Maṇimēkalai's Renunciation 11.9
Maṇimēkalai urai 11.9
- Language
- Tamil
11.9
மந்திரங் கொடுத்த காதை
45
உவவன மருங்கில் உன்பாற் றோன்றிய
உதய குமரன் அவனுன் னிராகுலன்
ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம்
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்
கந்த சாலியின் கழிபெரு வித்தோர்
வெந்துகு வெங்களர் வீழ்வது போன்மென
அறத்தின் வித்தாங் காகிய வுன்னையோர்
திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன
42
உரை
49
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் - உவவனத்தில் நின்னிடம் வந்த உதயகுமரனாகிய அவனே நின் கணவன் இராகுலன், ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின் - அவ் வுதயகுமரன் நின்பால் நீங்காத விருப்பதைச் செலுத்துவதன்றியும் அவனிடஞ் சென்ற உள்ளம் நீங்காததன்மை நினக்கும் உள்ளமையால், கந்தசாலியின் கழிபெருவித்து-கந்தசாலி என்னும் நெல்லின் மிகச் சிறந்த விதை, வெந்து உகு வெண்களர் வீழ்வது போன்ம் என - வெந்து உருகுகின்ற வெள்ளிய உப்பு நிலத்தில் வீழ்கின்றதுபோலும் என்று, அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன் - சேயிழாய் அறத்தின் விதையாகிய நின்னை மனம் ஒரு வழிப்படுதற்குக் காரணமாகச் செய்தேன் ;
குமரனாகிய அவனென்க. அவன் அன்றியும் - அவன் உன்பால் உள்ளம் நீங்காதிருப்பதன்றியும் என விரித்துரைக்க. மணிமேகலை உதயகுமரனை இடைவிடாது நினைத்திருந்தாள் என்பது, அவன் வெட்டுண்டிறந்தபொழுது, ¹"உவவன மருங்கி னின்பா லுள்ளம் தவிர்விலேனாதலின்" என்று அவள் அவனைக் குறித்துக் கூறுவதனால் அறியப்படும். சாலி - சிறந்த நெல், கந்தசாலி - மணமுள்ள ஒருவகைச் சிறந்த நெல், அறத்திற்கு மூலமாகிய நீ உதயகுமரனை விரும்பின் நின்னியல்பு கந்தசாலியின் வித்துக் களர் நிலத்து விழ்ந்ததுபோன்று பயன்றறுப்போம் என்றபடி. மணிமேகலையின் உயர்வுபற்றிக் கந்தசாலியை உவமை கூறினார். போன்ம்: ஈற்றுமிசை யுகரங்கெட்டு மயக்க விதியின்மையின் லகரம் திரிந்து வந்தது.
¹ மணி. 21: 13-4.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil