்லியலின் வயிற்றில், காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய-கதிர்களுடைய இளம்பரிதியைப்போல் உதித்த, இராகுலன் தனக்குப் புக்கேன் - இராகுலனுக்கு மனைவியாகப் புகுந்தேன், அவனொடு பராவரு மரபின் நின் பாதம் பணிதலும்-அவ்விராகுலனோடு வழுத்துதற்குரிய நின் அடிகளைப் பணிதலும் ;
கடல் அரவமென மாறுக. அலத்தகன் - செவ்வரக்கு என்பாருமுளர். பிறந்து பெயர் பெற்றேன் என விகுதி பிரித்துக் கூட்டுக. கதிர் ஞாயிறு என்க.
10.7
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
எட்டுஇரு நாளில்இவ் இராகுலன் தன்னைத்
திட்டி விடம்உணும் செல்உயிர் போனால்
50 தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை
48
உரை
50
எட்டிரு நாளில் இவ்விராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும்-பதினாறு நாளில் இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு உண்ணும், செல்லுயிர் போனால் தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை - அவனது உயிர் பிரிந்தால் நீயும் அவனொடு தீயிடைக் குளிப்பாய்;
திட்டி - திருஷ்டி; திட்டிவிடம்-கண்ணில் நஞ்சுடைய பாம்பு ; அது பார்த்தால் உயிர்கள் சாம் என்பர். இந்நூலின்கண் பின்பு (11; 100 ; 21 ; 11; 21: 40 ; 23 : 69 ; 23 : 84.) பலவிடத்து இது கூறப்பட்டுள்ளமை காண்க.¹"திட்டியின் விட மன்ன கற்பின் செல்வியை" என்றார் கம்பரும். சேயிழை : முன்னிலை.
¹கம்ப. கும்பகர்ண. 80.
10.8
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
ஏது நிகழ்ச்சி ஈங்கின் றாகலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப் பெய்துதி
51
உரை
53
ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்றாதலின்-உயர்நிலை எய்துதற்குரிய ஏது நிகழ்ச்சி இவ்விடத்தில் இல்லையாகலின், கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய-காவிரியின் பெயரொடு விளங்கிய (காவிரிப் பூம்பட்டினம் என்னும்), தவாக்களிமூதூர் சென்று பிறப்பு எய்துதி-அழியாத மகிழ்ச்சியினையுடைய மூதாரின்கண் சென்றுபிறப்பினை யடைவாய் ;
கவேரகன்னி-காவேரி ; அரச இருடியாகிய கவேர ரென்பவர் வீடு பெறுதலை விரும்பிப் பிரமனைக் குறித்து அருந்தவஞ் செய்து, அவனருளால், விண்டுமாயையைத் தம் புதல்வியாக அடைந்து முத்திபெற்றன ரென்றும், பின்பு அக் கன்னி பிரமன் கட்டளைப்படி நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்ற தென்றும் ஆக்கினேய புராணத்தின் காவேரி மான்மியத்தால் வெளியாகின்ற தென்பர்.
10.9
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள்
55 மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி
அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத்
தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும்
54
உரை
57
அணியிழை நினக்கு ஓர் அருந்துயர்வரு நாள் - அழகிய அணிகலன்களையுடையாய் நினக்கு ஓர் அரிய துன்பம் உண்டாகின்ற நாளில், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்து-அப் பதியின்கண் மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டு மிகுந்த இருளில் எடுத்துச் சென்று, தென்றிசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் - தென்றிசையிலுள்ள ஒரு தீவின்கண் வைத்தலும் ;
அருந்துயர் உதயகுமரன் அகப்படுத்தக் கருதி வருதல் ; அவனால் மணிமேகலைக்குண்டாகிய மனவேறுபாடுமாம்.
10.10
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
வேக வெந்திறல் நாகநாட் டரசர்
சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு
60 அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப்
பிறவிப்பணி மருத்துவன் இருந்தற முரைக்கும்
திருந்தொளி யாசனஞ் சென்றுகை தொழுதி
அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு
இன்றியா னுரைத்த உரைதெளி வாயெனச்
58
உரை
64
வேக வெந்திறல் நாகநாட்டு அரசர்-மிகக் கடிய வலியினையுடைய நாகநாட்டு மன்னர்களின், சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்தாங்கு-சினமாகிய குற்றம் நீங்க அவர்கள் உள்ளத்தின் குற்றங்களை ஒழித்து, அறச்செவி திறந்து மறச்செவி அடைத்து-அறத்தைக் கேட்டற்குரிய காதுகளைத் திறந்து பாவத்தைக் கேட்கின்ற காதுகளை அடைத்து, பிறவிப்பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்-பிறவியாகிய நோயினைத் தீர்க்கின்ற மருத்துவனாகிய புத்தன் அமரந்து அறங் கூறுகின்ற, திருந்துஒளி ஆசனம் சென்று கைதொழுதி - திருந்திய ஒளி யமைந்த ஆதனத்தைச் சென்று கைதொழுவாய், அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என - அந்நாளிலே நின் முற் பிறவியினையும் அறிந்து ஈண்டு இப்பொழுது யான் உரைத்த; மொழிகளையும் தெளிந்து கொள்வாய் என்று நீ உரைக்க ;
வேகமும் வெம்மையும் ஒரு பொருளன. மனமாசு - காம மயக்கங்கள். அறச்செவி - அறங்கேட்டற்குரிய செவி. திறந்து என்றார். ¹"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப்படாத செவி" என்பவாகலின். மறச்செவி அடைத்து-செவி மறவுரையைக் கேளாது அடைத்து.
¹ குறள். 418.
10.11
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
65 சாதுயர் கேட்டுத் தளரந்துகு மனத்தேன்
காதலன் பிறப்புங் காட்டா யோவென்
ஆங்குனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம்
பாங்கிற் றோன்றிப் பைந்தொடி கணவனை
ஈங்கிவன் என்னும் என்றெடுத தோதினை
70 ஆங்கத் தெய்வதம் வாரா தோவென
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தானென்.
65
உரை
71
சாதுயர் கேட்டுத் தளரந்து உகு மனத்தேன் - இராகுலன் இறப்பான் என்ற துன்பத்தைக் கேட்டுத் தளர்ந்து சிந்துகின்ற உள்ளமுடையேன், காதலன் பிறப்பும் காட்டாயோ என - என் கணவனது மறு பிறப்பையும் காட்டாயோ என வேண்ட, ஆங்கு உனைக் கொணர்ந்த அரும்பெரும் தெய்வம் பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும்-அவ்விடத்தில் நின்னைக் கொண்டு சென்ற அரிய பெரிய தெய்வம் பக்கத்தில் தோன்றி நின் கணவனை இன்னான் என்று உரைக்கும், என்று எடுத்து ஓதினை-என எடுத்துரைத்தாய், ஆங்கத் தெய்வம் வாராதோ என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் - அத்தெய்வம் இப்பொழுது வாராதோ என்று ஏங்கி அழுது கொண்டிருந்தாள் என்க.
சா துயர் - சாகுந் துயர். பைந்தொடி: முன்னிலை. பிறப்பும்; உம்மை இறந்தது தழீஇய எச்சப்பொருளது.
அதுகண்ட ஆயிழைதன்னை அறியாளாயினாள்; அப்பொழுது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அங்ஙனம் குவிந்த கையினளாய் உகுத்து வந்து சேர்ந்து எழுவோள் பிறப்பை யுணர்ந்து, "மாதவ, உணர்ந்தோய், மயக்கமற உணர்ந்தேன், பிரம தருமனே, உரைப்போய், 'கேடெய்தும்;இதன்பாலொழிக' என்று சொல்ல, வேந்தனும் சாற்றி நீங்கிச் செல்வோன் இருப்ப, எங்கோன், நீ உரைத்த நாளில் நகர் கேடெய்தலும், நின் மலரடியை எல்லாம் ஏத்த அருளிய அந்நாளில், புக்கேன் அவனோடு நின் பாதம்பணிதலும், 'மூழ்குவை, எய்துதி, வருநாளில் வைத்தலும், கைதொழுதி, தெளிவாய்; என்று நீ சொல்ல, காட்டாயோ வென்று யான் கேட்ப ஓதினை; அத்தெய்வம் வாராதோ'' என்று இளங்கொடி ஏங்கி அழும் என்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil