Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.39

Maṇimēkalai urai 28.39

Language
Tamil

28.39

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

160

165

²பெறுதலு மிழத்தலு மிடையூ றுறுதலும்
உறுமிடத் தெய்தலுந் துக்கசுக முறுதலும்
பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும்
கருவிற் பட்ட பொழுதே ³கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையுமணு வெனத்தகும்
முன்னுள வூழே பின்னுமுறு விப்பது
மற்கலி நூலின் வகையிது வென்னச

159

உரை

165

பெறுதலும் - நற்பேறுகளைப் பெறுவதும்; இழத்தலும்- பெற்றவற்றை யிழந்துவிடுவதும்; இடையூறுறுதலும் - பல்வகை இடையூண்டாதலும்; உறுமிடத்து எய்தலும் - பொருந்திய விடத்தே பொருந்தி யிருத்தலும்; பெரிதவை நீங்கலும் - இடத்தினின்று இடத்தையும் ஒக்கல் பொருள் ஏவல் முதலியவற்றையும் பிரிந்து நீங்குதலும்; துக்க சுகமுறுதலும் - துன்பமும் இன்பமும் அடைவதும்; பிறத்தலும் சாதலும்-பிறப் பிறப்புக்களும்; கருவிற் பட்ட பொழுதே கலக்கும் - கருவியிற் றோன்றிய போதே உயிர்களைச் சார்ந்துவிடும்; இன்பமும் துன்பமும் இவை அணுவெனத் தகும் - இன்பமும் துன்பமுமாகிய இவைகளும் அணுவென்று கூறப்படும்; முன்னுள ஊழே - முன்னே எய்திய நலந் தீங்குகட் கேதுவாகிய ஊழே; பின்னும் உறுவிப்பது - பின்னரும் அவை யெய்துதற் கேதுவாம்; இது மற்கலி நூலின் வகை என்ன - இக் கூறிய இது ¹ மற்கலி கோசலர் என்பார் கூறிய நூற்பொருள் வகையாம் என்று ஆசீவகன் சொல்ல எ - று.

¹ இம்மற்கலி கோசலர் மக்கலி கோசலரென்றும் கூறப்படுவர். இவர் ஆசீவகருள் மூன்றாந் தீர்த்தகரென்றும், அசோகமன்னனுடைய பேரனான தசரதனென்பான் இந்நெறியிற் பேரீடுபாடுடையனென்றும் கூறுவர். ஆசீவகநெறியைக் கண்ட ஆசிரியன் எளிய குடியில் ஆக்களைக் கட்டும் தொழுவத்தில் (கோசாலையில்) பிறந்ததுபற்றி, அவர் நெறி நின்ற தலைவர்கள் கோசலர் எனப் பட்டனர். மக்கலி என்ற சொற்குப் பலரும் பல்வேறு பொருள் உரைப்பர். சிலர் இவர்தந்தை வீடுதோறும் சென்று ஓவியங்கள் காட்டி வயிறு வளர்த்ததுபற்றி, அவர் மகனான இவர் மக்கலி யெனப்பட்டாரென்றும, சிலர் இவரைப் பின்பற்றினோர் ஆடையின்றி யம்மணமாய்த் திரிந்தமையின் தம்மைப் பாதுகாத்துக் கோடற்கு மூங்கிற் கோலைக் கையிலேந்தித் திரிந்தமையின் இப்பெயர் பெற்றன ரென்றும், சிலர் "இடறி விழாதே" (மா. கலி.) என்று அடிக்கடி இவர் தம் மாணவர்க்குரைத்ததுபற்றி இவ்வாறு பெயர் பெற்றாரென்றும் கூறுப (History of Indian Philosophy Vol. II. P. 456). "யாதும் செய்யாதே; சும்மா இரு" என்பது ஆசீவகர் குறிக்கோள் என்பர் (பதஞ்சலியார் பாடியம். Vol. III. பக். 96). நீலகேசியும், "மோனாந் திருந்தனன்" (680) என்கின்றது.

² இறத்தலு மிழத்தலும். ³ பிறக்கும்.

Linked texts (1)