Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.5

Maṇimēkalai urai 30.5

Language
Tamil

30.5

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப
பொன்றிகழ் புத்த பீடிகை போற்றுந்
தீவ திலகையு மித்திறஞ் செப்பினள்

40 ஆதலி னன்ன வணிநகர் மருங்கே
வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும்
நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு வென்ன வைவகைச் சமயமுஞ்
செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன்

45 அடிகள் மெய்ப்பொரு ளருளுக வென்ன

37

உரை

45

அறவணன் தாள் இணை இறைஞ்சி - அது கேட்ட மணிமேகலை அறவணவடிகளின் இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, பொன்திகழ் புத்திபீடிகை போற்றும் தீவதிலகையும் - மணிபல்லவத்திலுள்ள பொன்போல் ஒளிவிடும் புத்த பீடிகைக்குக் காவல் புரிந்த தீவதிலகை யென்பாளும், இத் திறம் செப்பினள் - நீவிர் கூறிய இச் செய்தியை எனக்குத் தெரிவித்துள்ளாள் ; ஆதலின் - ஆதலால் இதிலொரு வியப்பில்லை; அன்ன அணி நகர் மருங்கே - அந்நகரமே போல அழகிய வஞ்சிநகர்ப் புறத்தே; வேற் றுருக்கொண்டு - மாதவனொருவன் உருக்கொண்டு சென்று ; வெவ்வேறுரைக்கும் - ஒருவரினொருவர் வேறுபட்டுச் சொல்லும்; நூற்றுறைச் சமய நுண் பொருள் கேட்டு - நூல் நெறியாக வந்த நுண்ணிய சமயக் பொருளைக் கேட்டு; அவ்வுரு என்ன - யான் மேற்கொண்டிருந்த எனக்கொவ்வாத உருவம்போல ; ஐவகைச் சமயமும் - ஐந்து வகைச் சமயத்து நுண் பொருள்கள் ; செவ்வி தன்மையின் சிந்தையில் வைத்திலேன்-எனக்குச் செம்மையுடைய வாகத் தோன்றாமையின் மனத்துட் கொள்ளா தொழிந்தேன் ; அடிகள்-அடிகளே; மெய்ப்பொருள் அருளுக-உண்மைப் பொருளையடியேனுக்கு உரைத்தருளுவீராக ; என்ன - என்று வேண்டி நின்றாளாக எ - று.

அறவணன் கருத்தை யறிந்து கொண்டமையின். மணிமேகலை, நகர்க்குற்ற அழிவினைத் தான்முன்பே அறிந்திருந்த செய்தியையுரைத்தாள். ஆதலால் என்பது முதலாயின எஞ்சி நின்றன. ஆதலின் அது பற்றிய பேச்சு வேண்டா வென்றலும், தன் கருத்தினைச் சட்டென வெளியிடுதலும் சீலமன்மையின், ''ஆதலின்'' என வொழிந்தா ளென்று மாம். வஞ்சி நகரும் காவிரிப்பூம்பட்டிடனம் போல எல்லா நலங்களும் நிறைந்திருந்தமை தோன்ற, ''அன்ன அணிநகர்'' என்றாள். தான் வேற்றுருக்கொண்ட காரணம் கூறிற்றிலன், ''இளையள் வளைய ளென் றுனக் கியாவரும், விளைபொரு ளுரையார்" (26;68-9) எனக் கண்ணகி யுரைத்த காரணம் அறவணன் இயல்பாகவே யறிந்தவ னென்று. ஒருவரோ டொருவர் ஒவ்வாமலுரைத்தலின், ''வெவ்வேறுரைக்கும்'' என்றும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நூலைப் பின்பற்றி நிலவுதலால், ''நூற் றுறைச் சமய'' மென்றும் கூறினாள். தான் காஞ்சிமாநக ரடைந்து அறவணன் முதலாயினாரைக்க கண்ட பின்பே அவ்வேற்றுருவைக் களைந்து உண்மையுருவொடு நின்றமையின், ''அவ்வுரு'' வெனச் சுட்டியும், தனக்கு ஒவ்வாமை தோன்ற, அதனையுவமித்து முரைத்தாள், செவ்விது என்பதனை ஒவ்வொரு சமய நுண்பொருட்டு மேற்றுக. இனி அவ்வுருவை வையாமை போல இவற்றையும் வைத்திலேன் என்றுமாம். வையாமைக் கேது அவற்றால் மெய்ப்பொருளைத் தெளிய முடிய வில்லை; அதனை நீவிரே யுரைத்தல் வேண்டும் என்றற்கு, ''அடிகள் மெய்ப்பொருள் அருளுக'' என வேண்டினான்.

Linked texts (1)