Maṇimēkalai's Renunciation 28.51.11
Maṇimēkalai urai 28.51.11
- Language
- Tamil
28.51.11
எனவே, மூலப்பகுதியிலிருந்து மானென்னும்புத்தி தோன்றுமென்றும், அப் புத்தியிலிருந்து ஆகாயமும் அதிலிருந்து ஒன்றன்பின் னொன்றாய்ப் பரம்பரையாய் ஏனைப் பூதங்களும் தோன்றுமென்றும், அவற்றின் கூட்டத்தால் மனமும் அதிலிருந்து ஆங்காரமும் தோன்றுமென்றும், ஆகாய முதலிய பூதங்களிலிருந்து முறையே செவி முதலிய பொறிகளும் ஒலி முதலிய புலன்களும் தோன்றுமென்றும், மெய்யாகிய பொறியின் விகாரமாய் வாக்கு முதலிய கன்மேந்திரியங்களும், பூதங்களின் விகாரமாய் மலை மரம் முதலியனவும் தோன்றி யுலகாய் நிலவுமென்றும், இவ்வுலகம் முடிவில் தோன்றிய முறையே ஒடுங்குமென்றும், அம்மூலப்பகுதி ஒன்றாய் வியாபியாய் நித்தமாய் உள்ளதென்றும் கூறியவாறாம். இம்முறை பரமார்த்த ரென்னும் சீன நாட்டவர் எழுதிய சாங்கியக் கொள்கையுடன் பெரிதும் ஒத்திருப்பது ஆராயத்தக்கது. இனி இச்சாங்கிய நூற்கொள்கையைக் கூறலுற்ற நீலகேசியுரைகாரர், "அந்தப் பிரகிருதியிற் பிறந்த மகானில் அகங்காரமாம்; அந்த அகங்கார தத்துவத்து மனசும் பஞ்சதன்மாத்திரையும், ஞானேந்திரிய மைந்தும், கன்மேந்திரிய மைந்துமாகப் பதினாறும் பிறக்கும் ; பஞ்ச தன்மாத்திரையிற் பஞ்சபூதம் பிறக்கும்" (நீல. 737. உரை) என்பர் ; இனிப் பரிமேலழகர், மூலப்பகுதியின்கண் மானும் அதன்கண் ஆங்காரமும் அதன் கண் தன்மாத்திரையும் தோன்றுமென்று கூறி, "அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் பூதங்களுமாகிய பதினாறும்" விகுதியாகுமென்றும், மானும் ஆங்காரமும் தன்மாத்திரை யைந்துமாகிய ஏழும் விகுதியும் பகுதியுமா மெனவும் கூறுவர். இருவர் கூற்றினும் வேறுபாடுணர்ந்து கொள்க. இனி இச்சாங்கிய நூல்களை ஆராய்ந்துரைக்கும் அறிஞர்கள், மூலப்பகுதியிலிருந்து புத்தியென்னும் மானும், அதிலிருந்து ஆங்காரமும், அதன்கண் மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் தன்மாத்திரையும் தோன்றுமென்றும், தன்மாத்திரையிலிருந்து ஐம்பெரும் பூதமும் தோன்றுமென்றும் கூறுகின்றனர். இதுவே நீலகேசி யுரைகாரராலும் கூறப்படுவது. வாசஸ்பதி யென்பாரும் இவ்வாறே கூறினர்; விஞ்ஞானபிஷு என்பார் ஆங்காரமும் தன்மாத்திரைகளும் மானிலிருந்தே தோன்றுகின்றன என்பர். உரையினிது விளங்குதற்பொருட்டு, வெளிப்பட்டென நின்ற எச்சம் முற்றாகப் பொருள் கூறப்பட்டது.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil