Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.2

Maṇimēkalai urai 28.2

Language
Tamil

28.2

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

5

வேத வியாதனுங் கிருத கோடியும்
ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர்
பத்து மெட்டு மாறும் பண்புறத்
தத்தம் வகையாற் றாம்¹பகர்ந் திட்டனர்

5

உரை

8

அளவைவாதி

வேதவியாதனும் கிருதகோடியும்-வேதத்தைப் பகுத்துமுறை செய்த வியாத முனியும் கிருதகோடி முனியும்; ஏதம்இல் சைமினி எனும் இவ்வாசிரியர் - குற்றமில்லாத சைமினிமுனியு மென்னும் இந்த ஆசிரியன்மார்கள்; பத்தும் எட்டும் ஆறும் - அளவைகளை முறையே பத்தென்றும், எட்டென்றும் ஆறென்றும்; தத்தம் வகையால் பண்புறப் பகர்ந்திட்டனர் - தத்தமக்கேற்ற கூறுபாட்டின் படியே அளத்தற்குரிய தகுதியமையக் கூறியுள்ளனர் எ - று. இங்கே கூறிய வேதவியாதரை, வேதம் முறை செய்தவரும் பிரம சூத்திர மெழுதியவருமாகிய வியாதரல்ல ரென்றும், இவர் பௌராணிகரான வியாதராக இருக்கலாமென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கிருத கோடி யென்பாரைப் போதாயனரென்றும் கிருதகோடிகவி யென்றும் கூறுப. சைமினி யென்பார் மீமாஞ்சை நூலை யெழுதியவர். இவருள் வியாதர் பத்தளவையும், கிருதகோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும கொண்டன ரென்பதாம். பிற்காலத்தே சைமினி யெழுதியது பூருவ மீமாஞ்சை யென்றும், வாதராயண ரெழுதியது உத்தரமீமாஞ்சை யென்றும் வழங்கலாயின வெனக்கொள்க. விரிந்தது தொகுத்தல் அவ்வக் காலத்துக்கும் மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாதலின், "பண்புறப்பகர்ந்திட்டனர்" என்றான் ; முன்னோரை நோக்கப் பின்னோர் ஒரு சில அளவைகளைக் குறைத்துக்கொண்டாராயினும், அளத்தற்குரிய பொருள் எஞ்சாமல் அளக்கப்பட்ட தென்பதும் "பண்புற" என்றதனாற் பெற்றாம்.

(பாடம்) ¹ பகிர்ந்திட்டனர்.

Linked texts (1)