Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 20.1

Maṇimēkalai urai 20.1

Language
Tamil

20.1

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

5

முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி
மதுமலர்த் தாரோன் வஞ்சினங் கூற
ஏடவிழ் தாரோய் எங்கோ மகள்முன்
நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திர மொன்று தெய்வங் கூறலும்

1

உரை

6

முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி - சம்பாபதியின் திருந்திய அடிகளை மும்முறை வணக்கஞ்செய்து, மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற - தேன் பொருந்திய மலர்மாலைகளையுடைய உதயகுமரன் வஞ்சினங் கூறுதலும், ஏடு அவிழ்தாரோய் எங்கோமகள் முன் நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என - இதழ்விரிகின்ற மாலையை யுடையவனே எம் தலைமகள் முன்னர் ஆராயாது துணிவுடன் சூளுறவு செய்து நா வறுமை யுற்றனை என்று, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்-கைவல் சிற்பரால் இயற்றப்பட்டு விளங்கிய தொழில் அமைந்த சித்திரம் ஒன்றிற் பொருந்திய தெய்வம் உரைத்தலும் ;

மும்மையின் - உளம் உரை உடல் என்னும் முக் கரணங்களால் என்றுமாம் ; முறைமையின் என்பதும் பாடம். நா நல்கூர்தலாவது பயனில மொழிதல். வித்தகர்-சிற்பம் வல்லோர் ; "வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச் செய்கை" (3: 167-8) என முன்னர் வந்தமையுங் காண்க. ஒன்று-பொருந்திய ; அதிட்டித்த.

Linked texts (1)