Maṇimēkalai's Renunciation 23.5
Maṇimēkalai urai 23.5
- Language
- Tamil
23.5
சிறைசெய் காதை
25
30 மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகா ¹தொழி நீயெனக்
கன்னி யேவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யாரென நினைஇ
நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக்
காவற் கணிகை தனக்காங் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன்
ககந்த னாமெனக் காதலிற் கூஉய
25
உரை
32
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் - அரசர் குலத்தைப் பான்றக்கெடுத்த பரசுராமன்முன், தோன்றல் தகாது ஒழி நீ என - நீ வெளிப்படுதல் தகாது இந் நகரை விட்டு நீங்குவாயாக என்று, கன்னி ஏவலில் - சம்பாபதி ஆணையிட்டமையால், காந்த மன்னவன் - காந்தன் என்ற அரசன், இந்நகர் காப்போர் யார் என நினைஇ-தான் நீங்கின். இந் நகரைப் காப்போர் யாவர் என நினைத்து, நாவலந் தண் பொழில் நண்ணார் நடுக்குற - சம்புத்தீவிலுள்ள பகைவர்கள் நடுக்கமடையுமாறு, காவற் கணிகை தனக்கு ஆம் காதலன் - காவற்கணிகையிடத்து தோன்றிய புதல்வனும், இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்- பகைவர் வெகுண்டு எதிர்ப்பினும் அவர்க்கு வலி குறைதல் இல்லதவனும் ஆகிய, ககந்தன் ஆம் என-ககந்தன் என்பவனே காத்தற்குப் பொருந்தியவனாவான் என்று, காதலின் கூஉய் - அவனை அன்பொடும் அழைத்து;
மருங்கு-குலம்; ²"சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி" என்பதன் உரை காண்க. மழுவாள் நெடியோன்-பரசுராமன்; திருமாலின் தோற்றமாகலின் 'நெடியோன்' எனப்பட்டான் : மழுவாள்-மழுவாகிய வாள்; சிவன்பால் தவஞ்செய்து பெற்ற பரசு. இவன் தன்னாற் கொலையுண்ட கார்த்தவீரியன் என்னும் அரசனுடைய புதல்வர்கள் தான் இல்லாதபொழுதில் தன் தந்தையாகிய சமதக்கினி முனிவரைக் கொன்றமைபற்றி எழுந்த செற்றத்தால் இருபத்தொரு தலைமுறைகாறும் அரசர்குலத்தை அழித்தலை நோன்பாகக் கொண்டனனென்பது வரலாறு. நெடியோன்றன் முன் தோன்றல் தகாது என்றமையின் அவன் ஈண்டுப் போந்தமை பெற்றாம். 'ஒளி' என்பது பாடமாயின் மறைந்து கொள் என்பது பொருளாகும். கன்னி-துர்க்கையுமாம். நடுக்குறத் தோன்றிய காதலன் என்க. காவற் கணிகை-அரங்காடுங் கூத்தி, அரசனுடைய காமக்கிழத்தி. இகழ்ந்தோர்-அவமதித்த பகைவர்-எஞ்சுதலில் லோன்-வலிகுறையாதவன்; தோலாதவன். என-என்றுநினைந்து.
¹ தொளி. ² முருகு : 275.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil