Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 24.10

Maṇimēkalai urai 24.10

Language
Tamil

24.10

சிறைவிடு காதை

60

65 மகனைநோய் செய்தாளை வைப்ப தென்னென்று
உய்யா நோயி னூணொழிந் தனளெனப்
பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப
ஊணொழி மந்திர முடைமையின் அந்த
வாணுதல் மேனி வருந்தா திருப்ப
ஐயென விம்மி யாயிழை நடுங்கிச்
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்
என்மகற் குற்ற இடுக்கண் பொறாது
பொன்னே ரனையாய் பொறுக்கென றவள்தொழ

58

உரை

66

மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று - உதயகுமரனுக்குக் காம நோயை உண்டாக்கி அவனைக் கொல்லுவித்த இவளை உயிருடன் வைத்திருப்பதால் யாது பயன் என்று கருதி, உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என்று பொய் நோய்காட்டிப் புழுக்கறை அடைப்ப - உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய நோயினால் மணிமேகலை உணவுண்டல் நீங்கினாள் என்று அவள்பால் பொய் நோயைக் கூறி அவளைப் புழுக்கமுடைய ஓர் அறையில் அடைத்து வைக்க, ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப-மணிமேகலை பசியை ஒழிக்கும் மந்திரம் உடையளாயினமையால் உடல் வாடாது மகிழ்ச்சியுடன் இருக்க, ஐயென விம்மி ஆயிழை நடுங்கி-அரசன் றேவி விரைவுடன் பொருமி நடுக்கமெய்தி, செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் - தவமகளாகிய நினக்குத் துன்பத்தைச் செய்தேன், என்மகன் உற்ற இடுக்கண் பொறாது-என் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவளாய், பொன் னேரனையாய் பொறுக்க என்று அவள் தொழ - திருமகள் போல்வாய் பொறுத்துக் கொள்க என்று பெருந்தேவி வணங்க;

மணிமேகலை காரணமாக உதயகுமரன் இறந்தமையின் 'மகனை நோய் செய்தாளை' என்றாள். என்னென்று - பொருந்தாதென்று என்ற படி. புழுக்கறை - புழுங்கச் செய்யும் அறை ; 'புழுக்கறைப் பட்டோர் போன்று" (3.95) என முன் வந்தமையுங் காண்க. (இராச மாதேவி) என்னென்று காட்டி அடைப்ப வென்க. செய்தவத்தாட்டியை: முன்னிலையிற் படர்க்கை. சிறுமை - துன்பம், குற்றம்; என்றது மயற்கை யூட்டியது முதலிய மூன்றையும். பொறாது சிறுமைசெய்தேன் எனக் கூட்டுக.

Linked texts (1)