Maṇimēkalai's Renunciation 28.56
Maṇimēkalai urai 28.56
- Language
- Tamil
28.56
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
250
பொருளுக்கு மேதுவா மப்பொரு ளொன்பான்
ஞாலநீர் தீவளி யாகா யந்திசை
கால மான்மா மனமிவற் றுண்ணிலம்
ஒலியூறு நிறஞ்சுவை நாற்றமொ டைந்தும்
பயில்குண முடைத்து நின்ற நான்கும்
சுவைமுத லொரோகுண மவைகுறை வுடைய
246
உரை
251
அப்பொருள் ஒன்பான்-அப்பொருள்கள் ஒன்பது வகைப்படும்; ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் - (அவை) நிலமும் நீரும் தீயும் காற்றும் விண்ணும் திசையும் காலமும் ஆன்மாவும் மனமும் ஆம்; இவற்றுள் -இவ்வொன்பதனுள்; நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில்குண முடைத்து - நிலமென்பது ஓசையும் பரிசமும் நிறமும் சுவையும் மணமு மென்று பொருந்தும் ஐந்து குணங்களையு முடையது; நின்ற நான்கும் - ஏனை நீரும் தீயும் காற்றும் விண்ணுமாகிய நான்கும்; அவை ஒரோ குணம் குறைவுடைய - அவ்வொலி முதலிய குணமைந்தனுள் முறையே ஒவ்வொரு குணம் குறைவாக வுள்ளனவாகும் எ - று. என்றது, நீர், மண மொழிந்த நான்கும், தீ, சுவையொழித்த மூன்றும், காற்று, நிறமொழிந்த இரண்டும், விண், பரிசமொழிந்த ஒன்றுமாகவுடையன என்பதாம். ஈண்டுக் காலம், திசை, ஆன்மா, மனம் என்ற நான்கின் இயல்பு காணப்படவில்லை. ஆன்மாவும் மனமும் ஏனைப் பூதங்களைப் போலத் தொகுதிப்பொருள் என்றும், இவற்றுள் ஆன்மா ஒழிந்த ஏனையெட்டும் சேய்மை யண்மை செயற்படல் முதலிய வியல் பினவென்றும், மனமும் ஆன்மாவும் ஆகாயமும் திசையும் காலமும் அணுகாரியமென்றும், காரணமாகிய அணுக்கள் எளிதிற் புலப்புடுவன வல்லவென்றும், மனம், அணுவடிவிற் றாயினும் தன்னினின்றும் ஒன்றுந் தோன்றுதற் கேதுவாகாதென்றும், ஆகாயம், வியாபியாயினும் ஒலியைத் தன்னின்றும் தோற்றுவிக்குமென்றும் கூறுவர். மேலும், ஆன்மா ஒன்றல்ல பலவென்றும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சிறப்பு (விசேடம்) உண்டென்றும், இஃது உணருந்தன்மைத்தாயினும் மனத்தோடும் உடம்போடும் கூடினாலன்றி ஒன்றையு முணரமாட்டதென்றுன், ஒவ்வோரான்மாவும் மனத்தோடு கூடியே பல்வகைப் பிறப்புக்களையு மெடுக்குமென்றும், வடக்கு கிழக்கு முதலியவாகக் கூறப்படும் இடவகைக் கேதுவாகியது திசையென்றும், காலம் நித்தியமென்றும் "அதீதாதி வியவகாரவேது" (தருக் சங். 15) வென்றும்கூறுகின்றனர்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil