Maṇimēkalai's Renunciation 30.59
Maṇimēkalai urai 30.59
- Language
- Tamil
30.59
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
385
390
அநன்னுவய மாவது சாதன சாத்தியந்
தம்மிற் கூட்ட மாத்திரஞ்சொல் லாதே
இரண்ட னுடைய வுண்மையைக் காட்டுதல்
சத்த மநித்தங் கிருத்த மாதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம தநித்தமெனும்
அன்னுவயஞ் சொல்லாது குடத்தின் கண்ணே
கிருத்த வநித்தங் காணப் பட்ட
என்றா லன்னுவயந் தெரியா தாகும்
385
உரை
392
அநன்னுவயமாவது - அநன்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; சாதன சாத்தியம் தம்மின் - சாதன சாத்தியங்களினுடைய; கூட்ட மாத்திரம் சொல்லாது - அன்னுவயத்தைச் சால்லிக் காட்டாமல்; இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் - இரண்டும் பொருந்தியுள்ள திட்டாந்தத்தை மட்டிற் காட்டி யொழிதலாம்; சத்தம் அநித்தம் - சத்தம் அநித்தமென்னும் சாத்திய வசனமும்; கிருத்தமாதலின் - பண்ணப்படுதலால் என்னும் சாதன வசனமும் சொல்லி; யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் அன்னுவயம் சொல்லாது - யதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமாம் என அந்நுவய வியாத்தி வசனம் சொல்லாமல்; குடத்தின்கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட வென்றால் - குடத்தின்கண்ணே சாதன சாத்திய தன்மங்கள் காணப்படுகின்றனவென்று சொன்னால்; அன்னுவயந் தெரியாதாகும்-உடனிகழ்ச்சியாக வியாத்தி தெரியாமையாகிய திட்டாந்தப் போலியாம் எ - று.
அன்னுவயத்தின் இல்லாமை அநன்னுவயம், அன்னுவயம், உடனிகழ்ச்சி; அஃது ஈண்டுக் கூட்டம் எனப்பட்டது. இன், தம்மின் என்பன சாரியை: ஆறனுருபு தொக்கது. சாத்திய சாதனவசன மிரண்டும் கூறித் திட்டாந்தம் கூறப்படுதலால், "கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்" என்றார். கூட்டமென்ற அன்னுவயமாவது இது வென்பார், "யாதொன்று யாதொன்று கிருத்தம் அது நித்தம் எனும் அந்நுவயம்" என்றார். அஃதென்னல் வேண்டும் ஆய்தம் தொக்கது. கிருத்தம்: வடசொற்சிதைவு. கிருத்தமென்னும் சாதன தன்மமும் அநித்தமென்னும் சாத்திய தன்மமும் குடமாகிய திட்டாந்தத்திலே உள்ளன என்பான், "குடத்தின் கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட" வென்கின்றான். "கானந் தகைப்ப செலவு" என்றாற்போல காணப்பட்ட என்பது அன்பெறாது வந்தது. அன்னுவயங் காட்டாதொழியின், காட்டப்பட்ட திட்டாந்தத்தின்கண் சாதன சாத்தியங்கட்கு வியாத்தி யுண்டென்கின்றானோ, இல்லையென்கின்றானோ என எதிரி ஐயுற்று மேலே தடை பல தொடுத்தற்கிடனாய்க் குன்றக்கூறலென்னுங் குற்றப்படுதலின், இதனைக் குற்ற மென்பராயினர்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil