Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 17.2

Maṇimēkalai urai 17.2

Language
Tamil

17.2

ஆதிரை பிச்சையிட்ட காதை

5

10 ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவிலன் ஆகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக
கணிகை யொருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளைகே டுறுதலின்
பேணிய கணிகையும் பிறர்நலங் காட்டிக்
காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்

3

உரை

10

ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி-நங்காய் கேள் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் என்பவன் நன்னடக்கையிலனாய், அணியிழைதன்னை அகன்றனன் போகி - அழகிய அணிகலன்களையுடைய ஆதிரையை நீங்கிச் சென்று, கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க-பொதுமகளொருத்தி தீயொழுக்கத்தால் வந்தவுணவை அளிக்க அதனை உண்டு, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி - வட்டாடுதலினும் சூதாடுதலினும் மிகுந்த பொருளைக் கொடுத்து, கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின் - கெடுக்கப்பட்ட பொருளின் பகுதியெல்லாம் அழிந்தமையின், பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி-முன்னர்ப் பேணிய பரத்தையும் பொருளுள்ள பிறருடைய சிறப்பினைக் காட்டி, காணம் இலி எனக் கையுதிர்க்கோடலும்-பொன் இல்லாதவன் என்று கையை யசைத்துப் போக்குதலும்;

கைத்தூண் - தீயொழுக்கத்தால் வந்த உணவு ; கை - ஒழுக்கம் ; ¹"கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை" என்பது காண்க. கையகத்தாகிய உணவென்றுமாம். நல்க உண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. வட்டு - உண்டையுருட்டுதல்; ²"அரங்கின்றி வட்டாடியற்றே"

என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. வான் பொருள்-மிக்க பொருள். கெட்ட பொருள் - தீயபொருளென்பாருமுளர். கையுதிர்க் கோடலும் : உம்; உடனிகழ்ச்சி.

¹ சிலப். 15 : 57. ² குறள். 401.

Linked texts (1)