Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 20.20

Maṇimēkalai urai 20.20

Language
Tamil

20.20

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

135

யானைத் தீநோய்க் கயர்ந்துமெய் வாடியிம்
மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர்
அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து
பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு
மொய்கொண் மாக்கண் மொசிக்கவூண் சுரந்தனள்
ஊழிதோ றூழி உலகங் காத்து
வாழி யெங்கோ மன்னவ என்றலும்

131

உரை

138

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் - யானைத்தீ என்னும் பசிநோயால் சோர்ந்து உடல் வாட்டமுற்று இப் பெரிய நகரத்தின்கண் சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய மங்கை, அருஞ்சிறைக் கோட்டத்து அகவயிற் புகுந்து - அரிய சிறைச்சாலையின் உள்ளே நுழைந்து, பெரும் பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி - பெரிய புகழுடைய அரசே நினது பெயரை வாழ்த்தி, ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் - ஒரே பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அங்கு நெருங்குதலையுடைய மக்கள் அனைவரும் உண்ணுமாறு உணவினைச் சுரந்தளித்தனள், ஊழிதோறூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும்- ஊழியூழியளவும் உலகினைக் காத்து எம் தலைவனாகிய அரசே வாழ்வாயாக என வுரைத்தலும் ;

நோய்க்கு அயர்ந்து - நோயால் அயர்ந்து. வம்பு - புதுமை;

ஈறு திரிந்தது. பெரும்பெயர்-மிக்க புகழ். மொசிக்க-உண்ண; ¹ "மையூன் மொசித்த வொக்கலொடு" என்பது காண்க.

¹ புறம். 96.

Linked texts (1)