Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.4

Maṇimēkalai urai 28.4

Language
Tamil

28.4

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

15

20

மருளில் காட்சி யைவகை யாகும்
கண்ணால் வண்ணமும் செவியா லோசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவாற்
சுவையு மெய்யா லூறுமெனச் சொன்ன
இவையிவை கண்டுகேட் டுயிர்த்துண் டுற்றுத
துக்கமுஞ் சுகமுமெனத் துயக்கற வறிந்து
உயிரும் வாயிலு மனமுமூ றின்றிப்
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்

14

உரை

24

1. காட்சியளவை

மருளில் காட்சி ஐவகையாகும்-மருட்சிக்குச் சிறிதும் ஏதுவாகாத காட்சி யளவை யைந்து வகைப்படும்: கண்ணால் வண்ணமும்-பொறியால் நிறமும்; செவியால் ஓசையும்-செவிப் பொறியால் ஓசையும்; நண்ணிய மூக்கால் நாற்றமும்-பொருந்திய மூக்காகிய பொறியால் நாற்றமும்; நாவாற் சுவையும்-நாக்காகிய பொறியால் சுவையும்; மெய்யால் ஊறும் என - மெய்யாகிய பொறியால் ஊறும் என்று; சொன்ன இவை இவை-சொல்லப்பட்ட இவற்றை; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-முறையே கண்டும்கேட்டும் மோந்தும் உண்டும் மெய்யுற்றும்; துக்கமும் சுகமும் என - துக்கமென்றும் சுகமென்றும்; துயக்கற அறிந்து - குற்றமற வறிந்து; உயிரும் வாயிலும் மனமும் - உயிரும் இந்திரியங்களும் மனமும்; ஊறின்றி - குற்றமின்றி, பயில் ஒளியொடு - உலகிற் பயில நிலவும் ஞாயிறு திங்கள் தீ என்ற இவற்றின் ஒளி துணையாக ; பொருள் இடம் பழுதின்றி-பொருளும் இடமும் குற்றமற இயைய வைத்து, சுட்டல்-பொருண்மை மாத்திரம் காண்டலும்; திரிதல்-பிறிதொன்றாகக் கோடலும்; கவர்கோடல்-ஐயுறுதலும்; தோன்றாது-இல்லாமல்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியைபின் அறிவதாகும்-சார்ந்துள்ள இடம் பெயர் சாதி குணம் தொழில் என்பவற்றாற் சிறப்பித்தறிவதாம் எ - று. எனவே, பொறிவாயிலாகப் பொருள்களின் நலந் தீங்கு காண்டல் காட்சி யளவையின் பயனாமென்றும், காட்சி நிகழுமிடத்து, உயிரும் பொறிகளும் மனமும், ஒளிநிலவும் பொருளும் இடமும் நோக்கிக் காணப்படும் பொருளினுடைய பெயர் சாதி குணம் தொழில் முதலியவற்றால் சிறப்புற அறிதற்கண் தொழிற்படுமென்றும், பொதுமையிற் காண்டல், திரியக் காண்டல், ஐயுறல் என நிகழ்தல் கூடாதென்றும் கூறியவாறாம். ஈண்டுக் கூறியனவே கௌதமரால் ஐவகையாகக் கூறப்படுகின்றன: அவை காணப்படும் பொருளும், ஒளியும், பொறியும்; மனமும், உயிரும் என்பனவாம். தெளிவுக்காட்சிக்குத் தடையாவன தோடம், சம்பிரயோகம், சமுசுகாரம் என்று கூறுவர். தோடமாவது பொறிகளிடத்தேயுள்ள குற்றம் ; சம்பிரயோகமென்பது ஒரு மருங்கு பற்றிய காட்சி: சமுசுகாரமாவது திரிபுக் காட்சி. இவற்றின் விரிவை நியாய பிந்து, நியாய மஞ்சரி முதலிய நூல்களுட் காண்க. ஈண்டுக் கூறிய தோடத்தையே இவ்வாசிரியரும் "ஊறின்றி" யென்றார். "கிட்டிய தேச நாம சாதி குணங்கிரியை"களைக் கற்பனை யென்பதுடன், இவற்றுள், தேசத்தை நீக்கியும் பொருண்மையைக் கூட்டியும் நியாய மஞ்சரி என்னும் நூல் கூறுகிறது. ற்பகனையைக்கழித்துக் காணப்படும் பொருண்மை, உணர்வுருவாய் நின்று உரைக்கு எய்தாதாகலின், அஃது எய்துதற்கு இவை வேண்டப்படுதலின், "கிட்டிய தேட...கிரியையின் அறிவதாகும்" என்றார். தருமகீர்த்தி முதலாயினார் நாமசாதி குணங்கிரியைகளின் வைத்துக் காணும் காட்சியறிவைச் சாமானிய விலக்கணமென்றும், இவையின்றிப் பொருண்மைக்காட்சி யுணர்வைச் சுவிலக் கணமென்றும் கூறுவர். துயக்கு-குற்றம்; தடையுமாம். ஏனையளவை போலாது பொருள்களை நேரிற் கண்டறிதலின் க இனிக் கண்ணாலொரு பொருளைக் காணுமிடத்தும் நிறமேயன்றியளவு வடிவு முதலிய பிறவும் காணப்படுமாயினும் சிறப்புப்பற்றி நிறம் கூறினார். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. அன்றியும், ஒரு பொருளைக் கண்ணாற் காணுமிடத்துக். கட்பொறியும், மனமும், உயிரும், காண்டற்குத் துணையாகும் ஒளியும் ஒருங்கு தொழில் நிகழ்த்துவது போலச் செவி முதலியவற்றா னிகழும் காட்சிக்கண்ணும் இந்நிகழ்ச்சியுண்மையின் இவ்வாறே கூறிக்கொள்க. மனமும் உயிரும் பொதுவாயினும், பொறிகளும் அவற்றாற் காணப்படும் பொருளும் ஐவகைப்படுவது பற்றி, "காட்சி யைவகை யாகும்" என்றார். நாமதேசக் குணக் கிரியையின் வைத்தறியும் காட்சி சவிகற்பமென்றும்' அவ்வியபதேசமாய்க் காண்பது நிருவிகற்பமென்றும் பிற்காலத்தோர் கூறுவர். வாற்சாயனர், உத்தியோதகரர் முதலாயினோர் காலத்தே இப்பிரிவு இல்லை. அவர்களைப்போலவே இம் மணிமேகலை ஆசிரியரும் சவிகற்ப நிருவிகற்பப் பிரிவு கூறாமை குறிக்கத்தக்கது.

Linked texts (1)