Maṇimēkalai's Renunciation 18
Maṇimēkalai urai 18
- Language
- Tamil
18.1
உலகவறவி புக்க காதை
5 ஆபத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல
வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத்
தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி
1
உரை
6
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற - கற்பிற் சிறந்த ஆதிரை நல்லாளாற் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற, பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை-அமுதசுரபியிலுள்ள பெரிய சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் - அறநெறியினாலீட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல - அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி-தான் குறைவுபடாத்தன்மையைக் கண்டு ;
பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. பாத்தூண் - இயல்புடைய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துண்டற்குரிய உணவு ; இதனால் ஆதிரையளித்த உணவின் தகுதியும், ஆதிரையின் மனையற மாண்பும் பெறப்பட்டன ; ¹''பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்'' என்பது அறியற் பாலது. ஆதிரைபாற் பெற்றதற்கு அறத்தின் ஈட்டியதும், மணிமேகலை கருதியவாறு மன்னுயிர்க்களிக்க அது பயன்படுதற்கு அறவோன் திறத்து வழிப்படுதலும், உவமையாயின. இனி, அறவோன் என்பதற்குச் சற்பாத்திரம் என்றும், திறத்து வழிப்படும் என்பதற்குப் பெறுவோர் பெருமைக்குத் தக்கபடி பெருகுமென்றும் கருத்துக்கொண்டனர் மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர் ; ஈண்டு அது பொருந்துமேற் கொள்க. பிற உயிர்கட்கும அளிக்கப்படினும் சோறுண்டலை இயல்பாக வுடையர் மக்களாதலின், 'வாங்குகை வருந்த' என்றார். இக் கருத்து முன்னரும் வந்துள்ளமை காண்க.
1 குறள். 44.
18.2
உலகவறவி புக்க காதை
10
15 யானைத் தீநோய் அகவயிற் றடங்கிய
காயசண் டிகையெனுங் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம்
அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு
இட்ட தாற்றாக கட்டழற் கடும்பசிப்
பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால்
அன்னை கேள்நீ ஆருயிர் மருத்துவி
துன்னிய என்னோய் துடைப்பா யென்றலும்
7
உரை
16
யானைத் தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி - யானைத்தீ என்னும் பெரும்பசி நோயினைத் தன் வயிற்றிற்கொண்ட காயசண்டிகை என்னும் மடந்தை மணிமேகலையை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி அடலருமுந்நீர் அடைத்த ஞான்று - திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது, குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்-குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம், அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு - வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல, இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசி பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் - இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன், அன்னைகேள் நீ - தாயே நீ கேட்பாயாக, ஆருயிர் மருத்துவி துன்னிய என்நோய் துடைப்பாய் என்றாலும் - அரிய உயிரைப் பாதுகாக்க வல்ல மருந்தினையுடையாய் நெருங்கிய எனது பசிப்பிணியைக் களைந்தருள்வாய் என வேண்ட ;
யானைத் தீ நோய் - பெரும்பசியைச் செய்யும் நோய் ; பஸ்மக வியாதி எனவும் படும். மயங்கி - அவிச்சையான் மயங்கி ; ¹''இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி, மாசறு காட்சி யவர்க்கு'' என்பதனால் அவிச்சை பிறப்பிற்குக் காரணமாத லறிக ; நெடியோன் தோன்றி மயங்கி என மாற்றி, திருமால் இராமாவதாரத்தில் பருவத முனிவரும் நாரதரும் அம்பரீடனுக் கிட்ட சாபமாகிய இருளைத் தான் ஏற்றுக் கொண்டமையால் அதனால் மூடப்பட்டுத் தன்னை மாயனென் றறியாது மயங்கி யிருந்தனன் என்னும் இலிங்க புராணக் கதையை ஏற்றியுரைப்பாருமுளர். இனி மயங்கி யென்பதற்குச் சீதையைப் பிரிந்து கையா றெய்தி யென் றுரைத்தலுமாம். முந்நீர் - படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது ; கடல். மலைகளால் கடலின் வயிறு நிரம்பாமைபோல உணவுகளினால் என் வயிறு நிரம்பிற்றில்லை யெனத் தானுண்ட உணவின் மிகுதியும் பசியின் கொடுமையும் புலப்பட உவமங் கூறினாள். இட்டது : வினைப்பெயர். ஆருயிர் மருந்து- அடிசில், மருத்துவி - மருந்தினையுடையாள்.
காரிகை நோக்கி வணங்கி, 'என்னோய் துடைப்பா' யென்றலு மென்க.
1 குறள். 352.
18.3
உலகவறவி புக்க காதை
20 எடுத்த பாத்திரத் தேந்திய அமுதம்
பிடித்தவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்
17
உரை
20
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பெய்தலும்-மணிமேகலை தான் கையிற் கொண்ட அமுத சுரபியிலுள்ள அன்னத்தை எடுத்துப் பிடியாக அவள் கையில் இட, வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித்தொழுதனள் உரைக்கும்-காயசண்டிகை வயிற்றில் எரிகின்ற கொடிய பசி நீங்கத் தன் துயரமும் நீங்கி மணிமேகலையைத் தொழுது கூறுகின்றாள் ; ஏந்திய - பொருந்திய ; ஏந்திய கையிலெனக் கூட்டுதலுமாம். பசி நீங்கி - பசி நீங்க : எச்சத்திரிபு.
18.4
உலகவறவி புக்க காதை
25 மாசில் வாளொளி வடதிசைச் சேடிக்
காசில்காஞ் சனபுரக் கடிநக ருள்ளேன்
விஞ்சையன் றன்னொடென் வெவ்வினை உருப்பத்
தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவர லருவிக் கடும்புனல் கொழித்த
இடுமணற் கானியாற் றியைந்தொருங் கிருந்தேன்
21
உரை
26
மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வாளியினையுடைய விஞ்சையருலகில், காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன் தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என் கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினையுடைய அருவியினது வேகமுள்ள நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்- இடுமணலையுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன் ;
சேடி - வித்தியாதர ருலகு ; அது வெள்ளி மலையிலுள்ளதாகலின் வாலொளியையுடையதாயிற்று ; ¹''வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி'' என்பது காண்க. உருப்ப - அழலவென்றுமாம். காணிய : செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தேன் : எச்சமுற்றுமாம். இடு மணல் - எக்கர்.
¹ சிலப். 6 : 1.
18.5
உலகவறவி புக்க காதை
30 புரிநூன் மார்பில் திரிபுரி வார்சடை
மரவுரி யுடையன் விருச்சிகன் என்போன்
பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி யனையதோர்
இருங்கனி நாவற் பழமொன் றேந்தித்
தேக்கிலை வைத்துச் சேணாறு பரப்பிற்
பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன்
27
உரை
32
புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும் மரவுரி யாடையுமுடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச் சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக ;
பனங்கனி பருமன் பற்றி உவமையாயது. ஓர் : அசை. நாறு பூ எனவும், பரப்பிற் பொய்கை யெனவும் இயையும்.
விருச்சிக னென்போன் நாவற்பழமொன்றை ஏந்தி வைத்துப் பொய்கையாடச் சென்றானாக என்க.
18.6
உலகவறவி புக்க காதை
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன்
33
உரை
34
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினையானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன் ;
18.7
உலகவறவி புக்க காதை
35
40
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன்
சீர்திகழ் நாவலில் திப்பிய மானது
ஈரா றாண்டில் ஒருகனி தருவது
அக்கனி யுண்டோர் ஆறீ ராண்டு
மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்
பன்னீ ராண்டில் ஒருநா ளல்லது
உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய்
35
உரை
42
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக முனிவன், கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் - அப் பழத்தினைச் சிதைத்த திறத்தினோடு என்னைக் கண்ணுற்றனன், சீர்திகழ் நாவலில் திப்பிய மானது-சிறப்பு விளங்கும் நாவலிலே தெய்வத்தன்மை யுடைய தொன்று, ஈராறு ஆண்டில் ஒரு கனி தருவது - பன்னீராண்டிற்கு ஒரு பழம் கொடுப்பது, அக் கனி உண்டோர் - அப் பழத்தினை யுண்டோர், ஆறீராண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்- பன்னீராண்டு மக்களுடலிலுண்டாகும் பசி நீங்கப்பெறுவர், பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் - யானோ பன்னீராண்டில் ஒருநாள் உண்பதல்லது பிறநாளில் உண்ணாத நோன்பினையுடையேன், உண்கனி சிதைத்தாய்-அவ்வியல்புடைய யான் இன்று உண்டற்குரிய அக் கனியைக் கெடுத்தாய் ;
சிதைவு-சிதைத்து நின்றநிலை; சிதைந்தகனியோடென் றுமாம். திப் பியம்-தெய்வலோகத்திலிருந்து உண்டாயதென்றுமாம். உண் கனி - திப்பியமான நாவல் தந்த கனியாகிய யான் உண்டற்குரிய கனியென்க
18.8
உலகவறவி புக்க காதை
45 அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து
முந்நா லாண்டின் முதிர்கனி நானீங்கு
உண்ணு நாளுன்உறுபசி களைகென
அந்நா ளாங்கவன இட்ட சாபம்
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை
43
உரை
48
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து-ஆகலின் விண்மீது செல்லும் மந்திரத்தை இழந்து, தந்தித் தீயால் தனித்துயர் உழந்து - யானைத்தீ யென்னும் பசிநோயால் ஒப்பற்ற துன்பமடைந்து வருந்தி, முந் நாலாண்டில் முதிர்கனி ஈங்கு உண்ணும் நாள் உன் உறுபசி களைக என - இனி வரும் பன்னிரண்டாவதாண்டில் முதிர்கின்ற நாவற்கினியினை நான் இங்கு உண்ணுகின்ற நாளில் நினது மிக்க பசியைப் போக்குவாய் என்று, அந்நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் - யான் அவ் வருங் கனி சிதைத்த அன்று அவ்விடத்தில் அம் முனிவனிட்ட சாபத்தை, இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை - இளங்கொடி போலும் நீ இன்று கெடுத்தாய் ;
பன்னீராண்டு தான் பசித்திருக்கச் செய்த தீவினை பற்றி அவ்வகையே துயருழக்குமாறு சாபமிட்டனனென்க. சாபம் கெடுத்தனை யென்றியையும். போலும் : ஒப்பில் போலி. சாப முடிவெல்லையாகிய நாள் இந்நாள் என்றுமாம்.
18.9
உலகவறவி புக்க காதை
50
55
வாடுபசி உழந்து மாமுனி போயபின்
பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென்
அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற
இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி
ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை
வானூ டெழுகென மந்திரம் மறந்தேன்
49
உரை
55
வாடு பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின், பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவிகளையுடைய பயனுடைய பொதியின் மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி-விளங்கும் ஒளியையுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால் - அரிய தெய்வத்தன்மை யுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும் கடிய நோயால் வருந்தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ;
அலவலைச் செய்தி - ஆராயாது செய்த செய்தி ; அலமருதலைச் சய்யும்செய்தியென்றுமாம்; 1"அவலலையுடையை" என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. விலகொளி எனப் பிரித்தலுமாம் ; விலகு ஒளி - விட்டு விளங்கும் ஒளி. காரணமின்றியே கனியைச் சிதைத்துக் கடுநோயுழந்தனை என விரித்துரைத்துக்கொள்க.
1 கலி. நெய்தல்: 5.
18.10
உலகவறவி புக்க காதை
55
60
65
வானூ டெழுகென மந்திரம் மறந்தேன்
ஊனுயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்குத்
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன
ஆங்கவன் கொணரவும் ஆற்றே னாக
நீங்க லாற்றான் நெடுந்துய ரெய்தி
ஆங்கவன் ஆங்கெனக் கருளொடு முரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந்துணை யாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்
பலநா ளாயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுகென் றவனருள் செய்ய
இப்பதிப் புகுந்தீங் கியானுரை கின்றேன்
55
உரை
68
மந்திரம் மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தாநின்றது என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவம் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக, நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன் ;
மறந்தேன் எனவும் வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக.
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர், ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும் துணைவராகி, நோற்றோர் உறைவதோர்
நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில் தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பலநாளாயினும் நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப் புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன் கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன் சொல்வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன் ;
ஆற்றுதல்-கொடுத்தல்; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம்" என்பது காண்க. நோற்றோர் பெருஞ்செல்வர் துணையாகி உறைவதென்க. நோன்மை-ஈண்டுப் பெருமை, நிலனொடு போதல் - காலால் நடந்து செல்லுதல்.
1 குறள் 1007
18.11
உலகவறவி புக்க காதை
70
இந்திர கோடணை விழவணி வருநாள்
வந்து தோன்றியிம் மாநகர் மருங்கே
என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கிப்
பின்வரும் யாண்டவன் எண்ணினன் கழியும்
தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமே கலையென் வான்பதிப் படர்கேன்
69
உரை
74
இந்திரகோடணை விழவணி வருநாள் - இந்திர கோடணையாகிய அழகிய விழா நடைபெறும் நாளில், வந்து தோன்றி இம்மாநகர் மருங்கே - இப் பெரிய நகரின் மருங்கே அவ் விஞ்சையன் வந்து தோன்றி, என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கி-என்னை வருத்துகின்ற பெரும் பசியினைக் கண்ணுற்று இரங்கி, பின்வரும யாண்டு அவன் எண்ணினன் கழியும்-பின்னர் எனது சாபம் கழிகின்ற ஆண்டுகளை எண்ணிக்கொண்டு அவன் நீங்குவான், தணிவில் வெம்பசி தவிர்த்தனை - என்னுடைய தணிதலில்லாத கொடிய பசியை நீக்கினாய், வணங்கினேன் - நின்னே வணக்கஞ் செய்தேன், மணிமேகலை என் வான்பதிப் படர்கேன்-மணிமேகலையே இனி எனது சிறந்த பதியின்கட் செல்வேன் ; இந்திரகோடணையாகிய விழவு என்க; பல்வகை முழக்க முடைமை பற்றி விழா கோடணை யெனப்பட்டது ; "இந்திரகோடணை விழாவணி விரும்பி" (5:94) என முன்னர் வந்தமையுங் காண்க. ஆண்டுதோறும் இந்திரவிழா நடக்கும்நாளில் வந்து கண்டு இரங்கிக் கழியும் என்க. பின்வரும் யாண்டு - சாபம் நிற்கும் பன்னீராண்டில் எஞ்சிய ஆண்டு. மணிமேகலை தவிர்த்தனை வணங்கினேன் படர்கேன் என்றாளென்க. மணிமேகலை: விளி.
18.12
உலகவறவி புக்க காதை
75
80 துக்கந் துடைக்குந் துகளறு மாதவர்
சக்கர வாளக் கோட்டமுண் டாங்கதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவி ஒன்றுண் டதனிடை
ஊரூ ராங்கண் உறுபசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால்
வடுவாழ் கூந்தல் அதன்பாற் போகென்
றாங்கவள் போகிய பின்னர் ஆயிழை
75
உரை
83
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள் உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் - அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பிளந்த வாய்போலும் வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம் ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர் - ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் - அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ் கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய் அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக் காயசண்டிகை சென்ற பின்பு ; துக்கம் - பிறவித்துன்பம். ஊரூர் ஆங்கண் - பல ஊர்களிலும், ஆங்கு, ஆல்: அசைகள். வடு-வகிர். கூந்தல்: விளி.
18.13
உலகவறவி புக்க காதை
85
90 ஓங்கிய விதியின் ஒருபுடை ஒதுங்கி
வலமுறை மும்முறை வந்தனை செய்தவ்
உலக வறவியின் ஒருதனி யேறிப்
பதியோர் தம்மொடு பலர்தொழு தேத்து
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய
தந்துணைப் பாவையைத் தான்தொழு தேத்தி
84
உரை
90
ஆயிழை - மணிமேகலை, ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி-மாடங்கள் ஓங்கிய தெருவின்கண்ணே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்று, வலமுறை மும்முறை வந்தனை செய்து - வல முறையாக மூன்றுமுறை வந்து பணிந்து, அவ் வுலகறவியின் ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து, கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின்கணிருந்து பழவினையாகிய காரணங் காட்டும் பொருட்டு எழுதப்பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை வணங்கித் துதித்து ;
மும்மையின் வணங்கி-மூன்றுமுறை வணங்கி யென்றுமாம். நெடு நிலையுடைக் கந்து என மாறுக. காட்டுவதற்கு மயனால் எழுதப்பட்டவென விரித்துரைக்க. "கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய, அந்தி லெழுநிய வற்புதப் பாவை" (7:94-5) என்றற் றொடக்கத்தனவாக இந் நூலுட் பிறாண்டு வருவன காண்க. மணிமேகலையுடன் மற்றையோரையும் உளப்படுத்தி, 'தந்துணைப்பாவை' என்றார்.
18.14
உலகவறவி புக்க காதை
95 வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக்
கருவி மாமழை தோன்றிய தென்னப்
பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுத சுரபியோ டாயிழை தோன்றி
ஆபுத் திரன்கை அமுத சுரபியிஃது
யாவரும் வருக ஏற்போர் தாமென
ஊணொலி அரவத் தொலியெழுந் தன்றே
யாணர்ப் பேரூர் அம்பல மருங்கென்.
91
உரை
98
வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில் கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு - பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும் வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண் ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப்பேரூர் அம்பலம் மருங்கென்- உணவுண்ணும் ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவா யினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண் என்க.
தின என்றது இலக்கணை வழக்கு. வருகவென அழைத்துச்சொரிய வந்துண்ணும் ஆரவாரம் என விரித்துரைக்க. மழை தோன்றிப் பொழிந்தாற்போல ஆயிழை தோன்றிச் சொரிய வென்க. ஒலியரவம் : ஒருபொரு ளிருசொல். அம்பல மருங்கு ஒலியெழுந்தன்றென்க.
காயசண்டிகை யென்னுங் காரிகை, நோக்கி வணங்கி, 'என்னோய் துடைப்பாய்' என்றலும், மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும் ; உரைப்பவள், 'உலகவறவி யொன்றுண்டு ; அதன்பாற் போக' என்று கூறிப் போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித் தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக' என, அம்பல மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil