Maṇimēkalai's Renunciation 28.28
Maṇimēkalai urai 28.28
- Language
- Tamil
28.28
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
85
90
95 இடையே யிப்போ தியன்றுள வளவைகள்
என்றவன் றன்னைவிட்டிறைவ னீசனென
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் றெய்வ மெப்படித் தென்ன
இருசுட ரோடிய மானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனுந்
துடைத்துத் துயிர்தீர் தோற்றத் தோனுந்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்
85
உரை
95
[ சைவவாதி ]
என்றவன் தன்னைவிட்டு - என்று கூறிமுடித்த அளவை வாதியைவிட்டுநீங்கி, இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர் படுதலும் - எங்கட்கு இறைவனவான் ஈசன் என்று கொண்டொழுகிய சைவவாதி எதிர்ப்பட்டானாக அவனைக் கண்டு, பரசம் நின் தெய்வம் எப்படித்து என்ன - நீ வழிபடும் நின் தெய்வம் எவ்வியல் பிற்று என மணிமேகலை கேட்க, இரு சுடரொடு இயமானன் ஐம்பூதம் என்று எட்டு வகையும் யாக்கையும் உயிருமாய்க் கட்டி நிற்போனும் - ஞாயிறு திங்கள் இயமானன் மண் நீர் தீ காற்று வான் என்ற எட்டினையும் தனக்கு உடம்பாய்த் தான் அவற்றிற்கு உயிராய் அமைந்து நிற்பவனும், கலையுருவினோனும் - பல்வகைக் கலைகளையும் தனக்கு உருவாக வுடையவனும், படைத்து விளையாடும் பண்பினோனும்-யாவற்றையும் படைத்து அப்படைத்தவை நின்ற நிலவச் செய்யும் தன்மை யுடையவனும், துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்-படைப்புற்று நிற்பவற்றை யொடுக்குமாற்றால் அவற்றின் இளைப்பைப் போக்கியருளும் சிறப்புடையவனும், தன்னில் வேறு ஒன்று இல்லோனும்-தன்னின் வேறாய்த் தனக்கு ஒப்பதும் மிக்கதுமாகிய தெய்வமொன்றுமில்லாதவனுமாகிய, அன்னோன் -அத்தன்மையையுடைய முதல்வனே, இறைவனாகும் என்று உரைத்தனன் - எங்கட்கு இறைவனாவான் என்று சொன்னான்.
இறைவன், முறை செய்து காக்கும் முதல்வன், உயிர்கட்கு உடலும் கருவியும் உலகும் பிறவும் படைத்தளித்துக் காத்தலும், அவ்வுயிர்கட் குண்டாகும் இளைப்பு முதலிய நீங்குதற் பொருட்டு ஒடுக்குதலும் செய்து, அவ்வுயிர்கள் செய்யும் வினைக்கேற்ப இன்பமும் துன்பமுமாகிய பயன்களை முறை செய்து வழங்குதலும் செய்தலின் "இறைவன்" என்றார்: இறு என்னும் சொல்லடியாகக் கொண்டு எப்பொருளினும் தங்குபவன் என்றலு மொன்று. இரு சுடர் முதலிய எட்டினையும் கட்டி நிற்றலாவது, தனக்கென வேறுடம்பின்றி அவற்றையே உடம்பாகவும் அவற்றில்தான் உண்ணிறைந்தியக்குதலின் உயிராகவும் கொண்டு நிற்றல். யாக்கையும் உயிருமாய் என மாறுக. கட்டி நிற்போனெனவே, இவ்வாறு உடம்புமுயிருமாக வமைத்துக் கோடல் அவன் தானாகவே தன் நினைவாற் (சங்கற்பத்தால்) சமைப்பதென்றும், இவ்வாறு கட்டிக் கொள்ளாதே வேறாய் நிற்றலும் அவற்குண்டென்றுங் கூறினானாம். முதல்வன் அட்டமூர்த்தியாயிருத்தலை, நாவரசரும், "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமான னாயெறியுங் காற்று மாகி, அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி" (6:91,1) என்பது காண்க. கற்கப்படும் கலை பலவும் இறைவனே என்பது, "கலையவன் மறையவன் காற்றொடுதீ, மலையவன் விண்ணொடு மண்ணுமவன்" (109:6) என்று ஞானசம்பந்தரும், "கலையாகிக்கலைஞானம் தானேயாகி" (6:94: 2) என நாவரசரும் கூறுவர். படைத்தலும் காத்தலும் அவற்கு மிக எளிதில் அமைவன என்றற்கு "விளையாடும் பண்பினோன்" என்றார்; "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" (திருவெம்பாவை) என்று மணிவாசகர் கூறுதல் காண்க. துயர், இளைப்புத் துன்பம். தோற்றம், சிறப்பு, துடைத்தற்கு ஏது கூறுவர், "துயர் தீர்தோற்றத்தோன்" என்றார். "தன்னில்" என்றதனால் ஒப்பும், வேறு என்றதனால் மிகுதியும் கொள்ளப்பட்டன.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil