Maṇimēkalai's Renunciation 24.18
Maṇimēkalai urai 24.18
- Language
- Tamil
24.18
சிறைவிடு காதை
115
நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும்
சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப
மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப்
பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி
உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு
ஓட்டி யெய்தோ னோருயிர் துறந்ததுங்
கேட்டு மறிதியோ வாட்டடங் கண்ணி
112
உரை
119
நீர் நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறு கிழித்து ஓட-நீரை நச்சிய விருப்பத்தால் பெரிய காட்டின்கண் வருந்துகின்ற சூல் முதிர்ந்த இளையமானினது வயிற்றைக் கிழித்துச் செல்லுமாறு, கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப - காட்டில் வேட்டையாடுவோன் கடிய அம்பினைச் செலுத்த, மான் மறி விழுந்தது கண்டு மனமயங்கி - மான்குட்டி வயிற்றினின்றும் விழுந்தனைக் கண்டு உளங் கலங்கி, பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மைய னாகி - அதனது விளியோசையைக் கேட்டு அதன் பக்கத்தோனாகி, உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர் கண்டு-நெட்டுயிர்ப்புடன் அதனது சிவந்த கண்களினின்று சிந்துகின்ற நீரினைக் கண்ணுற்று, ஓட்டி எய்தோன் ஓருயிர் துறந்ததும் - அம்பினை வீசி எய்த வேட்டுவன் தன் உயிரைத் துறந்தனையும், கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி - வாள்போலும் பெரிய கண்களையுடையாய் நீ கேள்வியுற்றும் அறிவாயோ ;
தன்னுயிர் நீத்ததும் ஓருயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ என்க. மான்மறி - பெண் மானுமாம். பயிர்தல் - அழைத்தல். அதன் பான்மையனாகி - அதன் இயல்பினனாகி என்றுமாம். ஓட்டி எய்தோன் வேட்டுவன்: சுட்டு. இதனால் கொலையின் தீமை கூறப்பட்டது.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil