Maṇimēkalai's Renunciation 11.15
Maṇimēkalai urai 11.15
- Language
- Tamil
11.15
மந்திரங் கொடுத்த காதை
85
90 மதிநாண் முற்றிய மங்களத் திருநாள்
பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன்
திருவற மெய்துதல் சித்தமென் றுணர்நீ
மன்பெரும் பீடிகை வணங்கினை யேத்தி
நின்பதிப் புகுவாய் என்றெழுந் தோங்கி
மறந்தது முண்டென மறிந்தாங் கிழிந்து
சிறந்த கொள்கைச் சோயிழை கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்குமென்
றாங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து
நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்
83
உரை
93
மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் - நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து முற்றுப்பெற்ற அழகிய நிறையுவா நாளில், பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் - பொதுவாகிய அறிவினை வெறுத்துச் சிறப்பாகிய மெய்யுணர்வினைப் பெற்ற புத்தனுடைய, திருஅறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ - உயர்வாகிய அறத்தை யடைதல் உண்மை என்பதை நீ அறிவாயாக, மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி - மிக்க பெருமையுடைய பீடிகையை வணங்கித் துதித்து, நின்பதிப் புகுவாய் என்று எழுந்து, ஓங்கி-நினது பதியின்கட் செல்வாய் என்று கூறி உயர எழுந்து, மறந்ததும் உண்டென மறித்து ஆங்கு இழிந்து - மீட்டும் அவ்விடத்தே இறங்கி யான் மறந்தது ஒன்று உண்டென்று கூறி, சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் - சிறந்த விரதத்தையுடைய சேயிழையே அதனைக் கேட்பாயாக, மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களின் உடல் உணவாலாகிய தொகுதி, இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று - இப் பெரிய மந்திரமானது பெரும் பசியை நீக்கவல்லது என்று கூறி, ஆங்கது கொடுத்தாங்கு அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் - அம் மந்திரத்தை அளித்துப் பெருமையுடைய மணி மேகலா தெய்வம் வானிலே எழுந்து நீங்கியது என்க.
மங்கலம் - நன்மை. புத்தன் ஞானம்பெற்ற நாள் வைகாசித் தூய நிறைமதி நாள் ஆகலின் அதனை 'மங்கலத் திருநாள்' என்றார். புத்தன் பிறந்த நாளும் அதுவேயாகும். பொது வறிவு - சிறப்பில்லா அறிவு ; சாமானிய ஞானம் என்பர் வடநூலார். புலம் - மெய்யுணர்வு. நால்வகை வாய்மையும் அறிதற்குரிய சிறப்பறிவு. சித்தம்-உறுதி. கொள்கை- கோட்பாடுமாம். உணவின் பிண்டம் - உணவாலாகிய தொகுதி ; ¹"உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" என்றார் பிறரும்.
ஆயிழை ஆசனத்தால் அறிந்த பிறவியளாயினள் ; இவள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம், நின்றோள் கேட்ப, 'நீயோ தோன்றினை ; பணிந்தேன் ; வைத்தேன் ; கொண்டேன் ; ஏற்றினேன்; புலம்பு அறுக' என்று வலங்கொண்டு வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி, என் பிறப்புணர்ந்தேன் ; என் கணவன் யாங்குளன் ?' என்று மணிமேகலை கேட்டலும், அத்தெய்வம், "இலக்குமி ! கேள். பொழிலில் இராகுலனோடு நீ புலந்தாய் ; அப் புலவியை மாற்றவேண்டி அவன் உன்னடியை வணங்கும்பொழுது, சாதுசக்கரன் வந்து தோன்றலும், நீ கண்டு நடுக்குற்று நாணி இறைஞ்ச, இராகுலன் வெகுளலும்; நீ அவன் வாயைப் புதைத்து, ' நீ வானூடிழிந்தோன் அடியை வணங்காது நாநல் கூந்தனை' என்று சொல்லி, அவனோடு பணிந்து, 'அமர ; கொணர்கேம் ' உண்டி' என்றலும், அவன் 'கொணர்க' என்று உண்டருளிய அவ்வறம் பிறப்பை யறுத்திடும்; உதயகுமரன்றான் இராகுலன்; அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கு முண்டாதலின், எண்ணி ஏதுவாச் செய்தேன் ; இன்னுங் கேள்; தாரையும் வீரையும் நின் தவ்வையராவோர்; அவர் தம்மைத் துச்சயன் கொண்டனன் அவன் அவருடன் இருந்துழிச,் சென்ற அறவணனை அவன், 'வந்தீர் யார்?' என்று எழுந்து பாதத்தைப் பணிதலும், அவன், 'பாத பங்கயதைத்தொழுது வலங்கொள்ள வந்தேன்; நீரும் தொழும்' என்ற உரை பிழையாது சென்று தொழுது சிறப்புச் செய்தலின், நின்னொடு கூடினர் : உற்றனை ; அறிந்தனை ; கேட்குவை ; உரையார் ; ஆதலால் இம் மந்திரங் கொள்க" என ஓதி, உணர்நீ; புகுவாய்," என்று எழுந்தோங்கி, மறந்ததும் உண்டென இழிந்து, "யாக்கை உணவின் பிண்டம் ; இப்பெரு மந்திரம் இரும் பசி யறுக்கும்" என்று அதனைக் கொடுத்து எழுந்து நீங்கியது என வினைமுடிவு செய்க.
¹ புறம். 18.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil