Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.26

Maṇimēkalai urai 28.26

Language
Tamil

28.26

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

75
நினைப்பெனப் படுவது காரண நிகழாது
நினக்கிவர் தாயந் தந்தையு மென்று
பிறர்சொலக் கருதலிப் பெற்றிய வளவைகள்

75

உரை

77

நினைப்பு எனப்படுவது - நினைப்பென்னும் பிரமாணாபாசமாவது, நினக்கு இவர் தாயுந் தந்தையுமென்று பிறர் சொல-நினக்கு இவர் தாயுந் தந்தையுமாவர் என்று பிறர் கூறியவழிக் கோடல் போல், காரணம் நிகழாது கருதல் - பிறர் கூறுவனவற்றைக் காரணவாராய்ச்சியின்றி மேற்கொண்டொழிதலாம் எ - று.

எனவே, பிறர் கூறும் அனைத்துச் சொற்களையும் காரண காரிய ஆராய்ச்சியின்றி மேற்கோடல் குற்றமென்ற வாறாம். இக்காலத்தும் வெளுத்த தெல்லாம் பாலெனக் கருதி யேமாற்ற மெய்தினோரை நோக்கி, "நுமக்கு யாவரும் தூயவே மொழிகுவரென்னும் நினைப்பு" என்று கூறக் காண்டும். தனக்குத் தாயுந் தந்தையுமாவாரைக் காரண வகையா லாராய்தல் கூடாமையின், "காரணம் நிகழாது" என்றும், தாயறிவிக்க அறியுந் தந்தையினும் தாயைப் பிறர் அறிவிக்கவன்றி யறிதல் கூடாமையின், "பிறர் சொல" என்றும், காரண நிகழாது மேற்கோடற்குரியார் தாயுந் தந்தையுமின்றிப் பிறரின்மையின், "நினைக்கிவர் தாயுந் தந்தையுமென்று பிறர் சொலக் கருதல்" என்றும் கூறினார். கருதுதல் போலக் கருதுதலைக் "கருதல்" என்றார்; இஃது "என்னோற்றான் கொல்லெனும் சொல்" (குறள்-70) என்றாற்போல முடிந்தது-

(இப்பெற்றிய அளவைகள்) அளவைகள் இப்பெற்றிய - இது காறும் கூறிய பிரமாணங்களும் அவற்றின் ஆபாசங்களும் இத் தன்மையனவாம் எ - று. இது முடிந்தது முடித்தல்.

Linked texts (1)