Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 19.16

Maṇimēkalai urai 19.16

Language
Tamil

19.16

உதயகுமரன் அம்பலம் புக்க காதை

105

110

நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெருங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப்
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்
கோன்முறை யன்றோ குமரற் கென்றலும்

103

உரை

111

நாடவர் காண நல் அரங் கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி-இலக்கணப்படி அமைத்த நல்ல அரங்குகளில் ஏறி நாட்டினர் பலரும் காணும் வண்ணம் ஆடலையும் பாடலையும் எழிலையும் புலப்படுத்தி, சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ - வண்டுகளாகிய நாணினையுடைய கரும்புவில்லைக்கொண்ட அநங்கன் அரும்புகளாகிய அம்புகளைப் பொழிய, செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்து-போர்செய்யுங் கயல்மீனை யொத்த நீண்ட கண்களாகிய சுருக்கு வலையால் அகப்படுத்தி, கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம்புக்கு - தமதாடல் முதலியவற்றைக் கண்டோருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்டு மனையிற் சென்று, பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி - பண்போலும் இனிய மொழிகளால் பொன் ஆடை அணி முதலிய பல பொருள்களையும் வாங்கி, வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை - தேனையுண்டு மலரைத் துறக்கும் வண்டினைப் போலப் பொருள் கொடுத்தாரைப் பின்பு துறக்கும் பரத்தையரை, பான்மையில் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் - தன் வயமாகப் பிணித்து அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல், கோல்முறை அன்றோ குமரற்கு என்றலும் - இளங்கோவுக்குச் செங்கோன்முறைமை அல்லவோ என உரைத்தலும்,

நல்லரங்கு-¹"எழுகோ லகலத் தெண்கோ னீளத், தொருகோலுயரத் துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை, வைத்த விடை நிலம் நாற்கோ லாக, ஏற்ற வாயி லிரண்டுடன் பொலியத், தோற்றிய வரங்கு." நாடக மகளிர்க்கு ஆடல் முதலிய மூன்றினொன்றுங் குறையலாகா தென்பது, ²;"ஆடலும் பாடலு மழகு மென்றிக், கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்" என்பதனா னறிக ; சுரும்பு, கரும்பு, அரும்பு என்பன வலித்தல் பெற்றன. அரும்பு - மொட்டறாமலர். செருக்கயல் - ஒன்றை யொன்று எதிர்ந்து போர் செய்யுங் கயல். கொண்டி மகளிர்-பொருளைக் கொள்ளும் பரத்தையர், கோன்முறை-அரசநீதி என்றுமாம். குமரற்கு:முன்னிலையிற் படர்க்கை. குடியிற் பிறந்தாளல்லள். கொண்டி மகளிருட் பட்டாள். அவளைப் பிணித்து அடக்குதல் கோன்முறை யன்றோ வென்க.

¹ சிலப். 3 : 101-6. ² சிலப். 3 : 8-9.

Linked texts (1)