Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.16

Maṇimēkalai urai 28.16

Language
Tamil

28.16

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

மீட்சி யென்ப திராமன்வென் றானென
மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல்

53

உரை

54

9. மீட்சியளவை

மீட்சி-மீட்சியளவையாவது ; இராமன் வென்றான் என - இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராமன் வென்றான் என்ற வழி ; மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல்- அறமாண்பில்லாத இராவணன் தோற்றானென்பதை யுணர்ந்து கோடலாம் எ - று. மீட்சியாவது "ஒழிவறிவு" (மணி. 27: 11) என்றாராகலின் ஈண்டு வாளாது மீட்சி யென்றொழிந்தார். இராமனோடு பொருதற்கு முன்பு காறும் துணைசெய்து போந்த அறம், இராமனது பகைபெற்ற வழித் துணையின்றிக் கழிந்தமையின், "மாட்சியில் இராவணன்" என்றார். வென்றோன் பாலுளதாகும் மாட்சி தோற்றோன்பால் இலதாதல் பற்றி இவ்வாறு கூறினாரென்றுமாம். இவ்வளவையைப் பாரிசேடமென்றும் ஒழிபென்றும் கூறுப. "சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண் புவிமேற், போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப், பாராரி ராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து, நேராமிராவணன் றோற்றசொல் லாகி நிகழ்வதுவே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்றார் பிறரும். நன்னூல், சிவஞானபோதம், சிவஞானசித்திமுதலியநூலுரைகளில் சிவஞான யோகிகள் இப் பாரிசேடத்தைப் பலவிடங்களில் எடுத்தாளுதல் காண்க. சில மீமாஞ்சை நூல்களுள் இது தனித்ததோ ரளவையாகக் கொள்ளப்படுகிறது.

Linked texts (1)