Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 19.22

Maṇimēkalai urai 19.22

Language
Tamil

19.22

உதயகுமரன் அம்பலம் புக்க காதை

145

150 வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு
ஆடவர் செய்தி அறிகுநகர் யாரெனத்
தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய்
மணிமே கலைதான் வந்து தோன்ற

143

உரை

150

வாள்திறல் குரிசிலை மடக்கொடி நீங்கி -மணிமேகலை வாள் வலியுடைய மன்னவன் புதல்வனை நீங்கி, முத்தை முதல்வி முதியாள் இருந்த-அனைவருக்கும் முற்பட்ட முதல்வியாகிய சம்பாபதி அமர்த்திருக்கின்ற, குச்சரக் குடிகைதன் அகம் புக்கு ஆங்கு - சிறிய கோயிலினுள் நுழைந்து அவ்விடத்தில், ஆடவர் செய்தி அறிகுநர் யார் என - ஆண்மக்களின் செயலை அறிவோர் யாவர் என்று எண்ணி, தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி - இதழ் விரிகின்ற மலர்மாலையை யணிந்த சம்பாபதியை வணங்கித் துதித்து, மாய விஞ்சை மந்திரம் ஓதி - மாயவித்தை யுடைய மந்திரத்தை ஓதி, காயசண்டிகை எனும் காரிகை வடிவாய்-காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வடிவங்கொண்டு, மணி மேகலைதான் வந்து தோன்ற - மணிமேகலை வெளியே வந்து தோன்ற ;

முத்தை: முந்தை யென்பதன் திரிபு. குச்சரம் - கூர்ச்சர நாடு; குச்சரக் குடிகை - கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர். ஆங்கு:அசை. ஆடவர் செய்கையை அறிகுநர் யார் என்றது மணிமேகலை தன் அறிவுரையைக் கேட்ட பின்னும் உதயகுமரன் காமத்தைக் கடக்கலாற்றாது தன்னைப் பற்றுதலுங் கூடுமென எண்ணினாள் என்னும் குறிப்பிற்று. மாயவிஞ்சை மந்திரம் என்றது மணிமேகலா தெய்வம் அருளிய வேற்றுரு எய்துவிக்கும் மந்திரத்தை.

Linked texts (1)