Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 29

Maṇimēkalai urai 29

Language
Tamil

29.1

கச்சிமாநகர் புக்க காதை

ஆங்குத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
வாங்குவிற் றானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரு முழிஞைவெம் படையும்
போற்புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து

1

உரை

4

ஆங்குத் தாயரொடு அறவணர்த் தேர்ந்து - வஞ்சி நகரத்தின் கண் மாதவி சுதமதியுடன் அறவணவடிகளையும் காண நினைந்து, வாங்கு வில்தானை வானவன் வஞ்சியின் - வளைந்த வில்லேந்திய படையினையுடைய சேரனது வஞ்சி நகரத்தில், வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போற் புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து - பகை மன்னரும் புறமதிலைக் காக்கும் கொடிய படையினரும் போல அரணைச் சுற்றிலுமுள்ள புற நகரத்தைக் கடந்து ;

வஞ்சி நகர்ப்புறத்தே பல்வகைச் சமயவாதிகளைக் கண்டு அவர் திறம் கேட்டுப் போந்த மணிமேகலை தன் தாயரையும் அறவணனையும் நினைந்து புறஞ்சேரி கடந்து, அந்நகர்க்குட் செல்கின்றாளாதலின், "வஞ்சியின் புறக்குடி கடந்து" என்றார். மாதவியோடு சுதமதியையும் உளப்படுத்தி யுரைத்தலின், "தாயர்" என்றார். புறக்குடி, புறநகர். மன்னவ குமரரிருக்கையும் தானைவீரர் இருக்கையும் அரணைச் சூழ்ந்திருத்தலின், "வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல" என்றார்.

29.2

கச்சிமாநகர் புக்க காதை

5

10

15

20 சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்
கருங்குழல் கழீ இய கலவை நீரும்
எந்திர வாவிய லிளைஞரு மகளிரும்
தந்தமி லாடிய சாந்துகழி நீரும்
புவிகா வலன்றன் புண்ணிய நன்னாட்
சிவிறியுங் கொம்புஞ் சிதறுவிரை நீரும்
மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல வுபாசகர் செங்கைநறு நீரும்
அறஞ்செய் மாக்க ளகின்முதல் புகைத்து
நிறைந்த பந்தற் றசும்புவார் நீரும்
உறுப்புமுர ணுறாமற் கந்தவுத் தியினால்
செறித்தவரைப் போர்தஞ் செழுமனை நீரும்
என்றிந் நீரே யெங்கும் பாய்தலின்
கன்றிய கராமு மிடங்கரு மீன்களும்
ஒன்றிய புலவொழி யுடம்புன வாகித்
தாமரை குவளை கழுநீ ராம்பல்
பூமிசைப் பரந்து பொறிவண் டார்ப்ப
இந்திர தனுவென விலங்கக ழுடுத்து

5

உரை

22

சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும்-இல்லங்களிற் சிந்துகின்ற நீரானது செல்லுமாறு கற்களான் மறைத்தமைக்கப்பட்ட சாக்கடைகளின வழியாக மாடங்களிலுள்ள மகளிர் கரிய கூந்தலை யாட்டிய நறுமணக் கலவையினையுடைய நீரும், எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்து கழி நீரும் - வேண்டுங்காற் பெருக்கியும் வேண்டாக்காற் குறைத்தும் தரவல்ல இயந்திரங்கள் அமைந்த பொய்கைகளில் மைந்தரும் மகளிரும் நீராடுதலால் அவரணிந்த சாந்து கழுவுற்றுக் கலந்தோடும் நீரும் புவி காவலன்தன் புண்ணிய நன்னாள் சிவிறியுங் கொம்பும் சிதறு விரை நீரும்-மன்னவன் பிறந்த நன்னாளில் சிவிறியும் கொம்புமாகிய கருவிகள் கொண்டு ஒருவர்மேலொருவர் வீசிகின்ற நறுமண நீரும், மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கை நறுநீரும் - மேன்மை பொருந்திய முனிவர் தம் திருவடிகளை ஐவகைச் சீலங்களையுமுடைய உபாசகர்கள் தங்கள் சிவந்த கைகளால் விளக்கும் நன்னீரும், அறஞ்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும்- இல்லறம் புரியும் மாந்தர்கள் அமைத்த அகில் முதலியவற்றைப் புகைத்தலா லெழுந்த நறும்புகை கமழும் தண்ணீர்ப் பந்தர்களில் குடங்களிலிருந்து ஊற்றுகின்ற நீரும், உறுப்பு முரண் உறாமல் கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் தஞ்செழுமனை நீரும்-ஊறப்படும் உறுப்புக்கள் மாறுபடாமல் விரைக்கலவைக்குரிய முறைப்படியே சேர்த்து அரைப்பவருடைய வளம் மிக்க மனைகளின் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்ற இவ்வகைப்பட்ட நீரே யாண்டும் பாய்தலினால், கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவொழி உடம்பினவாகி-பகைமையிற் றழும்பிய கராம் இடங்கர் என்ற முதலையினங்களும் மீன்களும் தம்மீது பொருந்திய புலால் நாற்றம் நீங்கிய உடலினையுடையவாகி, பொறிவண்டார்ப்ப தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூ மிசைப் பரந்து - பொறிகளையுடைய வண்டினங்கள் தேனுண்டாரவாரிக்க, தாமரை குவளை கழுநீர் ஆம்பல் முதலிய பூக்கள் நீர் மேலே பரவப் பெற் இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து - வானவில்லைப்போல விளங்குகின்ற அகழியாற் சூழப்பட்டு ; நெய் விரவிய கூந்தலைப் பசை நீங்கக் கலவை தேய்த்தலைத்தலால்

மகளிராடிய நீரை, "கருங்குழல் கழீஇய கலவை நீர்" என்றார். எந்திர வாவி, எந்திரத்தால் நீரைப் பெருக்குதலும் குறைத்தலுமுடைய வாவி. பூசிய சாந்தம் நீராட்டில் கழுவப்படுவதுபற்றி, கழுவிய நீர் "சாந்து கழி நீர்" எனப்பட்டது. நாட்டு மன்னனது பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கு 'வெள்ளணி' யென்றும் 'நாண்மங்கல' மென்றும் வழங்கும். உபாசகர், ஐவகைச் சீலத்தை மேற்கொண்டு அறம்புரிவோர். இல்லறத் தாராயினும், சீலமும் தானமும் சிறந்து தோன்ற அறம் புரிவதுபற்றி, உபாசகர் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். மேலை, மேன்மை; ஐ: பண்புப் பொருண்மை குறித்து நின்றுது; சாரியையுமாம். உறுப்புக்களாவன, "நேர்கட்டி செந்தே னிரியாசம் பச்சிலை, ஆர மகிலுறுப்போ டாறு" (சிலப். 514) என அடியார்க்கு நல்லார் காட்டுமாற்றாலறிக கந்தவுத்தி, விரைப் பொருளைத் தக்காங்குக் கலந்து செய்யும் முறை. ஈண்டுக் கூறிய நீர்வகை பலவும் சுருங்கை வழியே சென்று, கிடங்கிற்குள் வீழ்தல் தோன்றச் "சுருங்கைத்தூம்" பென முதற்கண் நிறுத்திக் கூறினார். கராம், இடங்கர் என்பன முதலை வகை. தாமரை முதலிய பூக்கள் நீர்ப்பரப்பின் மேலே மலர்ந்து நிற்பனவாதலால், "மிசைப் பரந்து" என்றார். பல்வகை வண்ணங்கொண்டு விளங்கலின், இந்திர வில்லை யுவமம் கூறினார்.

29.3

கச்சிமாநகர் புக்க காதை

25

வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய
கடிமதி லோங்கிய விடைநிலை வரைப்பில்
பசுமிளை பரந்து பஃறொழி னிறைந்த
வெள்ளிக் குன்ற முள்கிழிந் தன்ன
நெடுநிலை தோறு நிலாச்சுதை மலரும்
கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக்

23

உரை

28

வந்தெறி பொறிகள் வகை மாண்புடைய-பகைவர் முற்றிய பொழுதில் முன் வந்து பகையெறியுந் தன்மையுடைய இயந்திரங்களின் வகையால் மாட்சிமையுடைய, ஓங்கிய கடிமதில் இடைநிலை வரைப்பில்-உயர்ந்த காவலையுடைய மதிலின் இடையேயுள்ள நில வெல்லையில், பசுமிளை பரந்து - பசிய காவற்காடு பரவப்பெற்று ; பல்தொழில் நிறைந்த-பலவகைத் தொழிலும் நிரம்பிய, வெள்ளிக் குன்றம் உள்கிழிந்தன்ன நெடு நிலைதோறும் நிலாச்சுதை மலரும் - வெள்ளி மலையை நடுவே பிளந்தாற்போல உயரிய நிலைகள்தோறும் நிலவினைப் போல வெள்ளிய சுதை விளங்கும்; கொடிமிடை வாயில் குறுகினள் புக்கு-கொடிகள் செறிந்த வாயிலை அடைந்து புகுந்து ;

எந்திரவகைகளாவன : நூற்றுவரைக் கொல்லி, அரிநூல்பொறி விற்பொறி, கொக்குப்பொறி, கூகைப்பொறி முதலியன. இவற்றின் வகையைச் சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. ஓங்கிய கடிமதில் என மாறுக. பஃறொழில் நிறைந்த நெடுநிலை, வெள்ளிக் குன்றம் கிழிந்தன்ன நெடுநிலை யென வியையும். மலர்தல், ஈண்டு விளக்கங் குறித்து நின்றது. மிடைதல், செறிதல். குறுகினள் : முற்றெச்சம்.

29.4

கச்சிமாநகர் புக்க காதை

30

கடைகாப் பமைந்த காவ லாளர்
மிடைகொண் டியங்கும் வியன்மலி மறுகும்
பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர்
கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர்
மைந்நிண விலைஞர் பாசவர் வாசலர்

29

உரை

34

கடைகாப்பு அமைந்த காவர் மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும் - வாயில் காத்தற்கு அமைந்த காவலாளர்கள் நெருங்கி யிருக்கும் அகன்ற பெரிய வீதியும், பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் - பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும், மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் - இறைச்சி விற்போரும் வெற்றிலை விற்போரும் பஞ்சவாசம் விற்போரும் என்ற இவர்களையுடைய வீதியும் ;

பெருஞ் செல்வருடைய பெருமனைகளில் கடையில் காவல் புரியும் வாயிலாளர்களைக் "காவலாளர்" என்றார். மக்களின் போக்குவரவு மிகுதி தோன்ற, "மிடைகொண்டு" என்றார். மிடைந்து அகன்ற தெருவாதலின், "வியன்மலி மறுகு" எனப்பட்டது. பல்வேறு வகையான மீன்களை விற்போர் பலராதல் தோன்றப் பன்மீன் வினைஞர் என்றார். வெள்ளுப்பு என்புழி வெண்மை இயல்பாய பண்பு குறித்தது. நொடையாட்டியர் - விலைக்கு விற்பவர் ; "கள்ளோர் களிநொடை நவில" (மதுரை 662) என்றார் பிறரும். காழியர் - பிட்டு வாணிகர். கூவியர்- அப்ப வாணிகர். மைந்நிண விலைஞர் - இறைச்சி விற்போர். ஈண்டுக் கூறப்படும் வணிகர் வகையை, அடிகளும், "காழியர் கூவியர் கண் ணொடை யாட்டியர், மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர், பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோ, டோசுநர் செறிந்த வூண்மலி யிருக்கை" (சிலப். 5. 27-4) என்பது காண்க.

29.5

கச்சிமாநகர் புக்க காதை

35 40

செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லாரும்
மரங்கொ றச்சரும் மண்ணீட் டாளரும்
வரந்தர வெழுதிய வோவிய மாக்களும்
தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும்
மாலைக் காரருங் காலக் கணிதரும்
நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப
நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும்
பாண ரென்றிவர் பல்வகை மறுகும்

35

உரை

43

இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்சகாரரும்- குயவரும் செப்புக் கலஞ் செய்வோரும், வெண்கலக் கன்னாரும், பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் - பொற்பணி செய்வோரும் பொன்னை உருக்குந் தட்டாரும், மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்-மரத்தை வெட்டுந் தச்சரும், சுதை முதலி யன கொண்டு பாவை முதலியன செய்யும் சிற்ப வினைஞரும், வரந்தர எழுதிய ஓவிய மாக்களும் வரந்தருதற்குரிய கடவுள ருருவங்களையும் எழுதவல்ல சித்திரகாரரும், தோலின் துன்னரும் துன்னவினைஞரும்-தோற்பதனிட்டு உறை முதலியன செய்யும் பாணரும் தையல் வேலை செய்யும் செம்மாரும், மாலைக்காரரும் காலக் கணிதரும் - மாலை தொடுப்போரும் சோதிட நூலோரும், நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப - சிறப்புடைய பண்ணும் திறமும் வாய்க்குமாறு, நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர்-மூவகையிடமும் கருவியும் மிடறும் ஒப்பக் காட்டும் திறனுடைய பாணரும், என்றிவர் பல்வகை மறுகும் என்ற இவர்களுடைய பலதிறப்பட்ட வீதியும்;

கோவேளென்பது பிற்காலத்தே வேட்கோவரென வழங்குவ தாயிற்று; ''வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்'' (பெரியபு, நீலக்கண். 1) என்பது காண்க. செய்ஞ்ஞர் என்புழி ஞகரம் பெயரிடைநிலை; அறிஞர் என்புழிப் போல. செம்பினாற் குட முதலியன செய்வோரைச் ''செம்பு செய்ஞ்ஞ'' ரென்றார். மரங்கொல் தச்சர், மரம் வெட்டிப் பலகை வாரை முதலிய செய்யும் தச்சர். மண்ணீட்டாளர், சுதை வேலை செய்யும் கொல்லர். வரந்தரவெழுதிய வோவியம் , தெய்வப் படிமம். ஓவிய மாக்கள் சித்திரச் சிற்பிகள். நிலமாவன, வலிவ, மெலிவு, சமம் என்ற மூன்று. கலம், யாழ் முதலிய இசைக்ருவிகள். கண்டம், மிடற்றாற்பாடல். பண், நூற்று மூன்றாகக் காட்டப்படும் பண்கள். திறம், பண்ணுக்கு இன்றியமையாதன வெனக் கூறப்படும் இருபத்தொரு வகைத் திறங்கள். ''குழலினும் யாழினும் குரல் முதலேழும், வழுவின் றிசைந்து வழித்திறங் காட்டும், அரும்பெறன் மரபின் பெரும்பா ணிருக்கை'' (சிலப். 5. 35-7.) என்பதனால் பண்ணுந் திறமும் வாய்க்குமாறும், ''யாழுங் குழலு மேங்கிய மிடறும் இசைவன கேட்ப'' (சிலப். 3.50-1.) என்பதனால் கருவிப் பாடலும் கண்டப் பாடலும் பாடப்படுமாறும் காண்க.

29.6

கச்சிமாநகர் புக்க காதை

45

விலங்கரம பொரூஉம் வெள்வளை போழ்நரோடு
இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும்
வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின்
கூத்தியல் பறிந்த கூத்தியர் மறுகும்

44

உரை

47

விலங்கு அரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு இலங்கு மணி வினைஞர் இரீ இய மறுகும் - வாளாரத்தினைக் கொண்டு வெள்ளிய சங்குகளை அறுப்போருடன் விளங்குகின்ற முத்துக்களைக் கோப்போர் இருக்கின்ற தெருவும், வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் - அரசர்க்காடும் கூத்து ஏனோர்க்காடுங் கூத்து என்னும் இருவகையின் இயல்பினையும் அறிந்த நாடக மகளிர் தெருவும்;

அரத்தின் தொழில் பொருள்களைக் குறுக்கிட்டறுப்ப தாதலால், ''விலங்கரம்'' எனச் சிறப்பித்தார். வளைபோழ்வது வேளாப்பார்ப் பனர்க்கும் தொழிலெனப் பண்டை நூல்கள் கூறுகின்றன: ''வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை'' (அகம். 24) என்பதும், ''வேளாப் பார்ப்பான் - யாகம் பண்ணாத பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்'' எனவரும் அதன் பழையவுரையும் காண்க. இருக்கையை யுடைய மறுகு, ''இரீ இய மறு'' காயிற்று. கூத்தியல்பு வேத்தியலும் பொதுவியலு மென விரண்டாதலை, முன்னரும் ''வேத்தியல் பொதுலிய லென்றிரு திறந்துக் கூத்து'' (மணி 2, 18-9) என்று கூறியிருத்தல் காண்க. கூத்தியர், கூத்தாடும் மகளிர்.

29.7

கச்சிமாநகர் புக்க காதை

50

பால்வே றாக வெண்வகைப் பட்ட
கூலங் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும்
கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும்

48

உரை

53

எண்வகைப்பட்ட கூலம் பால்வேறாகக் குவைஇய கூல மறுகும் எண்வகையினையுடைய கூலங்கள் வேறுவேறு பகுதி யாகக் குவிக்கப்பெற்ற தானியக் கடைத்தெருவும், மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-அரசனிடம் நின்றேத்துவோர் இருந்தேத்து வோர் நாழிகை யிசைக்கும் வேதாளிகர் என்போர் வீதியும், போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-இன்பத்தினை விற்கும் பொதுமகளிர் நிறைந்த வீதியும், கண்ணுழைகல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகும் - கண்களாற் காண்டற்கும் அரிதாகிய நுண்ணிய நூலினால் கைத்தொழின் மிக்குப் பலநிறங்களுடன் பொருந்திய ஆடைநெய்வோரின்வளப்ப மிக்க தெருவும்;

கூலம் பால் வேறாகச் குவைஇய மறுகு என இயைக்க எண்வகைக் கூலமாவன "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரை யொடு கழைவிளை நெல்லே'' (சிலப். 5. 23. அடி. மேற்) இவை தனித்தனியே பகுத்துத் தொகுக்கப்பட்டிருப்பது தோன்ற, ''பால்வேறாகக் குவைஇய'' என்றார். இருந்தேத்தல் முதலியவற்றைச் செய்யும் மாகதர் மூவரையும், ''சூதர் மாகதர் வேதா ளிகரொடு'' (சிலப். 5 48.) என்று பிறரும் கூறப. போக வேட்கை மிக்குவரும் ஆடவர்க்கு அதனை நல்கி, அவர் வரம்பிகவாமைக காத்தலின், ''போகம் புரக்கும் பொதுவர்'' எனப் பொதுமகளிரைக் கூறினார். நோக்கு நுழைய மாட்டாத கைவினையும் நுண்ணூலும் பல்வகை, வண்ணமுமுடைய உடையென்பதாம்; ''நோக்கு நுழைகல்லா நுண்மைய'' (பொருந. 82.) என்று பிறரும் கூறுப. வளம், ஈண்டுப் பொன்னின்மேற்று,

29.8

கச்சிமாநகர் புக்க காதை

55

பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்
பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோ ரருந்தொழில் குறையா மறுகும்
அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும்
எனைப்பெருக தொழில்செ யேனேர் மறுகும்
மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும்

54

உரை

59

பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் - பொன்னைக் கட்டளையில் உரைத்து ஓட்டங் கண்டு மாற்றினை அறுதியிடும் வண்ணக்கர் வாழும் நல்ல மாடங்களையுடைய வீதியும், பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் - மாணிக்க முதலிய பலவகை மணிகளை விற்கும் வாணிகர் நிலைபெற்ற வீதியும், மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் - மறையவருடைய முத்தீயோம்பல் முதலிய தொழில் குறைவுபடாத அந்தணர் வீதியும், அரசியன் மறுகும் அமைச்சியன் மறுகும் - அரசப் பெருவீதியும் அமைச்சர் பெருந் தெருவும், எனைப் பெருந் தொழில் செய்யும் ஏனோர் மறுகும் - ஏனைய பெரிய தொழில்களைச் செய்யும் சேனைத் தலைவர் முதலிய ஏனையர் வீதியும், மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் - ஊர்நடுவாய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்தியும் நாற் சந்தியும்;

பொன்னுரை காணும் வண்ணக்கரும் மாணிக்கம் முதலிய விற்கும் மணிவாணிகரும் பெருஞ் செல்வராதலின், அவருறையும் வீதிகளை ஏனை அந்தணர் அரசர் அமைச்சர் முதலாயினர் வீதிகளைச்சேரக்கூறினார். தீயோம்பல் மறையோதல் முதலியன உயர்ந்தனவாகக் கருதப்பட்டமை தோன்ற, "அருந்தொழில்" என்றார். தானைத் தலைமையும், அரசியற் பணியும், நாட்டுக்கு அரணாகும் பிறசெயல்களும் புரவோர் தொழில்களைப் "பெருந்தொழில்" என்றார். மன்றம் முதலிய இடங்கள் சான்றோர் இருந்து அறங் கூறுவதற்கும் கடவுள் வழிபாடு செய்வதற்கும் உரிய வாதலின், இவற்றைப் பிரித்துக் கூறினார். 'சதுக்கமும் சந்தியும் புதுப்பூக் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" (முருகு. 225-6.) முருகனை வழிபடும் திறம் சான்றோராற் குறிப்பிடப்படுமாறு காண்க.

29.9

கச்சிமாநகர் புக்க காதை

60 65

புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும்
கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்
சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும்
வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து
நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும்
சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும்
கோலங் குயின்ற கொள்கை யிடங்களும்
கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு

60

உரை

68

புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்-புதிதாகக் கொணர்ந்த யானைகளையும் பொன்னாலாய கிண்கிணி மாலைகளையுடைய குதிரைகளையும் நடையில் மேம்பாடுறப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைவாதுவரும் உறையும் அழகுமிக்க வீதியும், சேண் ஓங்கு தாழ்ந்த அருவி செய் குன்றமும் - மிக்க உயரத்திலிருந்து தாழ வீழுமாறமைந்த நீரருவி பொருந்திய கட்டு மலைகளும், வேணவா மிகுக்கும் விரைமரக்காவும் - மிக்க ஆர்வத்தை மேன்மேற் றூண்டும் நறுமணச் சோலையும், விண்ணவர் தங்கள் விசும்பிடம்மறந்து- தேவர்கள் தம்முடைய விண்ணுலகத்தையும் மறந்து, நண்ணுதற் கொத்த நன்னீரிடங்களும் - அடைதற்கு ஏற்புடைய நல்ல நீரினையுடைய பொய்கைகளும், சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்-அறச்சாலைகளும் பேரகங்களும் பொன்னாலமைந்த அம் பலமும், கொள்கை கோலம் குயின்ற இடங்களும் கண்டு மகிழ்வுற்று - நிதானவகைகளை உருப்படுத்தி ஓவியத்தால் அழகுறுத்தப் பட்ட தவச் சாலைகளும் ஆகிய அனைத்தயும் கண்டு உளம் மகிழ்ச்சியுற்று;

குதிரையின் செலவு முதலிய சிறப்பியல்களைக் கூறாது, "பொற்றாரை" விதந்தோதியது, புதிது கொணரப் பெற்றப் பயிற்சி செய்யப் படாமையுணர்ந்து நின்றது. கதி, செலவு, வடித்தல், குற்றம், போக்கி நற்செலவிற் பயிற்றுதல். திருத்தப்படாத சொல்லை, "வடியாக் கிளவி" (சிலப்பதிகாரம்-புறஞ்சேரி இறுத்த காதை, வரி 88) என்று சான்றோர் வழங்குமாறு காண்க. இயற்கை மலைபோல உயரமாகச் சமைத்து அதன் முடியிலிருந்து விழுமாறு அருவிகள் அமைத்த செய்குன்றங்கள் பண்டை நாளில் செல்வமிக்க நகரங்களில் இருந்தன வெனவறிக. உரோம் நாட்டு வரலாறுகளிலும் இத்தகைய செய்குன்றுகளும் செயற்கைச் சோலைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உலகின் அற்புதங்களாகவும் குறிக்கின்றனர். துறவியருள்ளத்திலும் இன்ப விழைவு பயக்கும் நலம் பொருந்திய சோலைகள் என்றற்கு, "வேணவா மிகுக்கும் விரைமரக்கா" என்றார். வேட்கை அவா - வேணவா என முடிந்தது. "வேணவாத் தீர்த்த விளக்கே" (பதிகம் 18.) என முன்பும் கூறினர். நீர் நிலைகளில் தெய்வமுறையு மென்பதுபற்றி, "விண்ணவர் "நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்கள்" என்றார். "அணங்குடைப் பனித்துறை" (ஐங். 174) எனப் பிறரும் கூறுப. பல மக்களும் ஒருங்கு கூடி இனிதிருக்கும் பேரகத்தைக் கூடமென்றார். பௌத்த முனிவர் இருந்து தவம் புரியுமிடங்களில் பௌத்த நூல்கள் கூறும் நிதானங்கள் ஒவ்வொன்றுக்கும் உருவங் கோலி ஓவியமெழுதி வைப்பது மரபு; இதனை அஜந்தா குகைகளில் குறித்திருப்பது காண்க. கொள்கை - நிதானம் பன்னிரண்டு. இத்தகைய வீதிகளையும் இடங்களையும் காண்போர் எப்பெற்றியராயினும் மகிழ்ச்சி கோடல் ஒருதலையாதலின், "கண்டு மகிழ்வுற்" றென்றார்.

29.10

கச்சிமாநகர் புக்க காதை

70

கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு
அந்தர சாரிக ளமர்ந்தினி துறையும்
இந்திர விகார மெனவெழில் பெற்று
நவையறு நாத னல்லறம் பகர்வோர்
உறையும் பள்ளிபுக் கிறைவளை நல்லாள்
கோவலன் றாதை மாதவம் புரிந்தோன்
பாதம் பணிந்துதன் பாத்திர தானமும்

68

உரை

74

இறைவனை நல்லாள்-முன் கையில் வளையினையுடைய மணிமேகலை, கொண்ட வேடமொடு-தான்கொண்ட மாதவன் வடிவத்துடன், அந்தரசாரிகள் அமர்ந்து இனிது உறையும் - விசும்பின் வழியாகச் செல்வோர் இனிதாகத் தங்குகின்ற, இந்திர விகாரம் என எழில் பெற்று - இந்திர விகாரத்தைப் போலும் அழகு கொண்டு, நவையாறு நாதன் நல்லறம் பகர்வோர் உறையும் - குற்ற மற்ற புத்தனது அருளறத்தைக் கூறுவோராகிய துறவியர்இருக்கும், பள்ளிபுக்கு - தவப் பள்ளியை யடைந்து, கோவலன் தாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்து - கோவலற்குத் தந்தையும் அவற்குற்றது கேட்டுத் துறவு பூண்டு தவம் புரிவோனுமாகிய மாசாத்துவானைக் கண்டு அவன் அடிகளை வணங்கி;

கோவலன் தாதையும் கச்சிவேந்தனும் மணிமேகலையின் உண்மையுரு வுணர்ந் துறையாடுப வாயினும் பிறரெல்லாம் மாதவனென்றே கொள்ளுமாறு மணிமேகலை மாதவன் வேடத்தோடே யிருத்தலின் "கொண்டவேடமொடு" எனவற்புறுத்தினார். இவ்வேடம் கச்சிமாநகர்க் கண் அறவணனைக் கண்டு அமுதூட்டிய பின்பே நீங்குகிறதென வறிக. இந்திரவிகாரம், இந்திரனால் மனத்தாற் சமைக்கப்பட்ட அரங்கு. இதன் கண்ணிருந்து வேதசாரணர் அறம் பகர்வர் என்ப. இந்திரவிகார மென எழில் பெற்றுறையும் பள்ளி, அறம் பகர்வோர் உறையும் பள்ளியென வியையும்: மாசாத்துவான் துறவு பூண்ட செய்தி பின்னர் அவனாலேயே கூறப்படுகிறது.

29.11

கச்சிமாநகர் புக்க காதை

75 80

பாதம் பணிந்துதன் பாத்திர தானமும
தானப் பாயத்தாற் சாவக மன்னவன்
ஊனமொன் றின்றி யுலகாள் செல்வமும்
செல்வற் கொணர்ந்தத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்டப் பிறப்பினை யுணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்ன ருயர்தெய்வந் தோன்றி
மனங்கவல் கெடுத்தது மாநகர் கடல்கொள

74

உரை

80

தன் பாத்திரதானமும் - தன் கையிலுள்ள அமுத சுரபியால் செய்யப்படும் பெருஞ் சோற்றறமும், தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்று இன்றி உலகாள் செல்வமும் - அவ்வாறு சோறளித்த புண்ணியப் பயனால் ஆபுத்திரன் சாவக நாட்டினை யாளும் புண்ணிய ராசன் குறைவொன்றும் இல்லாமல் அரசளிக்கும் பேறு பெற்றதும், செல்வற் கொணர்ந்து அத்தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை உணர்ந்ததும்-அவ்வரசனை அழைத்துப்போய் மணிபல்லவத்தின்கண் ணுள்ள அப்பீடிகை விளங்கக் காண்பிக்க அவனைத் தன் முற் பிறப்பினை உணர்வித்ததும், உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் கெடுத்ததும்-பண்டைப் பிறப்புணர்ந்த சாவக மன்னன் முன்னே தீவதிலகை என்னும் உயரிய தெய்வம் வெளிப்பட்டு அவனது மனக்கவற்சியை ஒழித்ததும்;

தன் கையிலுள்ள அமுதசுரபியை மாசாத்துவான் வியந்து நோக்கினானாக; அவற்கு முதற்கண் அதன் சிறப்புக் கூறினாளாதலாலும், இந்நூலாசிரியர், அதனைப் பின்னர், (வரி. 217-32) விரியக் கூறுகின்றா ராதலாலும், ஈண்டுப் "பாத்திரதானம்" என்றொழிந்தார். இவ்வறத்தால் விளையும் பயன் இது வென்றற்கு ஆபுத்திரன் சாவக வேந்தனான வரலாற்றைக் கூறுமாற்றால் "உலகாள் செல்வம்" என்றார். வேந்தனாகியும் அவ்வறப்பயனே நுகர்ந்தமை தோன்ற, அவனை, "செல்வன்" என்றார். தீவகம், மணிபல்லவம். ஒல்கல், சுருங்கல். ஆண்டுள்ள புத்தபீடிகை அவன் வரலாற்றை விரியக் கூறினமையின், "ஒல்காது காட்ட" என்றார். உணர்ந்தது: பிறவினைப் பொருட்டு. உயர் தெய்வம்-தீவதிலகை. இந்திரனால் நிறுவப்பட்ட தெய்வமாதலால், "உயர் தெய்வ" மெனச் சிறப்பித்தார். மனங்கவல் - மனக்கவலை. பண்டைப் பிறப்பு வரலாறு கேட்ட புண்ணியராசன் தன் முன்னைப் பிறவியிலெடுத்த உடம்பின் நிலைகண்டு கவன்றானாதலின், (25: 214-20) அதனை "மனங்கவல்" என்றார். கவல்: முதனிலைத் தொழிற் பெயர்.

29.12

கச்சிமாநகர் புக்க காதை

80

85

90

மனங்கவல் கெடுத்தது மாநகர் கடல்கொள
அறவண வடிகளுந் தாயரு மாங்குவிட்டு
இறவா திப்பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் றன்னா டெய்தத்
தீவகம் விட்டித் திருநகர் புகுந்ததும்
புக்கபி னந்தப் பொய்யுரு வுடனே
தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும்
அவ்வவர் சமயத் தறிபொரு ளெல்லாம்
செவ்வி தன்மையிற் சிந்தைவை யாததும்
நாத னல்லறங் கேட்டலை விரும்பி
மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும்
சொல்லின ளாதலிற் றூயோய் நின்னையென்

80

உரை

91

மாநகர் கடல்கொள அறவணடிகளும் தாயரும் ஆங்கு விட்டு இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்-காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல்கொள்ள அறவண முனிவரும் மாதவியும் சுதமதியும இறந்து போகாமல் அம் முதுநகரைவிட்டு இவ் வஞ்சி நகரத்தின்கட் புக்கதைத் தன்னைக் கேட்பித்ததும், சாவக மன்னன் தன்னாடு எய்த அத்தீவகம் விட்டு இத்திருநகர் அடைந்ததும் - புண்ணியராசன் தனது சாவகநாடு சேரத் தான் அம் மணிபல்ல வத்தினை விட்டு இவ்வழிய நகரத்தைச் சேர்ந்ததும், புக்கபின் அந்தப் பொய்யுருவுடனே தக்க சமயிகள் தந் திறம் கேட்டதும் - இப்பதி புகுந்தபின் முன் கொண்ட மாதவன் வடிவத்துடனேயே பல்வகைச் சமயவாதிகளின் சமயக் கருத்து வகைகளைக் கேட்டதும், அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் செவ்விது அன்மையிற் சிந்தை வையாததும் - அவரவர் சமயங்களில் அறிந்துரைத்த மெய்ப்பொருள்கள் எல்லாம் செவ்வியன அல்லாமையால் அவற்றைத் தான் மனத்துட் கொள்ளாமையும், நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் சொல்லினள் ஆதலின் - புத்தன் அருளறத்தைக் கேட்க விரும்பி அறவணடிகளைத் தேடித் தான் வந்த வரலாற்றையும்ங் கூறினளாகலின்;

மாநகர், காவிரிப்பூம்பட்டினம். "இறவாது இப்பதிப் புகுந்தது" என்றதனால், கடல்கோட்காலத்தே பலர் இறந்தமை பெறப்படுகிறது. தீவதிலகை கூறத் தான் கேட்டறிந்தாளாகலின், அத்தெய்வத்தாலென்பது வருவிக்கப்பட்டது. நகரின் செல்வமுற்றும் அறிந்து கூறலின், இந்நகரெனச் சுட்டியொழியாது "இத்திருநகர்" என்றாள். மாவதனுரு, தன்னியற்கையுரு வன்மையின், "பொய்யுரு" வென்றாள். பிறாண்டும், "மாயை" (245) என்பள். கேட்டற்குரிய தகுதியுடையன என்பது தோன்ற, "தக்க சமயிகள் தந்திறம்" என்றாள். செவ்விது: பன்மை யொருமை மயக்கம். பிறாண்டும் "செவ்விதன்மையிற் சிந்தையின் வைத்திலேன் (29 : 44) என்பது காண்க. மாதவன், அறவணன். அவன் கடல்கோட் காலத்தே வஞ்சிநக ரடைந்தானெனத் தெய்வம் கூறின மையின், அவனைக் காண நினைந்து வந்தமை தோன்ற, "மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும்" என்றார். வஞ்சியினின்றும் அவர்கள் கச்சி மாநகர் சென்ற செய்தியைப் பின்னர்மாசாத்துவான் உரைக்கின்றான்.

29.13

கச்சிமாநகர் புக்க காதை

95 100

சொல்லின ளாதலிற் றூயோய் நின்னையென்
நல்வினைப் பயன்கொல் நான்கண் டதுவெனத்
தையல் கேணின் றாதையுந் தாயும்
செய்ததீ வினையிற் செழுந்கர் கேடுறத்
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின்
மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து
தினைத்தனை யாயினுஞ் செல்வமும் யாக்கையும்2
நிலையா வென்றே நிலைபெற வுணர்ந்தே
மலையா வறத்தின் மாதவம் புரிந்தேன்
புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம்
திருந்திய நன்னகர்ச் சேர்ந்தது கேளாய்

91

உரை

102

தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என - தூய குணஞ் செய்கைகளையுடையாய், நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி மேலும் கூறலுற்று, தையல் கேள், நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்துமை கேட்டு - நங்காய் கேட்பாயாக, நின் தந்தையும் தாயும் முற்பிறப்பிற் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரைமாநகர் தீக்கிரையாகிக் கேடெய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு, சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆகலின் - புத்த தேவனின் அருளறத்தினைப் புரியுந் தகுதியுடையேனாகலின், மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து - இல்வாழ்க்கையைப் பொய்யென வறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத்தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே - பொருளும் உடலும் தினையளவேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் - மாறுபடாத நல்லறத்தினையுடைய பெருந்தவஞ் செய்யலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்-அங்ஙனம் தவமேற்கொண்ட யான் அழகியவஞ்கொடியின் பெயரினையுடைய இவ்வழகு மிக்க நகரத்தினை அடைந்த காரணத்தைக் கேட்பாயாக;

கோவனையும் கண்ணகியையும் "நின் தாதையும் தாயும்" என்றான். முற்பிறப்பிற் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றாரென்பான், "செய்த தீவினையின் துன்புற" என்றும் அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினான். புத்தனைச் சுகதனென்ப. அவனுரைத்த அருளறம் அன்பறத்தின் காரியமாகதல் பற்றி, "அன்புகொள் அறம்" என்றார். புத்தவறங்களை "மலையாவற" மென்றது எத்திறத்தோரும் தவறென மறுத்தற் காகானை பற்றி, எல்லா வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டுமென்ற அறம் எம்மதத்தோர்க்கும் சம்மதமானதென்பதை, "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி, தின்னுயிர் நீக்கும் வினை "(குறள் 327) எனத் திருவள்ளுவர் கூறவது காண்க. உயரிய நாகரிகத்திற்கேற்ற கூறுகளெல்லாம் குற்றமறப் பொருந்திய நகரமென்றற்குத் "திருந்திய நன்னக" ரென்றான். `

29.14

கச்சிமாநகர் புக்க காதை

105

குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்னாள்
துப்படு செவ்வாய்த் துடியிடை யாரொடும்
இப்பொழில் புகுந்தாங் கிருந்த வெல்லையுள்

103

உரை

106

குட்டுவர் பெருந்தகை - சூட்ட நாட்டவர்க்குப் பெரிய தகுதியடைந்த தலைவனும், விடர்ச்சிலை பொறித்த வேந்தன் - மலை முடியுலுள்ள சரிவிலே தன் விற்பொறியைய் பொறித்த வேந்தனுமாகிய; குடக்கோச் சேரலன்-குடக்கோச் சேரலாதன் என்பான்; முன் நாள் - முன்பொரு காலத்தே; துப்படு செவ்வாய்த் துடியிடையாரொடு-பவளம் போற் சிவந்த வாயும் துடிபோலு மிடையுமுடைய உரிமை மகளிருடன் போந்து; இப்பொழில் புகுந்து-இச் சோலையை யடைந்து; இனிதிருந்த எல்லையுள் - இன்ப நுகர்ந் திருந்த போழ்து;

குட்டுவர் - குட்ட நாட்டவர்; "பல்குட்டுவர் வெல்கோவே" (பத்- மதுரைக் 105) என்பது போல. மிக்க தகுதியுடையாரன்றிப் பிறர் தலைவராதல் கூடாமை தோன்ற, "பெருந்தகை" யென்றார். விடர்-மலை முடியிலுள்ள சரிவு; மலை முடியிடையுள்ள பிளவாய் மக்கள் வழங்கும் வழியைச் சார்ந்ததுமாம்; நவிரமலைப் பிளவில் பல்லவர் தம் வெற்றியைக குறித்த செய்தியைத் திருவண்ணாமலைக் கல்வெட்டுக் கூறுகிறது. குடக்கோச் சேரலாதன் சேரன் செங்குட்டுவற்கு ஒன்பது தலைமுறை மூத்தவனாதலின், இவனை அச்செங்குட்டுவன் தந்தையான இமயவரம்பனாகக் கோடல் பொருந்தாது ; "நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை, முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு, நீங்காக் காதற் பாங்கன்" (மணி. 28: 123-5) என்று இவ்வாசிரியர் கூறுதல் காண்க. கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்த காலத்து சேர நாட்டு வேந்தன் செங்குட்டுவனென வுணர்க. இப்பொழில் என்றது, மாசாத்துவான் இருந்து தவம் புரிந்த சோலை. ஆங்கு: அசைநிலை; ஒரிடத்தைச் சுட்டி ஆங்கென்றானென்றுமாம்.

29.15

கச்சிமாநகர் புக்க காதை

110

இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை யெய்தி வரங்கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர்
அரைசற் கேது வவ்வழி நிகழ்தலின்
புரையோர் தாமுமிப் பூம்பொழி லிழிந்து
கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி

107

உரை

113

இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும்-இலங்கைத் தீவின்கணுள்ள சம்னொளி என்னும் மலையை அடைந்து வலஞ்செய்து வணங்கி மீள்வோராகிய, தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத்து இயங்குவோர் - தரும சாரணரும் நற்குணங்கள் அமைந்தோரும் கரிய முகிற் கூட்டங்களையுடைய விசும்பின் வழியே திரிவோரும் ஆகிய, புரையோர் தாமும் அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலில்-உயர்ந்தோர்கள் அரசனுக்கு நல்வினையாகிய காரணம் பயனளித்திடற்கு அவ்விடத்தே தோன்றிடலால், இப் பூம்பொழில் இழிந்து - இவ் வழகிய பொழிலின் கண்ணே இளங்கி, கற்றலத்து இருந்துழி - சிலாதலத்தின்கண் அமர்ந்தபொழுது;

புத்த தருமத்தை ஆங்காங்குச் சென்று பகரும் தொழிலினரைத் தருமசாரணரென்ப. அசோகமன்னனால் தருமவுரை குறித்துநாடுகட்கு விடுக்கபட்டோரைச் சாரணரென்பவென நாட்டு வரலாறுகூறுகிறது. ஈண்டுக் கூறப்படும் சாரணர் இலங்கைக்குச் சென்று மீள்வோராவர். கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோரென்றற்குக் கருமுகிற்கூட்டத்தை ஊர்தியாகக் கொண்டு வானவீதியிற்செல்பவரென்றுமாம். புரை யோர் - உயர்ந்தோர். உம்மை: சிறப்பு. இதனால் வான்வழியாகச் செல்லும் சாரணர் இப் பொழிற்கண் இறங்குதற்குக் காரணம் கூறுதலின், "அரசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்" என்றார். அவர்கள் இருந்து அறங்கூறுதற்பொருட்டுக் கற்றலம் எடுத்துவைத்தல் மரபு; இதனைச் சிலா தலம் என்றலும் வழக்கு; "இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப், பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர்" (சிலப்.10:161-163) என்று அடிகள் கூறுவது ஒப்புநோக்கத்தக்கது.

29.16

கச்சிமாநகர் புக்க காதை

115 120

முற்றவ முடைமையின் முனிகளை யேத்திப்
பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின்
அங்கவர்க் கறுசுவை நால்கை யமிழ்தம்
பாத்திரத் தளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவை யாரொடு மேத்தின னிறைஞ்சலில்
பிறப்பிற் றுன்பமும் பிறவா வின்பமும்
அறத்தகை முதல்வ னருளிய வாய்மை
இன்ப வாரமு திறைவன் செவிமுதல்
துன்ப நீங்கச் சொரியு மந்நாள

114

உரை

122

"முற்றவம் உடைமையின் காவலன் விரும்பி முனிகளை ஏத்தி - முற்பிறப்பிற் செய்த நற்றவமுடையோனாகலின் அரசன் அச் சாரணரை விருப்பத்துடன் கண்டு துதித்து, பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின் அங்கவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ் தம் பாத்திரத்து அளித்து - அவருடைய தாமரை மலர்போலும் திருவடிகளை விளக்கி அவர்க்கு ஏற்ற தன்மையினால் அறுசுவையினையும் உடைய நான்குவகைப்பட்ட உணவுகளையும் அளித்து, வேத்தவையாரொடும் பலபலசிறப்பொடு ஏத்தினன் இறைஞ்சலின் -அரசவை யுறுப்பினரோடு கூடிப் பற்பல சிறப்புக்களைச் செய்து துதித்து வணங்கினா னாகலின், பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும்-பிறப்பினால்வரும் இன்னலும் பிறவாமையினாற் பெறும் இன்பமும், அறத்தகை முதல்வன் அருளிய வாய்மைஇன்ப ஆரமுது - அற முதல்வனாகிய புத்தன் அருளிச் செய்த நால்வகை வாய்மையுப் ஆகிய இன்பம் பயக்கும் கிடைத்தற்கரிய அமிழ்து போலும் அறவுரைகளை; துன்பம் நீங்க - பிறவித் துன்பம் நீங்குமாறு, இறைவன் செவி முதல் சொரியும் அந்நாள் - மன்னவன் செவிகளிடமாக உரைத்த அந்நாளில்;

"தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்: 262) என்பதுபற்றி, "முற்றவம் உடைமையின்" என்றார். இனிப்பு, புளிப்பு முதலாகச்சுவை ஆறும், தின்னல் பருகல் முதலாக உணவுவகை நான்கும் கொள்க. சாரணர்க்குரிய வழிபாட்டினைத் தனித்த முறையினும் பல்வகைப் சிறப்புக்களை வேத்தவையாருடனும் வேந்தன் ஆற்றினான், அஃது அரசுமுறை யாதலின். பிறப்பிற் றுன்பம்-பிறப்பினானாகுந் துன்பம்; "பிறந்தோருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்" (மணி. 2: 54) என முன்னரும் கூறினர். அறத்தை அமிழ்தென்றராகலின், அதற்கேற்ப, "செவி முதல் சொரிந்து" என்றும், அதனால் விளையும் பயனை, "துன்பம் நீங்க" என்றும் கூறினார். தவமுடைமையின், காவலன் ஏத்தி, விளக்கி, அளித்து, இறைஞ்சலின், அச் சாரணர் வாய்மை யின்பவாரமுது செவி முதற் சொரியு மந்நாள் என இயையும்.

29.17

கச்சிமாநகர் புக்க காதை

125

130

135

நின்பெருந் தாதைக் கொன்பது வழிமுறை
முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு
நீங்காக் காதற் பாங்க னாதலின்
தாங்கா நல்லறந் தானுங் கேட்டு
முன்னோர் முறைமையிற் படைத்ததை யன்றித்
தன்னா னியன்ற தனம்பல கோடி
எழுநா ளெல்லையு னிரவலர்க் கீத்துத்
தொழுதவம் புரிந்தோன் சுகதற் கியற்றிய
வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம்
ஈனோர்க் கெல்லா மிடர்கெட வியன்றது
கண்டுதொழு தேத்துங் காதலின் வந்தித்
தண்டாக் காட்சி தவத்தோ ரருளிக்
காவிர்ப் பட்டினங் கடல்கொளு மென்றவத்
தூவுரை கேட்டுத் துணிந்திவ ணிருந்தது

123

உரை

136

நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன் - நின் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பதுதலைமுறை முன்னோனாகிய கோவலன் என்பான், மன்னவன் தனக்கு நீங்காக் காதற் பாங்கன் ஆகலின்-குடக்கோச் சேரலாதனுக்கு எப்பொழுதும் பிரியாத அன்புடை நண்பனாதலின், தாங்கா நல்லறம் தானும் கேட்டு - தரும சாரணருரைத்த நல்லறத்தினை அரசனுடனிருந்து தானும் கேட்டு, முன்னோர் முறைமையிற் படைத்ததை அன்றித் தன்னால் இயன்ற தனம் பல கோடி-தன் முன்னோர்கள் நல்வழியினாலே படைத்த பெரும் பொருளோடே தன்னால் ஈட்டப்பட்ட அளவிறந்த நிதிகளையும், எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து-ஏழு நாட்களுள் இரப்போர்க் களித்து; தொழுதவம் புரிந்தோன்-யாவரும் வணங்கும் தவம் புரிந்தணன்; சுகதற்கு இயற்றிய வானோங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் - புத்த தேவனுக்கு வானளாவிய மலையின்கண் அமைத்த வெள்ளிய ஒளியினையுடைய கோயில், ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது - இவ் வுலகின் கணுள்ளோர்கட்கெல்லாம் துன்பம் நீங்கும் பொருட்டு அமைந்தது, கண்டு தொழுது ஏத்தும் காதலின் - யான் அதனைக் கண்டு வணங்கித் துதிக்கும் விருப்பத்தாலாகும்; வந்து - இவண் வந்து, இத் தண்டாக் காட்சித் தவத்தோர் காவிரிப்பட்டினம் கடல்கொளும் என்ற - நீங்காத நல்லறிவினையுடைய இப் பெருந் தேவர்கள் காவிரிப்பூம்பட்டினம் கடல்கோட்படும் எனச் சொல்லி யருளிய; அத் தூவுரை கேட்டுத் துணிந்து இவண்இருந்தது - அந் நன்மொழிகளைக் கேட்டு அங்குப் போதலாகாதெனத் துணிந்தமையால் இவ்விடத்தே யிருப்பேனாயினேன் எ - று.

"திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்" (102) என்றவன் அதற்குக் காரணம் கோவலன் இயற்றிய சயித்தியம் இயன்றது கண்டு தொழுதேத்தும் காதலினால், தூவுரைகேட்டுத் துணிந்தமையால் இவணிருந்தது என்றான் என இயைத்துக்கொள்க. கோவலனோடு அக்குலம் தொடர்பற்றுப் போதலின் "நின் பெருந் தாதை" யென்றான். முன்னோனாகிய கோவலன் வேந்தனொடு கூடியிருந்து அறங்கேட்டற்குக் கரணம் கூறுவான், "மன்னவன் தனக்கு நீங்காக் காதற்பாங்க னாதலின்" என்றும், மலைமேற் கட்டிய சீகோவில் என்றற்கு, "வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம்" என்றும், அதனைத் தான் வழிபட விரும்பியதற்குக் காரணம் இதுவென்பான், "ஈனோர்க் கெல்லா மிடர் கெட வியன்றது" என்றும் கூறினான். துணிந்து: காரணப்பொருட்டு.

29.18

கச்சிமாநகர் புக்க காதை

140 145

இன்னுங் கேளாய் நன்னெறி மாதே
தீவினை யுருப்பச் சென்றநின் றாதையும்
தேவரிற் றோற்றிமுற் செய்தவப் பயத்தால்
ஆங்கத் தீவினை யின்னுந் துய்த்துப்
பூங்கொடி முன்னவன் போதியி னல்லறந்
தாங்கிய தவத்தாற் றான்றவந் தாங்கிக்
காதலி தன்னொடு கபிலையம் பதியில்
நாத னல்லறங் கேட்டுவீ டெய்துமென்று
அற்புதக் கிளவி யறிந்தோர் கூறச்
சொற்பய னுணர்ந்தேன் றோகை யானும்

137

உரை

146

நன்னெறி மாதே இன்னுங் கேளாய் - தவநெறியில் ஒழுகும் மணிமேகலையே இன்னும் யான் கூறுவதைக் கேட்பாயாக; தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்-தீவினைவந்து தன் பயனை நல்குதலாலே கொலையுண்டிறந்த நின் தந்தையும், முற்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி - முன்செய்த தவப் பேற்றால் உம்பருலக வாழ்வினை எய்தி, ஆங்கத் தீவினை இன்னுந் துய்த்து - பழவினையின் பயனை நுகர்ந்து, பூங்கொடி முன்னவன் போதியில் நல்லறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி-இளங்கொடியே, புத்தர் அரசமரத்தின்கீழ் அருள றத்தைமேற்கொண்டிருக்குங்கால் தானும் தவம் பூண்டு; காதலி தன்னொடு கபிலையம்பதியில் நாதன் நல்லறம் கேட்டு வீடெய்தும் என்று - மனைவி கண்ணகியுடன் கபிலைப் பதியில் புத்தன் அறவுரைகளைக் கேட்டு நிருவாண மடைவான் என்று, அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-தெய்வக் கிளவிகளை உணர்ந்தோர் கூற, சொற்பயன் உணர்ந்தேன் - அச்சொற்களின் பயனை நான் அறிந்தேன்.

"நன்னெறி மாதே" யென்றான், கோவலன் இறந்தற்குக் காரணம் அவனது முன்னைவினை என்பதை யுணர்ந்திருப்பதுபற்றி. வினை உருத்தல்-பிறவுருவுடைப் பொருள் வாயிலாக வினையானது தன் பயனையூட்டுதல். பொற்கொல்லன் வேந்தன் முதலாயினார் வாயிலாகக் கொலைத் துன்பமாகிய பயனை நல்குவது. அடிகளும், "ஊழ்வினை யுருத்துவந்தூட்டு" மென்பது காண்க. நல்வினைப் பயன் முன்னரும்தீவினைப் பயன் பின்னரும் துய்க்கப்படுமென்பது சான்றோர் முடிபாதலின், "தேவரிற் றோற்றி" யென்றும், "இன்னும் துய்த்து" என்றும் கூறினான். "மேற் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம், அவ் வினை யிறுதியின் அடுசினப் பாவம், எவ்வகை யானு மெய்துத லொழியாது" (26:35-7.) எனக் கண்ணகி கூறுதல் காண்க. இது சமண சமயத்துக்கும் உடன்பாடாதலை "நல்வினை கழிதலும் நலியுந் தீவினை, செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது" (சூளா. கல். 231.) என்பதனாலறிக. "ஆங்கத் தீவினையின்னும் துய்த்து" என்பதனால் கோவலன் முன்னைத் தீவினைப் பயன் முற்றும் நுகர்ந்து கழித்தற்குள்ளாகவே கொலையுண்டானென்றும், அதனைத் தேவப் பிறப்புக்குப் பின்பு நுகர்வனென்றும் அறிக. கோவலனாயிருந்த காலத்து நல்வினையே புரிந்தானென்ப: "இம்மைச் செய்தன யான்றி நல்வினை" (சிலப்.15:61) என்பதனாலறிக. எதிர்கால நிகழ்ச்சியை விளங்க முற்கூட்டிக் கூறலின் "அற்புதக்கிளவி" யென்றும், அது பொய்யா தென்றற்கு, "அறிந்தோர் கூற" என்றும் கூறினான்.

29.19

கச்சிமாநகர் புக்க காதை

150

சொற்பய னுணர்ந்தேன் றோகை யானும்
அந்நா ளாங்கவ னறனெறி கேட்குவன
நின்னது, தன்மையந் நெடுநிலைக் கந்திற் றுன்னிய
துவதிக னுரையிற் றுணிந்தனை யன்றோ
தவநெறி யறவணன் சாற்றக் கேட்டனன்
ஆங்கவன் தானுநின் னறத்திற் கேதுப்
பூங்கொடி கச்சி மாநக ராதலின்
மற்றம் மாநகர் மாதவன் பெயர்நாள்
பொற்றொடி தாயரு மப்பதிப் படர்ந்தனர்

146

உரை

154

தோகை-மயில் போல்வாய்; யானும் அந்நாள் அறநெறி கேட்குவன் நானும் புத்தன் போதியின்கீழ் உரைத்தருளும் அறநெறிகளை அப்போது உடனிருந்து கேட்பேன்; நின்னது தன்மை அந் நெடுநிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையில் துணிந்தனை அன்றோ-உன்னுடைய பின்னிகழ்ச்சிகளைக் கந்திற்பாவை மொழியால் தெளிந்தனை யல்லவோ, அறவணன் சாற்றக் கேட்டனன் - அறவண முனிவர் கூற அதனை நான் கேள்வியுற்றேன், ஆங்கவன் தானும் நின் அறத்திற்கு ஏதுப் பூங்கொடி கச்சிமா நகராதலின் - பூங்கொடிபோல்வாய் நின் அறததிற்குரிய ஏதுநிகழ்ச்சி கச்சி நகரத்தின்கண் உண்டாமாகலான் அறவணவடிகள் ஆண்டுச் சென்றனர், அம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் - அம் மாதவர் காஞ்சி நகரத்திற்குச் சென்ற நாளில் நின் அன்னையரும் ஆண்டுச் சென்றனர்;

"அறநெறி கேட்குவன்" என்பது மாசாத்துவாற்கு எதிர்காலத்தில் நிகழ்வது கூறியது. மணிமேகலைக்கு எதிர்காலத்து நிகழவிருப்பதனை "நின்னது தன்மை" என்றும், அது கந்திற்பாவை வருவதுரைத்த காதைக்கண், "துவதிக னுரைக்கும் சொல்லலுஞ் சொல்லுவேன்" என்று தொடங்கிக் கூறுவனவற்றால் விரியக் கூறப்படுதலின், "துவதிகனுரையிற் றுணிந்தனை" யென்றும் கூறினான். மணிமேகலைக்குப் புத்தவறம் கேட்டற்குரிய ஏதுநிகழ்ச்சி கச்சிமாநகர்க்கண் எய்துமென அறவணவடிகளால் தனக்கு முன்பே கூறப்பட்டிருப்பதாக மாசாத்துவான் கூறுவது மணிமேகலையைக் கச்சிமாநகர்க்குச் செல்லப் பணிக்கும் குறிப்பிற்று. அதனையே மேலும்வற்புறுத்தற்கு, அவன் கச்சி நகர்க்குச் சென்ற செய்தியைத் தெரிவித்து நீயும் ஆண்டுச் செல்க வென்றற்கு "தாயரும் அப்பதிப் படர்ந்தன" ரென்றான். இனிக் கச்சி மாநகரின் நிலைமையைக் கூறுகின்றான்.

29.20

கச்சிமாநகர் புக்க காதை

155 160

அன்னதை யன்றியு மணியிழை கேளாய்
பொன்னெயிற் காஞ்சி நாடுகவி னழிந்து
மன்னுயிர் மடிய மழைவளங் கரத்தலின்
அந்நகர் மாதவர்க் கைய மிடுவோர்
இன்மையி னிந்நக ரெய்தினர் காணாய்
ஆருயிர் மருந்தே யந்நாட் டகவயின்
காரெனத் தோன்றிக் காத்தனின் கடனென
அருந்தவ னருள வாயிழை வணங்கித்

155

உரை

162

அணியிழை அன்னதை அன்றியும் கேளாய்-புனையிழாய் அதனை அல்லாமலும் இன்னுமொன்று கேள், பொன்னெயில் காஞ்சிநாடு கவின் அழிந்துமன்னுயிர் மடிய மழைவளம் கரத்திலின்- பொன் மதிலையுடைய கச்சி நகரம் அழகு கெடப் பலவுயிர்களும் இறக்குமாறு மழைவளம் இல்லதொழிந்தமையால், அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் - அப் பதியில் இருந்த அறவோருக்கு அன்னமிடுவோர் இல்லாமையினால் இப் பதியை அடைந்திருக்கின்றவர்களைக் காண்பாயாக, ஆருயிர் மருந்தே அந் நாட்டு அகவையில் காரெனத் தோன்றி காத்தல் நின்கடன் என அருந்தவன் அருள - ஆகலின் அரிய வுயிரை அளிக்கும் மருந்து போல்வாய்! நீ அந் நகரத்தின்கண் மழைதரும் முகிலெனத் தோன்றி அவ் வுயிர்களைக் காப்பாற்றுதல் நினக்குக் கடமையாம் என்று மாசாத்துவான் கூற;

அழிந்து: செயவெனச்சத்திரிபு. மடிய: செயவெனெச்சம் காரியப் பொருட்டு. அந்நகர் மாதவர்க் கென்றான், மாதவர்க்கு யாதும் ஊரே யாவரும் கேளிரேயாயினும், பௌத்த சமயப் பேரறமுணர்ந்த பெரியோர் இருக்கும் சிறப்புப்பற்றி, ஆண்டிருந்து வந்திருந்தோரை, "அந்நகர் மாதவர்" என்றான். அவர்கள் ஈண்டு வந்திருத்தற்குக் காரணத்தை "ஐயமிடுவோர் இன்மையின்" என்பதனால் குறித்தான். ஆருயிர் மருந்தாகிய உணவுதரும் அமுதசுரபியை யுடைமைபற்றி, மணிமேகலையை, 'ஆருயிர் மருந்தே'' என்றான். வரையாது வழங்கவேண்டுமென்ற குறிப்பால், "காரெனத் தோன்றி" என்றும், செய்யாமை குற்றமென்பது தோன்ற, "காத்தல் நின் கடன்" என்றும் குறிப்பாய்ச் சொன்னான் என்பது.

29.21

கச்சிமாநகர் புக்க காதை

165

170

175

அருந்தவ னருள வாயிழை வணங்கித்
திருந்திய பாத்திரஞ் செங்கையி னேந்திக்
கொடிமதின் மூதூர்க் குடக்கணின் றோங்கி
வடதிசை மருங்கின் வானத் தியங்கித்
தேவர் கோமான் காவன் மாநகர்
மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய
பொன்னகர் வறிதாப் புல்லென் றாயது
கண்டுளங் கசிந்த வொண்டொடி நங்கை
பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு
நடுநக ரெல்லை நண்ணின ளிழிந்து
தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி
செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப்
பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய
சேதியந் தொழுது தென்மேற் காகத்
தாதணி பூம்பொழி றான்சென் றெய்தலும்

162

உரை

176

ஆயிழை வணங்கி - அழகிய இழையணிந்த மணிமேகலை மாசாத்துவானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, திருந்தியபாத்திரம் செங்கையின் ஏந்தி-தெய்வத்தன்மை பொருந்திய அமுதசுரபியைத் தன் சிவந்த கைகளில் ஏந்தி, கொடிமதில் மூதூர்க்குடக்கண் நின்று ஓங்கி-கொடிகளையுடைய மதில் சூழ்ந்த பழமையாகிய வஞ்சிநகரத்தின் மேற்றியசையினின்றும் எழுந்து, வடதிசை மருங்கின் வானத்து இயங்கி - வடதிசைப் பக்கமாக விசும்பிற் சென்று, தேவர்கோமான் காவல்மாநகர் மண்மிசை கிடந்தென வளந்தலை மயங்கிய - தேவர்கட்கரசனான இந்திரன் அரசு புரியும் அமராவதியே வந்து நிலவுலகில் இருந்ததுபோல வளஞ்சிறந் திருந்த, பொன்னகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒண்டொடி நங்கை - அழகிய நகரமான கச்சிமாநகரம், வறுமையாற் பொலிவிழந்து புல்லென்றிருந்த தன்மையைக் கண்டு மனங் கசிந்த மணிமேகலை, பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து - அழகிய கொடி யினையுடைய அத்தொன்மை நகரத்தின் மதிலை வலஞ் செய்து நடுவூரின் எல்லையை அடைந்து இறங்கி, தொடுகழற்கிள்ளி துணையிளங் கிள்ளி - தொடுகழற் கிள்ளியின் தம்பியாகிய இளங்கிள்ளி, செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம்போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது - சிவந்த பொன்போன்ற பெரிய கிளைகளையும் அழகிய மரகதமணியனைய பசிய இலைகளையும் பசிய பூக்களையுமுடைய போதியின் கீழமர்ந்த புத்ததேவற்குக் கட்டுவித்த கோயிலைப் பணிந்து, தென்மேற்காகத் தாதணிபூம் பொழில் தான் சென்று எய்தலும்-தென்மேற்றிசையிற் சென்று தேன் பொருந்திய அழகிய மலர்ச்சோலையைத்தான் அடைதலும்;

மீட்டும் வணக்கம் செய்தது விடைபெறுவது குறித்தலின், வணங்கி யென்பதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. மணிமேகலை கையிலிருக்கும் அமுதசுரபி, அவள் போம்போது உடன்போதல் ஒருதலையாகவும், ''திருந்திய பாத்திரம் செங்கையி னேந்தி'' யென்றார். அதனால் மன்னுயி ரோம்பலும் அறவணனைக் காண்டலும் பின்பு அறங்கேட்டலும் நிகழ்தற் சிறப்புப் பற்றி, இந்திரன் காக்கும் அமராவதி நகரை, ''தேவர் கோமான் காவன் மாநகர்'' என மிகுத்தோதியது, பொலிவற்றுப் புல்லென்று தோன்றும் கச்சிநகர், வளமுற்றிருந்த காலத்திருந்த சிறப்பைப் புலப்படுத்தற்கு. வளந்தலை சிறந்த நகரம் பொலிவிழந்திருப்பது காண்பவள் அருள்மிகுதியால் உளங்கரைந்து இரங்குவது தோன்ற, ''கண்டுளங் கசிந்த'' என்றும், அதனைத் தொடி நெகிழ்ந்து காட்டுமாதலின் ''ஒண்டொடி'' யென்றும் குறித்தார். ஒண்டொடி நங்கை சுட்டுமாத் திரையாய் நின்றது. ''காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே'' (பதிற். 19) என்று பிறரும் கூறுப. இழிந்து நண்ணினள் என மாறுக. நண்ணினள்: முற்றெச்சம். சயித்தியம் என்பது சேதியம் என வந்தது. ஆயிழை வணங்கி, கண்டு, உளங் கசிந்தவள் வலங்கொண்டு, இழிந்து நண்ணி, தொழுது, சென்றெய்தலும் என முடிக்க.

29.22

கச்சிமாநகர் புக்க காதை

180

வையங் காவலன் றன்பாற் சென்று
கைதொழு திறைஞ்சிக் கஞ்சுக னுரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவலந் தீவற் றானனி மிக்கோள்
அங்கையி னேந்திய வமுத சுரபியொடு
தங்கா திப்பதித் தருமத வனத்தே
வந்து தோன்றினள் மாமழை போலென

177

உரை

183

வையங் காவலன் தன்பாற் சென்று கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்-இளங்கொடையைக்கண்ணுற்ற கஞ்சுகன் ஒருவன் மாநிலங் காவல் புரியும் அரசன்பாற் சென்று கைகூப்பி வணங்கிக் கூறுவானாய், கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலந்தீவில் தான்நனிமிக்கோள் - கோவலனுடைய புதல்வியும் துறவறம் பூண்டு நற்றவம் புரிபவளும்சம்புத்தீவின்கண் மிகச் சிறந்தவளுமாகிய மணிமேகலை என்பாள், அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு - தான் கையி லேந்தியுள்ள அமுதசுரபி என்னும் தெய்வக் கடிஞையுடன், தங்காது மாமழைபோல் இப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் - இந்நகரத்தின்கணுள்ள தருமத வனத்தில் பெருமுகில் போல வந்துதோன்றினள் என மொழிய;

கஞ்சுகன் சட்டையிட்ட அரச சேவகன், காவலன், இளங்கிள்ளி, குணவதம், இதனைக் குணவிரதம் என்ப; இச்சொல் சமணூல்களிற் பயில வழங்குவது. பௌத்த நூல்கள், தூதகுணம் என்றும் அது பன்னிருவகை விரதங்களையுடையதென்றும் கூறுதலின், அது குறித்து, ''குணவதம்'' என்றார். அவை பஞ்சகுலிகம், திரிசிவரிகம், நாமாதிகம், வைந்தபாதிகம், ஏகாசநிகம், கலுபச்சத் பத்திகம், ஆரணியகம், விருக்க மூலிகம், அபியவாகசிகம், சமச்சானிகம், நைசாதிகம், யதாசமஸ்தாரிகம் எனப் பன்னிரண்டாம். இவற்றை இஷ்ட சகஸ்ர பிரக்ஞ பாரமிதை முதலிய பௌத்த நூல்களிற் கண்டுகொள்க மழைமுகில் மலை முதலிய வற்றால் தடைப்பட்டுத் தங்கி யொழிவதுபோல தங்காது நேரே தான் குறித்தவிடம் போதருதலால் ''தங்காது'' என்றும், மழைவர உயிர்கள் தளிர்த்தல்போல் இவள் வரவால் மக்கள் பசி நீங்கி இன்பம் பெறுமாறு தோன்ற ''மாமழைபோல் வந்து தோன்றினள்'' என்றும், வந்து தங்கியிருக்குமிடந்தானும் இது வென்றற்கு ''தருமதவனத்தே'' யென்றுங் கூறினான். சென்று காண்பது நலம் என்பது குறிப்பு.

29.23

கச்சிமாநகர் புக்க காதை

185

மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக்
கந்திற் பாவை கட்டுரை யெல்லாம்
வாயா கின்றன வந்தித் தேத்தி
ஆய்வளை நல்லா டன்னுழைச் சென்று

184

உரை

187

மன்னனும் விரும்பி மந்திரச் சுற்றமொடு - அரசனும் அது கேட்டு ஆவலுடன் அமைச்சர் முதலாயினோர் சூழ்வர, கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாயாகின்றன வந்தித்து ஏத்தி-கந்திற்பாவை மொழிந்த பொருளுரை யாவும் உண்மையேயாகின்றன என எண்ணி அதனை நினைத்துத் துதித்து, ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று - அழகிய வளையணிந்த நற்றவம் பூண்ட மணிமேகலைபாற் சென்று;

மணிமேகலையைக் காணச் செல்லும் வேந்தன் அமைச்சர் முதலாயினாருடன் சேறல் சிறப்பாதலின், ''மந்திரச் சுற்றமொடு'' என்றார் ; செய்வதும் தவிர்வதும் அவ்வப்போது தெருந்துரைப்பவ ரவராதலின். மணிமேகலை வரவை முன்னரே கந்திற்பாவை வேந்தற் குரைத்திருத்தலின், அவன் ''கட்டுரை யெல்லாம் வாயாகின்று'' என்று வியந்தான்: பன்மை யொருமை மயக்கம்.

29.24

கச்சிமாநகர் புக்க காதை

190

செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ
கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம்
அலத்தற் காலை யாகிய தறியேன்

188

உரை

191

நலத்தகை நல்லாய் செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-நற்குண நற்செய்கைகளையுடையாய்! எனது செங்கோலானது வளைந்ததனாலோ துறவோர் தவநெறியிற் றிறம்பியதாலோ தேன் சொரியும் மலர் சூடிய கூந்தலையுடைய மகளிர் கற்புக் குறைந்ததனாலோ, நன்னாடு எல்லாம் அலத்தற்காலை ஆகியது அறியேன் - நலஞ் சிறந்த நாடெங்கும் எதனால் இவ்வறுமைக் காலம் வந்தெய்தியது என்று அறியாது மயங்குவேனாயினேன்;

மணிமேகலை மாதவனுருவில் தோன்றினாளாயினும் கச்சிநகர்க் கண் இருந்த கந்திற்பாவை யுரைத்திருந்தபடியால், அதுவே வாயிலாக அவளைக் கஞ்சுகனும் வேந்தனும் தெரிந்துக்கொண்டனரெனக்கொள்க. அதனாற்றான் ''நலத்தகை நல்லாய்'' என்றான். அரசு கோல்கோடலும் மாதவர் நோன்பு கெடலும் மகளிர் கற்புக்குறைபடலும் நாடு நலங் குன்றுதற் கேதுவாகலின், ''கோல் கோடியோ தவம் பிழைத்தோ கற்புக் குறைபட்டோ நன்னாடெல்லாம் அலத்தற் காலையாகியது'' என்றும், இக்குறையினைக் காண முயன்றும் அம்முயற்சி பயன்படாமையின், ''அறியேன்'' என்றும் கூறினான். அலத்தற் காலை - துன்பக் காலம்: ஈண்டு வறுமை மேற்று.

29.25

கச்சிமாநகர் புக்க காதை

195

200

205

மயங்குவேன் முன்னரோர் மாதெய்வந் தோன்றி
உயங்கா தொழிநின் னுயர்தவத் தாலோர்
காரிகை தோன்று மவள்பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தா லகனில முய்யும்
ஆங்கவ னருளா லமரர்கோ னேவலின்
தாங்கா மாரியுந் தானனி பொழியும்
அன்னா ளிந்த வகநகர் புகுந்த
பின்னா ணிகழும் பேரறம் பலவால்
கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது
பாரக விதியிற் பண்டையோ ரிழைத்த
கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்த தீங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனைமினென் றறைந்தத்
தெய்வதம் போயபிற் செய்தியா மமைத்தது
இவ்விட மென்றே யவ்விடங் காட்டவத்

192

உரை

206

மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி - கலக்க முறுவேன் முன்னே ஒரு பெரிய தெய்வம் வெளிப்பட்டு, உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் - வருந்தற்க எனத் தேற்றி நினது பெருந் தவத்தினாலே ஈண்டு ஒரு மங்கை வருவாள் என்று சொல்லி, அவள் பெரும் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் கையிற் கொண்ட பெருமை பொருந்திய பாத்திரத்தின் கண்ணுள்ள நிறைந்த உயிர்களின் பசிப்பிணிக்கு மருந்தாகிய உணவினால் பெரிய நிலத்து மக்கள் உய்தி பெறுவர், ஆங்கவள் அருளால் அமரர்கோன் ஏவலில் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் - அவளது அருளினாலே இந்திரன் ஏவல்பெற்று முகில்கள் மிக்க மழையை மிகவும் பொழியும், அன்னாள் இந்த அகனகர் புகுந்த பின்னாள் நிகழும் பேரறம் பலவால் - அந்நங்கை இந்தப் பெரிய நகரத்திற் புகுந்த பின்பு ஈண்டு நிகழும் பெரிய அறங்கள் பலவாகும், கார் வறம் கூரினும் நீர்வறங் கூராது - மழை பெய்யாது ஒழியினும் நீர் வறுமை யுண்டாகாது, பண்டையோர் இழைத்த - முன்னோரால் அமைக்கப் பெற்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு மாமணிபல்லவம் வந்தது ஈங்கென - கொழுவிய நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையுடன் பெரிய மணிபல்லவமே ஈண்டு வந்திருக்கின்றது என்னுமாறு, பொய்கையும் பொழிலும் பாரகம் விதியிற் புனைமின் என்று அறைந்து அத் தெய்வம் போயபின் - வாலியுஞ் சோலையும் இந்நிலத்தே முறைப்படி உண்டாக்கி அழகு படுத்துவீராக என்று கூறி அத்தெய்வம் சென்ற பின்னர்; செய்து யாம் அமைத்தது இவ்விடம் என்றே அவ்விடங் காட்ட - யாங்கள் செய்தமைத்த இடம் இதுவாகும் என்று கூறி அவ்விடத்தை மணி மேகலைக்குக் காட்ட; மயங்குவேன் முன்னர்த் தெய்வம் தோன்றி, தோன்றும், நிலம் உய்யும், மாரி பொழியும், அறம் பலவால், வறங்கூராது, புனைமின் என அறைந்து போயபின், அமைத்தது இவ்விடம் என்று காட்ட என, இயையும். மணிமேகலை போதருதற்குக் காரணம் வேந்தனது தவம் என்றற்கு ''நின்னுயர் தவத்தால்'' என்றார். ஆருயிர் என்புழி, ஆர்தல்- நிறைதல். மிக்க மழை யென்றற்குத் ''தாங்கா மாரி'' என்றார். கோமுகிப் பொய்கையை மணிபல்லவத்தின்கண் பண்டையோர் இழைத்தன ராதலின், கடனடுவணுள்ள தீவின்கண்ணுள்ளது போல நிலத்திடத்தும் முறைப்படி செய்தமைத்தலின், ''பாரக விதியின்'' என்றார். பாரக விதியிற் புனைமின் என இயைக்க. செய்தி - செயற்கை ; எனவே மணிபல்லவம் இயற்கையா யமைந்த தென்றும், கோமுகி மட்டில் பண்டையோரிழைத்த தென்றும் கொள்க. பாரக வீதியின் என்றும் பாடம்.

மயங்குவேன் முன்னர்த் தெய்வம் தோன்றி, தோன்றும், நிலம் உய்யும், மாரி பொழியும், அறம் பலவால், வறங்கூராது, புனைமின் என அறைந்து போயபின், அமைத்தது இவ்விடம் என்று காட்ட என, இயையும். மணிமேகலை போதருதற்குக் காரணம் வேந்தனது தவம் என்றற்கு ''நின்னுயர் தவத்தால்'' என்றார். ஆருயிர் என்புழி, ஆர்தல்- நிறைதல். மிக்க மழை யென்றற்குத் ''தாங்கா மாரி'' என்றார். கோமுகிப் பொய்கையை மணிபல்லவத்தின்கண் பண்டையோர் இழைத்தன ராதலின், கடனடுவணுள்ள தீவின்கண்ணுள்ளது போல நிலத்திடத்தும் முறைப்படி செய்தமைத்தலின், ''பாரக விதியின்'' என்ற

29.26

கச்சிமாநகர் புக்க காதை

210 215

இவ்விட மென்றே யவ்விடங் காட்டவத்
தீவகம் போன்ற காவகம் பொருந்திக்
கண்டுளஞ் சிறந்த காரிகை நல்லாள்
பண்டையெம் பிறப்பினைப் பான்மையிற் காட்டிய
அங்கப் பீடிகை யிதுவென வறவோன்
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத்
தீவ திலகையுந் திருமணி மேகலா
மாபெருந் தெய்வமும் வந்தித் தேத்துதற்கு
ஒத்த கோயி லுளத்தகப் புனைந்து
விழவுஞ் சிறப்பும் வேந்த னியற்றத்
தொழுதகை மாதர் தொழுதன ளேத்திப்
பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும்
அங்கையி னேந்திய வமுத சுரபியை
வைத்துநின் றெல்லா வுயிரும் வருகெனப்

206

உரை

219

அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளஞ்சிறந்த காரிகை நல்லாள் - மணிபல்லவத்தை ஒத்த அச்சோலையிற் சென்று அதன் சிறப்பினைக் கண்டு மன மகிழ்ந்த மணிமேகலை பண்டை யெம்பிறப்பினைப் பான்மையிற் காட்டிய அங்கப்பீடிகை இதுவென - எம்முடைய பண்டைப் பிறப்பை அறிவுறுத்திய அத் தீவின்கணுள்ள புத்த பீடிகை இதுவாகும் என்று, அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து - புத்தன் திருவடித் தாமரை பொருந்திய பீடிகை முறைப்படி யமைத்து ; வந்தித்து ஏத்துதற்கு தீவதிலகையும் திரு மணிமேகலா மாபெருந் தெய்வமும்-தான் வணங்கி வழிபடும் பொருட்டுத் தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும், ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து - பீடிகைக் கேற்பவமைந்த கோயிற்குள் ஆண்டைய தகுதியெல்லாமமையச் செய்தமைத்து, விழவுஞ் சிறப்பும் வேந்தன் இயற்ற - அவற்றிற்கு விழாக்களும் வேறு சிறப்புக்களும் அரசனைக்கொண்டு இயற்றுவித்து, தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி - வணங்கப்படுந் தகுதியினையுடைய மணிமேகலை பணிந்து துதித்து, அங்கையின் ஏந்திய பசிப்பிணி மருந்து எனும் அமுத சுரபியை - கையில் ஏந்தியுள்ள பசியாகிய நோய்க்கு மருந்து என்னும் அமுதசுரபியை, பங்கயப் பீடிகை வைத்து நின்று எல்லா வுயிரும் வருக என - புத்த பீடிகைக்கண்ணே வைத்து நின்று அனைத்துயிரும் உணவுண்ண வருக என அழைக்க;

தன் பிறப்பும் மாதவி சுதமதி முதலாயினார் பிறப்பும் அறிந்து கொண்டமையின், ''எம்பிறப்பினை'' யென்றாள். அங்கு அப்பீடிகை - அம் மணிபல்லவத்தே யிருந்த தன் பழம் பிறப்பறிதற் கேதுவாகிய புத்த பீடிகை. பங்கயப் பீடிகை - தாமரைப்பூப்போ லமைக்கப்பட்ட பீடிகை; ஈண்டு அது புத்தனுடைய தாமரைபோலும் திருவடி பொருந்துதற் கமைந்த பீடிகை யென்னுமாறு நின்றது. தீவதிலகை, பீடிகை காக்கும் தெய்வதம். மணிமேகலைக்குப் பெருநலஞ் செய்த தெய்வ மாகலின், ''திரு மணி மேகலா மாபெருந் தெய்வம்'' என்று சிறப்பித்தார். பீடிகை யமைந்த பெருங்கோயில், தீவதிலகை மணிமேகலா தெய்வம் என்ற இரண்டும் ஒருங்கு நிறுவுதற்கமையுமாறு செய்யப்பட்டது பற்றி, ''ஒத்த கோயி'' லென்றார். உளத்தக என்று கொண்டு, நினைத்தற்குத்தக என்று உரை கூறுவாருமுளர். பசிப்பிணி மருந்து நல்கும் சுரபியை ''மருந்தெனும் சுரபி'' யென்றும், இதுகாறும் அங்கையி னேந்தி நின்ற சுரபியை, பீடிகையில் வைத்து வழிபட்டு எடுத்தலின், ''அங்கையி னேந்திய அமுத சுரபி'' என்றும் கூறினார்.

29.27

கச்சிமாநகர் புக்க காதை

220 225

பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின்
மொய்த்த மூவறு பாடை மாக்களில்
காணார் கேளார் கான்முட மானோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்
மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்
பன்னூ ராயிரம் விலங்கின் றொகுதியும்
மன்னுயி ரடங்கலும் வந்தொருங் கீண்டி

220

உரை

227

பைத்தர வல்குல் பாவை தன் கிளவியின்-படத்தையுடைய பாம்புபோலும் அல்குலையுடைய பாவையைப்போன்ற மணிமேகலை தன் இனிய மொழிகளால் மொய்த்த மூவறுபாடை மாக்களில் - நெருங்கிய பதினெண்வகை மொழியினையுடைய மாக்களில், காணார் கேளார் கான்முடமானோர் - குருடரும் செவிடரும் முடவரும் பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் - பாதுகாப்போரற்ற அகதிகளும் மூங்கையரும் நோயுற்றவரும், படிவநோன்பியர் பசிநோயுற்றோர் - தவவேடத்தையும் விரதங்களையு முடையோரும் பசியாகிய பிணியடைந்தோரும், மடிநல்கூர்ந்த மக்கள் யாவரும் - உடையின்றித் துன்பமெய்திய மக்கள் அனைவரும், பன்னூறாயிரம் விலங்கின் தொகுதயும் - பலகோடி விலங்குகளின் கூட்டமும், மன்னுயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி - நிலைபெற்ற உயிர்கள் யாவும் ஒருங்கே வந்து சேரவும்;

பைத்தரவல்குலென்றது, பாவைக்கு அடை. பாவை போல்வாளைப் பாவையென்றது ஆகுபெயர். கால் முடமானோர்-காலால் முடமானவர்; பிணித்தோர்-நோயுற்றவர்: இது துச்சாரியைபெற்று முடிந்தது; பிணிக் கப்பட்டோ ரென்றுமாம். மடி - உடை; மடிமையால் வறுமையுறு வோரை யருளுவது அம் மடிமையாகிய தீவினையை வளர்க்குஞ் செய்கையால் அறமாகாதொழிதலின், ''சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள்'' என்றல் பொருந்தாமையறிக. ஈண்டவெனத் திரிக்க; ஈண்டியென்றே கொண்டு, செல்லும் என்பதனோ டியைத்தலுமொன்று.

29.28

கச்சிமாநகர் புக்க காதை

230 235

அருந்தியோர்க் கெல்லா மாருயிர் மருந்தாய்ப்
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்
நீரு நிலமுங் காலமுங் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகிய தென்னப் பெருவளஞ் சுரப்ப
வசித்தொழி லுதவி வளந்தந் ததுவெனப்
பசிப்பிணி தீர்த்த பாவையை யேத்திச்
செல்லுங் காலைத் தாயர் தம்முடன்

228

உரை

235

அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய்-உண்போ ரனைவருக்கும் அரிய உயிரை வளர்க்கும் மருந்தாய், பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்-பெரியோர் கையிலிட்ட அறத்தின் பயனும், நீரு நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளையும் - நீர் நிலம் பொழுது கருவி ஆகிய யாவும் செவ்வே அமைந்த விடத்து விதைக்கப்பட்ட விதையாலுண்டாகிய விளைபயனும், பெருகிய தென்ன - பெருகியவாறு போல ; பெருவளம் சுரப்ப - மிக்க வளத்தினை அப் பாத்திரம் சுரந்து கொடுக்க; வசித் தொழில் உதவி வளந்தந்தது என - மழை பெயலைச் செய்து உலகிற்கு வளத்தைத் தந்ததுபோல உணவுதந்து ; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலை - தமது பசி நோயை நீக்கிய பாவைபோலும் மணிமேகலையை வணங்கி வாழ்த்திக் கொண்டு அவரனைவரும் திரும்பிச் செல்லுங் காலத்தில் ;

தக்கார்க்குச் செய்த அறம் சிறதாயினும் பெரும்பயன் விளைப்பது போலச்சுரபியிலிட்ட சிறுசோறு கொடுக்கக் குறைபடாது மிக்குப்பெருகிற் றென்றற்குப், ''பெருந்தவர்கைபெய் பிச்சையின்பய''னை யுவமங் காட்டினார்'' பெருந்தவர் கைபெய் பிச்சை பெருகுதலைப் பிறரும், ''அறப் பயனும், தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்'' (நாலடி : 38) என்பது காண்க. முன்பும் ''அறத்தி னீட்டிய வொண்பொரு ளறவோன், திறத்து வழிப்படூஉஞ் செய்கைபோல, வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத், தான்தொலை வில்லாத் தகைமை'' (17:3-6) யுடையது இச்சுரபி என்றது காண்க. கருவி, ஏர் முதலாயின வித்துவமம், சுரபியின் தகைமையைக் காட்சியின் வைத்து விளக்கியவாறு. வசி-மழை. மறுவலும் பாவையென்றார், இவ்வாற்றால் உவகையும் வியப்பும் கொள்ளாமை தோன்ற.

First 28 of 30 passages. Read on

Linked texts (1)