Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 25.23

Maṇimēkalai urai 25.23

Language
Tamil

25.23

ஆபுத்திரனாடு அடைந்த காதை

150

155

நன்றறி மாதவ னல்லடி வணங்கித்
தேவியு மாயமுஞ் சித்திரா பதியும்
மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின்
இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின்
மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர்
ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள்
மாசின் மணிபல் லவந்தொழு தேத்தி
வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்
கெஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல்
எனக்கிட ருண்டென் றிரங்கல் வேண்டா
மனக்கினி யீரென் றவரையும் வணங்கி

147

உரை

158

இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல்லடி வணங்கி - மணிமேகலை எழுந்து நன்னெறிகளை யுணர்ந்த பெருந்தவன் திருந்தடிகளை வணக்கஞ்செய்து, தேவியும் ஆயமும் சித்திராபதியும் -பெருந்தேவியும் ஆயத்தினரும் சித்திராபதியும், மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின் - அறவணவடிகளின் அறமொழிகளை மறவாமல் உய்ப்பீராக, இந்நகர் மருங்கின் யான் உறைவேனாயின் - யான் இந்நகரத்தின்கண் தங்குவேனானால், மன்னவன் மகற்கு இவள் வருங் கூற்று என்குவர் - ஊரோர் இவள் அரசன் புதல்வனுக்குக் கூற்றாய் வந்தவள் என்று கூறுவர்; ஆகலின், ஆபுத்திரன் நாடு அடைந்து அதற்பின்னாள் - யான் ஆபுத்திரனது நாட்டை அடைந்து அதன் பின்னர், மாசில் மணி பல்லவம் தொழுது ஏத்தி-குற்றமற்ற மணிபல்லவத்தை வணங்கித்துதித்து, வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல் - வஞ்சி நகரத்துட் சென்று பத்தினித் தேவியாகிய கண்ணகியின் பொருட்டுக் குறைவில்லாத நல்லறத்தை எவ்விடத்தும் இயற்றுவேன், எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா - எனக்கு இன்னல் உண்டாகும் என்று நீவிர் வருந்தல் வேண்டா, மனக்கினியீர் என்று அவரையும் வணங்கி - உளத்திற் கினிமையுடையீர் என்று அவர்களையும் பணிந்து;

மாதவியையும் சுதமதியையும் ஆயம் என அடக்கி, தேவியும் ஆயமும் சித்திராபதியும் என்றாள். தேவி முதலியன முன்னிலையிற் படர்க்கை. உய்த்தல்-கொண்டு செலுத்தல். மனக்கு: அத்துச்சாரியை தொக்கது. அவரையும் - தேவி முதலியோரையும்; உம்மை இறந்தது தழுவியது.

Linked texts (1)