Maṇimēkalai's Renunciation 28.18
Maṇimēkalai urai 28.18
- Language
- Tamil
28.18
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
60 எட்டுள பிரமா ணாபா சங்கள
சுட்டுணர் வொடுவிரி யக்கோட லையந்
தேராது தெளிதல் கண்டுண ராமை
எய்து மில்வழக் குணர்ந்ததை யுணர்தல்
நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது
57
உரை
61
2. பிரமாணாபாசங்கள்
பிரமாணாபாசங்கள் எட்டுள - மேலே காட்சி முதல் உள்ள நெறி யீறாகக் கூறிய பிரமாணம் பத்திற்கும் ஆகாவென விலக்கப் பட்ட குற்றங்கள் எட்டு உள்ளன; சுட்டுணர்வு - பொருண்மை மாத்திரம் காணும் சுட்டுணர்வும்; திரியக்கோடல் - திரிபுக் காட்சியும்; ஐயம் - ஐயக்காட்சியும்; தேராது தெளிதல் - தேராத் தேற்றமும்; கண்டுணராமை - அறிவறியாமையும்; எய்தும் இல்வழக்கு- இவற்றோடு பொருந்திய இல்வழக்கும்; உணர்ந்ததை யுணர்தல் மறித்துணர்வும் ; நினைப்பு என - நினைப்பும் என ; நிகழ்வ - நிலவு வனவாகும் ;
மேலே காட்சியளவைக்கு ஆகாவென விலக்கிய சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம் என்றவற்றை ஈண்டும் கூறியது பிரமாணாபாசமாம் இயைபு குறித்து என்க. எட்டுள என்றது, "தொகுத்துச் சுட்டல்"; ஏனைய, "வகுத்து மெய்ந் நிறுத்தல்." தெளிதற்குரிய ஏதுவகையாற் றெளியாது தேறுதல் குற்றமாதலின், தேராத தேற்றத்தைத் "தேராது தெளித" லென்றும், கண்டுணர்தற்குரிய அளவையும் கருவியும்கொண்டு கண்டவழியும் உணராமை அறிவறியாமை யாதலின், அதனைக் "கண்டுணராமை" யென்றும் பண்டேயுணர்ந் திருக்கு மொன்றை மறித்தும் உணர்தல் மிகையாதலின், அதனை "உணர்ந்ததை யுணர்தல்" என்றும் கூறினார். மறதியன் றென்றற்கு "உணர்ந்ததை" என்றார். இது மறித்துணர்வு என்றும் வழங்கும்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil