Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 23.9

Maṇimēkalai urai 23.9

Language
Tamil

23.9

சிறைசெய் காதை

50

55 பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பெளி தாயினேன்
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான்செய் குற்றம் யானறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீயெனச் சேயிழை யரற்றலும்

50

உரை

56

பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூத சதுக்கத்தை யடைந்து வருந்தி, கொண்டோன் பிழைத்த குற்றம்தான் இலேன் - கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் - அயலானுடைய உள்ளத்தில் எளிதல் ஒளித்தேன், வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் - மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்திற் பொருந்தினேன், யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் - நான் செய்த குற்றம் ஒன்றையும் யானறியேன், பொய்யினைகொல்லோ பூதசதுக்கத்துத் தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும் - அல்லவை செய்தோரைப் புடைத்துண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கதுக் கடவுளாய நீ பொய்ம்மையை யுடையாயோ என மருதி பலவாறு புலம்புதலும் ;

பூத சதுக்கம் - பூதம் நிற்றலையுடைய சதுக்கம் ; சதுக்கம் - நாற்சந்தி. கொண்டோற் பிழைத்தல் - கற்பிற்கு மாறாக ஒழுகுதல் கற்பின் மனையறம் - கற்புடை மகளிர் புரியும் மனையறம். குற்றந்தான் இலேன், மனையறம் பட்டேன், யானறிகில்லேன்: அங்ஙனமாகவும் கரப்பெளிதாயினேன்; ஆகலின் பொய்யினை கொல்லோ? என்றாள் என்க; பிறனுளம்புக்க தன்னைப் புடைத்துண்ணாமையால் 'பொய்யின் கொல்லோ' என்றாள். சதுக்கப் பூதத்தின் இயல்பு ¹"தவமறைந் தொழுகும்... பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும்" என்பதனால் அறியப்படும். மனையறம்பட்டேன் என்பதற்கு 'இல்லறத்திற்குத் துணைறயாக நிற்றலை யொழிந்தேன்' என்று பொருள் கூறினர் டாக்டர் வே. சாமிநாதையர்.

¹ சிலப். 5; 128 - 34.

Linked texts (1)