Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.51

Maṇimēkalai urai 28.51

Language
Tamil

28.51.1

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

28.51.2

210

28.51.3

215

28.51.4

220

28.51.5

225

28.51.6

சொல்லுதன் மூலப் பகுதிசித் தத்து
மானென் றுரைத்த புத்தி வெளிப்பட்
டதன்கணா காயம் வெளிப்பட் டதன்கண்
வாயு வெளிப்பட் டதன்க ணங்கி
யானது வெளிப்பட் டதன்க ணப்பின்
தன்மை வெளிப்பட டதின்மண் வெளிப்பட்
டவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்
டார்ப்புறு மனத்தாங் கார விகாரமும்
ஆகா யத்திற் செவியொலி விகாரமும்
வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும்
அங்கியிற் கண்ணு மொளியுமாம் விகாரமும்
தங்கிய வப்பில்வாய் சுவையெனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட் டிவற்றிற் றொக்கு விகாரமாய்
வாக்குப் பாணிபாத பாயுரு பத்தமென
ஆக்கிய விவைவெளிப் பட்டிங் கறைந்த
பூத விகாரத் தான்மலை மரமுதல்
ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து
வந்த வழியே யிவைசென் றடங்கி
அந்தமில் பிரளய மாயிறு மளவும்
ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம்

28.51.7

206

28.51.8

உரை

28.51.9

226

28.51.10

சித்தத்து - சித்தமாகிய மூலப்பகுதியினின்று ; மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு-மானென்று சொல்லப்பட்ட புத்திதத்துவம் வெளிப்படும்; அதன்கண் ஆகாயம் வெளிப்பட்டு-அந்தப் புத்தியினின்றும் ஆகாயம் வெளிப்படும்; அதன் கண் வாயு வெளிப்பட்டு - அந்த ஆகாயத்திலிருந்து வாயு வெளிப்படும் ; அதன்கண் அங்கியானது வெளிப்பட்டு-அவ் வாயுவினின்று தீயானது வெளிப்படும்; அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு - அத் தீயிலிருந்து நீர் வெளிப்படும்; அதின் மண் வெளிப்பட்டு-அந்நீரிலிருந்து நிலம் வெளிப்படும்; அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப்பட்டு அந்த மண்முதலியவற்றின் கூட்டத்திலிருந்து மனம் வெளிப்படும்; ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் - ஆரவாரம் பொருந்திய அந்த மனதினது ஆங்காரமாகிய விகாரமும், ஆகாயத்திற் செவியொலி விகாரமும் - ஆகாயத்தினுடைய செவிக்குப் புலனாகும் ஒலியாகிய விகாரமும்; வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்-வாயுவினது மெய்க்குப் புலனாகும் ஊறாகிய விகாரமும்; அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்-நெருப்பினுடைய கண்ணுக்குப் புலனாகும்-ஒளியாகிய விகாரமும்; அப்பில் வாய் தங்கிய சுவையெனும் விகாரமும் - நீரினது வாய்க்குப் புலனாகத் தங்கிய சுவையாகிய விகாரமும்; நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்-நிலத்தினுடைய மூக்குக்குப் புலனாகும் நாற்றமாகிய விகாரமும் என்று ; சொல்லப்பட்ட இவற்றின்-சொல்லப்பட்ட இவற்றுள் ; தொக்கு விகாரமாய்-மெய்யினது விகாரமாய்; வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என ஆக்கியஇவை வெளிப்பட்டு-வாய், கால், கை, பாயுரு, உபத்தம் என்று உண்டாகிய இவை வெளிப்படும்; இங்கு அறைந்த பூதவிகாரத்தால்-இங்கே ஆகாய முதல் நில மீறாகச் சொல்லப்பட்ட பூதங்களின் கலப்பால்; மலை மரம் முதல் ஓதிய வெளிப்பட்டு - மலையும் மரமும் முதலியவாகச் சொல்லப்பட்டன வெல்லாம் வெளிப்பட்டு; உலகாய் நிகழ்ந்து - உலகமாய்த் தோன்றி நிலவி ; வந்த வழியே இவை சென்றடங்கி - பின்பு தாம் தோன்றிய முறையே சென்று ஒன்றினுள் ஒன்றாயொடுங்கி ; அந்தமில் பிரளயமாய் இறும் அளவும்-ஒழியாத பிரளயமாய் ஒடுங்குங்காறும் ; ஒன்றாய் - ஒன்றாகி ; எங்கும் பரந்து நித்தியமாம் - எவ்விடத்தும் பரந்து நித்தியப் பொருளாம் எ - று.

28.51.11

எனவே, மூலப்பகுதியிலிருந்து மானென்னும்புத்தி தோன்றுமென்றும், அப் புத்தியிலிருந்து ஆகாயமும் அதிலிருந்து ஒன்றன்பின் னொன்றாய்ப் பரம்பரையாய் ஏனைப் பூதங்களும் தோன்றுமென்றும், அவற்றின் கூட்டத்தால் மனமும் அதிலிருந்து ஆங்காரமும் தோன்றுமென்றும், ஆகாய முதலிய பூதங்களிலிருந்து முறையே செவி முதலிய பொறிகளும் ஒலி முதலிய புலன்களும் தோன்றுமென்றும், மெய்யாகிய பொறியின் விகாரமாய் வாக்கு முதலிய கன்மேந்திரியங்களும், பூதங்களின் விகாரமாய் மலை மரம் முதலியனவும் தோன்றி யுலகாய் நிலவுமென்றும், இவ்வுலகம் முடிவில் தோன்றிய முறையே ஒடுங்குமென்றும், அம்மூலப்பகுதி ஒன்றாய் வியாபியாய் நித்தமாய் உள்ளதென்றும் கூறியவாறாம். இம்முறை பரமார்த்த ரென்னும் சீன நாட்டவர் எழுதிய சாங்கியக் கொள்கையுடன் பெரிதும் ஒத்திருப்பது ஆராயத்தக்கது. இனி இச்சாங்கிய நூற்கொள்கையைக் கூறலுற்ற நீலகேசியுரைகாரர், "அந்தப் பிரகிருதியிற் பிறந்த மகானில் அகங்காரமாம்; அந்த அகங்கார தத்துவத்து மனசும் பஞ்சதன்மாத்திரையும், ஞானேந்திரிய மைந்தும், கன்மேந்திரிய மைந்துமாகப் பதினாறும் பிறக்கும் ; பஞ்ச தன்மாத்திரையிற் பஞ்சபூதம் பிறக்கும்" (நீல. 737. உரை) என்பர் ; இனிப் பரிமேலழகர், மூலப்பகுதியின்கண் மானும் அதன்கண் ஆங்காரமும் அதன் கண் தன்மாத்திரையும் தோன்றுமென்று கூறி, "அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் பூதங்களுமாகிய பதினாறும்" விகுதியாகுமென்றும், மானும் ஆங்காரமும் தன்மாத்திரை யைந்துமாகிய ஏழும் விகுதியும் பகுதியுமா மெனவும் கூறுவர். இருவர் கூற்றினும் வேறுபாடுணர்ந்து கொள்க. இனி இச்சாங்கிய நூல்களை ஆராய்ந்துரைக்கும் அறிஞர்கள், மூலப்பகுதியிலிருந்து புத்தியென்னும் மானும், அதிலிருந்து ஆங்காரமும், அதன்கண் மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் தன்மாத்திரையும் தோன்றுமென்றும், தன்மாத்திரையிலிருந்து ஐம்பெரும் பூதமும் தோன்றுமென்றும் கூறுகின்றனர். இதுவே நீலகேசி யுரைகாரராலும் கூறப்படுவது. வாசஸ்பதி யென்பாரும் இவ்வாறே கூறினர்; விஞ்ஞானபிஷு என்பார் ஆங்காரமும் தன்மாத்திரைகளும் மானிலிருந்தே தோன்றுகின்றன என்பர். உரையினிது விளங்குதற்பொருட்டு, வெளிப்பட்டென நின்ற எச்சம் முற்றாகப் பொருள் கூறப்பட்டது.

Linked texts (1)