Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 23.28

Maṇimēkalai urai 23.28

Language
Tamil

23.28

சிறைசெய் காதை

170 175

முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில் கடியப் பட்டன வைந்துள அவற்றில் கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும் தள்ளா தாகுங் காமம் தம்பால் ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர்

169

உரை

176

முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் கடியப்பட் டன ஐந்து உள - தத்துவத்தை யுணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த உலகில் விலக்கப்பட்டன ஐந்து உள்ளன, அவற்றில் - அவற்றுள்ளே, கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு குற்றங்களையும் காமம் நீக்காதாகும், தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆகலின் தம்மிடத்து அக்காமத்தை நீக்கினோர் ஏனைய குற்றங்களையும் நீக்கினோராவர் என்று, நீங்கினர் அன்றே நிறைதவமாக்கள்-காமத்தை ஒழிந்தோரே நிறைந்த தவமுடையவர்கள், நீங்கார் அன்றே நீள்நில வேந்தே தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்-புவியினை ஆளும் அரசே அத்தகையகாமத்தினின்றும் நீங்காதோரே பொறுக்கவொண்ணாத நிரயத்தின்கண் வருந்துவோராவர் ;

முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிடப்பட்ட பொருள் : பர தத்துவம். "அவற்றில்...தள்ளாதாகும் காமம்" என்றதனால் கடியப் பட்ட ஐந்தாவன : கள், பொய், களவு, கொலை, காமம் என்பனவாதல் போதரும் கள் முதலிய நான்கினையும் காமம் தள்ளாது எனவே காம முடையோர் ஏனைய நான்கு குற்றங்களையும் உடையராவ ரென்ப தாயிற்று.

Linked texts (1)