Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.66

Maṇimēkalai urai 30.66

Language
Tamil

30.66

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

450

455

அவ்வெதி ரேக மாவது சாத்தியம்
இல்லா விடத்துச் சாதன மின்மை
சொல்லாதே விடுத லாகுஞ் சத்தம்
நித்தம் பண்ணப் படாமையா லென்றால்
யாதொன் றியாதொன்று நித்த மன்று
பண்ணப் படுவ தல்லா ததுவும்
அன்றெனு மிவ்வெதி ரேகந் தெரியச்
சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப்
படுதலு மநித்தமுங் கண்டே மாதலான்
என்னின் வெதிரே கந்தெரி யாது

450

உரை

459

அவ் வெதிரேகமாவது-அவ் வெதிரேகமென்னும் வைதன்மிய திட்டாந்தக் போலியாவது; சாத்தியமில்லாவிடத்து-சாத்திய தன்மம் இல்லாதவிடத்து; சாதனம் இன்மை சொல்லாதே விடுதலாகும் -சாதன தன்மம் இல்லையென்று எடுத்துச் சொல்லா தொழிவதாம்; சத்தம் நித்தம் பண்ணப்படாமையால் என்றால் - சத்தம் நித்தமாகும் பண்ணப்படுவதன்றாதலால் என்ற வழி; யாதொன்று யாதொன்று நித்தமன்று-யதொரு பொருள் நித்தமன்றோ; பண்ணப்படுவதல்லாததும் அன்று எனும்-பண்ணப்படாததன்று என்னும்; இவ் வெதிரேகம் தெரியச் சொல்லாது - இவ் வெதிரேகக் கூற்றை எதிரிக்குத் தோன்ற எடுத்துச் சொல்லாமல்; குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமும் கண்டேமாதலால் - குடமாகிய திட்டாந்தத்தின்கண் செயப்படுந் தன்மையும் அநித்தத்துவமும் கண்டுள்ளேமாதலால்; என்னின்-என்று சொன்னால் ; வெதிரேகம் தெரியாது - குடத்தின்கண் சாத்திய தன்மமான நித்தியத்துவம் இல்லாமையால், பண்ணப்படாமையுமில்லை என்ற வெதிரேக வியாத்தி விளங்கத் தெரிவிக்கப்படாமையின் அவ் வெதிரேக மென்னும் திட்டாந்தப் போலியாயிற்று எ - று.

சாத்திய தன்மமில்லாவிடத்துச் சாதன தன்மம் இல்லாமைசொல்வது வெதிரேக வியாத்தி வசனமாகும். வெதிரேகம்-எதிர்மறை. இதனையே முன்னர் விபக்கத் தொடர்ச்சி மீட்சி யென்றார். வைதன்மிய திட்டாந்தங் காட்டுமிடத்து, இதனை எடுத்து விளங்கவுரைத்த பின்பே காட்ட வேண்டுமாதலின், உரையாது காட்டுவது வெதிரேக விலக்கணத்துக்குக் குற்றமாதலின், "அவ் வெதிரேகம்" என்றும், அஃதாவது, "சாத்தியமில்லாவிடத்துச் சாதனமின்மை சொல்லாது விடுதலாகு" மென்றும் கூறினார். இதனை விளக்குவார், "சத்தம் நித்தம் பண்ணப் படாமையால்" என முதற்கண் பக்க வசனமும் ஏதுவும்கூறி, இதற்கு, கூறற்பாலதாகிய விபக்கதந் தொடர்ச்சி மீட்சி மொழியாகும் வெதிரேக வியாத்திவசனம் இது வென்பார், "யாதொன்று நித்தமன்று பண்ணப் படுவதல்லாததுவுமன்று எனும் இவ் வெதிரேகம்" என்றும், இதனை முன்பே கூறாது, வாளா குடத்தைத் திட்டாந்தமாகக் காட்டல் அவ் வெதிரேக மென்னும் குற்றமாமென்றற்கு, "குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமுங் கண்டேமாதலால் என்னின் வெதிரேகம் தெரியாது" என்றும் கூறினார்.

இனி, நியாயப் பிரவேசமுடையார் சாத்திய சாதன தன்மங்களின் இல்லாமையை யுணர்த்தும் வெதிரேக வியாத்திவசனம் காட்டாமலே விபத்துக்குரிய திட்டாந்தத்தைக் காட்டுவது அவ் வெதிரேகத் திட்டாந்தாபாசம் என்று இலக்கணமும் குடத்தின்கண் மூர்த்தமன்மையும் அநித்தத்தன்மையும் காணப்பட்டனவெனத் திட்டாந்தமும் காட்டுவர். பிரசத்தபாதர் இதனை அவியாவிருத்த நிதரிசனாபாசம் என்று பெயர் கூறி, கடம்போல என இவ்வாறே உதாரணங் காட்டுகின்றார்.

Linked texts (1)