Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.15

Maṇimēkalai urai 30.15

Language
Tamil

30.15

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

90

95 புகைஇ நெருப்பைச் சாதித்த தென்னின்
நேரிய புகையி னிகழ்ந்துண் டான
ஊர்த்தச் சாமங் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின்வரு காரிய மாதலின்
மேனோக் கிக்கறுத் திருப்பபகைத் திருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

90

உரை

95

என்னின்-என்று இவ்வாறு ஏதுப்பொருளைச் சாதிக்குமென்றால்; நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம் - நெருப்பின் காரியமாய்ப் பொருந்திய புகையிடத் துண்டாகிய மேனோக்கிய செலவும்; கௌடிலச் சாமம் - வளைந்து படர்ந்தமையும் படலமுமாகிய இரண்டும்; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலால் - காரணமாய் அமைந்த நெருப்பினின்று தோன்றிவரும் காரியமாதலால்; மேனோக்கிக் கறுத்திருப்ப-மேனோக்கிச் சென்று கறுத்திருப்பனவும் ; பகைத்திருப்ப - மேனோக்காது மாறுபட்டுப் பரந்து படலமாய்ப் படர்ந்திருப்பனவும் ; நெருப்பைச் சாதிக்க வேண்டுமே - தாம் தோன்றியுள்ள விடத்தே நெருப்புண்டெனச் சாதிக்க வேண்டுமல்லவோ எ - று.

காரணத்தின் பண்பு காரியத்து முண்டென்னும் அளவைநூற் கருத்தை யுட்கொண்டு, மேனோக்கிய செலவும் படலமாய்ப் படர்தலும் காரணமாகிய நெருப்பின் காரிய மென்றற்கு, "வாய்த்த நெருப்பின் வரு காரியம்" என்றார். "பிழையாதது காரியக்கருத்தே" யென்றதை மேற்கொண்டு, இக்காரியங்களும் காரணமாகிய நெருப்புண்மை சாதிக்க வேண்டுமல்லவோ என்பார், "காரியமாதலின் மேனோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப தாமே நெருப்பைச் சாதிக்கவேண்டும்" என்றார். தாம்; அசை எதிர்மறை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. இதனாற் பயன், காரியம் காரணஞ் சாதித்தல், அன்னுவயஞ் சாதித்தல், வெதிரேகஞ் சாதித்தல் என்ற மூன்றனுள், காரியவேதுவாய புகை பிழைபடுமாறு காட்டியவாறு. ஊர்த்தஸ் யாம்மன் என்பது ஊர்த்தச் சாமம் என வந்தது. கௌடிலஸ்யாமம், வளைந்து படர்ந்து செல்வது. மேனோக்கிய செலவின் மாறாகப் படர்ந்திருப்பது பற்றிப் "பகைத் திருப்ப" வென்றார்.

Linked texts (1)