Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 18.10

Maṇimēkalai urai 18.10

Language
Tamil

18.10

உலகவறவி புக்க காதை

55

60

65
வானூ டெழுகென மந்திரம் மறந்தேன்
ஊனுயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்குத்
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன
ஆங்கவன் கொணரவும் ஆற்றே னாக
நீங்க லாற்றான் நெடுந்துய ரெய்தி
ஆங்கவன் ஆங்கெனக் கருளொடு முரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந்துணை யாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்
பலநா ளாயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுகென் றவனருள் செய்ய
இப்பதிப் புகுந்தீங் கியானுரை கின்றேன்

55

உரை

68

மந்திரம் மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தாநின்றது என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவம் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக, நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன் ;

மறந்தேன் எனவும் வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக.

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர், ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும் துணைவராகி, நோற்றோர் உறைவதோர்
நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில் தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பலநாளாயினும் நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப் புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன் கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன் சொல்வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன் ;

ஆற்றுதல்-கொடுத்தல்; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம்" என்பது காண்க. நோற்றோர் பெருஞ்செல்வர் துணையாகி உறைவதென்க. நோன்மை-ஈண்டுப் பெருமை, நிலனொடு போதல் - காலால் நடந்து செல்லுதல்.

1 குறள் 1007

Linked texts (1)