Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 20.15

Maṇimēkalai urai 20.15

Language
Tamil

20.15

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

80 85

90

ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர்
நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்
பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர்
குழலொடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர்
ஆரம் பரிந்த முத்தங் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தந் திமிர்வோர்
குங்கும வருணங் கொங்கையின் இழைப்போர்
அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்
நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்
பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்
ஆங்கவர் தம்மோ டகலிரு வானத்து
வேந்தனிற் சென்று விளையாட் டயர்ந்து

79

உரை

92

ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்-கதை தழுவாது ஆடுதலையுடைய கூத்தினோடு பாட்டின் பொருள் தோன்றக் கை காட்டும் அவிநயத்தினை அறிவோரும், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் - நாடகக் காப்பியமாகிய நல்ல நூல்களைக் கூர்ந்து ஆராய்வோரும், பண் யாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் - பண்களையுடைய யாழ் நரம்பில் பண்களை முறையே நிறுத்துவோரும், தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் - தோற் கருவியாகிய மத்தளத்தின் முகத்தில் அடித்தலை ஆராய்வோரும், குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர்-வேய்ங் குழலுடன் மிடற்றோசையும் பொருந்தும் வண்ணம் தாளவறுதி செய்வோரும், பழு நிய படால் பலரொடு மகிழ்வோர்-முற்றுப் பெற்ற இசைப் பாடல்களைப் பலருடன் பாடி மகிழ்வோரும், ஆரம் பரிந்த முத்தம்கோப் போர்-மாலைகள்அறுபடுதலாற் சிந்திய முத்துக்களைக் கோப்போரும், ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் - ஈரம் உலர்ந்த சந்தனத்தைத் திமிர்வோரும், குங்கும வருணம் கொங்கையின் இழைப் போர் - சிவந்த தொய்யிற் குழம்பைக் கொங்கைகளில் எழுதுவோரும், அம் செங்கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்-அழகிய செங்கழுநீர் மலரின் அழகிய இதழ்களைக் கட்டுவோரும், நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் - நல்ல நீண்ட குழலில் நறுமணங்களைப் புகுத்தி அப்புவோரும், பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் - பொன்னாலாகிய சுற்றுவட்டத்தினையுடைய கண்ணாடியிற் பொருந்திக் கண்டு நிற்போரும் ஆகிய, ஆங்கவர் தம்மோடு - அவர்களுடன், அகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து - அகன்ற பெரிய விண்ணுலகத்து வேந்தனாகிய இந்திரனைப் போலச் சென்று விளையாட்டை விரும்பிச் செய்து;

நாடகம் - கதை தழுவிவருங் கூத்து. நாடகக் காப்பியமாகிய

நன்னூலென்க; இன்பத் துறையில் நிற்பவராகலின் நாடகக் காப்பியங் கூறினார். முன்னின்ற பண் யாழுக்கு அடை. யாழ்-பேரியாழ் முதலிய நால்வகை யாழ். நரம்பு - குரல், துத்தும், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும்பண்களும், அவற்றின் திறங்களும், அவ்விரு கூற்றின் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாடுகளும் ஆகிய பண்கள். எறி: முதனிலைத் தொழிற் பெயர் ; ¹"பண்ணமை முழவின் கண்ணெறியறிந்து" என்பதுங் காண்க. பழுநிய - இசை முற்றிய. திமிர்தல்-தடவி யுதிர்த்தல்; குடைவோர் - துவரினும் ஓமாலிகையினும் ஊறிய நன்னீரால் கூந்தலை ஆட்டுவோர் என்றுமாம். அவிநயந் தெரிவோர் முதலாகிய அவர்தம்மோடு சென்று விளையாட்டயர்ந்து என்க.

¹ சிலப். 3: 61.

Linked texts (1)