Maṇimēkalai's Renunciation 22
Maṇimēkalai urai 22
- Language
- Tamil
22.1
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
கடவு ளெழுதிய நெடுநிலைக் கந்தின்
குடவயி னமைந்த நெடுநிலை வாயின்
முதியாள் கோட்டத தக வயிற் கிடந்த
மதுமலர்க் குழலி மயங்கின ளெழுந்து
1
உரை
4
கடவுள் எழிதிய நெடுநிலைக் கந்தின் - தெய்வத்தன்மையுடைய பாவை எழுதப்பெற்ற நெடிய நிலையாகிய தூணின், குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் - மேற்றிசைக்கண் அமைக்கப்பட்ட உயர்நிலை பொருந்திய வாயிலையுடைய, முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த - சம்பாபதி கோயிலினுள்ளே துயின்ற, மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து - மணிமேகலை மயக்கமுற்று எழுந்து ;
இரட்டுற மொழிதலால் கடவுளால் எழுதப்பட்ட பாவையென்றுங் கொள்க ; கடவுள் - தெய்வத் தச்சனாகிய மயன். குடவயின் அமைத்த வாயில் என்க: கோட்டமுமாம். அமைந்த என்பது பாடமாயின் பொருந்திய என்க.
22.2
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
5 10
விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன்
மைந்தற் குற்றதும் மன்றப் பொதியிற்
கந்துடை நெடுநிலைக் கடவுட் பாவை
அங்கவற் குரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டன் ளெழுந்த கெடுக இவ் வுருவெனத்
தோட்டலர்க் குழலி உள்வரி நீங்கித்
5
உரை
10
விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்-காஞ்சனன் செய்தியையும் வென்றி வேலையுடைய மன்னவன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தையும், மன்றப் பொதியில் கந்துடை நெடுநிலைக் கடவுட்பாவை-மன்றமாகிய ஊரம்பலத்தில் நெடிய நிலையாகிய தூணின்கட் பொருந்திய தெய்வப்பாவை, அங்கவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அவ் விஞ்சையனுக்குக் கூறிய வியப்புடைய மொழிகளையும், கேட்டனள் எழுந்து கெடுக இவ்வுருவெனத் தோட்டலர்க்குழலி உள்வரி நீங்கி - கேட்டவளாய் இவ்வடிவம் கெடுக வென்றெழுந்து அவள் தான் கொண்ட மறைந்த வேடத்தினை ஒழிந்து ;
செய்தியும் உற்றதும் அற்புதக் கிளவியும் கேட்டென்
றாரேனும், அற்புதக் கிளவியும்அதனாற் செய்தியும் உற்றதும் கேட்டென்று கொள்க. இவ்வுருவங் காரணமாக உதயகுமாரம் வெட்டுண்டமையின் 'கெடுக விவ்வுரு' என்றாளென்க. தோட்டலர்க் குழலி ; சுட்டு மாத்திரை. உள் வரி - மறைந்த வுருவம்.
22.3
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
15
திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள்
கட்டழ லீமத் தென்னுயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பா லுள்ளம்
தவிர்விலே னாதலின் தலைமகள் தோன்றி
மணிபல் லவத்திடை யென்னையாங் குய்த்துப்
பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி
என்பிறப் புணர்ந்த என்முன் தோன்றி
உன்பிறப் பெல்லாம் ஒழிவின் றுரைத்தலின்
11
உரை
18
திட்டிவிடம் உண நின் உயிர் போம்நாள் - திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்ட நின் உயிர் சென்ற முற்பிறவியில், கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-மிக்க நெருப்பினையுடைய ஈமத்தில் எனது உயிரைக் கொளுத்தினேன், உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் அதலின் - உவவுனத்தின்கண் நின்னிடம் வைத்த மனந் தவிர்ந்திலேன் ஆதலால், தலைமகள் தோன்றி மணி பல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து-அவ்விடத்து மணிமேகலா தெய்வம் தோன்றி என்னை மணிபல்லவத்தின்கட் செலுத்தி, பிணி்ப்பறு மாதவன் பீடகை காட்டி-பற்றற்ற நற்றவனாகிய புத்தனது திருவடிப் பீடிகையைக் காண்பித்து, என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி எனது பண்டைப் பிறப்பினை யறிந்த என் முன்னே தோன்றி, உன் பிறப்பு எல்லாம் ஒழிவின்றி உரைத்தலின்-நின் பிறப்பு முதலிய அனைத்தையும் தவறாது கூறியருளினமையின் ;
திட்டி: திருஷ்டி என்பதன் சிதைவு; திட்டி விடம் - கண்ணில்
நஞ்சுடையதொரு பாம்பு; இந்நூலுட் பலவிடத்து இது கூறப்பெற்றுள்ளது. போம் நாள்-போகும் நாள்: காலவழுவமைதி. போநாள் என்னுயிர் சுட்டேன் என்றது முற்பிறப்பின் செய்தி. உவவனத்திற் கண்டபொழுது உதயகுமரன்பால் மணிமேகலைக்கு வேட்கையிருந்ததென்பதனை, "புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம், இதுவோ வன்னாய் காமத் தியற்கை" (5: 89-90) "அவன்பா லுள்ளம், நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்" (10: 44-5) என முன் வந்துள்ளமையாலறிக. பிணிப்பு - கட்டு: பற்று. பீடிகை காட்டி அதனால் என் பிறப்புணர்ந்த என்முன் தோன்றி யென்க.
22.4
Try error :java.lang.NullPointerException
22.5
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
30 35
செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்
அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல்
நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம்
மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம்
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்
கண்ட பிறவியே யல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்வேல்
என்றிவை சொல்லி யிருந்தெய்வ முரைத்தலும்
27
உரை
35
செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் - செவ்வரி படர்ந்த நெடிய கண்களையுடையாய் செல்லாதே செல்லாதே, அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் - அகவிதழ் பொருந்திய மலர்மாலை யினையுடைய மன்னன் மகனிடம் செல்லாதே, நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்-இவ்வுதயகுமரன் நினக்குக் கணவனாக விருந்ததுவும், மனக்கினாயாற்கு நீ மகளாயதூஉம்-மனத்திற்கினிய இவ்விளங்கோவிற்கு நீ மனைவியாக விருந்துவும், பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-முன்னும் பின்னும் பல பிறப்புகளில் உண்டு, கண்ட பிறவியே அல்ல காரிகை-மணிமேகலை நீ அறிந்துகொண்ட முற்பிறப்பில் மட்டுமல்ல, தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்- துன்பத்தில் அழுந்துதற்கேதுவாகிய தடுமாறும் பிறவியாகிய தோற்றத்தை, விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல் - நீக்குமாறு முயல்கின்ற நீ துன்பங் கொள்ளாதே, என்றிவை சொல்லி இருந்தெய்வம் உரைத்துலும்-என்று இவைகளைக் கூறி அப்பெருந் தெய்வம் விளக்குதலும் ;
செல்லல்: ஏவன்முற்று; அடுக்கு விரைவு பற்றியது. சேயரி
நெடுங்கண்: விளி. மகனா - கணவனாக: ¹"நோதக வுண்டோ நும்மகனார்க்கு" என்புழியும் கணவனை மகனார் என்று கூறி யிருத்தல் காண்க கண்ட பிறவியே அல்ல பல் பிறப்புக்களிலும் உளவென்க. கண்ட - அறிந்துகொண்ட. பிறவியே-பிறவியில் மட்டுமே. தடுமாறுதல் நாற்கதியுள் ஒன்றொன்றில் மாறியும், ஆண் பெண் மாறியும் பிறத்தலும், நரகொடு துறக்கம் நானிலத்திற்சென்று சுழலுதலுமாம். சொல்லி உரைத்தலும் - கூறி விளக்குதலுமென்க.
¹சிலப். 16: 17.
22.6
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
40 45
பொன்றிதழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடிப் பொதியிலிற் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்துயிர்த் தீங்கிவன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போயதும்
நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான்
விஞ்சையன் வாளி னிவன்விளிந் ததூஉம்
அறிதலு மறிதியோ அறிந்தனை யாயின்
பெறுவேன் தில்லநின் பேரரு ளீங்கென
ஐயரி நெடுங்கண் ஆயிழை கேளெனத்
தெய்வக் கிளவியில் தெய்வங் கூறும்
36
உரை
46
பொன்திகழ் மேனிப் பூங்கோடி பொருந்திய-பொன்போல் விளங்குகின்ற திருமேனியையுடைய மணிமேகலை ஆண்டுத் தங்கி, பொய்யா நாவொடு இப்பொதியிலில் பொருந்திய-இவ்வம்பலத்தின் கண் பொய்யாத நாவுடன் அமர்ந்திருக்கின்ற, தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்-தெய்வமோ நீ நின் திருவடிகளை வணங்கினேன், விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்கிவன் திட்டிவிடம் உணச் செல்லுயிர் போயதும்-முற்பிறப்பில் இவனது உயிரானது திட்டிவிடத்தாலுண்ணப்பட்டு வெவ்வுயிர்ப் பெறிந்து சென்றதும், நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூர யான் விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் - இப்பிறப்பில் யான் உளம் நடுங்கிப் பெருந்துயர் கூருமாறு இவன் விஞ்சையனுடைய வாளினாலே இறந்ததும் ஆகிய தீவினைகளை, அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் - அறியலும் செய்தியோ அங்ஙனம் அறிந்திருப்பையானால், பெறுவேன் தில்ல நின் பேரருள் ஈங்கென-நினது போருளை இவ்விடத்துப் பெறுவேன் என்று கூற, ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள் என - அழகிய அரி படர்ந்த பெரிய கண்களையுடைய ஆயிழாய் கேட்பாயாக என்று, தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-தெய்வ மொழியாலே கந்திற் பாவை உரைக்கும் ;
பொருந்தி - செல்லுத லொழிந்து நின்று. செல்லுயிர்-நில்லாது
திரியுமியல்புடைய உயிர். போயதும்-போனமைக்குக் காரணமாகிய தீவினையையும். விளிந்ததூஉம் - விளிந்ததற்குக் காரணமாகிய தீவினையையும். அறிதலும் அறிதியோ - அறிதலுஞ் செய்தியோ ; இஃது ¹"உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" என்பன போல நின்றது. தில்ல: விழைவுப் பொருட்டு. நல்லவென்பதும் பாடம். நின் பேரருள் பெறுவேன் என்றது நீ கூறும் விடையைக் கேட்பேன் என்றபடி. தெய்வக் கிளவி - வான் மொழி. தெய்வக் கிளவியிற் றெய்வம் எனக் கொண்டு முக்காலமும் அறிந்துரைக்கும் மொழியினையுடைய தெய்வம் என்றுரைத்தலுமாம் ;
¹ கலி. 23,
22.7
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
50
கொயங் கரையெனும் பேரியாற் றடைகரை
மாயமின் மாதவன் வருபொரு ளுரைத்து
மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம்
பிரம தருமனைப் பேணினி ராகி
அடிசிற் சிறப்பியா மடிகளுக் காக்குதல்
விடியல் வேலை வேண்டின் மென்றலும்
மாலை நீங்க மணமகிழ் வெய்திக்
47
உரை
53
காயங்கரை எனும் பேரியாற்று அடைகரை - காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையில், மாயமில் மாதவன் வரு பொருள் உரைத்து-வஞ்சமில் பெருந்தவனாகிய புத்தன் அவதரித்தலைக் கூறி, மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் - மயக்கமுற்ற மக்களுடைய மனவழுக்கை நீக்கும், பிரமதருமனைப் பேணினி ராகி-பிரம தருமன் என்னும் முனிவனை வழிபட்டு, அடிசிற்சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல் வேலை வேண்டினம் என்றலும் -யாங்கள் நாள்வொயிற் காலையில் அடிகட்கு அமுதூட்டும் சிறப்புச் செய்தலை வேண்டுகின்றாம் என்றுரைத்து அம்முனிவன் அதற்கிசையலும் நீவிர், மாலை நீங்க மனமகிழ்வு எய்தி - உளத்தில் உவகை யடைந்து இரவு கழிய இருந்து ;
மாயம்-மயங்கிய வறிவுமாம். வருபொருள்-தோன்றுதலாகிய செய்தியை; உலகிலே தீவினை மிகுதோறும் அதனைப் போக்கி அருளறத்தை நிலைநிறுத்தி உயிர்களை நிருவாண மடைவித்தற் பொருட்டுப் புத்ததேவன் தோன்றுவனென்பது பௌத்த நூற்றுணி்பு ; இஃது "ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டிற், பேரறி வாளன் றோன்றும்" (12 : 77-8) என்பது முதலாக இந்நூலுட் பலவிடத்தும் வருதல் காண்க. மருள் - காமவெகுளி மயக்கங்கள் என்றலும், நீக்க, தோன்ற என்பவற்றின் பின் வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. வேண்டினம் என்றலும்-வேண்டினமென்று மடையனை நோக்கிக் கூறுதலும் என்றுரைத்தலுமாம் ; இப்பொருட்கு, மாலை நீங்கக் காலை தோன்ற வரூஉ வீழ்ந்த மடையனை என்றியைத்துரைக்க. மாலை-இரவு.
22.8
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
55 60
காலை தோன்ற வேலையின் வரூஉம்
நடைத்திறத் திழுக்கி நல்லடி தளர்ந்து
மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனைச்
சீல நீங்காச் செய்தவத் தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளுந் தலையுங் துணிந்துவே றாக
வாளிற் றப்பிய வல்வினை யன்றே
விராமலர்க் கூந்தன் மெல்லியல் நின்னோ
டிராகுலன் தன்னை யிட்டக லாதது
54
உரை
62
காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத்திறந்து இழுக்கி நல்லடி தளர்ந்து - வைகறைப் பொழுது தோன்ற அப்பொழுது தான் வந்து நடைவகையால் வழுக்கி அடிதளர்ந்து, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை - சோற்றுப் பாத்திரம் அழியுமாறு வீழ்ந்த அடுந் தொழிலோனை, சீலம் நீங்காச் செய்தவத்தோர்க்கு- ஐவகைச் சீலமும் தவறாத பெருந்தவத்தோர்க்கு, வேலை பிழைத்த வெகுளி தோன்ற - காலந்தவறியதனா லுண்டாகிய சினமானது தோன்ற, தோளும் தலையும் துணிந்து வேறாக-தோளும் தலையும் துணிபட்டு வேறாகுமாறு, வாளில் தப்பிய வல்வினை அன்றே -
இராகுலன் வாளால் வெட்டிய தீவினையல்லவோ, விராமலர்க் கூந்தல் மெல்லியால் நின்னோடு - மணம் பொருந்திய மலர்களையணிந்த கூந்தலையுடைய மெல்லியலே நின்னுடன், இராகுலன் தன்னை இட்டு அகலாதது-இராகுலனையும்விட்டு நீங்காததாகியது;
தோன்று அ வேலை யெனப் பிரித்தலுமாம். வரூஉ-வாரா நின்று
மடையன்- சோறுசமைப்போன். சீலம் - கள், பொய், காமம், கொலை, களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தல் ; இதனை, ¹"ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி" ²"கள்ளும் பொய்யும் காமமுங் கொலையும், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" எனபவற்றானறிக ; இவ்வைந்தும் இல்லறத்தார்க் குரியனவென்றும், இவற்றோடு உயர்ந்த ஆதனத்தில் இருத்தல் கிடத்தலின்மை, சாந்து மாலை முதலியன தரியாமை, பொன் வெள்ளிகளைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, விடியலுக்குமுன் புசியாமை என்னும் ஐந்துஞ் சேரச் சீலம் பத்து வகைப்படுமென்றும், அவை துறவிகட்குரியன வென்றும் புத்தமத நூல் கூறும். ..
¹மணி. 2 ; 68 ² மணி. 24 ; 77-8
22.9
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
65 70
தலைவன் காக்குந் தம்பொருட் டாகிய
அவல வெவ்வினை யென்போ ரறியார்
அறஞ்செய் காத லன்பினி னாயினும்
மறஞ்செய் துளதெனின் வல்வினை யொழிய
தாங்கவ் வினைவக் தணுகுங் காலைத்
தீங்குறு முயிரே செய்வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை
ஈங்கு வந்திவ் விடர்செய் தொழிந்தது
63
உரை
71
தலைவன் காக்கும் தன் பொருட்டு ஆகிய அவல வெவ்வினை என்போர் அறியார்-தம்மாலாகிய துன்பந்தரும் கொடிய வினையை இறைவன் காப்பான் என்போர் அறியாதவராவர், அறஞ்செய் காதல் அன்பினின் ஆயினும் - அறம்புரியும் பெருவிருப்புடனாயினும், மறஞ்செய்துளதெனினும் வல்வினை ஓழியாது-பாவம் செய்யப் பட்டுள்ளதெனின் அது நீங்காது, ஆங்கவ்வினை வந்து அணுகும் காலைத் தீங்குறும் உயிரே-அத்தீவினை வந்து சாரும்பொழுது உயிர் துன்பமுறா நிற்கும், செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்-செய்வினை வழித்தாய் மீளவரும் பிறவிகளிலும் அத் தீவினைத்தொடக்கு மீண்டெய்தினும் எய்தும். ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்து இவ்விடர் செய்து ஒழிந்தது-முற்பிறப்பில் மடையனை வெட்டிய அத் தீவினையே நின் கணவனுக்கு இப்பிறப்பில் வந்து இத் துன்பத்தைச் செய்து போயது ;
காக்கும்-தடுப்பான் என்றபடி. தம்பொருட்டாகிய-தம்மாலாகிய
என்க. செய்துளதெனின் - செய்யப்பட்டுள்ளதெனின். வல்வினை : சுட்டு. ஒழியாது - தன் பயனை ஊட்டாது கழியாது. உயிர் தீங்குறும் என்க. மீண்டு வரு பிறப்பு-மேல் வரும் பிறப்புக்கள். வினைப்பயன்பல பிறப்புக்களினும் தொடரும் என்பதனை, ¹" எழுமை யெழுபிறப்பும்" என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையானறிக.
¹திருக்குறள், 107.
22.10
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
75
இன்னுங் கேளா யிளங்கொடி நல்லாய்
மன்னவன் மகற்கு வருந்துதுய ரெய்தி
மாதவ ருணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய் தாங்கிடும்
72
உரை
75
இன்னுங் கேளாய் இளங்கொடி நல்லாய்-இளமை பொருந்திய கொடிபோலும் மெல்லியலே இன்னும் யான் கூறுவதனைக் கேள், மன்னவன் மகற்கு வருந்துதுயர் எய்தி - அரச குமாரன்
இறந்தமை குறித்து மிக்க துயரமடைந்து, மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு - முனிவர்கள் அறிவுறுத்திய மெய்ம்மொழியைக் கேட்டு, காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கிடும் -
அரசன் நின்னைச் சிறையிலிடுவான் ;
உணர்த்தியவன் ஒருவனாயினும் உரைக்கவந்தோர் பலராதலின் 'மாதவ ருணர்த்திய' என்றார்.
22.11
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
80
இடுசிறை நீக்கி யிராசமா தேவி
கூட வைக்குங் கொட்பின ளாகி
மாதவி மாதவன் மலரடி வணங்கித்
தீது கூற அவள் தன்னொடுஞ் சேர்ந்து
மாதவ னுரைத்த வாய்மொழி கேட்டுக்
காதலி நின்னையுங் காவல் நீக்குவள்
76
உரை
81
இடுசிறை நீக்கி இராசமாதேவி-அரசன் பெருந்தேவி நின்னைச் சிறையினின்றும் நீக்கி, கூடவைக்கும் கொட்பினள் ஆகி - தன்னுடன் வைத்துக்கொள்ளும் கொள்கையுடையவளாய், மாதவி மாதவன்மலரடி வணங்கித் தீது கூற - மாதவி அறவணவடிகள் திருவடி மலர்களை வணங்கி நினக்கு நேர்ந்த தீமையை உரைக்க, அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அறவணவடிகள் மாதவியுடன் வந்து கூறிய மெய்யுரைகளைக் கேட்டு, காதலி நின்னையும் காவல் நீக்குவள் - அவளது அன்புக்குரியளாய நின்னைக் காவலினின்று நீக்குவாள் ;
ஈடுசிறை யென்பது பாடமாயின் சிறையீடு என மாறுக. கொட்பு- கொள்கை; திரிபுணர்ச்சியுமாம். இராசமாதேவி நீக்கிவைக்குங் கொட்பினளாகி வாய்மொழி கேட்டு நின்னைக் காவலினீக்குவள் என்க.
22.12
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
85
அரசாள் செல்வத் தாபுத் திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனா லவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத் தவனொடு மெழுந்து
மாயமில் செய்தி மணிபல் லவமெனும்
தீவகத் தின்னுஞ் சேறலு முண்டால்
82
உரை
87
அரசாள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-அரசாளுஞ் செல்வத்தினையுடைய ஆபுத்திரனாகிய புண்ணியராசனிடம் அறவணவடிகளை வணங்கிச் செல்லுதலுஞ் செய்வை, போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி - அங்ஙனம் சென்றால் அபுத்திரனொடும் அறவுடைகளைக் கேட்டு, மாநீர் வங்கத்து அவனொடும்-பெரிய கடலின்கண் கலத்திற் செல்லும் ஆபுத்திரனோடு, எழுந்து-விசும்பின் எழுந்து, மாயமில் செய்தி மணி பல்லவம் என்னும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்- வஞ்சமில்லாத செயலினையுடைய மணிபல்லவம் என்னும் தீவின் கண் இன்னும் ஒரு முறை அடைதலும் உண்டு ;
ஈண்டு ஆபுத்திரன் என்றது நாகபுரத்தரசனாகிய புண்
ணியராசனை: இது, ¹"நாக புரமிது நன்னக ராள்வோன், பூமிசந் திரன்மகன் புண்ணியராசன்" என மேல் வருவதனால் அறியப்படும். பொருளுரை - நாகபுரத்தின் அயலதாகிய சோலையிலுள்ள தருமசாவகன் ஆபுத்தரனுக்குக் கூறும் தத்துவ மொழிகள், மணிமேகலை நாகபுரத்திலிருந்து வான்வழியே போந்து மணிபல்லவத்தை அடைந்தாளென்றும், அரசன் நாவாயிலேறி அத்தீவினை அடைந்தானென்றும் மேல் 25 ஆம் காதையிற் கூறப்படுதலின், ஈண்டு எழுந்து அவனொடும் சேறலுமுண்டு எனக் கூட்டியுரைக்க ; அன்றி, ஒடுவை வேறு வினையுடனிகழ்வாக்கி, அவன் வங்கத்திற் புறப்படத் தான் வானிலே யெழுந்து என்றுரைத்தலுமாம்.
¹ மணி. 24 : 169 - 70.
22.13
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
90
தீவ திலகையின் தன்திறங் கேட்டுச்
சாவக மன்னன் தன்னா டடைந்தபின்
ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப்
பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை
88
உரை
91
தீவதிலகையின் தன் திறம் கேட்டுச் சாவகமன்னன் தன் நாடு அடைந்த பின் - சாவக நாட்டரசனாகிய ஆபுத்திரன் தீவ திலகையினால் தன்னுடைய வரலாற்றைக்கேட்டுத் தனதுநாட்டை அடைந்த பின், ஆங்கத் தீவம் விட்டு அருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சிமாநகர் புகுவை - பூங்கொடி போலும் நீ அரிய தவமுடைய ஆடவன் வடிவத்துடன் அத்தீவை விட்டு நீங்கி வஞ்சிமா நகரம் சேர்வை ;
22.14
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
ஆங்கந் நகரத் தறிபொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
92
உரை
93
ஆங்கந் நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் - அந் நகரத்திலே ஏனோர் அறிந்த மெய்ப் பொருளை வினவுகின்ற சிறந்த கேள்வி மேம்பட்டோர்
பலராவர் ;
22.15
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
95 100
இறைவன் எங்கோன் எவ்வுயி ரனைத்தும்
முறைமையிற் படைத்த முதல்வனென போர்களும்
தன்னுரு வில்லோன் பிறவுருப் படைப்போன்
அன்னோன் இறைவ னாகுமென் போர்களும்
துன்ப நோன்பித் தொடர்ப்பா டறுத்தாங்
கின்ப வுலகுச்சி யிருத்துமென் போர்களும்
பூத விகாரப் புணர்ப்பென் போர்களும்
பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம்
அல்லியங் கோதை கேட்குறு மந்நாள்
94
உரை
102
இறைவன் எங்கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையில் படைத்த முதல்வன் என்போர்களும்-எத்தகைய உயிர்த்தொகுதிகள் அனைத்தையும் முறைமையாகப் படைத்த முதல்வனே இறைவனாகிய எம் தலைவன் என்று கூறுவோர்களும், தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் - தனக்கென உருவமில்லாதோனும் பிற வுருக்களைத் தோற்றுவிப்போனுமாகிய அவனே முதல்வனாவான் என் போர்களும்-தனக்கென உருவமில்லாதோனும் பிற வுருக்களைத் தோற்றுவிப்போனுமாகிய அவனே முதல்வனாவான் என்றுரைப் போர்களும், துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்தாங்கு இன்பவுலகு உச்சி இருத்தும் என்போர்களும் - துன்பமாகிய கன்மங்கள் இந்தத் தொடக்கினை அறுத்து இன்பவுலகின் உச்சியில் இருத்தும் என மொழிவோர்களும், பூத விகாரப் புணர்ப்பு என் போர்களும் - பூதங்களின் திரிபாலாயது என்று கூறுவோர்களும் ஆகிய, பல்வேறு சமயப் படிற்றுரை எல்லம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள் - பலவேறு சமயத்தினரின் பொய்யுரைகளை எல்லாம் நறுமலர்க்கோதை கேட்கலுறும் அந்நாளில் ;
துன்ப நோன்பு - துன்ப முழந்து செய்யும் கன்மம்; நோன்பு
- ¹விரதமுமாம்; "விரத மேபர மாகவே தியரும், சரத மாகவே சாத்திரங் காட்டினர்" என்பது காண்க. அல்லியங்கோதை : முன்னிலையிற் படர்க்கை ; நீ கேட்குறும் என்க. உயிரனைத்தும் படைத்த முதல்வன் இறைவன் என்போர் சைவவாதி, வைணவவாதி, பிரமவாதி என்னும் மூவருமாவர். தன்னுருவில்லோன் இறைவனாகு மென்போர் அத்துவிதவாதிகள் என்பர் ; சைவவாதிகட்கும் பொருந்தும். நோன்பு இன்ப வுலகுச்சி இருந்து மென்போர் மீமாஞ்சகர். பூதவிகாரப் புணர்ப்பு என்போர் பூதவாதிகள். இவற்றிற் சிலவற்றின் இலக்கணங்களும், வேறு சில மதங்களின் இலக்கணங்களும் சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதையால் அறியப்படும்.
¹ திருவாசகம். போற்றி. 50-1.
22.16
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
105
இறைவனு மில்லை யிறந்தோர் பிறவார்
அறனோ டென்னையென றறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த
நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்
கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை
103
உரை
108
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-கடவுளும் இல்லை இறந்தோர் மீண்டும் பிறவார் அறத்தால் வரும்பயன் யாது என மொழிந்தோனை, பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-மறுபிறப்பு உண்டென்பதனையும் அறநெறியையும் தவப்பேற்றான் அறிந்த, நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி - நறும்பூங்கோதையகிய நீ இகழ்ந்து சிரிப்பாய், எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை - அப்பொழுது அவன் என் இம்மொழிகளைக் கேட்டு இகழ்ந்தனை போலும் ஆயின் சிறந்த பொருளைக் கூறுவாய் என்று அவன் கேட்ப நின் பிறப்பை அவனுக்கு அறிவுறுத்துவை ;
அறைந்தோன் - பூதவாதி ; உலோகாயதனுக்கும் பொருந்தும்.
அறவி-அறநெறி ; அறத்தின் பயனுமாம். பெற்றியின் - முறைமையால் என்றுமாம்.
22.17
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
110
ஆங்குநிற் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக்
காம்பன தோளி கனாமயக் குற்றனை
என்றவ னுரைக்கும் இளங்கோடி நல்லாய்
அன்றென் றவன்முன் அயர்ந்தொழி வாயலை.
109
உரை
112
ஆங்கு நின் கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க-மணிபல்லவத்திற்கு நின்னைக் கொண்டு சென்ற மணிமேகலா தெய்வம் மயக்குறுத்த, காம்புஅன தோளி கனா மயக்குற்றனை என்று அவன் உரைக்கும் - மூங்கிலனைய தோள்களையுடையாய் நீ கனவாகிய மயக்கத்தினை யடைந்தாய் என்று அவன்கூற, இளங்கொடி நல்லாய் அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை - பூங்கொடி நல்லோய் அன்று என அவன் முன்னே மறந்து ஒழியாய்;
கனாமயக்கு - கனவுபோலும் மயக்கென்றுமாம். உன் பிறப்பை
நீ உணர்ந்ததாகக் கூறியது மயக்குற்றதனால் என்றுரைப்பான் என்க. தெய்வம் மயக்க மயங்கியதனாலோ கனவில் மயங்கியதனாலோ ஆம் என்றுரைப்பான் என விரித்துரைத்தலுமாம்; என்ன? ¹"தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும், மைய லுறுவார் மனம்வேறாம்வகை, ஐய மன்றி யில்லை யென்றலும்" என மேலுரைத்தலானென்க. மணிமேகலை தான் பிறப்புணர்ந்த வரலாற்றை முன்னர்க் கூறுதலின், மணிமேகலா தெய்வம் அவளை எடுத்தேகியதனை அறிந்து, 'ஆங்கு நின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க' என்ற பூதவாதி உரைப்பானாவன் என்க. அவன் முன் அயர்ந்தொழியாது அன்றென அவன் கூற்றை மறுப்பாய் என்க.
¹ மனி. 27 : 281-3.
22.18
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும்
வாயே யென்று மயக்கொழி மடவாய்
113
உரை
114
தீவினை உறதலும் செத்தோர் பிறத்தலும் வாயே என்று மயக்கு ஒழி மடவாய் - இளையோய் தீவினை செய்யின் அதனாலே துன்புறுதலும் இறந்தோர் மீண்டும் பிறத்தலும் உண்மையே என்று மயக்கத்தினை விடுவாயாக ;
வாய் - உண்மை. இதனை முன்னர்க்கூட்டி, அயர்ந்தொழியாயாய் வாயே யென்று கூறி அவன் மயக்கத்தை யொழிப்பாய் என்றுரைத்தலுமாம்.
22.19
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
115
வழுவறு மரணும் மண்ணுங் கல்லும்
எழுதிய பாவையும் பேசா வென்ப
தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ
அறியா யாயின் ஆங்காது கேளாய்
115
உரை
118
வழுவறு மரனும் மண்ணும் கல்லும்-குற்றமற்ற மரம் மண் கல் என்பனவும், எழுதிய பாவையும் - எழுதப்பட்ட பாவையும், பேசா என்பது - பேசமாட்டா என்பதனை, அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ-அறிதலும் செய்தியோ அன்றி அறியாயோ, அறியாய் ஆயின் ஆங்கது கேளாய்-அறிகின்றிலையானால் அதனைக் கூறுவேன் கேட்பாயாக ;
வழுவறுதலாவது இயற்கையினின்று மாறாமை. கந்திடத்துள்ள பாவையாகிய தான் பேசுதல் கேட்டலின் மரம் மண் கல் பாவையென்பன பேசுமென்னுங் கருத்தினளாதலுங் கூடுமெனக் கொண்டு, அவை பேசுவன வல்லவெனத் தெய்வம் தெருட்டலுற்றதென்க.
22.20
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
120 125
முடித்தவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்
முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்
காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி
யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து
மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும்
கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க
ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும்
119
உரை
128
முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்-முடியவளர்ந்த சிறப்பினையுடைய பழைய நகரெங்கும், கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்-கொடி யணிந்த தேரோடும் வீதிகளிலும் கடவுளர் கோயில்களிலும், முதுமர இடங்களும் முதுநீர்த்துறைகளும் - பழைய மரங்கள் நிற்கின்ற இடங்களிலும் பழைய நீர்த் துறைகளிலும், பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி - அம்பலங்களிலும் ஊர் நடுவாகிய மரத்தடிகளிலும் பொருந்துமாறு ஆராய்ந்து, காப்புடை மா நகர்க் காவலும் கண்ணி - காவலுள்ள பெரிய நகரத்தின் காவலையும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து - அறிஞர்கள் உறுதியுடையதாக எண்ணி, மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-, கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க - கருதிய தெய்வத்தை நிறுத்துவோர் அமைக்க, ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா - அங்ஙனம் வகுக்கப்பட்ட தெய்வங்கள் அவ்விடத்தை விட்டு நீங்காவாய், ஊன் கணினார்கட்கு உற்றதை உழைக்கும்-ஊன்கணுடைய மானிடர்க்கு நிகழ்ந்தனை உரைக்கும் ;
முடித்து - முற்றுப்பெற்று; முடியவெனத் திரிக்க; காப்புடை -
மதில் முதலியவற்றின் காவலையுடைய. நகர்க்காவல் - நகரில் வாழ்வாரைப் பாதுகாத்தல். அறிந்தோராகிய காட்டுநர் வலித்து வகுக்கவென்க. காட்டுநர் - நிறுவுவோர் ; பிரதிட்டை செய்வோர். நீங்கா- நீங்காவாய் : வினையெச்சமுற்று. ஊன்கணினார் என்பதனால் ஞானக் கண்ணில்லாதவ ரென்பது அருத்தாபத்தியாற் பெற்றாம். உற்றது என்றதனால் இனம்பற்றி உறுவதுங்கொள்க. மக்கட்கு முன் நிகழ்ந்த வற்றையும் பின் நிகழ்வனவற்றையும் உரைக்கு மென்க. எனவே ஆண்டுறையும் தெய்வம் பேசுதலல்லது மரம் முதலியன பேசா வென்பது கடைப்பிடிக்க வென்றவாறாம்.
22.21
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
130
135
140
என்திறங் கேட்டியோ இளங்கொடி நல்லாய்
மன்பெருங் தெய்வ கணங்களி னுள்ளேன்
துவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின்
மயனெனக் கொப்ப வகுத்த பாவையின்
நீங்கேன் யான்என் நிலையது கேளாய்
மாந்த ரறிவது வானவ ரறியார்
ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன்
ஆவதை யிந்நகர்க் காருரைத் தனரோ
அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம்
உடனுறைந் தார்போ லொழியா தெழுதிப்
பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து
நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின்
மணிமே கலையான் வருபொரு ளெல்லாம்
துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத்
129
உரை
142
என் திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் - இளங்கொடிபோல்வாய் அங்ஙனமாய எனது வரலாற்றைக் கேட்பாயாக, மன்பெருந் தெய்வகணங்களின் உள்ளேன் துவதிகன் என்பேன் -
மிகப்பெரிய தெய்வகணங்களில் உள்ளேனாகிய யான் துவதிகன் என்னும் பெயருடையேன், தொன்றுமுதிர் கந்தில் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் நீங்கேன் - பழைமை முதிர்ந்த தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த பாவையைவிட்டு யான் ஒரு பொழுதும் நீங்கேன், என் நிலையது கேளாய் - எனது நிலைமையைக் கேட்பாயாக, மாந்தர் அறிவது வானவர் அறியார் -மக்களறியு மத்தனை விண்ணவரும் அறியமாட்டார், ஓவியச் சேனன் என் உறுதுணைத் தோழன் ஆவதை - சித்திரசேனன் என்பான் எனக்கு மிக்க - துணையாகிய தோழனாவதை, இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ -இந் நகரத்திலுள்ளோருக்கு யார் கூறினரோ, அவனுடன் யான் சென்று ஆடிடம் எல்லாம் - அவனோடு யான் சென்று விளையாடுமிடங்களிலெல்லாம், உடன் உறைந்தார்போல்v ஒழியாது எழுதி - உடன் உறைந்து கண்டவர்போல் விடாமல் எழுதி, பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து - பூவும் நறும் புகையும் பொருந்துமாறு சேர்த்து, நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் - நா மிகவும் வருந்துமாறு என் சிறப்பினைப் பலவாறு பாராட்டுதலினால், மணிமேகலை யான் வருபொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் - மணிமேகலை ! யான் வரும்பொருளனைத்தையும் துணிவுடன் கூறி வந்தேன், என் சொல் தேறு என - என் மொழியைத் தெளிவாயாக என்று உரைப்ப ;
தானும் சித்திரசேனனும் ஆடிடமெல்லாம் அறிந்தெழுதினமை
கண்ட வியப்பினால், 'மாந்த ரறிவது வானவரறியார்' என்றும், 'ஆருரைத்தனரோ' என்றும், 'உடனுறைந்தோர் போல்' என்றும் தெய்வங் கூறிற்று. வானவரும் என்னும் சிறப்பும்மை தொக்கது. பூவினைத் தூவியும் புகையினை யெடுத்தும் என்க. பொருந்துபு : பொருந்த வெனத் திரிக்க. வருபொருளெல்லாம் - மேல் நிகழுங் காரியமெல்லாம். என் நலம் பாராட்டலின் உரைத்தேன் என்றமையால், மக்கள் கொண்டாடு மளவிற்குத் தெய்வத்தின் அருள் வெளிப்படும் என்பது பெற்றாம்.
22.22
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
தேறே னல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறுகடை போக எனக்கரு ளென்றலும்
143
உரை
144
தேறேன் அல்லேன் தெய்வக்கிளவிகள் - தெய்வ மொழிகளை யான் தெளியேனல்லேன், ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் - எனது முடிபு இறுதியாக யாவற்றையும் எனக்கு
உரைத்தருள்வாய் என மணிமேகலை கூறலும் ;
தேறேன் அல்லேன் - தெளிவேன் என்றபடி. ஈறு - மரணம்; வீடு பேறுமாம்.
22.23
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
145 150
துவதிக னுரைக்குஞ் சொல்லலுஞ் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக்கொடி நல்லாய்
மன்னுயிர் நீங்க மழைவளங் கரந்து
பொன்னெயிற் காஞ்சி நகர்கவி னழிய
ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிம் முதியா ளிடவயின் வைத்த
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்நின் பயந்தோர் தம்மோடு போகி
அறவணன் தானும் ஆங்குள னாதலின்
செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை
145
உரை
154
துவதிகன் உரைக்கும்-கந்திற்பாவை கூறும், சொல்லலும் சொல்லுவேன் - சொல்லுதலுஞ் செய்வேன், வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் - இளங்கொடி நல்லாய் மேல் நிகழ்வதைக் கேட்பாயாக, மன்னுயிர் நீங்க மழைவளம் கரந்து - மிகுதியான உயிர்கள் நீங்குமாறு மழைவளம் மறைந்து, பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய - பொன்மதில் சூழ்ந்த காஞ்சிநகர் அழகுகெட, ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்ஈங்கு இம்முதியாள் இடவயின் வைத்த - அதனைக் கேள்வியுற்று ஈண்டுச் சம்பாபதி கோயிலுள் வைத்திருக்கின்ற அரிய உயிர் மருந்தாய, தெய்வப் பாத்திரம்செவ் விதின் வாங்கி-கடவுட் கடிஞையைச் செவ்வனே கையிற்கொண்டு, தையல் நிற் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்குளன் ஆதலின் - நங்காய் நின் அன்னையருடன் சென்று அறவணவடிகளும் அந் நகரத்துள்ளமையான், செறிதெடி காஞ்சிமாநகர் சேர்குவை - நீயும் காஞ்சிமாநகரத்தை அடைகுவாய் ;
ஆங்கது கேட்டும், அறவணன் ஆங்குளனாதலானும் காஞ்சிமாநகர் சேர்குவை யென்க.
22.24
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
155
அறவண னருளால் ஆய்தொடி ஆவ்வூர்ப்
பிறவண மொழிந்துநின் பெற்றியை யாகி
வறனோ டுலகின் மழைவளந் தரூஉம்
அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை
155
உரை
158
அறவணன் அருளால் ஆய்தொடி அவ்வூர்ப் பிறவணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி - அறவணவடிகளுடைய அருளினால் அவ் வூரில் நீ நினது ஆண்வேடத்தை நீங்கி நின் இயல்பினையுடையையாய், வறன் ஓடு உலகின் மழைவளம் தரூஉம் - வற்கடமாகிய காலம் பரந்த உலகின்கண் மழைவளத்தை அளிக்கும், அறன் ஓடு ஏந்தி ஆயிருர் ஓம்புவை - அறவோடாகிய அமுத சுரபியை ஏந்தி அரிய உயிர்களைப் பாதுகாப்பாய் ;
பிறவணம் - வேற்றுமதப் பற்றுமாம் வறன் ஓடு : ஓடுதல்- பரத்தல். மழைவளம் - மழையாலுண்டாகும் வளம் ; சோறு.
22.25
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
160
ஆய்தொடிக் கவ்வூர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள
159
உரை
160
ஆய்தொடிக்கு அவ்வூர் அறனொடு தோன்றும் -நினக்கு அவ் வூரின்கன் அறத்தொடு உண்டாகும், ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள - ஏது நிகழ்ச்சிகள் மிகப் பல உள்ளன ;
22.26
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
165 170
பிறவற முரைத்தோர் பெற்றிமை யெல்லாம்
அறவணன் றனைக்குநீ யுரைத்த அந்நாள்v தவமுந் தருமமும் சார்பிற் றோற்றமும்
பவமுறு மார்க்கமும் பான்மையி னுரைத்து
மறவிரு ளிரிய மன்னுயி ரேமுற
அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றுங் காறும்
செத்தும் பிறந்துஞ் செம்பொருள் காவா
இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்
தாயரும் நீயுந் தவறின் றாக
வாய்வ தாகநின் மனப்பாட் டறமென
ஆங்கவ னுரைத்துலும் அவன்மொழி பிழையாய்
161
உரை
172
பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் - வஞ்சி நகரில் பிற சமய உண்மைகளைக் கூறினோர் கொள்கைகள் அனைத்தையும், அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள் - அறவணவடிகளுக்கு நீ கூறிய அந்நாளில், தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து - தவமும் தன்மமும் சார்பினால் தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறவியறும் நெறியும் ஆகியவற்றை முறையால் உரைத்து - மற இருள் இரிய மன்னுயிர் எமுற - பாவமாகிய இருளானது ஓடவும் நிலைபெற்ற உயிர்கள் இன்பமுறவும், அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தியோடு - அறமாகிய ஒளியைப் பரப்பி அளவற்ற சித்திகளுடன், புத்த ஞாயிறு தோன்றும்காறும் - புத்தனாகிய ஞாயிறு உதிக்குமளவும், செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா- இறந்தும் பிறந்தும் அறத்தினைக் காத்து, இத் தலம் நீங்கேன் இளங்கொடி யானும் - இந் நகரந்தை நீங்கேன் யான் இளங்கொடியே, தாயரும் நீயும் தவறின்றாக - நீயும் நின் அன்னையரும் தவறின்றி வாழ்வீராக வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என - நின் மனத்தின்கட் டோன்றிய அறம் வாய்ப்புடைத்தாக என்று, ஆங்கவன் உரைத்தலும் - அறவண முனிவன் கூறுதலும் ;
சார்பிற்றோற்றம்-பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு,
வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன்என்னும் பன்னிரண்டுமாம்; இவை பேதைமை சார்பாகச் செய்கையும் செய்கை சார்பாக உணர்வும் இங்ஙனம் ஒன்றை யொன்று சார்ந்து தோன்றுதலின் 'சார்பிற் றோற்றம்' எனப்பட்டன; இவற்றினியல்பு இந் நூலின் இறுதிக் காதையால் விளக்கமாம். இருத்தி-சித்தி; அணிமா முதலியன. தவம் முதலியவற்றை உரைத்து, புத்தஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத்தலம் நீங்கேன், தாயரும் நீயும் தவறின்றாக, அறம் வாய்வதாக என அவன் உரைத்தலுமென்க.
22.27
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
175
பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின்
கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள
உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்
ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து
பிறர்கறம் அருளும் பெரியோன் றனக்குத்
தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி
172
உரை
179
அவன் மொழி பிழையாய் -அவன் கூறிய சொல்லைத் தப்பாயாய், பாங்கியல் நல்லறம் பலவும் செய்தபின் - இயற்றுதற்குரிய நல்லறங்கள் பலவற்றையும் செய்த பின்னர், கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள-காஞ்சிமாநகரின்கண் நினது உயிரானது முடிவெய்த, உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் - வட மகத நாட்டில் நீ அடையும் பிறப்புக்களனைத்தும், ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்- ஆண்பிறப்பாகத் தோன்றி அருளறம் நீங்காயாய், மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து - மாட்சியுடன் தோன்றி மக்களின் மயக்கங்களை நீக்கி, பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு - பிறருக்கு அறங்கூறும் புத்தனுக்கு, தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-முதன் மாணாக்கனாய்ப் பற்றுக்களை யறுத்து நிருவாணமடைவாய்;
'உத்தர மகதத் துறபிறப் பெல்லாம்' என்றமையால் ஆண்டுப்
பல பிறப்புண்டாமென்பது உடம்பொடு புணர்த்தலாற் பெற்றாம். ஆகி ஒழியாய் தோன்றிக் களைந்து சாவகனாய் அறுத்து உய்தி என்க ; தோன்றிக் களைந்து அருளும் பெரியோன் எனலுமாம். சாவகன் ஸ்ரீவாகன் என்பதன் சிதைவு; கேட்பவன் என்றபடி.
22.28
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
180
185
190
இன்னும் கேட்டியோ நன்னுனதல் மடந்தை
ஊங்க ணோங்கிய உரவோன் றன்னை
வாங்குதிரை யெடுத்த மணிமே கலாதெய்வம்
சாது சக்கரற் காரமு தீத்தோய்
ஈது நின்பிறப் பென்பது தெளிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேளெனத்
துவதிக னுரைத்துலும துயர்க்கடல் நீங்கி
அவதி யறிந்த அணியிழை நல்லாள்
வலையொழி மஞ்ஞையின் மனமயக் கொழிதலும்
உலகுதுயி லெழுப்பினன் மலர்கதி ரோனென்.
180
உரை
190
இன்னுங் கேட்டியோ நன்னுதல் மடந்தை-நல்ல நெற்றியையுடைய மடந்தையே இன்னும் கேட்பாயாக. ஊங்கண் ஓங்கிய உரவோன்தன்னை - நின் குலத்தில் முன்னர் அறத்தான் மேம் பாடுற்றிருந்த அறிவுடையோன் ஒருவனை, வாங்குதிரை எடுத்த மணிமேகலா தெய்வம்-கடலின்க ணிருந்து எடுத்துக் காப்பாற்றிய மணிமேகலா தெய்வம், சாதுசக்கரற்கு ஆரமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே - சாதுசக்கரன் என்னும் முனிவனுக்கு உணவளித்த நினது பிறப்பு இஃது என்பதை உணர்ந்தே, உவவனமருங்கில் உன்பால் தோன்றி - உவவனத்தில் நின்னிடம் தோன்றி, மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என - மணி பல்லவமென்னுந் தீவின்கன் கொண்டுசேர்த்தது கேள் என்று, துவதிகன் உரைத்தலும் - துவதிகன் கூறுதலும், துயர்க்கடல் நீங்கி - துன்பக்கடலினின்றும் நீங்கி, அவதி அறிந்த அணியிழை நல்லாள் - எல்லையை அறிந்த மெல்லியலாகிய மணிமேகலை, வலையொழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் - வழையினின்றும் நீங்கிய மயிலைப்போல மனக்கவலை நீங்குதலும், உலகுதுயில் எழுப்பினன் மலர்கதிரோன்என் - உலகத்தை உறக்கத்தினின்றும் எழுப்பினன் பரந்த கதிர்களையுடைய பரிதிவானவன் என்க.
ஊங்கண்-முன்பு; ¹ "தீங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர்
நினைப்பின்" என்பது காண்க. திரை-கடல்: ஆகுபெயர். முன்னோனொருவனை மணிமேகலா தெய்வம் கடலினின் றெடுத்ததைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையில் ² ''இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல், உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள், புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்,......விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த, எங்குல தெய்வம்'' என வருவதனாலறிக. சாதுசக்கரனுக்கு அமுது ஈந்ததனை இந் நூலின் மந்திரங் கொடுத்த காதையில் ³ ''சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்,......அந் நாளவனுண்டருளிய அவ்வறம்'' எனப்போந்தமையா லறிக. கேள் எனப் பின் வந்தது அசை. அவதி - தான் வீடுபெறும் எல்லை. துயிலெழுப்பினன் என்பது பரியாயம்; உதித்தான் என்றபடி.
குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெப்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அயாவுயிர்த் தெழுதலும், இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, 'நின் பேரருள் பெறுவேன்' என, தெய்வங் கூறும் ; அங்ஙனங் கூறுந் தெய்வம். 'என்சொல் தேறு' என, மணிமேகலை, 'எனக்கு அருள்' என்றலும் துவதிகன் உரைக்கும் ; உரைப்பவன் உரைத்தலும், நல்லாள் நீங்கி மயக்கொழிதலும், கதிரோன் உலகு துயிலெழுப்பினன் என, வினை முடிவு செய்க.
¹ புறம். 39. ² சிலப். 15: 28-37. ³ மணி 10: 24-40.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil